பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

பாலிவுட்டை தாக்கும் பயோபிக்ஸ்!

பாலிவுட்டை தாக்கும் பயோபிக்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
பாலிவுட்டை தாக்கும் பயோபிக்ஸ்!

வால்டர் ஒய்ட்

வாழ்க்கை வரலாறுகளை அப்படியே கதறக் கதற படமாக எடுத்தால், அந்த ஆண்டு ஆஸ்கரில் விருதுகளை `ஒரு அள்ளு அள்ளலாம்’ என்பது ஹாலிவுட் ஐதீகம். பாலிவுட்டிலும் இப்போது அதுதான் ட்ரெண்ட். `மேரி கோம்’, `பாக் மில்கா பாக்’ என விளையாட்டு வீரர்களின் படங்கள் ஹிட்டடிக்க, `தோனி’, `அசார்’, `டங்கல்’ என அடுத்தடுத்து படங்கள் ரெடி. கூடவே ஏகப்பட்ட மாஃபியா தாதாக்களின் கதைகளும் படமாகப்போகின்றன. அந்த பயோபிக் படங்களின் மினி டேட்டா இங்கே!

அசார் 

பாலிவுட்டை தாக்கும் பயோபிக்ஸ்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்... மேட்ச் ஃபிக்ஸிங் குற்றச்சாட்டால் கிரிக்கெட்டைவிட்டு விரட்டப்பட்டவர்... தண்டனைக்குப் பிறகு அரசியலில் இறங்கி சிக்ஸர் அடித்தவர்... முகமது அசாருதின். அவருடைய வாழ்க்கைதான் இப்போது படம் ஆகிறது. அசாருதீன் பாத்திரத்தில் நடிக்கப்போவது `முத்த மன்னன்' இம்ரான் ஹாஸ்மி. படம் எடுக்கப்போகும் விஷயத்தை அசாரிடம் சொன்னபோது, திரைக்கதையை வாங்கி முழுமையாகப் படித்த பின்னர்தான் ஒப்புதல் கொடுத்திருக்கிறார். அசாரைப்போல ஷோல்டரை இறக்கி நடக்கவும், மணிக்கட்டைப் பயன்படுத்தி ஃப்ளிக்கர் ஷாட் அடிக்கவும், தினமும் பலமுறை ஹாஸ்மி பயிற்சி செய்யவேண்டியிருக்கிறதாம். படம் மே மாதம் ரிலீஸ்!

சர்ப்ஜித்

பாலிவுட்டை தாக்கும் பயோபிக்ஸ்!

சிக்ஸ்பேக்ஸ் நாயகனான ரந்தீப் ஹூடா, ஒல்லிப்பிச்சானாக உடல் இளைத்து, வாடி வதங்கிப்போயிருக்கும் படங்கள் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை உண்டாக்கின. அது இந்த `சர்ப்ஜித்’ படக் கதாபாத்திரத்துக்குதான். பாகிஸ்தான் எல்லையோரக் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சரப்ஜித் சிங். 1990-ம் ஆண்டு திடீரென்று காணாமல்போனவரைத் தேட ஆரம்பித்தபோது, அவர் பாகிஸ்தான் சிறையில் இருப்பது தெரியவந்தது. லாகூரில் நடந்த குண்டுவெடிப்புக்காக அவருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டிருந்தது. அப்பாவி விவசாயியான அவர், `ரா உளவாளி’ என முத்திரை குத்தப்பட்டு சிறைக் கொடுமைகளை அனுபவித்தார். 23 ஆண்டுகள் சிறையில் இருந்தவர், கடந்த 2013-ம் ஆண்டு சக சிறைவாசிகளால் தாக்கப்பட்டு, கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் தெரிவித்தது. சரப்ஜித் சிங் சிறையில் அனுபவித்த கொடுமைகளும் அவரை மீட்பதற்காக அவரது தங்கை டல்ஃபீல் கௌர் மேற்கொண்ட போராட்டமும்தான் படம். டல்ஃபீர் கௌராக நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராய். படம் மே மாதம் ரிலீஸ்!

ராயீஸ்

பாலிவுட்டை தாக்கும் பயோபிக்ஸ்!

