சினிமா
Published:Updated:

“அடுத்து, தனுஷுடன் ஒரு ஆக்‌ஷன் படம்!”

“அடுத்து, தனுஷுடன் ஒரு ஆக்‌ஷன் படம்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“அடுத்து, தனுஷுடன் ஒரு ஆக்‌ஷன் படம்!”

நா.சிபிச்சக்கரவர்த்தி, படங்கள்: ஆ.முத்துக்குமார்

“அடுத்து, தனுஷுடன் ஒரு ஆக்‌ஷன் படம்!”

``சின்ன வயசுல இருந்தே கார்த்திக் என்ன நினைக்கிறானோ, அதைத்தான் செய்வான். ஸ்கூல்ல கவிதை, கட்டுரை, நாடகப் போட்டினு ஆர்வத்தோடு கலந்துப்பான். சினிமாவுக்குள் அவன் வரும்போதே தெரியும், என் மகன் ஜெயிப்பான்னு...'' - கார்த்திக் சுப்புராஜின் அம்மா மல்லிகா சொல்லும்போது, அத்தனை பேர் முகங்களிலும் ஆயிரம் வாட்ஸ் மகிழ்ச்சி!

அம்மா மல்லிகா, தங்கை தேவிகா ராணி, மனைவி சத்ய பிரேமா என, கார்த்திக் சுப்புராஜை `இறைவி'கள் ஒரு பக்கம் சூழ்ந்திருக்க, அப்பா கஜராஜ், தங்கையின் கணவர் கார்த்திகேயன் இன்னொரு பக்கம் இருக்க... ஆரம்பமானது கச்சேரி.

``எங்களுக்குச் சொந்த ஊர் மதுரை. கார்த்திக் துறுதுறுனு ஏதாவது பண்ணிக்கிட்டே இருப்பான். மில்லினியம் இயரை, மதுரையில ஒரு கல்யாண மண்டபம் வாடகைக்கு எடுத்து என் ஃபேமிலி ஃப்ரெண்ட்ஸோடு கொண்டாடினோம். அப்போ, கார்த்திக் ப்ளஸ் டூ படிச்சுட்டிருந்தான். அவனே ஸ்கிரிப்ட் எழுதின `கார்கில் வார்’ டிராமாவை அங்கே போட்டான். அதுல டயலாக்கே இருக்காது. வெறும் மியூஸிக், பாட்டுதான். ரொம்ப நல்லா பண்ணியிருந்தான். அதைப் பார்த்த என் நண்பர்கள் எல்லாரும் பாராட்டினாங்க. ஓ.கே. பையன்கிட்ட சினிமா ஆர்வமும் இருக்குனு அப்பதான் தெரிஞ்சுக்கிட்டேன்'' - மகனின் ஆர்வத்தை கண்டுபிடித்த தருணத்தைப் பெருமிதத்துடன் சொல்கிறார் அப்பா கஜராஜ்.

``சின்ன வயசுல விட்டுல சேட்டை எல்லாம் அவ்வளவா பண்ணது இல்லைங்க. ஆனா, அவனும் அவன் தங்கச்சியும் அடிக்கடி சண்டை போட்டுப்பாங்க. நான் எப்பவும் கார்த்திக் பக்கம்தான். அவரு பொண்ணு பக்கம்'' என அம்மா மல்லிகா சொல்லும்போதே ``எங்க அம்மாகிட்ட கேட்டா, அவங்க பையனை விட்டுக்கொடுக்காமத்தான் பேசுவாங்க'' என்ட்ரி ஆகிறார் கார்த்திக்கின் தங்கை தேவிகா ராணி.

``நானும் அவனும் ஒரே ஸ்கூல்லதான் படிச்சோம். ரெண்டு பேருக்கும் ஒரு வயசுதான் வித்தியாசம். அம்மா சொன்ன மாதிரி செம சண்டை போடுவோம். ஆனா, அதுக்கும் மேல ரெண்டு பேருக்கும் பாசம் அதிகம். `எப்படிடா... ஒண்ணாத்தானே படிச்சு வளர்ந்தோம். உனக்கு மட்டும் எங்கே இருந்து இவ்வளவு அறிவு வந்தது?'னு நான்கூட அடிக்கடி அவனைக் கலாய்ப்பேன். ஆனா, நீ இன்னமும் நல்லா வளரணும்ப்பா'' என தங்கை சொல்ல... `தம்ப்ஸ்அப்' காட்டுகிறார் கார்த்திக்.

