சினிமா
Published:Updated:

உயர்ந்த மனிதர்

உயர்ந்த மனிதர்
பிரீமியம் ஸ்டோரி
News
உயர்ந்த மனிதர்

நடிகர் சிவகுமார்

உயர்ந்த மனிதர்

சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர், ரஜினி... என தமிழ் சினிமாவின் முக்கியமான ஸ்டார்களை வைத்து பல வெற்றிப் படங்களைத் தந்தவர் இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர். சமீபத்தில் சென்னையில் மறைந்த ஏ.சி.திருலோகசந்தர் பாரம்பர்யமிக்க, வசதியான, படித்த பெற்றோருக்கு மகனாகப் பிறந்தவர்.

ஆங்கில நாவல்கள் படிக்கும் ஆர்வத்தை 10 வயதிலே ஊட்டி வளர்த்தார் இவரது தாய். 1950-ம் ஆண்டு இவரது நண்பரின் தந்தை பத்மனாப அய்யர் தயாரித்து, இயக்கிய `குமாரி’ படத்தில் மூன்றாவது உதவி இயக்குநராகச் சேர்ந்தார். 6 அடி 3 அங்குலம் உயரம்கொண்ட படித்த இளைஞரான இவர் மீது, அப்போதே பாசம்காட்டினார் எம்.ஜி.ஆர். `வாளும் விழியும்’ என்ற இவரது முதல் படம் வெளிவரவே இல்லை. அதன்பின் `வீரத்திருமகன்’, `நானும் ஒரு பெண்’, `காக்கும் கரங்கள்’, அதே கண்கள்’, `ராமு’, `எங்க மாமா’ என ஏவி.எம் நிறுவனத்துக்கு மட்டும் 10-க்கும் அதிகமான வெற்றிப் படங்களை இயக்கினார்.

சினி பாரத் நிறுவனத்தைச் சொந்தமாகத் தொடங்கி, `பாபு’, `பாரதவிலாஸ்’, `பத்ரகாளி’ என, பல படங்களைத் தயாரித்து இயக்கினார். சிவாஜியுடன் 25 படங்கள் பணிபுரிந்தார். அவற்றில் பெரும்பாலானவை வெற்றிப் படங்களே! ஷூட்டிங்கிங் பிரேக்கில் ஒரே அறை, ஒரே தட்டில் உணவை ஒன்றாக உண்டு, ஒரே கட்டிலில் இருவரும் சிறிது நேரம் உறங்குவார்கள். ஏவி.எம் நிறுவனம் தயாரித்த `காக்கும் கரங்கள்’ படத்தில் என்னை புதுமுகமாக அறிமுகப்படுத் தினார். `பாபு’, `பாரதவிலாஸ்’, `தீர்க்கசுமங்கலி’, `நீ இன்றி நானில்லை’, `பத்ரகாளி’ போன்ற படங்களில் அவர் இயக்கத்தில் நான் நடித்திருக்கிறேன்.

`தெய்வமகன்', சிவாஜி- திருலோகசந்தர் உருவாக்கிய மிகச் சிறந்த படம். ஆஸ்கர் விருது பரிந்துரைக்குப் போன முதல் தமிழ்ப் படம் இதுதான். இவர் எம்.ஜி.ஆர்-ஐ வைத்து இயக்கிய ஒரே படம் `அன்பே வா’. ஜெயலலிதா அம்மையார் படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய, `எங்கிருந்தோ வந்தாள்’ இவரது படைப்பு.

தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் 65 படங்கள் இயக்கியுள்ளார். இவற்றில் அதிக படங்களுக்கு கதை-வசனம் எழுதியவர் ஆரூர்தாஸ். விஸ்வநாத் ராய், 50 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார்.
பாக்ஸிங் கற்றுக்கொண்டவர் என்றாலும், சாந்தசொரூபி. அதட்டி உருட்டியதையோ, ஓங்கிக் கூச்சலிட்டுக் கோபப்பட்டதையோ யாரும் பார்த்திருக்கவே முடியாது. ஒழுக்கச் சீலனாக, உயர்ந்த மனிதனாக திரைத் துறையில் தவமாகப் பணிசெய்த உத்தமர் ஏ.சி.திருலோகசந்தர்!