அப்துல் லத்தீஃப் என்ற அண்டர்வேர்ல்டு மாஃபியா தலைவனின் வாழ்க்கைதான் கதை. சூதாட்ட விடுதிகளில் மது ஊற்றித் தரும் சர்வராக வாழ்க்கையைத் தொடங்கியவன் லத்தீஃப். பின்னாட்களில் சட்டவிரோத மதுபான கடத்தல்களில் ஈடுபட்டு, படிப்படியாக வளர்ந்து அகமதாபாத்தை ஆட்டிப்படைத்த கதைதான் `ராயீஸ்’. 40 கொலை வழக்குகள், 50 ஆள் கடத்தல்கள், 1993-ம் ஆண்டு மும்பை தொடர் குண்டுவெடிப்பில் தொடர்பு... என லத்தீஃபின் க்ரைம் ரேட் டைம்லைன் பாகிஸ்தானுக்கே நீள்கிறது. 1997-ம் ஆண்டில் சுட்டுக்கொல்லப்பட்ட லத்தீஃபாக ஷாரூக் கான் நடிக்கிறார். படம் ஜூலை ரிலீஸ்!

தோனி - தி அன்டோல்டு ஸ்டோரி

பாலிவுட்டை தாக்கும் பயோபிக்ஸ்!

ஜார்கண்டில் டென்னிஸ் பந்தில் ஆடிக்கொண்டிருந்த ஒரு சின்னப் பையன்... டி.டி.ஆர் வேலைபார்த்த ஓர் எளிய இளைஞன்... எப்படி இந்தியாவுக்கு இரண்டு உலகக் கோப்பைகளை வென்றுகொடுத்தான் என்ற ஃபேன்டஸியான வாழ்க்கை தோனியுடையது. தோனியாக நடிக்கப்போவது `கை போ ச்சே’, `பி.கே' படங்களில் நடித்த சூப்பர் ஃபிட் `சுஷாந்த் சிங் ராஜ்புத்'. படத்தை இயக்கப்போவது
`எ வெட்னெஸ்டே’, `ஸ்பெஷல் 26’, `பேபி’ என தொடர்ந்து வித்தியாசமான படங்களால் பிரபலமான இயக்குநர் நீரஜ் பாண்டே. படத்தில் ஏகப்பட்ட ஹெலிகாப்டர் ஷாட்களை நிச்சயம் எதிர்பார்க்கலாம். தயாரிப்பாளர் தோனி என்பதால்,  கிரிக்கெட் பாலிட்டிக்ஸும் படத்தில் இருக்கும் என்கிறார்கள்!

அலிகார்

பாலிவுட்டை தாக்கும் பயோபிக்ஸ்!

எழுத்தாளரும் மொழியியல் பேராசிரியருமான டாக்டர் ஸ்ரீனிவாஸ் ராமசந்திர சிராஸின் வாழ்க்கைக் கதையே `அலிகார்’. ஓரினச் சேர்க்கையாளர் என்பதற்காக, அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் இவரை பணிநீக்கம் செய்தது. அதை எதிர்த்து, போராடி தன் வேலையைத் திரும்பப் பெற்றார் சிராஸ். அவர் ஓரினச் சேர்க்கையாளர் என்பதை நிரூபிக்க, பல்கலைக்கழகமே லோக்கல் சேனல் ஒன்றுக்குப் பணம்கொடுத்து, அவர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, அவர் தன் தோழரோடு இணைந்திருக்கும்போது படம் எடுத்து வெளியிட்டு, அவரை அவமானப்படுத்தியது. இருந்தும் அவர் தன் உறுதியான போராட்டத்தால் அதில் இருந்து மீண்டுவந்தார். ஓரினச் சேர்க்கையாளர்கள் நம் நாட்டில் எவ்விதம் நடத்தப்படுகிறார்கள் என்பதற்கு உதாரணம் சிராஸின் வழக்கு. இந்தப் படத்தில் சிராஸாக மனோஜ் பாஜ்பாய் நடிக்கிறார். ஏற்கெனவே பல திரை விழாக்களில் பாராட்டுக்களை அள்ளிக்கொண்டிருக்கிற இந்தப் படம் பிப்ரவரி 26 ரீலீஸ்!

டாடி

பாலிவுட்டை தாக்கும் பயோபிக்ஸ்!

