சினிமா
Published:Updated:

லேடி சூப்பர் ஸ்டார்!

லேடி சூப்பர் ஸ்டார்!
பிரீமியம் ஸ்டோரி
News
லேடி சூப்பர் ஸ்டார்!

அதிஷா

லேடி சூப்பர் ஸ்டார்!

ந்திய சினிமாவின் நம்பர் 1  நாயகி. இந்திய விளம்பர உலகிலும் அதே இடம்தான். அத்தனை டாப் பிராண்டுகளின் சமகால முகவரி. பாலிவுட் பாக்ஸ் ஆபீஸின் வசூல்ராணி, ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் (அஃபிஷியலாக 12 கோடி ரூபாய்!) வாங்குகிறார். தீபிகா படுகோன்தான் இந்திய மகாராணி.

 `xXx Return of Xander Cage’ படத்தின் மூலம் இப்போது ஹாலிவுட்டிலும் அடி எடுத்து வைத்திருக்கிறார். சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ட்ரெய்லரில் அத்தனை பேர் கவனமும் தீப்ஸ் மீதுதான். தன் முதல் படமே வெளிவராத நிலையில் ஹாலிவுட் தயாரிப்பாளர்கள் தீபிகாவிடம் அப்பாயின்மென்ட் கேட்கிறார்கள்.

தேவி, ஹேமமாலினி, மாதுரி தீட்சித் என அந்தக் காலத்து நம்பர் 1-கள் எட்டாத வெற்றிகள் இல்லை; தொடாத உயரங்கள் இல்லை. ஆனால், தீபிகா  இப்போது அடைந்திருப்பது அதை எல்லாம் மீறிய அசாதாரணமான பாய்ச்சல்.

லேடி சூப்பர் ஸ்டார்!

தீபிகா, தன்னந்தனியாக பாலிவுட்டை ஆளும் பாட்ஷாக் களோடு போட்டி போட்டி ருக்கிறார்; தன்னந்தனியாக தன் காதல் தோல்விகளோடு போராடியிருக்கிறார்; தன்னந் தனியாக தன்னுடைய சோகங் களோடும் தோல்விகளோடும் மல்லுக்கட்டியிருக்கிறார்.

`பாலிவுட்டின் உச்ச நட்சத்திரம் நீங்கள். உங்களோடு நடிப்பதற்காக சூப்பர் ஸ்டார்கள் காத்திருக்கிறார்கள். இந்த நேரத்தில் ஏன் ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்கிறீர்கள்?'- சமீபத்திய பேட்டி ஒன்றில் தீபிகா படுகோனிடம் கேட்கப்பட்ட கேள்வி இது.

கிட்டத்தட்ட இதேபோல ஒரு கேள்வி 2006-ம் ஆண்டு ஒருமுறை தீபிகாவிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர் மாடலிங்கில் மிக உச்சத்தில் இருந்தார். சினிமாவில் நடிக்கத் தொடங்கவில்லை. அந்த ஆண்டின் கிங்ஃபிஷர் காலண்டரில
இடம்பிடித்திருந்தார். இந்தியாவின் மிக முக்கியமான பல விளம்பரங்களில் தோன்ற ஆரம்பித்திருந்தார். சர்வதேசக் கவனமும் கிடைக்க ஆரம்பித்த நேரம். `இந்த நேரத்தில் ஏன் சினிமா? அதுவும் ஒரு கன்னடப் படத்தில்?'

2006-ம் ஆண்டிலும் சரி... 2016-ம் ஆண்டிலும் சரி, தீபிகா ஒரே பதிலைத்தான் தந்தார். `இது என் வாழ்க்கைப் பயணத்தில் ஒரு பகுதி. நான் ஒரு நல்ல நடிகையாக, மாடலாக அறியப்பட வேண்டும். நல்ல படங்களில் நடித்து மக்களை மகிழ்விக்க வேண்டும். இதில் மொழி வேறுபாடுகள் எல்லாம் எனக்குக் கிடையாது' - அப்போதும் இப்போதும் அதே உறுதி; அதே தெளிவு. அதுதான் தீபிகா!

