சினிமா
Published:Updated:

வர்றாங்க... வர்றாங்க...

வர்றாங்க... வர்றாங்க...
பிரீமியம் ஸ்டோரி
News
வர்றாங்க... வர்றாங்க...

நா.சிபிச்சக்கரவர்த்தி, பா.ஜான்ஸன் - படம்: தே.தீட்ஷித்

இது, தமிழ் சினிமா இயக்குநர்களின் `வாட் நெக்ஸ்ட்' லிஸ்ட்!

வர்றாங்க... வர்றாங்க...

சுதா கோங்ரா:

`இறுதிச்சுற்று' படம் மூலம் பாக்ஸ் ஆபீஸை நாக்அவுட் செய்தவர் சுதா கோங்ரா. இப்போது அதை தெலுங்கில் ரீமேக் செய்துகொண்டிருக்கிறார். வெங்கடேஷ், ரித்திகா சிங் நடிக்கிறார்கள். 

``நான் இந்த ஸ்க்ரிப்ட்டை ரெடி பண்ணினதுமே மாதவனுக்கு முன்னாடி கதை சொன்ன ஹீரோ வெங்கடேஷ் சார் தான்.  முதல்ல தெலுங்குலதான் `இறுதிச்சுற்று' வந்திருக்கவேண்டியது. ஆனா, இப்போ இப்படிதான் நடக்கணும்னு இருக்கு. தமிழ் `இறுதிச்சுற்று'க்கும் தெலுங்கு `குரு'வுக்கும் நிச்சயம் சில வித்தியாசங்கள் இருக்கும். இங்கே மீனவப் பின்னணியில் பண்ணியிருக்கிறது, அங்கே கூலித் தொழிலாளர் பின்னணியில் இருக்கும். ஹீரோவுக்கான பின்னணியிலும் சில மாற்றங்கள் இருக்கும். மற்றபடி பன்ச் அதேதான்!''

வர்றாங்க... வர்றாங்க...

சீனுராமசாமி:

`தர்மதுரை' வெற்றிக்குப் பிறகு சற்று ஓய்வில் இருந்த சீனுராமசாமி, மீண்டும் ஸ்க்ரிப்ட்டில்.

``மூன்று கதைகள் எழுதி ரெடியா வெச்சிருக்கேன். விஷ்ணு விஷாலுக்கு ஒரு கதை, `அட்டகத்தி' தினேஷுக்கு ஒரு கதை, அப்புறம் மம்மூட்டி சாருக்கு ஒரு கதை. மூணுமே மிக குறைந்த நாட்கள்ல, குறைந்த முதலீட்டில் எடுக்கக்கூடிய படங்கள். மம்மூட்டி சார்கிட்ட கதை சொல்லிட்டேன். இந்த மூன்றில் எது முதலில் தொடங்கும்னு தெரியலை. என் மனதில் இருப்பது எல்லாம் அடுத்த மூன்று வருடங்களில், அதாவது 2019-க்குள் இந்த மூன்று படங்களையும் திரைக்குக் கொண்டுவரவேண்டும் என்பதுதான். என் எல்லா படங்களிலும் இருக்கும் புவியியல் சார்ந்த விஷயங்கள், இந்தப் படங்களிலும் இருக்கும். இன்னொரு விஷயம், இந்தப் படங்கள் நிச்சயம் திரை விழாக்களுக்குச் செல்லக்கூடிய தரத்துடனும் இருக்கும்.''

வர்றாங்க... வர்றாங்க...

அறிவழகன்:

`` `குற்றம் 23' படத்துக்கான டப்பிங் வேலைகள்ல இருக்கேன்'' என, பவ்யமாகத் தொடங்குகிறார் அறிவழகன். ``அடுத்ததா, முந்தைய படங்களைவிட பெரிய ஸ்கேல்ல பண்ற ஒரு படத்துக்குத் தயாராகிட்டிருக்கேன். பெரிய ஹீரோ, பெரிய பட்ஜெட்னு ஒரு சமூகப் பிரச்னையை மையமா வெச்சுப் பண்ணும் ஒரு படம். அது தவிர, காதல் கதை ஒண்ணும் த்ரில்லர் கதை ஒண்ணும் ரெடியா இருக்கு. இதுல முதல்ல எது பண்ணுவேன்னு தெரியலை. ஆனா, அடுத்து ரெண்டு மாதங்களுக்குள்ள ஏதோ ஒரு வேலையைத் தொடங்கிடணும்.

