
கார்க்கிபவா

சீன மொபைல்களும் இன்னபிற பிளாஸ்டிக் பொருட்களும் இந்தியாவை ஆக்கிரமித்தது எல்லாம், ஜஸ்ட் இப்போதுதான். அதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே அங்கு இருந்து இறக்குமதியாகி ஹிட் அடித்தவர் ஜாக்கி சான். நம் ரசிகர்களுக்காக குங்ஃபூ போட்ட ஜாக்கி, இப்போது ஒரு குத்துப்பாட்டுக்கு ஆடியிருக் கிறார். அது என்ன படம் எனத் தெரிந்து கொள்வதற்கு முன்னதாக ஒரு ஃப்ளாஷ்பேக்.
உலகிலேயே இரண்டாவது மிகப் பெரிய சினிமா மார்க்கெட், சீனா. உலகம் முழுவதும் இந்தியப் படங்களுக்கு வரவேற்பு இருந்தாலும் சீனாவில் அது கிட்டத்தட்ட ஜீரோ. இந்த இடைவெளியை நிரப்புவதற்காக இரு நாட்டு அரசுகளும் இணைந்து சில நடவடிக்கைகளை எடுத்தன. அதில் ஒன்று, இந்திய - சீன கூட்டுத் தயாரிப்பாக சினிமா எடுப்பது. அமீர் கானும் ஜாக்கி சானும் தலா ஒரு படத்தில் நடிப்பதாகத் திட்டம்.
ஜாக்கி சான் நடிக்கும் படம், ‘குங்ஃபூ யோகா’. அவருடன் நடித்திருப்பது `அனேகன்’ பட நாயகி அமைரா தஸ்தூர். ஐஸ்லாந்து நாட்டுப் பனிமலைகளில் ஏறி ரிஸ்க் எடுத்து நடித்த அமைராவைப் பாராட்டித் தள்ளினாராம் ஜாக்கி. இன்ஸ்டாவில் ‘ஜாக்கியும் நானும்’ படங்களைத் தட்டி லைக்ஸ் அள்ளினார் அமைரா.
இந்திய வில்லனான சோனு சூட், இதில் ஜாக்கியுடன் இன்னொரு ஹீரோவாக நடிக்கிறார். படப்பிடிப்பு முடிந்து கிளம்பிய சோனுவுக்கு ஜாக்கி ஒரு பரிசு தந்தாராம். அதில் ‘உங்களுடன் நடித்ததில் எனக்குப் பெருமை - ஜாக்கி’ என எழுதியிருந்ததைப் படித்து மெர்சலாகிவிட்டார் சோனு.
`குங்ஃபூ யோகா’ படப்பிடிப்புக்காக இந்தியா வந்தார் ஜாக்கி. பிரபல நடன இயக்குநர் ஃபரா கான், ஜாக்கி சானை ஒரு பக்கா இந்தியக் குத்துப்பாட்டுக்கு ஆடவைத்தார். நம்ம கமர்ஷியல் சிங்கங்களும் புலிகளும் ஒரு பன்ச் வைக்கும் நேரத்தில் மூன்று பன்ச் வைக்கும் வேகம் உடையவர்கள் சீன ஹீரோக்கள். அதிலும் ஜாக்கி, சீனாவின் சூப்பர் ஸ்டார். ‘இதெல்லாம் எனக்கு ஜுஜுபி’ என இறங்கி குத்தியிருக்கிறாராம். ஜெய்ப்பூர், ஜோத்பூர் என ராஜஸ்தானின் பல ஊர்களில் ஆடிவிட்டு, பாடலின் தொடர்ச்சியை பீஜிங் நகரில் முடித்திருக்கிறார்கள்.
`ஜாக்கியின் காமெடிக்கு நான் ரசிகை. அதைவிட அவரது நடனம் சூப்பர். அவரது வேகமும் நளினமும் என்னை ஆச்சர்யப் படுத்துகின்றன. இனி அவரை `ஜாக்கி ஜாக்சன்’ என அழைக்கலாம்’ என்கிறார் ஃபரா கான்.

`நன்றி வணக்கம்’ போடுவதற்கு முன்னரே கிளம்பிய ரசிகர்களை, `இந்தப் படத்தை கோடாக் ஃபிலிமில் எடுத்தோம். ஷூட்டிங் அப்ப என்ன நடந்ததுன்னா...’ என புளூப்பர்ஸ் போட்டு உட்காரவைத்தவர் ஜாக்கி. அந்த டெக்னிக்கை, நம்ம ஊர் சில ஆண்டுகளாகத்தான் க.க.போ செய்திருக்கிறது. சமீபத்தில் `தெறி'யில்கூட படம் முடிந்த பிறகு ஒரு பாடல் இருந்தது. அந்த ஸ்டைல்படி ‘குங்ஃபூ யோகா’விலும் இன்னொரு மாஸ் குத்து சேர்க்கலாமே எனச் சொன்னாராம் ஜாக்கி. எனவே, இன்னொரு லுங்கி டான்ஸுக்கோ, மங்கி டான்ஸுக்கோ வாய்ப்பு இருக்கிறது.
`படக் குழுவினரை தன் அன்பால் திணறத் திணற அடித்த ஜாக்கி, இந்திய ரசிகர்களை நிச்சயம் தியேட்டரில் எழுந்து ஆடவைத்துவிடுவார். அதற்கு அக்டோபர் வரை பொறுங்கள். அப்போதுதான் `குங்ஃபூ யோகா’ ரிலீஸ்' என்கிறார் இயக்குநர் ஸ்டேன்லி டாங். ஜாக்கியின் எவர்கிரீன் கிளாசிக் `போலீஸ் ஸ்டோரி’ இவரது இயக்கம்தான்.
இந்த ஆண்டு தீபாவளி ரேஸில் விஜய், அஜித், ஷாரூக், சல்மான் மட்டும் அல்ல... ஜாக்கியும் இருக்கிறார்!
சீனாவில், ஓர் ஆண்டுக்கு 34 வெளிநாட்டுப் படங்களை மட்டுமே அந்த நாட்டு அரசு அனுமதிக்கிறது. அதிலும் பெரும்பான்மை ஹாலிவுட் படங்கள். ஆண்டுக்கு ஐந்து இந்தியப் படங்கள் மட்டுமே அனுமதி. ஆனால், சீன சென்சாரின் ஓவர் கெடுபிடியால், நாம் அந்த ஐந்தைக்கூடத் தொட்டது இல்லை. அமீர் கானின் `பிகே’, அமிதாப்-தீபிகா நடித்த `பிக்கு’, `பாகுபலி’ போன்ற படங்கள் ரிலீஸ் ஆகி வசூலை அள்ளின.

ஜெய்பூரில் உள்ள நகர்மார் அருங்காட்சியகத்தில் பிரபலங்களின் மெழுகுச்சிலைகள் வைப்பது வழக்கம். இப்போது ஜாக்கி சானின் மெழுகுச்சிலையும் அதில் சேர்ந்திருக்கிறது. பார்ப்பதற்கு ‘பாபா’ ரஜினி போல தலைக்கட்டுடன், ஒரு யோக முத்திரையைக் காட்டிக்கொண்டு நிற்கிறார் இந்த மார்ஷியல் ஆர்ட் மாவீரன்.