சினிமா
Published:Updated:

ரிலாக்ஸ் ரஜினி! - அமெரிக்கப் பயணம் ஏன்?

ரிலாக்ஸ் ரஜினி! - அமெரிக்கப் பயணம் ஏன்?
News
ரிலாக்ஸ் ரஜினி! - அமெரிக்கப் பயணம் ஏன்?

ம.கா.செந்தில்குமார், ஓவியம்: பிரேம் டாவின்ஸி

ரிலாக்ஸ் ரஜினி! - அமெரிக்கப் பயணம் ஏன்?

‘ராணா’ படப்பிடிப்பு, ரஜினி மயக்கம், மயிலாப்பூர் இசபெல், போரூர் ராமச்சந்திரா, சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனைகள், ‘கோச்சடையான்’, ‘லிங்கா’ தோல்விகள், விநியோகஸ்தர்கள் போராட்டம்... 65 வயதான ஒருவருக்கு இவ்வளவு பிரச்னைகள் வந்தால் என்ன செய்வார்? ஆனால், ரஜினி ‘கபாலி’யாக வருகிறார்.

‘கபாலி’ ஜூலையில் ரிலீஸுக்கு ரெடியாக இருக்க, `2.0' படத்தின் ஷூட்டிங் 50 சதவிகிதம் ஓவர். ஷெட்யூல் பிரேக்கில் ரஜினி அமெரிக்காவுக்குப் பறக்க, `உடல்நிலை சரியில்லை. அதனால்தான் அமெரிக்காவில் சிகிச்சையில் இருக்கிறார்’ எனப் பரவுகிறது வாட்ஸ்அப் வதந்தி.

உண்மையில் ரஜினியின் அமெரிக்கப் பயணம் ஏன் என்று பார்ப்பதற்கு முன்னர், `2.0' பற்றிய ஒரு சிறு ஃப்ளாஷ்பேக்!

• ‘2.0’-வில் வில்லனாக நடிப்பது அர்னால்ட் இல்லை என்றதும், லைக்கா நிறுவனத்தின் வில்லன் தேடல் தொடர்ந்தது. அப்போது அந்த நிறுவனத்தின் தயாரிப்பான ‘கத்தி’ படத்தின் இந்தி ரீமேக்கில் அக்‌ஷய் குமார் நடிப்பதாக முடிவானது. அந்தப் படம் தொடர்பான பேச்சுவார்த்தையின்போது அக்‌ஷய், ‘நான் ஹோட்டல் பேரராக வாழ்க்கையைத் தொடங்கியவன். அப்போது என் ரூமில் தேவி, ஜாக்கிசான், சில்வஸ்டர் ஸ்டாலோன் ஆகிய மூவரின் போஸ்டர்களை ஒட்டிவைத்திருப்பேன். நான் நடிகரான பிறகு அந்த மூன்று பேருடனும் நடித்துவிட்டேன். பிறகு, நான் சினிமாவில் வளர வளர ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் சேர்ந்தே வளர்ந்தது. அப்போது எல்லாம் அந்த பேரர் ரூம் போஸ்டர் நாட்கள்தான் ஞாபகத்துக்கு வரும். ‘தேவி, ஜாக்கிசான், சில்வஸ்டர் ஸ்டாலோன் போல ரஜினி போஸ்டரையும் ஒட்டிவைத்திருந்தால் அவருடன் நடிக்கும் ஆசையும் இந்நேரம் நிறைவேறியிருக்குமோ என நினைத்துக்கொள்வேன்’ எனச் சொல்லியிருக்கிறார். அப்போது அந்த நேரத்தில் `2.0'-ன் வில்லனாக முடிவுசெய்யப்பட்டவர்தான் அக்‌ஷய் குமார்.

•   படத்தில் ரஜினி பயன்படுத்தும் ஸ்பெஷல் காஸ்ட்யூமுக்காக பாடி ஸ்கேனிங் மெஷர்மென்ட் எடுப்பதற்காக முதல் முறை, தயாரான காஸ்ட்யூம்கள் சரியாக இருக்கின்றனவா என்பதைச் சரிபார்க்க இரண்டாவது முறை என  படப்பிடிப்புக்கு முன்னரே ரஜினி இரண்டு முறை அமெரிக்கா சென்று வந்துள்ளார். அந்த அளவுக்கு ‘சிட்டி’ ரஜினியின் கெட்டப் ஒவ்வொன்றும் வெவ்வேறு காஸ்ட்யூமில் இருக்குமாம்.

