
பா.ஜான்ஸன்

ஒரு சினிமா ரசிகன், தன் ஹீரோவுக்கே வில்லனானால், அதுதான் ‘ஃபேன்’. இப்படிப்பட்ட கதையைத் தேர்வுசெய்ததற்காகவே ஷாரூக்கைக் கொண்டாடுகிறது பாலிவுட்.
ஒரு ரசிகன், ஹீரோவுக்காக என்னவெல்லாம் செய்வான்? கட் அவுட், ஃப்ளெக்ஸ், பேனர், பல்க் டிக்கெட் புக்கிங்... இப்படி பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆர்யன் கன்னாவின் (ஷாரூக் கான்) தெறி வெறி ஃபேன் கௌரவ் சந்த்னா (இதுவும் ஷாரூக்தான்).
டெல்லியில் `சைபர் கஃபே' நடத்திவரும் கௌரவ் சந்த்னா, தன் ஹேர்ஸ்டைல், நடை, உடை, சிரிப்பு, அழுகை எல்லாவற்றிலும் பாலிவுட்டின் பகுத் படா சூப்பர் ஸ்டார் `ஆர்யன் கன்னா’வாகவே வெளிப்படுகிறான். போட்டி ஒன்றில் ஆர்யனைப்போலவே பெர்ஃபார்ம் செய்து, ட்ராஃபியைத் தட்டும் அவன், அதை ஆர்யனுக்கு பிறந்த நாள் பரிசாக அளிக்க, அவரைச் சந்திக்கக் கிளம்புகிறான்.
ஆனால், அங்கு ஆர்யனின் கையசைவைக் காணவே திரண்டிருக்கும் அத்தனை பெரிய கூட்டத்துக்கு நடுவே, அவனைச் சந்திக்க வாய்ப்பே இல்லை எனத் தெரிகிறது. அந்தச் சமயத்தில் அவனைச் சந்திக்க இவன் பிடிக்கும் ஒரு ஐடியா, கௌரவ் மீது ஆர்யனுக்கு வெறுப்பை ஏற்படுத்துகிறது. ‘இந்த மாதிரி பண்றவன்லாம் என் ரசிகனே இல்ல.
நீ ஒழுங்கா கிளம்பி ஊருக்குப் போயிடு' எனக் கடுமையாகத் திட்ட, மொத்த வாழ்க்கையும் நொறுங்கிப்போனதாக நினைக்கிறான் கௌரவ்.

இதுநாள் வரை துரத்தித் துரத்தி ரசித்த ஆர்யனை, தன்னைத் துரத்தவைக்கிறான் கௌரவ். அதன் பிறகு நடக்கும் ஹீரோ Vs. ஃபேன் ஆட்டம்தான் படம்.
டூயல் ரோல் என்றாலே சந்தோஷமாகிவிடுவார் ஷாரூக். மனிதர் ஹீரோவாகவும் ரசிகனாகவும் வெரைட்டியாக வெளிப்படுகிறார். `ரசிகர்கள் இல்லாமல் நான் இல்லை’ - ஒவ்வொரு முறையும் ஆர்யன் சொல்லும் இந்த வாசகம், ஒரு ரசிகனால் தனக்கு பிரச்னை வந்த பிறகு அதைச் சொல்லத் தயங்கும் இடம், ஆசம். ஹேட்ஸ் ஆஃப் எஸ்.ஆர்.கே! முதல் பாதியில் பிடித்த வித்தியாசமான களம், இரண்டாம் பாதியில் வழக்கமான பழிக்குப்பழி + ஆள் மாறாட்ட பாதையில் பயணிப்பதுதான் படத்தின் மைனஸ்.
ஒரு நடிகரின் மீதான அபரிமிதமான அன்பே வம்பாகும் பிரச்னையைப் பேசிய விதத்தில் ஸ்கோர் செய்திருக்கிறார் இயக்குநர் மனீஷ் ஷர்மா.
`நான் ஆர்யனா பேர் எடுத்துட்டேன். நீ ஏதாவது பண்ணணும்னா, அதை கௌரவ்வா பண்ணு. உன் வாழ்க்கையை நீ வாழு. என் வாழ்க்கையை நான் வாழுறேன்’ க்ளைமாக்ஸ் காட்சியில் `ஆர்யன்’-ஷாரூக்கின் இந்த அறிவுரை, ‘ஃபேஸ்புக்கைப் போர்க்களமாக்கிச் சண்டையிட்டுக்கொண்டிருக்கும் அத்தனை ரசிகர்களுக்கும் சமர்ப்பணம்.’
ஒரு ரசிகனின், ரசிப்புத்தன்மையின் எல்லையைச் சொன்னவிதத்தில் ஹீரோவாகிறான் இந்த `ஃபேன்’.