சினிமா
Published:Updated:

கொடி - சினிமா விமர்சனம்

கொடி - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
கொடி - சினிமா விமர்சனம்

கொடி - சினிமா விமர்சனம்

ரசியல்வாதி அண்ணனுக்காக அப்பாவி தம்பி எடுக்கும் பாசப் பழிவாங்கலே `கொடி'.

அபிமான கட்சிக்காகத் தீக்குளிக்கும் அப்பாவித் தொண்டன் கருணாஸுக்கு, இரட்டைக் குழந்தைகள். பெரியவன் கொடி, அப்பாவின் மிச்சம். தம்பி அன்பு, அம்மாவின் வளர்ப்பு. அரசியலில் எஸ்கலேட்டர் பிடித்து ஏறும் கொடியின் காதலி த்ரிஷா இருப்பதோ எதிர்க்கட்சியில். காதல் வேறு; கட்சி வேறு பாலிசியில் காதல் வளர்க்கிறார்கள்.

கொடி - சினிமா விமர்சனம்

ஓர் அரசியல் சூழ்ச்சியில் கொடி கொல்லப்பட, கொலைகாரனைக் கண்டுபிடிக்க அரசியலில் இறங்குகிறார் தம்பி அன்பு. மிச்சத்தை, திரையில் காண வேண்டியதுதான்.

ஒரே படத்தில் பல கெட்டப் போடுவது தனுஷ் வழக்கம் என்றாலும், முதல் முறையாக இரட்டை வேடங்கள். ட்வின்ஸ் என்பதால் பெரிய வித்தியாசங்கள் காட்டாமல் அடக்கி வாசித்திருக்கிறார். அதுவே அழகு. அன்புவைவிட கொடிக்கே விசில் பறக்கிறது. இத்தனை வருட தமிழ் சினிமாவில் சீரியஸான பெண் அரசியல்வாதிகள் மிகக் குறைவு. த்ரிஷா அந்த வகையில் ஸ்பெஷல்; தாங்கிப் பிடித்திருக்கிறார். அழகாக ஆங்காங்கே... அனுபமா.

காளிவெங்கட், சரண்யா பொன்வண்ணன், எஸ்.ஏ.சந்திரசேகர் என எல்லோருமே நைஸ் காஸ்ட்டிங். ஆனால், இத்தனை ஹைலைட்களையும் வைத்துக் கொண்டு, திரைக்கதைக்கு அலைந்திருக் கிறார் இயக்குநர் துரை செந்தில்குமார்.

முதலமைச்சர் முதல் எதிர்க்கட்சித் தலைவர் வரை கோவை தொகுதியில் முகாமிட்டுக்கொண்டிருக்கிறார்கள். தனுஷும் த்ரிஷாவும் உட்கட்சியில் எதிர்க்கும் எல்லோருமே காமெடி பீஸ்களாக இருப்பதால், கெத்து குறையுதே ப்ரோ! அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் வேட்பாளர் கொல்லப்பட்டால் தேர்தல் தள்ளித்தானே வைக்கப்படும்? இந்த டீடெய்லிங்கூட இல்லாமல் என்ன அரசியல் படம்?

கொடி - சினிமா விமர்சனம்

பாதரசக் கழிவுகள், அதன் விளைவுகள் என லைன் பிடித்தது நன்று. அதை இன்னும் கொஞ்சம் காட்சிகளால் விளக்கியிருந்தால் எமோஷன் எகிறி இருக்காதா? ``நீங்க பொழப்புக்கு அரசியல்வாதி...நான் பொறந்ததுல இருந்தே அரசியல்வாதி'', ``எல்லோரும் பொறக்கும்போது சிங்கிள்தான். நான் அப்பவே டபுள்ஸ்'' என மாஸ் தெறிக்கும் பன்ச்கள் ஓ.கே. ஆனால், அரசியல் வசனங்கள்... எல்லாமே தொடர்பு எல்லைக்கு அப்பால்!

பின்னணியில் கொடி பறக்கவிட்ட சந்தோஷ் நாராயணன், `சுழலி...' பாடலில் மட்டுமே பளிச்! எஸ்.வெங்கடேசன் ஒளிப்பதிவு, இரண்டு தனுஷ்களும் வரும் காட்சியை நம்பும் படியாகக் காட்டியிருக்கிறது.

அண்ணாந்து பார்க்க வைத்திருக்கலாம்... ஆள் உயரத்தில்தான் பறக்கிறது `கொடி'.

- விகடன் விமர்சனக் குழு