
பா.ஜான்ஸன்

`` `இது பேறுகாலம் இல்லா கர்ப்பமா?'னு வைரமுத்து எழுதிய வரி ஒண்ணு உண்டு. `இடம் பொருள் ஏவல்' படம் வெளியாகாததை நினைக்கும்போது அப்படி ஒரு வலி எழும். ஒரு விஷயம் உங்களை ரொம்ப நாள் காத்திருக்கவைக்குதுனா, அது இன்னும் ஏதோ ஒரு பெரிய விஷயத்துக்கு உங்களைத் தயார்படுத்துதுனு அர்த்தம்’’ - நம்பிக்கையுடன் பேசுகிறார் இயக்குநர் சீனுராமசாமி.

`` `இடம் பொருள் ஏவல்' என்னாச்சு?’’
``சினிமாவில் எழுதப்படாத பொதுவிதியே காத்திருப்பதுதான். சில நேரங்களில் அதுவே நமக்கு பெரிய நன்மையைக் கொண்டுவந்து சேர்க்கும். அப்படியான நன்மைதான் திருப்பதி பிரதர்ஸ். `இடம் பொருள் ஏவல்' படத்தை அவங்க அவ்வளவு ரசிச்சாங்க. படம் விரைவில் வெளியாகும். அதற்கு முன் `தர்மதுரை'!’’
`` விஜய் சேதுபதியுடன் உங்களுக்கு மூன்றாவது படம் `தர்மதுரை'. இந்த இணைப்புக்கு, உங்களுக்குள் இருக்கும் கம்ஃபர்ட் காரணமா... அல்லது உங்கள் அறிமுகம் என்கிற பிரியமா?’’
``விஜய் சேதுபதி மீது எனக்கு இருக்கும் அன்பு, என் மீது விஜய் சேதுபதி கொண்டிருக்கும் பேரன்பு. `இடம் பொருள் ஏவல்' படம் முடிஞ்சதும், `நாம இன்னொரு படம் சேர்ந்து வேலை செய்யணும்ணே'னு சொன்னான். என் படைப்பின் மேல் நம்பிக்கை வைத்திருக்கும் விஜய் சேதுபதியின் நல்ல மனசுக்கு `தர்மதுரை' சிறந்த பரிசா இருக்கும்.’’

``கிராமத்து சப்ஜெக்டாகவே இயக்குகிறீர்களே... இது ஒரு சின்ன வட்டத்துக்குள் மாட்டிக்கொண்டது மாதிரி இல்லையா?’’
`` `கூடல்நகர்’, `தென்மேற்குப் பருவக்காற்று’, `நீர்ப்பறவை’, `இடம் பொருள் ஏவல்’, `தர்மதுரை' எல்லாமே ஒரே கிராமத்துப் படங்கள் அல்ல. சின்ன வட்டம், பெரிய வட்டம் எல்லாம் தாண்டி புவியியல் சார்ந்த பதிவுகளைத் தொடர்ந்து தருவதுதான் என் விருப்பம். கிராமம், நகரம் என்பதை எல்லாம் தாண்டி ஒரு நிலத்தின் கதை, அது உண்டாக்கும் மனஎழுச்சிகள்தான் என்னைப் பயணிக்கவைக்குது.
`உள்ளூர் வியாபாரத்தில் தோற்றுவிட்டால், நாம் நம் படங்களை வெளிநாடுகளுக்குக் கொண்டுபோக முடியாது’ என்றார் நண்பர் வெற்றி மாறன். ஆகவே இங்கு இருக்கும் களத்தை விட முடியாது; வெற்றி பெற்றாக வேண்டும். அதே சமயத்தில் அர்த்தமுள்ள படைப்புகளைத் தரவேண்டும். இதுதான் சவால். மக்கள் கேட்பது எல்லாம் நியாயமான உணர்வுகளின் சங்கமம், ஆபாசம் அல்ல. சுவாரஸ்யம் கலந்த நயமான ஹாஸ்யம். அதைத்தான் கெளரவமான வெற்றிக்கு வழியாகப் பார்க்கிறேன்.’’

`` `தர்மதுரை’ என்ன கதை?''
``ஒவ்வொருத்தரோட வாழ்விலும் நிச்சயம் பல பெண்கள் கடந்திருப்பார்கள். அவங்களால வாழ்க்கையில் சில விஷயங்கள் மாறியிருக்கும். அப்படிப்பட்ட பெண்களைப் பற்றிய கதைதான் இது. என் வாழ்க்கையில், வெவ்வேறு தருணங்களில் என் நலவிரும்பிகளாக நான் கடந்துவந்த பெண்களைப் பற்றிய பதிவு. அவங்களைப் பற்றி நான் சொல்லிடுவேன். ஆனா, அவங்களோட கணவர்கள் கோபிச்சுக்குவாங்க. நினைவுதான் சுகம், தேடிப் போனா ரணம்.’’
``கிராமத்துப் பெண்ணாக தமன்னா எப்படிப் பொருந்தியிருக்கிறார்?’’
``தமன்னா, தென்காசியில் வாழும் தமிழ் பேசும் தெலுங்குப் பெண்ணா நடிச்சிருக்காங்க. இதில் அவரின் நடிப்பைப் பார்த்துட்டு எல்லாரும் நிச்சயமா ஆச்சர்யப்படுவாங்க. தமன்னா மட்டும் இல்லை, `காமக்காபட்டி அன்புச்செல்வி'ங்கிற கதாபாத்திரத்தில் நடிச்சிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், காலேஜ் ஸ்டூடன்ட்டா நடிச்சிருக்கும் ஸ்ருஷ்டி டாங்கேனு மூன்று பெண்களின் நடிப்பும் அவ்வளவு அழகா இருக்கும்.’’

``மாஸ் ஹீரோ படங்களும் ஓடுகின்றன; `காக்காமுட்டை’, `விசாரணை’ மாதிரியான படங்களும் பட்டையைக் கிளப்புகின்றன. இதுபோன்ற சூழலை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’
``1980-களில் இந்த மாதிரியான ஒரு நிலைமை இருந்தது. இதை விட்டுடக் கூடாது. இதுபோன்ற படங்களை தனுஷ், சூர்யா, விஜய் சேதுபதி என நடிகர்களே தயாரிக்க முன்வருவது என்னைப் போன்ற எளிய சினிமாக்காரர்களுக்கு மகிழ்ச்சி தரும் விஷயம். பாலு மகேந்திரா சார் அடிக்கடி சொல்வதுபோல, மிடில் கிளாஸ் சினிமாவுக்கான இடங்கள் பூர்த்தியாகும் காலமாக இதைப் பார்க்கிறேன். வாய்ப்புகளும் நம்பிக்கைகளும் இணைந்தால் உள்ளூரில் அர்த்தமுள்ள படைப்புகள் உருவாகி இங்கு வெற்றிபெற்று, உலக அரங்கிலும் கவனிக்கப்படும்.’’