
மிருதன் - சினிமா விமர்சனம்
பேய் பட சீஸனில் வந்திருக்கும் ஸோம்பி படம்.
‘தான் உண்டு தன் தங்கை உண்டு’ டைப் டிராஃபிக் போலீஸ் ஜெயம் ரவி. அவருக்கு ஆகவே ஆகாத அசால்ட் அமைச்சரின் ஒரே மகள் டாக்டர் லட்சுமி மேனன். இவர்கள் டூயட் பாடும் முன்பே வந்து நிற்கிறது ஸோம்பி பிரச்னை. ஊட்டி கெமிக்கல் ஃபேக்டரியில் லீக் ஆகும் கெமிக்கலை நக்கிக் குடிக்கிற நாய், ஸோம்பி ஆகிவிடுகிறது. அது வாட்ச்மேனைக் கடிக்க, அவரால் ஒட்டுமொத்த ஊட்டியும் கலவர நிலம் ஆகிறது. ஸோம்பியை அழிக்க மருந்து கண்டுபிடிக்கிற லட்சியத் தோடு ஒரு டாக்டர் குழு கோவைக்கு விரைகிறது. அவர்களை ஊர் சேர்க்கிற பொறுப்பு ஜெயம் ரவி மேல். ஸோம்பி களைக் கொன்றபடி ஆம்புலன்ஸில் கிளம்பும் இந்தக் குழு சந்திக்கும் ரத்தச் சரித்திரமே மீதிக் கதை.
ஸோம்பி கான்செப்ட், ஹாலிவுட்டில் நமுத்துப்போன ஃபார்முலா என்றாலும் தமிழ் ஸோம்பிகள் நமக்கு அட்டகாச அறிமுகம். `நாணயம்’, `நாய்கள் ஜாக்கிரதை’ என எடுத்துக்கொள்ளும் ஜானரிலேயே வெல்டன் சொல்ல வைக்கிறார் இயக்குநர் சக்தி செளந்தர் ராஜன். ஜாலி போலீஸ் ஜெயம் ரவி. ஆனால், காமெடி காட்சிகளைவிட சீரியஸ் ரவிதான் மக்கள் ஃபேவரிட். லட்சுமி மேனன் படம் முழுக்க வந்தாலும் நடிக்க பெரிதாக வாய்ப்பு இல்லை. காளியும் ஆர்.என்.ஆர்.மனோகரும்தான் படத்தைக் காப்பாற்றுகிற காமெடி கர்த்தாக்கள்.

ஊரே ஸோம்பியாகி வெறிபிடித்து திரிய `தங்கையைக் காணவில்லை’ என போஸ்டர் ஒட்டியபடி சோகமாகத் திரிகிறார் ஜெயம் ரவி. அப்போதுதான் படிப்பை முடித்த லட்சுமி மேனன் ஊரையே அச்சுறுத்தும் வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கிற டீமில் இருக் கிறார். பார்ப்பவரை எல்லாம் உடனே கடித்துக் குதறுகிற ஸோம்பிகள் ஜெயம் ரவியிடம் மட்டும் சாஃட்டாகச் சண்டையிடுகின்றன.

தண்ணீரைக் கண்டால் பயந்து நடுங்கும் ஸோம்பிகள் மேல் தண்ணீர் பட்டாலும் ஒன்றுமே ஆவது இல்லை. இதெல்லாம் எப்படி ப்ரோ? ஸோம்பிகள் மீதான பயத்தைவிட இப்படியான சந்தேகக் கேள்விகள் படத்தில் அதிகம்.
அத்தனை ஆயிரம் பேருக்கு ஸோம்பி மேக்கப் போட்ட கைகளுக்கு ஐபோன் கொடுக்கலாம். இசை இமானா..? `முன்னாள் காதலி' பாடல் மட்டுமே ஓ.கே.
திரைக்கதையில் இன்னும் புத்திசாலித்தனம் சேர்த்திருந்தால், மிருதன் மிரட்டியிருப்பான்!
- விகடன் விமர்சனக் குழு