•   அக்‌ஷய்யின் கெட்டப்பும் வித்தியாச மேக்கப்பில் ரஜினி கேரக்டருக்கு சவால்விடுமா? அக்‌ஷயின் மேக்கப்புக்கு மட்டும் தினமும் நாலரை முதல் ஐந்து மணி நேரம் ஆகுமாம். ஸ்பாட்டில் அக்‌ஷயின் பெர்ஃபாமென்ஸைப் பார்த்து, பலமுறை வியந்து பாராட்டியிருக்கிறார் ரஜினி.

•   ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினியின் பாராட்டை தினமும் வாங்குபவர் இயக்குநர் ஷங்கர். ‘திட்டமிடலிலும் பிரமாண்டத்திலும் ஹாலிவுட் டைரக்டர்களை எல்லாம் தாண்டிவிட்டார் நம் ஷங்கர்’ என, தயாரிப்பு தரப்பிடம் சொல்வாராம் ரஜினி.

ரிலாக்ஸ் ரஜினி! - அமெரிக்கப் பயணம் ஏன்?

•   `2.0' படப்பிடிப்பு 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ம் தேதி தொடங்கியது. 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான ஆறு மாதங்களில் 50 சதவிகிதப் படப்பிடிப்பு முடிந்துள்ளது. மீதம் உள்ள 50 சதவிகிதப் படப்பிடிப்பை அடுத்த ஆறு மாதங்களில் முடிக்க திட்டம். படப்பிடிப்புக்கு ஒரு வருடம், போஸ்ட் புரொடக்‌ஷனுக்கு இன்னொரு வருடம் என `2.0' இரண்டு வருட புராஜெக்ட். படம் அடுத்த ஆண்டு தீபாவளி அல்லது ரஜினி பிறந்த நாள் அன்று ரிலீஸ்.

•   இந்த ஆறு மாதங்களில், இதுவரை 100 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடந்துள்ளது. இதில் க்ளைமாக்ஸ் ஆக்‌ஷன் காட்சி உள்பட இரண்டு பெரிய ஆக்‌ஷன் சீக்வென்ஸ்களும் படத்தின் முக்கியமான காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை ரஜினி-அக்‌ஷய் காம்பினேஷன் காட்சிகள். இந்த 100 நாட்களில் 40 நாட்களுக்கு மேல் இருவரும் சேர்ந்து நடித்துள்ளனர். இந்தக் காட்சிகள் அனைத்தும் கிராஃபிக்ஸுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை. படப்பிடிப்பு முடிய முடிய விஷுவல் எஃபெக்ட்ஸ், கிராஃபிக்ஸுக்கு அனுப்ப வேண்டும் என்பதால்தான் இந்த ரிவர்ஸ் புராசஸ் ஷூட்டிங்காம். வி.எஃப்.எக்ஸ் பணிகள் அனைத்தும் அமெரிக்காவில் நடக்கின்றன.

•   `2.0' படப்பிடிப்பில் கலந்துகொண்ட ரஜினி அந்த ஷெட்யூலில் தன் போர்ஷனை முடித்துக்கொண்டு, மே மாதம் 20-ம் தேதி தன் மூத்த மகள் ஐஸ்வர்யாவுடன் ஓய்வுக்காக அமெரிக்கா சென்றார். `கபாலி' ஆடியோ ரிலீஸை முடித்துவிட்டு, இளைய மகள் சௌந்தர்யாவும் அமெரிக்கா பயணமானார். மனைவி லதா, தன் பேரக் குழந்தைகளைக் கவனித்துக்கொண்டு சென்னையில் இருக்கிறார்.
இதற்கு இடையில் ரஜினி சிகிச்சைக்காகத்தான் அமெரிக்கா சென்றுள்ளார் என்றும், சிகிச்சை முடிந்து உடல்நிலை தேறிய பிறகே இந்தியா வருவார் என்றும் தகவல்கள் பரவியதால், சினிமா வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பு.