அப்பா பிரகாஷ் படுகோன், பிரபல பேட்மின்டன் வீரர்; தாத்தா படுகோன், பேட்மின்டன் சங்கத் தலைவர். ராக்கெட்களும் இறகுப்பந்துகளும் சீறிப்பாயும் வீட்டில் பிறந்தவர் தீபிகா. அதனாலேயே அவரும் பேட்மின்டன் விளையாட ஆரம்பித்தார். அப்பாவுக்காக பேட்மின்டன் ஆடினாலும், ஆசை, கனவு, லட்சியம் எல்லாம்... மாடலிங், சினிமா. எட்டாம் வகுப்பு படிக்கும்போதே சில விளம்பரங்களில் நடித்துவிட்ட தீபிகா, பத்தாம் வகுப்பு படிக்கும்போது தன் எதிர்காலம் மாடலிங்கும் சினிமாவும்தான் என தீர்மானித்துவிட்டார். அப்போது தீபிகா பேட்மின்டனில் தேசிய சாம்பியன். ஆனால், `நான் இனி பேட்மின்டன் ஆடப்போவது இல்லை’ என வீட்டில் சொல்லிவிட்டார். மகளின் சாய்ஸுக்கு மறுப்பு இல்லை.

மாடலிங் உலகில் உச்சத்தில் இருந்தபோதுதான் தீபிகாவுக்கு கன்னடப் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. லிரில் விளம்பரத்தில் தோன்றி நிறையவே கவனம் ஈர்த்திருந்தார். ஆனால், அவரின் சினிமா வாழ்க்கை மாடலிங் போலவோ, பேட்மின்டன் ராக்கெட்போலவோ சீறிப் பாய்ந்துவிடவில்லை.

கன்னடத்தில் உபேந்திராவோடு நடித்த `ஜஸ்வர்யா’ சூப்பர்ஹிட் படம்தான். ஆனால், பாலிவுட்டில் நடித்த `ஓம் சாந்தி ஓம்'தான் தீபிகாவை அடையாளம் காட்டியது.

ஷாருக் கானுடன் பாலிவுட்டில் முதல் படம் என்பது எவ்வளவு பெரிய வாய்ப்பு. முதல் படத்திலேயே சாந்தினி பிரியா, சாண்டி என இரட்டை வேடம். தீபிகா தோன்றிய முதல் காட்சி... உலகமே அவருக்காகக் காத்திருக்க, அவர் ஒரு மகாராணியைப் போல சொகுசுக்காரில் (ஒரு மிகப்பெரிய விழாவில்) வந்து இறங்குவார். அந்த மொமன்ட்டில் ஷாருக் கான் அவரைப் பார்த்துச் சிலிர்த்துப் போவார். அவரோடு ஒட்டுமொத்த இந்தியாவும் சிலிர்த்தது. `இதோ இன்னொரு ஐஸ்வர்யா ராய் கிடைத்துவிட்டார்' என தீபிகாவை வட இந்தியாவே கொண்டாடியது.

லேடி சூப்பர் ஸ்டார்!

`ஓம் சாந்தி ஓம்’ படம் தீபிகாவின் வாழ்க்கையை மாற்றியது. ஆனால், அதற்குப் பிறகு அவர் தேர்ந்தெடுத்த படங்கள், அவரைப் பரமபதப் பாம்பாகக் தொடங்கிய இடத்துக்கே இழுத்து வந்தன. ஒரு படப் புகழ் நாயகிகளை எண்ண ஆரம்பித்தால், பாலிவுட் வரலாற்றில் மூன்று இலக்கங்களில் பட்டியல் இடலாம். அவர்களில் ஒருவராக ஆகிவிடக்கூடிய எல்லா சாத்தியங்களும் தீபிகாவுக்கு இருந்தன. அடுத்தடுத்த படங்களும் அப்படியே. 