``என் தங்கச்சி லவ் மேரேஜ். நானும் லவ் மேரேஜ்தான். அவ லவ் பண்றது எங்க அப்பா, அம்மாவுக்குத் தெரியாது. நான்தான் வீட்டுல போட்டுக்கொடுத்தேன். சொன்ன கொஞ்ச நாள்லயே தங்கச்சிக்கு அவரையே கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்க.  என் தங்கச்சி வீட்டுக்காரர் கார்த்திகேயன்தான் எங்களின் `ஸ்டோன் பெஞ்ச்' சினிமா நிறுவனத்தின் இயக்குநர். அவங்களுக்கு `சஞ்சய்'னு ஒரு பையன் இருக்கான். செம துறுதுறு'' என ஹைஃபை தட்டுகிறார் கார்த்திக் சுப்புராஜ்.

`` `ஸ்டோன் பெஞ்ச்'னு பேரு வெச்சதுக்குக் காரணமே, நாங்க படிச்ச ஸ்கூல்தான். எங்க ஸ்கூல்ல ஒரு ஸ்டோன் பெஞ்ச் இருந்தது. க்ளாஸ் முடிஞ்சதும் அங்கே உட்கார்ந்து ஜாலியா அரட்டை அடிப்போம். யாராவது நாளைக்கு இயக்குநராகவோ, தயாரிப்பாளராகவோ ஆனோம்னா... `ஸ்டோன் பெஞ்ச்' பேரைத்தான் தலைப்பா வைக்கணும்னு முடிவுபண்ணிட்டோம்'' என கார்த்திக் சொல்ல, புருவம் உயர்த்தி லைக்குகிறார் அவரின் மனைவி சத்யா.

``டேய் அண்ணா, என் காதல் கதையைச் சொன்னியே... உன் லவ் ஸ்டோரியைச் சொன்னியா?'' என தங்கை தேவிகா வாலன்ட்டியராகக் கதை சொல்ல ஆரம்பிக்க, ``அதை நானே சொல்லிடுறேன்'' எனப் பேச ஆரம்பிக்கிறார் கார்த்திக் மனைவி சத்யா.

``என் ஃப்ரெண்ட் கல்யாணத்துலதான் கார்த்திக் என்னை முதன்முதல்ல பார்த்திருக்கார். அப்படிப் பார்த்ததுமே என் மேல காதல்ல விழுந்துட்டார்னு நினைக்கிறேன். அந்தக் கல்யாண ஃப்ரெண்டுதான் `கார்த்திக்குனு ஒரு குட்பாய் இருக்கான். செம ஸ்மார்ட்டா இருப்பான். `நாளைய இயக்குநர்'னு ஒரு போட்டி நடக்குது. அதுல குறும்படம் எடுத்துட்டு இருக்கான். அவன் குறும்படம் எல்லாம் பாருங்க'னு சொல்லிட்டே இருப்பார். நான் அந்த நிகழ்ச்சியைப் பார்க்கும்போது எல்லாம் இவர் மட்டும் வரவே மாட்டார். அப்படி இப்படினு ஒருநாள் நேர்லயே என்னை வந்து பார்த்தவர், உடனே `ஐ லவ் யூ' சொல்லிட்டார். எனக்கும் இவரைப் பார்த்ததும் பிடிச்சுப்போய்,  ஏத்துக்கிட்டேன். இப்ப பார்க்கிற என் நண்பர்கள் எல்லாருமே ` `இறைவி' படத்துல வர்ற ஆண்கள்ல, கார்த்திக் எந்த கேரக்டர்?'னு கேட்பாங்க. உண்மையைச் சொல்லணும்னா `பீட்சா'வுல இருந்து எல்லா படத்துலயும் அவரோட ரியல் கேரக்டர் ஏதாவது ஒரு இடத்துல வந்துடும். இப்ப `இறைவி' படத்துல எஸ்.ஜே.சூர்யா நடிச்ச `அருள்' கேரக்டரில்தான் இவரைப் பார்க்கிற மாதிரி நிறைய சீன்ஸ் இருந்தது'' என்று கணவரைப் பார்த்துச் சிரிக்க, அவரை அணைத்துக்கொள்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.

