Published:Updated:

தெறி - சினிமா விமர்சனம்

தெறி - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
தெறி - சினிமா விமர்சனம்

தெறி - சினிமா விமர்சனம்

போலீஸை கலெக்டராக மாற்றினால் `மதுர', சமந்தாவை அன்புத் தம்பியாக்கினால் `பகவதி' என விஜய் ஏற்கெனவே ஆடிய அதே `பாட்ஷா’ கேம்தான் அட்லியின் இந்த சத்`தெறி'யன்!

கேரளாவில், தனது குழந்தையோடு அப்பாவிபோல வாழ்கிறார் விஜய். அப்போது லோக்கல் ரெளடிகளோடு சின்னப் பிரச்னை ஒன்று வர, பழைய பன்னீர்செல்வமாக மாறவேண்டிய கட்டாயம். ஃப்ளாஷ்பேக் தெரிந்துகொள்வதற்காகவே படைக்கப்பட்ட ஏமி ஜாக்சன் கேரக்டர் மூலம் போலீஸ் விஜய்யின் வாழ்க்கைக்குப் பயணிக்கிறது கதை.

தன் குடும்பத்தை அழித்த அமைச்சரைப் பழிவாங்காமல் விலகி வாழ்பவரை, கண்டுபிடித்து மீண்டும் சீண்டுகிறார் வில்லன் அமைச்சர். இந்த முறை அறிவைப் பயன்படுத்தி வில்லனின் கதையை முடித்து, க்ளைமாக்ஸில் வெற்றிபெறுகிறார் விஜய். அவ்ளோதான் `தெறி’!

தெறி - சினிமா விமர்சனம்

ராதிகா முதல் மொட்டை ராஜேந்திரன் வரை அவ்வளவு பக்காவான காஸ்டிங் இருந்தும், கதைச் சுமை முழுவதும் விஜய்யின் தலைமேல். அத்தனை வெயிட்டையும் ஜித்து ஜில்லாடியாகச் சுமக்கிறார் சோ க்யூட் விஜய். இன்ட்ரோவிலேயே இன்ப அதிர்ச்சி தருகிறார் `இயக்குநர் மகேந்திரன்'. முகத்தில் அப்படியே வைகோ சாயல். அவருடைய வில்லத்தன எக்ஸ்பிரஷன்ஸ் எல்லாமே எக்ஸலன்ட்.

சமந்தாவுக்கு, உயிருக்கு உயிராகக் காதலித்து உயிரை விடும் வேலை. ஏமிக்குத்தான் `விக்'கில் இருந்து மலையாள வசனம் வரை அத்தனை சொதப்பல். க்யூட் சிரிப்பு, செல்லக் கோபம், `நீ மொக்க பேபி' என விஜய்யுடன் கலாட்டா செய்து ரசிக்கவைக்கிறார் ரியல் `தெறி’ பேபி நைனிகா. வீ லவ் யூ `பேபி'.

ஒட்டுமொத்தக் கதையையும் மினிமல் ஓவியங்களில் சொல்லும் அந்த டைட்டில் கார்டில் இருந்தே புதுமை முகம் காட்டுகிறது அட்லியின் விஷுவல் சென்ஸ். `ராஜா ராணி'யில் உருவான முத்திரையைக் காப்பாற்ற எமோஷனல் ஏலக்காய் தூவியதில், மாஸ் ஹீரோவே மணிக்கணக்கில் அழுகிறார். புது ரூட் பிடிக்க முயற்சிப்பது ஓ.கே. அதற்கு ஆதிகாலத்து கதை செட்டாகுமா ப்ரோ?

`ஹீரோ அடுத்து வலது பக்கம் திரும்பப்போகிறார்' என யூகிக்கும் அளவுக்கு திரைக்கதை செம சறுக்கல்.

தெறி - சினிமா விமர்சனம்

ஜி.வி.பிரகாஷின் இசையில் `உன்னாலே...’வும், `ஈனா மீனா...’வும் எவர்கிரீன் ஹிட்ஸ். ஜார்ஜ் சி வில்லயம்ஸின் ஒளிப்பதிவு செம பிரைட். நேப்பியர் பாலத்திலும் பாரிஸ் கார்னரிலும் நிஜமாகவே ஷூட் செய்ததுபோல் காட்சிகளை உருவாக்கிக்காட்டிய சி.ஜி டீமுக்கு ஸ்பெஷல் பாராட்டுகள்.

திரைக்கதையில் விறுவிறுப்பு கூட்டியிருந்தால் இது ஸ்பெஷல் `தெறி'யாக இருந்திருக்கும்.

- விகடன் விமர்சனக் குழு