`சாந்தினி சவுக் டு சைனா’ படத்துக்காக ஜிஜுட்சூ (Jijutsu) தற்காப்புக் கலை எல்லாம் கற்று, டூப் இல்லாமல் பாய்ந்துப் பாய்ந்து நடித்திருந்த போதும், படம் படுதோல்வி. `நடிப்பு என்பது, மார்ஷியல் ஆர்ட் மட்டும் அல்ல தீபி... அதுக்கும் மேல' என்று விமர்சகர்கள் தீபிகாவைப் பந்தாடினர். அதற்குப் பிறகு `கார்த்திக் காலிங் கார்த்திக்’, `பிரேக் கீ பாத்’, `கேலேன் ஹம் ஜீன் ஜான் சே’, `தேஸி பாய்ஸ்’ என தீபிகா நடித்த அரை டஜன் படங்களிலும் நல்ல பேர் இல்லை.  `நீ இனி தென் இந்தியாவுக்குப் போய் குத்து டான்ஸ் ஆடு' என, பாலிவுட் ஊடகம் தோரணம் கட்டி தொங்கவிட்டன.

இதே காலகட்டத்தில் தீபிகா காதலில் விழுந்தார். ஒரு மாலை நேரத்து மழை மாதிரியான அழகான காதல். `பச்னா ஏ ஹசீனோ' என்ற படத்தில் நடிக்கும்போதுதான் படத்தின் நாயகன் ரன்பீரைக் காதலிக்கத் தொடங்கினார். (அந்தப் படம் வெற்றிபெற்றபோதும் `தீபிகாவின் நடிப்பு மொக்கை' என விமர்சிக்கப்பட்டது.)

பாலிவுட்டே பொறாமைப்படும்படி ஒரு ரியல் லைஃப் க்யூட் லவ். ஆனால், தீபிகாவுக்கு நேர்மையாக இல்லை ரன்பீர். அவர் வேறு சில பெண்களோடும் தொடர்பில் இருந்தார். அதை தீபிகா அறிந்தபோது அதிர்ந்துபோனார். `பிரேக் அப்' என, ஊடகத்தில் அறிவித்தார். ஒரு பக்கம் படங்களின் தோல்வி, இன்னொரு பக்கம் கூடவே காதல் தோல்வி. தீபிகா கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். அதில் இருந்து மீளவும் முடியாமல் அவதிப்பட்டார். மும்பையில் தனிமையில் அவருடைய வாழ்க்கை முடங்கியது.

`சிறுவயதில் ஆடிய பேட்மின்டன் விளையாட்டுதான் என்னை மீட்டு எடுத்தது. எதிர்ப்புகளைப் போராடி வெல்கிற குணத்தை பேட்மின்டன் வழியே நான் கற்றுக்கொண்டி ருந்தேன். 16 வயதில் நான் அதைக் கைவிட்டிருந் தாலும், அது கற்றுத்தந்த போராட்டக் குணம் எப்போதும் மறக்காது' என்றார்.

நடுவில் கடுமையான மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சைகூட எடுத்துக்கொண் டார். மனநல சிகிச்சை எடுத்துக்கொண்டதைப் பற்றி அவர் மறைக்காமல் டி.வி பேட்டி ஒன்றில் உரையாடினார். போராட்டமான இந்தத் தருணத்தில்தான் வந்தது `காக்டெய்ல்' பட வாய்ப்பு. 

காக்டெய்ல் படத்தின் கதைப்படி நாயகி `மீரா' வேடம்தான் தீபிகாவுக்குப் பேசப்பட்டது. ஆனால், கதையைப் படித்தவர் நாயகியின் தோழி `வெரோனிக்கா'வாக  நடிக்கவே ஆசைப்பட்டார். வெரோனிக்கா `மௌனராகம்’ கார்த்திக் மாதிரியான ஜாலி பெண் கேரக்டர். ஆனால், தீபிகா ரொம்பவே அடக்கிவாசிக்கிற பெண். அவருடைய இயல்புக்கு `மீரா'தான் சரி.  இவர் எப்படி வெரோனிக்காவாக? இயக்குநர் அடஜானியா ஆச்சர்யத்தோடு காத்திருந்தார். ஒரே வாரத்தில் முற்றிலும் வெரோனிக்காவாக வந்து நின்றார் தீபிகா. படம் பாக்ஸ் ஆபீஸில் சூப்பர் டூப்பர் ஹிட். 71 கோடி ரூபாய் வசூல். இதற்கு எல்லாம் மேல் `வெரோனிக்கா' விருதுகளைக் குவிக்க ஆரம்பித்தாள்.

