சினிமா
Published:Updated:

பஞ்சாப் மட்டுமா பறக்கிறது?

பஞ்சாப் மட்டுமா பறக்கிறது?
பிரீமியம் ஸ்டோரி
News
பஞ்சாப் மட்டுமா பறக்கிறது?

கார்க்கிபவா

பஞ்சாப் மட்டுமா பறக்கிறது?

`பாப்பி போட்டால் பறக்கலாம்', `காலிநாக்னியை ஏற்றிக்கொண்டால் கவலைகளை மறக்கலாம்', `சிட்டா ஒரு டோஸ் போட்டா போதும் நாலு நாளைக்கு மிதக்கலாம்...'
 
பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் மாலை வேளைகளில் தனியாகச் சுற்றிவந்தால், இந்த வசனங்களை எவரும் கேட்கலாம். பாப்பி என்றால் ஒபியம் விதைகள்; காலிநாக்னி என்றால் கஞ்சா. சிட்டா என்றால் ஹெராயின்; தமிழ்நாட்டில் இவை கிடைப்பது கஷ்டம். ஆனால் பஞ்சாபில் இதை பீடி, சிகரெட்போல எளிதில் வாங்க முடியும். கொஞ்சம் தைரியமும் பணமும் இருந்தால் போதும். இந்தியாவின் முன்னேறிய மாநிலங்களில் ஒன்றான பஞ்சாபின் இன்றைய மிகப்பெரிய பிரச்னை, எளிதாகக் கிடைக்கக்கூடிய இந்த போதை மருந்துகள்தான். `2.3 லட்சம் பேர், பஞ்சாபில் ஹெராயினுக்கு அடிமை' என்கிறது பஞ்சாப் ஓபினாய்ட் டிபெண்டன்ஸியின் சர்வே. `இத்தனை பேருக்கும் சிகிச்சை கொடுத்து மீட்க, இன்னும் பத்து ஆண்டுகள் ஆகும்' என்கிறது இதே ஆய்வு. ஒவ்வோர் ஆண்டும் 7,575 கோடி ரூபாய் இந்த போதைச் சந்தையில் புழங்குகிறது. இந்த மாநிலத்தில் நூற்றில் ஐந்து பேர் போதை அடிமைகள். இவர்கள் அனைவரும் 18 தொடங்கி 35 வயதுக்கு உட்பட்ட ஆரோக்கியமான இளைஞர்கள்.

இந்த போதைக் கலாசாரம் பற்றி, எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் நேரடியாக விவாதிக்கிறது `உட்தா பஞ்சாப்'. இளைஞர்கள் மீதான போதையின் தாக்கத்தை வெட்ட வெளிச்சமாக்குகிறது படம். இதற்குப் பின்னால் இருக்கும் அரசியல் மற்றும் சமூகச் சிக்கல்களை நேர்மையுடன் பதிவுசெய்கிறது.

`உட்தா' என்றால் பறப்பது என அர்த்தம். போதைக்கு `Am getting high' என்பார்கள். பஞ்சாப்  மாநிலமே போதையில் மிதக்கிறது என்ற அர்த்தத்தில் தான் இந்தத் தலைப்பை வைத்திருக்கிறார்கள். படத்தில் எந்த இடத்திலும் போதைப்பொருட்கள் மீது படம் பார்ப்பவருக்கு ஒரு மிகச் சிறிய ஈர்ப்பையும் உண்டாக்கிவிடக் கூடாது என்பதில் காட்டியிருக்கும் அபிஷேக்கின் கவனம், மிக முக்கியமானது; அவசியமானது.

பிரபல இசைக்கலைஞன் டாமி என்கிற கப்ரூ (ஷாஹித் கபூர்), போதைப் பழக்கத்துக்கு அடிமையானவன். அவனது பாடல்கள், பஞ்சாபின் இளைஞர்களை தரையில் நிற்கவிடாமல் கிறுக்குப்பிடித்து ஆடவைப்பவை. போதைப் பழக்கத்தால் தனது மார்க்கெட்டைக் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கும் டாமி, தனது பொறுமையையும் இழக்கிறான். அவனை வளர்த்தவர்கள், ரசிகர்கள் என எல்லோரையும் காயப்படுத்துகிறான். சிறையில் அடைக்கப் படுகிறான். அங்கே அவன் ரசிகர்கள் சிலரைச் சந்திக்கிறான். அம்மாவைக்கூட கொன்றுவிட்டு சிறைக்கு வந்த அந்த ரசிகர்களைக் கண்டு அதிர்ச்சி அடைகிறான். அத்தனை கொலைகளுக்கும் ஒரே காரணம், போதை மருந்து வாங்க காசு தராதது. டாமி தன்னுடைய குற்றங்களை உணர ஆரம்பிக்கிறான். தன்னால் பஞ்சாப் கப்ரூக்கள் (கப்ரூ என்றால் இளைஞர்கள்) எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற கேள்வி, அவனை விடாமல் துரத்துக் கிறது. தப்பி ஓடும் டாமியின் கண்களில் படுகிறாள் மேரி ஜேன் (அலியா பட்).

மேரி, பீஹாரில் இருந்து பஞ்சாப்புக்கு வந்திருக்கும் ஒரு கூலித்தொழிலாளி அகதி. அவள் கைக்கு ஒரு ஹெராயின் பாக்கெட் கிடைக்கிறது. அதை விற்றால் பணம் கிடைக்கும் என நினைக்கிறாள். கடைசியில், ஹெராயின் பாக்கெட்டின் சொந்தக்காரர்களிடமே விற்க வந்து சிக்கிக்கொள்கிறாள். அவளை ஒரு `செக்ஸ் ஸ்லேவ்' ஆகப் பயன்படுத்துகிறது அந்தக் கூட்டம். அங்கு இருந்து தப்பித்து ஓடும் வழியில்தான் டாமியைச் சந்திக்கிறாள்.

