Published:Updated:

மனிதன் - சினிமா விமர்சனம்

மனிதன் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
மனிதன் - சினிமா விமர்சனம்

மனிதன் - சினிமா விமர்சனம்

மனிதன் - சினிமா விமர்சனம்

முன்னேறத் துடிக்கும் ஒரு ஜாலி வக்கீல், நீதிபதிகளே மிரளும் ஒரு ஜெகஜ்ஜால வக்கீல், இருவருக்கும் இடையில் நீதிக்காக நடக்கும் எமோஷனல் யுத்தம், `மனிதன்'.

பல ஆண்டுகளுக்குப் பிறகு கோர்ட்டும் கோர்ட் சார்ந்த இடமுமாக ஒரு வாத, பிரதிவாதக் கதைக்களம். தினம் தினம் செய்திகளில் கடக்கும் ‘குடிபோதையில் கார் ஓட்டிக் கொலை' கதையைக் கையில் எடுத்த இயக்குநர் அஹமத் - உதயநிதி கூட்டணிக்கு அன்பும் பாராட்டும். இந்தி  `ஜாலி எல்.எல்.பி' ரீமேக்கில் ஹீரோயிச பூந்திகளைத் தூவாமல் அப்படியே படமாக்கியதிலேயே படம் பாஸ்.

ஜட்ஜுக்கு லட்டு கொடுத்து தீர்ப்பு வாங்கும் ‘நான் மொக்கை பீஸுங்க’ வக்கீல் சக்தி. காதலிக்காக ஒரு கேஸிலாவது ஜெயித்துக் காட்டும் ஆசையில் பொள்ளாச்சியில் இருந்து சென்னைக்கு வருகிறார். குடிபோதையில் சாலையோர ஏழைகள் மேல் கார் ஏற்றிக் கொல்கிறார் தொழிலதிபர் மகன். அந்த வழக்கில், இந்தியாவின் நம்பர் ஒன் வக்கீல் ஆதிசேஷனே ஆஜராகி, குற்றவாளியை ஒரே ஹியரிங்கில் விடுவிக்கிறார். புகழுக்காக அந்த வழக்கைத் தோண்டி, பொதுநல வழக்கு போடுகிறார் சக்தி. அதன் தீர்ப்பு என்ன என்பது விறுவிறு க்ளைமாக்ஸ்.

கொஞ்சம் தடுமாறினாலும், சிங்கிளாக ஒட்டுமொத்த படத்தையும் தாங்கிப்பிடிக்கிறார் உதயநிதி. ஹன்சிகாவுக்கு என்னதான் ஆச்சு...  #WHEREISYOURCUTENESS என ஹேஷ்டேக் போட்டுத் தேடவேண்டும்போல. பிரகாஷ்ராஜின் வசன உச்சரிப்பிலும் நடிப்பிலும் எப்போதும் போலவே 2,000 கிலோ அழுத்தம். நீதிபதி ராதாரவியின் அலட்டல் இல்லாத நடிப்பு அற்புதம். க்ளைமாக்ஸில் சில நிமிட க்ளோஸப்பில் கலங்கவைத்துவிடுகிற கடைசி சாட்சி கமலக்கண்ணனின் நடிப்பு அபாரம்.

திருப்பங்கள் இல்லாத மீடியம் ஃபாஸ்ட் திரைக்கதை சறுக்கல். நீதிமன்றத்தைப் பெட்டிக்கடை போலவும், நீதிபதியை டவாலியைப் போலவும் சித்தரித்திருப்பதும் ஏன் பாஸ்? 

எந்தவித ஆராய்ச்சியும் இல்லாமல் ஒரு பேப்பர் நியூஸை வைத்து பொதுநல வழக்கு போடுவது, ஒரே பாடலில் உண்மையை உரித்தெடுக்க முடிவு எடுப்பது, சொல்லிவைத்த மாதிரி எல்லா கதாபாத்திரங்களும் நாயகனுக்கே உதவுவது... என படம் முழுக்க யதார்த்தம் மீறும் க்ளிஷேக்கள். என்றாலும் படம் பேசும் மனிதம் அதையெல்லாம் மறக்கடிக்கிறது. 

மனிதன் - சினிமா விமர்சனம்

சந்தோஷ் நாராயணனின் எளிய பின்னணி இசையில் வைப்ரேட் மோடில் படபடக்கிற இதயம், பாடல்களில் சைலன்ட் மோடில் தூங்கிவழிகிறது.

இருந்தும், சொல்லவந்த செய்தியை சமரசங்களின்றி சொன்னதில் `மனிதன்' கவர்கிறான். 

- விகடன் விமர்சனக் குழு