பிறகு தீபிகாவுக்கு எல்லாமே ஏறுமுகம்தான். அதற்குப் பிறகு நல்ல படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். அதில் முக்கியமானது `பிகு’. ஒரு பக்கம் அமிதாப் பச்சன், இன்னொரு பக்கம் இர்பான் கான்... இரண்டு ஜாம்பவான்களுக்கு நடுவில் `உங்களுக்கு நான் ஒண்ணும் சளைச்சவ இல்லை' என தீபிகா வெளிப்படுத்திய நடிப்பாற்றல், அவருக்கு விருதுகளை அள்ளித்தந்தது.

தோல்விகளின் காலம், அவரை நன்றாகவே பக்குவப்படுத்தி இருந்தது. அதுதான் அவரை ஏமாற்றிய காதலன் ரன்பீரோடு மீண்டும் இணைந்து நடிக்கவைத்தது. `ஏ ஜவானி ஹே திவானி'யில் இருவரும் இணைந்து நடித்தனர்.
   
இந்திய சினிமாவில் தீபிகாவின் வருகைக்கு முன்னர் வரை நடிகையின் வெற்றி என்பது, அவர் எந்த ஹீரோவோடு ஜோடி போடுகிறார் என்பதை வைத்துத்தான் அளவிடப்பட்டது. ஆனால், அதை முற்றிலுமாக மாற்றியவர் தீபிகா. அவர் தன் திரைப்படங்களில் யார் ஹீரோ, தனக்கு என்ன பாத்திரம், யார் இயக்குநர், எவ்வளவு பட்ஜெட் என்பதை எல்லாம்விட நல்ல திரைப்படங்களில் தான் இருக்கவேண்டும் என விரும்பினார். அதனால்தான் அவர் `பாஜிராவ் மஸ்தானி’ மாதிரி படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிக்கத் தயார் ஆனார். அமிதாப் பச்சனோடு `பிகு’ மாதிரியான படத்தில் அப்படி ஒரு கேரக்டரில் நடிக்க முடிவெடுத்தார். ஹோமி அடஜானியாவின் `ஃபைண்டிங் ஃபேனி'யும், இமிதியாஸ் அலியின் `தமாஷா’விலும் நடிக்க ஒப்புக்கொண்டதும் அப்படியே!

இப்போது தீபிகாவை `லேடி அமீர் கான்’ என வர்ணிக்கிறது பாலிவுட். அவரின் படங்களில் நல்ல கதை இருக்கும், அதே சமயத்தில் அது சுவாரஸ்யமாகவும் இருக்கும் என ரசிகர்கள் நம்புகிறார்கள். தீபிகா தேர்ந்தெடுக்கும் நல்ல படங்கள் என்பது வெகுஜனங்களுக்கு பிடித்தமான வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்கள். அதனால்தான் 2011-ம் ஆண்டுக்குப் பிறகு அவருடைய படங்கள் அத்தனையும் வசூல் ரீதியிலும் வெற்றிபெற்றன. தீபிகாவின் சமீபத்திய திரைப்படங்களில் சுமாராக ஓடிய `தமாஷா'கூட 67 கோடி ரூபாய் வரை பாக்ஸ் ஆபீஸில் வசூலித்திருக்கிறது. 2013-ம் ஆண்டில் அவர் நடித்த `யே ஜவானி ஹே திவானி’, `ரேஸ்-2, `சென்னை எக்ஸ்பிரஸ்’, `கோலியோன் கீ ராஸ்லீலா’ முதலான படங்களின் ஒட்டுமொத்த வசூல் மட்டுமே 635 கோடி ரூபாய். 100 கோடி ரூபாய் ரேஸில் கான்களோடு தீபிகாவும் இணைந்தது இந்தக் காலகட்டத்தில்தான்.

சென்ற ஆண்டு வெளியான `பாஜிராவ்  மஸ்தானி’ படம் அதே நேரத்தில் வெளியான ஷாருக் கானின் `தில்வாலே’ பட வசூலையே மிஞ்சியது. அதனால்தான் வசூல்ரீதியாகவும் நம்பிக்கை தருகிற முதல் நடிகையாக தீபிகாவை நம்புகிறது பாலிவுட்!