காவல் அதிகாரி சர்தாஜ் (தில்ஜித்), போதை மருந்து கடத்தலைக் கண்டுகொள்ளாமல் லஞ்சம் வாங்குபவர். ஒருநாள், அவரது தம்பி (டாமியின் ரசிகன்) போதைக்கு அடிமையானது தெரிந்து இடிந்துபோகிறார். டாக்டர் ப்ரீத் (கரீனா கபூர்), சர்தாஜின் தம்பி மறுவாழ்வு பெற உதவுகிறார். `காப்பாற்றபடவேண்டியது சர்தாஜின் தம்பி மட்டும் அல்ல, பஞ்சாபும்தான்' என நினைக்கிறார்கள் சர்தாஜும் ப்ரீத்தும். இருவரும் போதை மருந்து நெட்வொர்க்கைத் தேடிச் செல்கிறார்கள்.

பஞ்சாப் மட்டுமா பறக்கிறது?

இந்த மூவர் கதையும், இறுதியில் போதை மருந்து கடத்தல் கும்பல் இருக்கும் இடத்துக்கு வந்து சேர்கிறது. போதை மருந்தால் ஒவ்வொரு தனி மனிதனும் சந்திக்கும் அவலங்களையும், அதனால் பஞ்சாப் மாநிலமே சீரழிந்து வருவதையும் மிகத் தெளிவாகச் சொல்லி முடிகிறது படம்.

`உட்தா பஞ்சாப்', போதையைக் கொண்டாடும் படம் அல்ல; அதை நினைத்து வருந்தும் ஒரு படைப்பு. இதற்கு ஏன் இத்தனை ஆர்ப்பாட்டங்கள்? தணிக்கை சர்ச்சை? படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் எழும் கேள்வி இதுதான். தணிக்கைக் குழு வெட்டச் சொன்ன வார்த்தைகளை, கவனத்தில்கொள்ள வேண்டும். `பார்லிமென்ட்', `எம்.பி.', `எலெக்‌ஷன்', `பஞ்சாப்'.

படத்தின் கதைப்படி பஞ்சாபில் தேர்தல் நடக்கப்போவதாகவும், அந்தச் சமயத்தில் போதை மருந்து விஷயத்தைப் பெரிதாக்கவும் சர்தாஜ் மற்றும் ப்ரீத் திட்டமிடுகிறார்கள். நிஜமாகவே இன்னும் சில மாதங்களில் பஞ்சாபில் தேர்தல் வரவிருக்கிறது. இப்படி ஒரு சந்தர்ப்பத்தில் பஞ்சாபில் உண்மையாகவே போதை மருந்து பிரச்னை முக்கியக் காரணியாக அமையலாம் என ஆளும் அரசு நினைத்திருக்கிறது. அதனால்தான் இத்தனை சிக்கல், இவ்வளவு கட்டுப்பாடு. `உட்தா பஞ்சாப்' பேசுகிற அரசியல், அவ்வளவு அழுத்தமானது.

போதை, பஞ்சாப் மாநிலத்தின் பிரச்னை மட்டும் அல்ல; இந்தியச் சமூகத்தின் மிக முக்கியமான பிரச்னை. பஞ்சாபில் அண்டர் கிரவுண்டில் நடக்கும் இந்த போதை உலகம், தமிழ்நாட்டில் முறையாக, அரசால் நடத்தப் படுகிறது. ஹெராயினோ அல்லது போலி மருந்துகளாலோ ஏற்படும் எல்லாவித மன, உடல் பிரச்னைகளும், டாஸ்மாக்கில் கிடைக்கும் மதுவாலேயே ஏற்படுகின்றன. பஞ்சாப் பறக்கிறது என்றால் தமிழ்நாடு தள்ளாடுகிறது. இதன் வீரியத்தை உணர்த்தும் `உட்தா பஞ்சாப்' போன்ற திரைப்படங்கள், நோயைக் கண்டறிய உதவும் மருத்துவ ரிப்போர்ட்களுக்கு இணையானவை. அப்படிப்
பட்ட படைப்புகள், நம்மை சுயபரிசோதனைகளுக்கு உட்படுத்தக்கூடியவை. அதன்வழிதான் நாம் தீர்வுகளை நோக்கி நகர்வது சாத்தியமாகும்.

`உட்தா பஞ்சாப்' படத்தின் ஒரு காட்சியில் கரீனா சொல்வார், `பஞ்சாபில் இப்போது இரண்டு போர்கள் நடக்கின்றன. ஒன்று, போதை மருந்து நெட்வொர்க்கை எதிர்த்து நாம் நடத்தும் போர். அது சாதாரண விஷயம். இன்னொன்று, போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் அதை எதிர்த்து நடத்தும் போர். அதுதான் முக்கியம்; அதுதான் மிகவும் கஷ்டமானது.'

போதைக்கு அடிமையான சர்தாஜின் தம்பி அப்படி ஒரு போரை படம் முழுக்க நடத்து கிறான். படம் முடியும் தருவாயில் அவன் கத்தி அழுகிறான். திரையில் சத்தம் எதுவும் இல்லை. ஆனாலும், அவன் அழுகுரல் நம் காதுகளில் இடைவிடாமல் கேட்டுக்கொண்டே இருக்கிறது.