என் விகடன் - கோவை
என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - சென்னை
சினிமா
Published:Updated:

சினிமா விமர்சனம் : வேலாயுதம்

வேலாயுதம்
பிரீமியம் ஸ்டோரி
News
வேலாயுதம்

விகடன் விமர்சனக் குழு

கரத்தில் நடக் கும் அநீதியை அழிக்க, ஒரு பாசக்காரக் கிராமத்து அண்ணன் எடுக் கும் அவதாரமே வேலாயுதம்! (எங்கேயோ கேட்ட கதை!) நிச்சயமாக இது விஜய் ரசிகர்களுக்கு விட்டதைப் பிடிக்கும் விருந்து. தெலுங்கில் ஹிட் அடித்த 'ஆசாத்’ கதையின் 'அலேக்’தான். ஆனால், பக்கா டிங்கரிங் பார்த்து, காமெடிக் கபடி சேர்த்து விஜய்க்கான மாஸ் மசாலா பேக்கேஜுடன் களம் இறங்கி இருக்கிறார்  இயக்குநர் எம்.ராஜா.  

 ஒவ்வொரு ஃப்ரேமிலும் ஜே...ஜே...எனக் கூட்டம் கூடி, ஒவ்வொரு கேரக்டரும் அலப்பறை பண்ணுவதுதான் படத்தின் முதல் பலம். 'துண்டு போட்டு மட்டும் இல்லை... அருவா போட்டும் சீட்டு புடிப்போம்ல...’ என்று வேலாயுதம்  அறிமுகமாகிற காட்சியிலேயே படத்துக் கான எனர்ஜி ஏற்றிவிடுகிறார் விஜய். ஆட்டம் பாட்டம், ஆக்ஷன், சென்டிமென்ட் என எல்லா ஏரியாவிலும் ஃபுல் சார்ஜ் பேட்டரியாகச் சுழல்வ தில்... விசில் விஜய்!

சினிமா விமர்சனம் : வேலாயுதம்

'நியூயார்க் டைம்ஸ்’-ல் கிடைக்கும் வேலையைத் தூக்கி எறிந்துவிட்டு, நம் சமுதாயத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என முனைகிற பத்திரிகையாளர் கேரக்டர் ஜெனிலியாவுக்கு. இருந்தாலும் மாஸ் ஹீரோ படத்தில் வரும் பவுடர் டின் ஹீரோயின்தான் இவரும். விஜய்யின் முறைப்பெண்ணாக ஹன்சிகா மோத்வானி. மசாலா குருமாவுக்குத் தளதளவென மிதக்கும் கிளாமர் தக்காளி. மத்தபடி மேடம் கிராமத்துப் பொண்ணாமாம்... தாவணி கட்டியிருக்காங்க!  

முன் பாதியில் காமெடி குத்தகை எடுத்திருக்கும் சந்தானம் தியேட்டரை அதிரடிக்கிறார். அப்பாவித் திருடனாக பொசுக்கு பொசுக்கென்று படுத்துக்கொண்டு 'என் பொணத்தைத் தாண்டித்தான் நீ போகணும்’ என அவர் அடிக்கிற லூட்டி... பக்கா காமெடி மேளா!  

இன்னும் எத்தனை படங்களுக்குத்தான் தீவிரவாதிகள் என்றால் இஸ்லாமியர்களையே காட்டிக்கொண்டு இருப்பார்களோ? அதுவும் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்து கிராமத்தில் பார்சல் குண்டுவைப்பது எல்லாம் விஜய காந்த்தே வி.ஆர்.எஸ். வாங்கிய ஏரியா!

சினிமா விமர்சனம் : வேலாயுதம்

ரசாயன உலையில் மோதப்போகும் ரயிலை ஏகப்பட்ட ஆக்ஷனுக்குப் பிறகு விஜய் தடுப்பதே க்ளைமாக்ஸ்தான். அதன் பிறகு வருவது எல்லாம் 'வேலாயுதம் பார்ட் டூ!’

திரைக்கதையோடு சேர்ந்து பயணித்து பரபரப்பு கியர் தட்டுகிறது ப்ரியனின் ஒளிப்பதிவு. விஜய் ஆண்டனி இசையில் பாடல்கள் தியேட்டருக்குள் இருக்கும் வரை மாஸ் ஏற்றுகிறது.

வழக்கமான மசாலாதான். ஆனால், அரைத்த விதத்தில் காமெடியும் காரமுமாகத் திகட்டாத ருசி!