1980-களில் மும்பையில் அருண் காவ்லி பேரைக் கேட்டாலே அலறுவார்கள். அந்த அளவுக்குக் கொடூரமான ஆள். ஆட்களைக் கடத்தி பணம்பறிப்பது, கொலை செய்வதுதான் இவருக்கு முக்கியத் தொழில். பல முறை காவல் துறையால் கைது செய்யப்பட்டும் யாரும் சாட்சி சொல்ல முன்வராமல் விடுவிக்கப்பட்டவர். 2012-ம் ஆண்டில் சிவசேனா தலைவர் ஒருவரைக் கொலைசெய்தபோது சிக்கிக்கொண்டார். கொலை, கொள்ளை, ஆள்கடத்தலுக்கு நடுவே அரசியலிலும் ஒரு ரவுண்டு வந்திருக்கிறார் அருண் காவ்லி. 2004-ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டசபைக்குச் சென்றவர். பால் தாக்கரேவுக்கு நெருக்கமாக இருந்த அருண் காவ்லி, பிறகு சிவசேனாவில் இருந்து விலகி, தனிக் கட்சி தொடங்கி அதிலும் ஒரு கலக்கு கலக்கினார். தற்போது ஆயுள் தண்டனை அனுபவிக்கும் அவரின் கதைதான் `டாடி’! இதில் அருண் காவ்லியின் பாத்திரத்தில் நடிக்கவிருப்பது அர்ஜுன் ராம்பால். `மிஸ் லவ்லி’ படத்துக்காக தேசிய விருது தொடங்கி ஏகப்பட்ட விருதுகளைத் தட்டிய அஸீம் அஹ்லுவாலியா இந்தப் படத்தை இயக்குகிறார்!

டங்கல் 

பாலிவுட்டை தாக்கும் பயோபிக்ஸ்!

மல்யுத்த வீரர் `மகாவீர் சிங் போகட்'டின் வாழ்க்கை வரலாறுதான் `டங்கல்'. காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகளில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் பெற்றுத்தந்த முதல் மல்யுத்த வீராங்கனை கீதா போகட்டின் தந்தை மகாவீர் சிங். இவரின் இன்னொரு மகள் பபிதா குமாரி, 2014-ம் ஆண்டு காமன்வெல்த்தில் தங்கம் வென்ற இன்னொரு மல்யுத்த வீராங்கனை. முன்னாள் மல்யுத்த வீரர், தன் நான்கு மகள்களை மல்யுத்தத்தில் சாம்பியன் ஆக்குவற்கான போராட்டமும், அவர்களில் இருவரை சர்வதேச சாம்பியன்கள் ஆக்கிய வெற்றிக் கதையுமே படம். மகா வீர் சிங்காக நடிக்கும் அமீர் கான், இந்தப் படத்துக்காக எக்கச்சக்க வெயிட் ஏற்றி, குண்டுபுஸ்கியாக வலம்வருகிறார். படம் டிசம்பர் ரிலீஸ்!

ஹஸீனா, தி குயின் ஆஃப் மும்பை 

பாலிவுட்டை தாக்கும் பயோபிக்ஸ்!

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் 12 சகோதரிகளில் ஏழாவது தங்கை ஹஸீனா, 2014-ம் ஆண்டில் இறந்துபோனார். ஒரு தாதாவின் தங்கையாக அவர் வாழ்ந்த 40 ஆண்டுகால வாழ்க்கைதான் இந்தப் படம். தாவூத் இப்ராஹிமுக்கு இணையாக `அண்டர்வேர்ல்டு மதர்', `காட் மதர் ஆஃப் நாக்படா' என வெவ்வேறு பட்டங்களால் அழைக்கப்பட்டவர் ஹஸீனா. கார்ப்பரேட்டுகளுக்காக சேரிகளை அகற்றுவது, பாலிவுட் படங்களின் வெளிநாட்டு உரிமைகளை மிரட்டிப் பறிப்பது, ஹவாலா ராக்கெட் ஊழல்கள், ரியல் எஸ்டேட் மாஃபியா... என ஹஸீனாவின் குற்றப்பட்டியல் தன் அண்ணனுக்குக் கொஞ்சமும் குறைவு இல்லாதது. 1991-ம் ஆண்டில் கணவனை இழந்தவர். அண்ணனோடு சேர்ந்து, தன் கணவனைக் கொன்றவர்களை இவர் பழிவாங்கிய கதை படுபயங்கர ஆக் ஷன் சீக்வென்ஸ். இந்தப் படத்தில் ஹஸீனாவாக நடிக்கப்போவது சோனாக்‌ஷி சின்ஹா. அநேகமாக இந்த ஆண்டின் இறுதியில் `ஹஸீனா’வைத் திரையில் பார்க்கலாம்!