உண்மையில் ரஜினி அமெரிக்கா போயிருப்பது, ஓய்வுக்கா, சிகிச்சைக்கா என்பது குறித்து அவரின் குடும்பத்தினரிடம் பேசினோம். ‘`பத்திரிகை, மீடியாவில் உள்ளவர்கள் முதலில் எங்களின் மனநிலையைப் புரிந்துகொள்ள வேண்டும். ஓய்வுக்காகப் போயிருப்பவருக்கு, தமிழ்நாட்டில் தன்னைப் பற்றி இப்படி எழுதுகிறார்கள் என்பது தெரிந்தால் எவ்வளவு வருத்தப்படுவார்? சினிமாவில் உள்ள எத்தனையோ நடிகர், நடிகைகள் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு, ஓய்வுக்காக வெளிநாடு சென்று வருகிறார்கள். அவர்களைப் பற்றி எல்லாம் இதுபோன்ற செய்திகள் வருவது இல்லை. ஆனால், இவர் மட்டும் எப்போதும் மீடியாவின் பார்வையிலேயே இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்?

முன்னர் ராமச்சந்திரா மருத்துவமனையில் ரஜினி அனுமதிக்கப்பட்டபோதும் இப்படித்தான் எழுதினார்கள். எங்களுக்கு எந்த அளவுக்கு மனஉளைச்சல் ஏற்பட்டிருக்கும் என்பதை அப்போது யாரும் புரிந்துகொள்ளவில்லை. அந்தச் சூழல் காரணமோ என்னவோ தெரியவில்லை, இங்கு இருக்கும் வரை அவர் குணமாகவில்லை. ஆனால், இந்த பிரஷரில் இருந்து விலகி சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதித்த பிறகு, இருபதே நாட்களில் அவருக்கு உடல்நிலை தேறிவிட்டது.

அந்த உடல் பாதிப்பில் இருந்து மீண்டு வந்தவர் அப்படியே ஓய்விலேயே இருந்திருக்கலாம். அவர் இனிமேல்தான் சம்பாதித்து பேர், புகழ், பணம் சேர்க்க வேண்டும் என்பது இல்லை. சினிமா மீதும் தன் ரசிகர்கள் மீதும் உள்ள ப்ரியம் அவரை தொடர்ந்து சினிமாவில் இயங்கவைத்திருக்கிறது. இவ்வளவுக்கும் ‘லிங்கா’வில் அவருக்கு மன வருத்தங்கள் ஏற்பட்டன. அதையும் மீறி அடுத்தடுத்து படங்களை ஒப்புக்கொண்டார்.

ரிலாக்ஸ் ரஜினி! - அமெரிக்கப் பயணம் ஏன்?

தன்னால் யாரும் நஷ்டப்படக் கூடாது, சிரமப்படக் கூடாது என்பதால் ‘கபாலி’யை இரவு-பகலாக நடித்து முடித்துக்கொடுத்துள்ளார். அதே சமயத்தில் ஷங்கர் இயக்கும் ‘2.0’-விலும் நடித்துக்கொண்டிருக்கிறார். தற்போது ஓய்வுக்காக அமெரிக்கா சென்றுள்ளார். ஜூலை மாதம் முதல் வாரத்தில் சென்னை வருவார். தொடர்ந்து `2.0' படப்பிடிப்பில் கலந்துகொள்வார்'’ என்கிறார்கள்.
இதற்கு இடையில் ரஜினி அமெரிக்காவில் சிகிச்சையில் இருப்பதாகச் சொல்லப்படுவது குறித்து `2.0' படத்தைத் தயாரிக்கும் ‘லைக்கா’ தரப்பிடம் கேட்டபோது, ‘`இரண்டு தினங்களுக்கு முன்னர்கூட ரஜினி சாருடன் போனில் பேசினோம். எங்களிடம் நன்றாகச் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார். ஜூலை மாதக் கடைசியில் ஆரம்பிக்கும் `2.0' ஷெட்யூலில் அவர் கலந்துகொள்கிறார்'’ என்கிறார்கள்.

‘2.0’-வில் நடிப்பது எவ்வளவு சிரமம் என்பது ரஜினிக்குத் தெரியும். அவ்வளவு தெரிந்தும் இந்தப் படத்தில் ரஜினி நடிக்கக் காரணம், அவருக்கு அதுதான் `மகிழ்ச்சி!'