இன்னொரு விஷயம், எதுவா இருந்தாலும் அது குறைந்த காலத்துக்குள் எடுத்து முடிக்கும் படமா இருக்கும். `ஆறாது சினம்', `குற்றம் 23'னு ரெண்டுமே கம்மியான நாட்கள்ல எடுத்து முடிக்கப்பட்டது. இது எல்லாத்துக்கும் முன்னாடி `குற்றம் 23' ரொம்பச் சீக்கிரமே வெளியாகும். இது பரபரனு ஒரு மெடிக்கல் க்ரைம் த்ரில்லர் சப்ஜெக்ட்.''

வர்றாங்க... வர்றாங்க...

ஐ.அஹமத்:

``அடுத்து `இதயம் முரளி’ ப்ரோ'’ எனப் பேச்சைத் தொடங்குகிறார் அஹமத். `வாமனன்', `என்றென்றும் புன்னகை', `மனிதன்' இயக்குநரின் அடுத்த படத்தின் டைட்டில் இதுதான்.

``தமிழ், தெலுங்குனு இரு மொழிகளில் உருவாகவிருக்கும் படம் இது. படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். என்னுடைய முந்தைய படங்களில் இருந்த ஹ்யூமரும்,  அதைவிட அதிகமான ரொமான்ஸும் இந்தப் படத்தில் நிச்சயம் இருக்கும். கூடியசீக்கிரமே யார் ஹீரோ, ஹீரோயின்னு சொல்றேன். கொஞ்சம் பொறுமை ப்ளீஸ்!''

வர்றாங்க... வர்றாங்க...

தியாகராஜன் குமாரராஜா: 

`ஆரண்ய காண்டம்' வெளியாகி ஆறு வருட இடைவெளிக்குப் பிறகு, தன் அடுத்த படத்தை இயக்கத் தயாராகிவிட்டார் தியாகராஜன் குமாரராஜா.  இந்தப் படத்தில் விஜய் சேதுபதியும் மலையாள நடிகர் ஃபஹத் பாசிலும் இணைந்து நடிக்கிறார்கள். இவர்களுடன் முன்னணி இயக்குநர் ஒருவரும் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்துக்கு மிஷ்கின், நலன் குமரசாமி உள்ளிட்ட  ஐந்து இயக்குநர்கள் இணைந்து வசனம் எழுதி இருக்கிறார்கள். ஜனவரியில் படத்தின் ஷூட்டிங் ஆரம்பம்.

வர்றாங்க... வர்றாங்க...

வினோத்:

`சதுரங்க வேட்டை 2' படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி முடித்துக் கொடுத்துவிட்டார் வினோத். ஆனால், அந்தப் படத்தை அவர் இயக்கவில்லை. தன்னுடைய அடுத்த படம் `சதுரங்க வேட்டை' மாதிரி இல்லாமல் ஃபேன்டசி பின்னணியில் இருக்க வேண்டும் என முற்றிலும் புது மாதிரியான ஒரு கதையை உருவாக்கி வருகிறார். இந்தப் படத்தில் கார்த்தி ஹீரோவாக நடிக்க இருக்கிறார். கார்த்தி நடிக்கும் `காற்றுவெளியிடை' ஷூட்டிங் முடிந்ததும் வினோத்தின் படம் தொடங்கும்.

வர்றாங்க... வர்றாங்க...

நலன் குமரசாமி:

திருச்சியில் உட்கார்ந்து தன் அடுத்தபடத்துக்கான கதையை எழுதிக்கொண்டிருக்கிறார் நலன்.

``இது டார்க் காமெடி ப்ளஸ் ஆக்‌ஷன் படம். படத்துக்கான தயாரிப்பாளர் ரெடி. மூன்று ஹீரோக்களிடம் இந்தக் கதையை சொல்லப்போகிறேன். அடுத்த வருடம் தொடக்கத்தில் படம் ரோல் ஆகிவிடும்'' என்கிறார் நலன்.

வர்றாங்க... வர்றாங்க...

விக்ரம் கே குமார்:

`24' படத்துக்குப் பிறகு, சின்ன பிரேக் விட்டு தன்னுடைய திருமணம் முடித்துவிட்ட விக்ரம் கே குமார், இப்போது அடுத்த படத்துக்கு ரெடி.

``நாகார்ஜுனா சாருடைய மகன் அகில் ஹீரோவா நடிக்கிற படத்துக்கான கதையை எழுதிட்டிருக்கேன். புது ஹீரோயின் நடிக்கிறாங்க. டெக்னீஷியன்ஸ் யாரையும் இன்னும் முடிவுபண்ணலை. படத்தை, நாகார்ஜுனா சார் தயாரிக்கிறார். என்னோட ஸ்டைல்ல ஒரு அழகான காதல் கதை. இன்னும் ஒரே மாதத்தில் எல்லாம் முடிவாகி, ஷூட் கிளம்பிடுவேன்.''