
ம.கா.செந்தில்குமார்

‘நான் இதுக்கு முன்னாடி எட்டு படங்கள் பண்ணியிருந்தாலும் அதில் ‘வெண்ணிலா கபடிகுழு’, ‘அழகர் சாமியின் குதிரை’, ‘ஆதலால் காதல் செய்வீர்’, ‘ஜீவா’ இந்த நாலு படங்களும் குட் ஃபிலிமா, வேல்யூ பேசுற படங்களா இருந்தது. ஆனாலும் இதில் வணிகரீதியா வெற்றினு பார்த்தா ‘வெண்ணிலா கபடிகுழு’ மட்டும்தான். ‘இவரு நல்ல படம் பண்ணுவாருப்பா. ஆனா, வருமானம் வராது’ங்கிற முத்திரை விழுந்துடுமோனு ஒரு பயம். அதனால, எல்லாரும் கொண்டாடுற நல்ல படமாவும், அதேசமயம் கமர்ஷியலா வெற்றிபெறக்கூடிய படமாவும் இருக்கணும்னு நினைச்சு, திரைக் கதையை டைட்டா அமைத்துப் பண்ணினதுதான் ‘மாவீரன் கிட்டு’ ’’ - மீண்டும் கிராமத்துக் கதையுடன் வருகிறார் சுசீந்திரன்.
‘‘ ‘வெண்ணிலா கபடிகுழு’வை எந்தக் கிராமத்துல ஷூட் பண்ணினோமோ, அதே கிராமத்துக்கு ஒன்பது வருஷங்கள் கழித்து மறுபடியும் ‘மாவீரன் கிட்டு’க்காகப் போயிருந்தோம். நான், விஷ்ணு, சூரினு அதே டீம். அன்னைக்குப் பார்த்த எங்க லுக்குக்கும் இன்னைக்கு நாங்க இருக்கும் லுக்குக்கும் நிறைய வித்தியாசங்கள். ஆனா, அவங்க மட்டும் அதே வெள்ளந்தி மக்கள். ‘சூரி, என்ன தம்பி... நல்லா இருக்கியா? என்னை ஞாபகம் இருக்கா, அப்ப வரும்போது உனக்குக் குழம்பு குடுத்தேனே...’னு ஒரு அக்கா அவங்க வீட்டுப் பையனா சூரியை உபசரிக்குது. அதே டீக்கடையில் அப்புக்குட்டியை டீ ஆத்தக் கூப்பிடுறாங்க. சாப்பிடக் கூப்பிட்டு உபசரிக்கிறாங்க. ரொம்பவே நெகிழ்ச்சியான அனுபவம்.’’

‘‘ `1980-களில் தென் மாவட்டங்களில் நடந்த சாதிக் கலவரங்களைப் பற்றி பேசும்படம்தான் `மாவீரன் கிட்டு' ' என்கிறார்களே உண்மையா?’’
‘‘ஒரு தலைவர், அவருக்குக் கீழ் நாலு பேர். அவர்களுக்குள் ஓர் இயக்கம்னு எல்லோரும் யோசிக்கிற மாதிரி வழக்கமான ஒரு கதை இதில் இல்லை. இது மனிதம் பற்றி பேசும் வாழ்க்கைப் பதிவு. நம்ம கிராமங்களில் ஒண்ணு ரெண்டு பேர் மட்டுமே அன்னைக்கு காலேஜுக்குப் போவாங்க. அப்படிப் படிச்ச ஒருத்தர், அந்த ஊரின் எல்லா நல்லதுகெட்டதுக்கு உதவியா இருப்பார். அவரால் முடிஞ்ச உதவிகளை, மக்களுக்கும் அடுத்த தலைமுறை மாணவர்களுக்கும் பண்ணுவார். அப்படிப் பண்ணும் ஒருவர்தான் பார்த்திபன்.
அவர் விஷ்ணுவின் படிப்புக்கு உதவுவார். ப்ளஸ் டூவுல மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் வாங்குற விஷ்ணுவுக்கு, கலெக்டர் ஆகணும்னு கனவு. அது நிறைவேறுச்சா... இல்லையா? இப்படி விஷ்ணுவின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களின் பதிவுதான் ‘மாவீரன் கிட்டு’.’’
‘‘இந்தக் கதையை பீரியட் ஃபிலிமா எடுக்கவேண்டிய அவசியம் என்ன?’’
‘‘ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் அழகா ஒரு விஷயம் சொன்னார். ‘எல்லாரும் என்னென்னமோ ஆராய்ச்சி பண்ணி, கதையைத் தேடிட்டு இருக்காங்க சுசி. ஆனா, நம்ம கவட்டக்காலுக்குக் கீழயே நிறையக் கதைகள் கிடக்குது. நீ அங்கே இருந்து பொறுக்கிற’ம்பார். அப்படி நம்ம லைஃப்ல நடந்த ஒரு சின்ன சம்பவத்தை, நாம என்னவா மாத்துறோம்கிறதுதான் முக்கியம். அந்தச் சம்பவம் நடந்தது ஒண்ணா இருக்கும். ஆனா, ‘அதுவே இப்படி நடந்திருந்தா...'னு யோசிச்சா, அது வேற கதை. ‘மாவீரன் கிட்டு’ அப்படியான ஒரு கதைதான். 1985-ம் ஆண்டு முதல் 1987-ம் ஆண்டு வரைனு முழுக்க முழுக்க பீரியட் ஃபிலிம். இந்த ஸ்க்ரிப்ட் முடிவாகி, நாலு வருஷம் ஆச்சு. கொஞ்சம் செலவு பிடிக்கக்கூடிய படம். பெரிய ஹீரோக்கள்கிட்ட சொன்னேன். ‘நல்லா இருக்கு சுசி. ஆனால், பார்த்திபன் சார் கேரக்டர் எனக்குச் சமமா இருக்கு. அதான் யோசிக்கிறேன்’னாங்க. அதுக்காக அந்த கேரக்டரின் வெயிட்டேஜை என்னால் குறைக்க முடியாது. என்ன பண்ணலாம்கிற யோசனையிலேயே இவ்வளவு நாள் தள்ளிப்போச்சு. ஒரு புள்ளிக்குப் பிறகு நான், விஷ்ணு, பார்த்திபன் சார், ஸ்ரீதிவ்யா, சூரி, இமான் சார் எல்லாரும் எங்க சம்பளத்தைக் குறைச்சுக்கிட்டு இந்தப் படத்தைப் பண்ணியிருக்கோம்.’’