``எங்களுக்கு இவங்க காதல் விஷயமே தெரியாது. ஒருநாள் நானும் அவங்க அம்மாவும் `என்னடா பொண்ணு பார்க்கலாமா?'னு கேட்டோம். ரொம்ப கூலா `நான் ஏற்கெனவே ஒரு பொண்ணைப் பார்த்துவெச்சிருக்கேன். உங்களுக்குப் பிடிச்சிருக்கானு சொல்லுங்க. கல்யாணம் பண்ணிக்கிறேன்'னு சொன்னான். என் மகன், மகள் விருப்பத்தைத் தாண்டி நாங்க எதுவுமே செஞ்சது இல்லை. உடனே கிரீன் சிக்னல் கொடுத்துட்டோம். இப்ப ரெண்டு பேரும் ஹேப்பி'' என்கிறார் அப்பா கஜராஜ். இவர் `கபாலி' படத்தில் ரஜினியின் நண்பராக நடித்திருக்கிறார்.

``நீங்க எப்படி சார் நடிகர் ஆனீங்க?'' என கஜராஜிடம் கேட்டால்...

``அது செம ட்விஸ்ட் தம்பி'' எனச் சிரிக்கிறார்.

``கார்த்திக் குறும்படம் பண்ணும்போது,  ஷூட்டிங் ஸ்பாட்ல என்ன நடக்குதுனு போய்ப் பார்ப்பேன். பார்த்துப் பார்த்து எனக்கும் நடிக்கணும்னு ஆசை வந்துடுச்சு.  `அப்பாவுக்கு நடிக்க வாய்ப்பு கொடுப்பா'னு கார்த்திக்கிட்ட கேட்டேன். `பார்க்கலாம்... பார்க்கலாம்'னு சொல்லிட்டுப் போயிட்டான். அந்தச் சமயத்துல `நாளைய இயக்குநர்' போட்டிக்காக `பெட்டி கேஸ்'னு ஒரு குறும்படம் எடுத்துட்டிருந்தான். அதுல ஊர் பெரியவரா நடிக்க ஒரு நாடக நடிகரை செலெக்ட் பண்ணியிருந்தான். அவருக்கு கேமரா முன்னாடி நடிப்பு வரலை. அப்புறம்தான் அந்த கேரக்டர்ல என்னை நடிக்கவெச்சான். அதுல என் நடிப்பைப் பார்த்து, ஓரளவுக்கு இம்ப்ரஸ் ஆகிட்டான்னு நினைக்கிறேன்'' என மகனைப் பார்த்துச் சிரிக்கிறார்.

``அடுத்து `பீட்சா' படத்துல ஒரு போலீஸ் கேரக்டர். முதல் சீன்ல கொஞ்சம் சொதப்பினேன் போல. உடனே கேமராமேன்கிட்ட `இனிமே சொந்தக்காரங்களையே நடிக்கவைக்கக் கூடாதுடா'னு கார்த்திக் சொன்னது, என் காதுல விழுந்துடுச்சு. பகீர்னு ஆகிருச்சு. அந்த ஷாட்டைத் திரும்பவும் எடுத்து, ஓ.கே ஆனதுக்கு அப்புறம்தான் அவனுக்குத் திருப்தி வந்தது. என்கிட்ட கை கொடுத்து `நல்லா நடிச்சீங்க'னு சொன்னான். வீட்டுலதான் அப்பா; ஸ்பாட்டுக்கு வந்துட்டா நானும் அவனுக்கு ஒரு நடிகர்தான்.

அப்புறம் ஒருநாள் `நீங்க நடிக்கணும்னு முடிவு பண்ணிட்டா,  சின்சியரா இருங்க. இதுலயே முழுக் கவனத்தையும் செலுத்துங்க'னு சொன்னது மட்டும் இல்லாம, வீட்டுலயே எனக்கு ஆக்ட்டிங் க்ளாஸ் எடுக்கவும் ஏற்பாடு செஞ்சான். இப்படித்தான் ஃபார்மா கம்பெனியில இருந்து மகன் மூலமா நடிகர் ஆனேன். இப்ப அப்பா நல்லா நடிகர்தானடா?'' என மகனிடம் கேட்க, ``சூப்பர்ப்பா'' என பாராட்டுகிறார் கார்த்திக்.

`` `இறைவி' படத்தைப் பார்த்த பலரும் விமர்சனம் எழுதினாங்களே. நீங்க அந்த விமர்சனங்களைப் படிச்சீங்களா?''

``பத்திரிகை, ஆன்லைன், ரெண்டு வரி ட்வீட்ல வந்த விமர்சனம் வரைக்கும் எல்லாத்தையும் படிச்சேன். `இறைவி' ஸ்கிரிப்ட் எழுதும்போதே `படம் சிலருக்குப் பிடிக்காது; சிலருக்கு ரொம்பப் பிடிக்கும். சிலருக்கு இது லைஃப்பை சேஞ்ச் பண்ற மாதிரி இருக்கும்'னு தோணுச்சு. என் படம் பார்த்துட்டு வீட்டுக்குப் போறதுக்கு முன்னாடியே படத்தை யாரும் மறந்துடக் கூடாது. ஏதோ ஒரு விஷயத்தை யோசிக்கவைக்கணும், ஏதோ ஒரு விவாதத்தையாவது தொடங்கிவைக்கணும்னு  நினைப்பேன். அது `இறைவி'யில்  நடந்திருக்கு. நான் தியேட்டர் போனப்ப, ஒரு லேடி என் கையைப் பிடிச்சு `என் லைஃப்ல இது எல்லாமே இப்ப நடந்துட்டிருக்கு'னு  அழுதாங்க. இதைத்தான் நான் பாராட்டா பார்க்கிறேன். அவங்க லைஃப்ல நடக்கும் விஷயத்தை, ஏதோ ஒரு விதத்துல நம்மால டச் பண்ண முடியுதுங்கிறதுதான் சந்தோஷம்!''

“அடுத்து, தனுஷுடன் ஒரு ஆக்‌ஷன் படம்!”

``தயாரிப்பாளர்களைத் தவறாகக் காட்டியதால், உங்களுக்கு `ரெட் கார்டு' போட்டதாகச் சொன்னார்களே?''

``ரெட் கார்டு எல்லாம் யாரோ ஒருத்தரோட கற்பனை. அதில் உண்மை இல்லை.''

``அடுத்த படம்?''

``தனுஷ்கூட படம் பண்றேன். இப்ப ஸ்கிரிப்ட் எழுதிட்டிருக்கேன். தனியாக உட்கார்ந்துதான் ஸ்கிரிப்ட் எழுதுவேன். இப்ப படத்தோட கதை மட்டும் ஒரு ஐடியாவா இருக்கு. இது புதுசா ஒரு ஆக்‌ஷன் படமா இருக்கும்'' என கார்த்திக் சொல்ல, ஒட்டுமொத்த குடும்பமும் ``வி ஆர் வெயிட்டிங்'' எனக் கைதட்டுகிறது!

புல்லட் கேள்விகள்!

“அடுத்து, தனுஷுடன் ஒரு ஆக்‌ஷன் படம்!”

``உங்களது ரோல்மாடல்?''

``மணிரத்னம் சார் மற்றும் க்ளின்ட் ஈஸ்ட்வுட்.''

``சமீபத்தில் பார்த்ததில் பிடித்த சினிமா?''

``விஜய்குமாரின் `உறியடி' ''

``படித்துக்கொண்டிருக்கும் புத்தகம்?''

``அ.முத்துலிங்கம் எழுதிய `கடவுள் தொடங்கிய இடம்'  ''

``அடிக்கடி வரும் கனவு?''

``சுனாமியில சிக்கிக்கொள்வது மாதிரி கனவு வரும். ஆனா, ஏன்னுதான் தெரியலை.''

``உங்க ப்ளஸ், மைனஸ்?''

``எனக்கு ரெண்டுமே ஒண்ணுதான். ரொம்பச் சுலபமா எல்லாரையும் நம்பிடுவேன்.''

``வாழ்க்கையின் தத்துவம்?''

``மனசு எதை சரினு சொல்லுதோ அதைச் செய்யணும். அதுதான் என் தத்துவமே.''

``இயக்குநர் ஆகணும்னா முக்கியமான மூணு விஷயங்கள்?''

``ஆர்வம்... பொறுமை... சகிப்புத்தன்மை.''