‘‘பார்த்திபன் எப்படி இந்த ஸ்க்ரிப்ட்டுக்குள் வந்தார்?’’
‘‘மூணு வருஷங்களுக்கு முன்னாடி இந்த ஸ்க்ரிப்டை எழுதி முடிச்சதுமே, பார்த்திபன் சார்தான் என் மைண்ட்ல வந்தார். அவர்கிட்ட கதையைச் சொன்னேன். `இந்த மாதிரி கதைக்காகத் தான் காத்திருந்தேன்'னு சொன்னார். மூணு நாலு மாசங்களுக்கு ஒருமுறை போன் பண்ணி, ‘என்னங்க, அந்த கேரக்டர் நான்தானே பண்றேன்’னு கேட்டுட்டே இருப்பார். ‘என்னைக்கு பண்ணினாலும் நீங்கதான் சார் பண்றீங்க. இதுக்கு வேற ஆர்ட்டிஸ்ட்டே கிடையாது’ம்பேன். அது உண்மை. அவருக்கு ‘சின்ராசு’ங்கிற கதாபாத்திரம். இதில் அவருக்கு ‘புதியபாதை’, ‘பாரதி கண்ணம்மா’, ‘ஹவுஸ்ஃபுல்’ படங்கள்ல பண்ணின மாதிரியான பெர்ஃபார்மன்ஸ். ‘எது கமர்ஷியல், எது லைவ்வான படம்? எந்த மீட்டர்ல பண்ணணும்’கிறதுல அவர் தெளிவா இருக்கார். ‘இவ்வளவு நல்ல ஆர்ட்டிஸ்ட்டை இண்டஸ்ட்ரி ஏன் மிஸ் பண்ணிட்டிருக்கு?’னு எனக்கும் ஆச்சர்யமா இருக்கு. இன்னும் நிறைய நல்ல கதாபாத்திரங்கள் அவர் பண்ணணும்.’’
‘‘ ‘வெண்ணிலா கபடிகுழு’, ‘ஜீவா’னு முந்தின ரெண்டு படங்களுக்கும் ஒரு விளையாட்டு வீரரா விஷ்ணு கச்சிதமாப் பொருந்தி இருந்தார். இந்தப் படத்தில் எப்படி?’’
‘‘நீங்க கேட்கிற இதே கேள்வியை சினிமாவில் பலரும் கேட்டாங்க. முதல் படத்துல பார்த்ததுக்கும் இப்ப பார்க்கிறதுக்கும் அவரின் வளர்ச்சி தெரியுது. அவர்கிட்ட எனக்குப் பிடிச்சதே எம்ட்டியா வந்து நிப்பார். ‘உங்கள்ட்ட வரும்போது மட்டும் மண்டையில் எதையும் ஏத்திக்க மாட்டேன் சார். நீங்க என்ன சொல்றீங்களோ அதைப் பண்ணிடு வேன். நடிச்ச மாதிரியே தெரியாது. ஆனா, ஆன் ஸ்க்ரீன்ல அப்படி இருக்கும்’னு சிரிப்பார். விஷ்ணு எப்பவுமே மை ஹீரோ. ‘மாவீரன் கிட்டு’ முடிஞ்சதும், ‘அடுத்தும் பண்ணுவோம் சார்’ங்கிறார்.
அடுத்து சூரி... இவரின் வளர்ச்சியும் மிகப் பெரியது. என் எல்லா படங்கள்லயும் அவர் இருப்பார். ‘அடுத்த மாசம் ஷூட்டிங்’ம்பேன். எவ்வளவு பிஸியா இருந்தாலும் தேதி கொடுத்துடுவார். இந்த மாதிரி மனிதர்கள் கிடைக்கிறது ஆச்சர்யம்.
ஸ்ரீதிவ்யாவுக்கு இதில் ‘கோமதி’ங்கிற கதா பாத்திரம். அவங்க பெர்ஃபார்ம் பண்ணும் போது `நல்ல ஆர்ட்டிஸ்ட் கிடைச்சுட்டாங்க'ங்கிற ஃபீல் வரும். ரேவதி மேடம், ஒரு ஆர்ட்டிஸ்டா திரையில் வந்து நிப்பாங்கள்ல... அந்த ஃபீல். இமான் சாரும் யுகபாரதியும் படம் முழுக்க நிறைஞ்சிருப்பாங்க. கமர்ஷியலாவும் அதேசமயம் விமர்சகர்கள் கொண்டாடுற படமாவும் `மாவீரன் கிட்டு’ இருப்பான்!