சினிமா
Published:Updated:

“ஆர்யாதான் ரியல் கடம்பன்!”

“ஆர்யாதான் ரியல் கடம்பன்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“ஆர்யாதான் ரியல் கடம்பன்!”

ம.கா.செந்தில்குமார்

‘‘‘மஞ்சப்பை’ முடிச்சுட்டு என் அடுத்த பட ஸ்கிரிப்ட் வேலைகள்ல இருந்தேன். அப்பத்தான் ‘மஞ்சப்பை’ படத்தை தெலுங்கு, இந்தி, கன்னடம்னு பல மொழிகள்ல ரீமேக் பண்ணச் சொல்லி அழைப்பு. ‘பண்ணினா, நீங்கதான் பண்ணணும். இல்லைனா நீங்க வர்ற வரை நாங்க காத்திருக்கோம்’னு சொல்லி, ஒரு கன்னடத் தயாரிப்பாளர் நேர்லயே வந்துட்டார். ‘நம்ம மேல இந்த அளவுக்கு நம்பிக்கை வெச்சு வந்திருக்காரே!’னு கன்னட ‘மஞ்சப்பை’யை முடிச்சேன். அங்கேயும் அதுக்கு நல்ல வரவேற்பு.

அப்புறம், ஆர்யாவை மனசுல வெச்சு ஆறு மாசம் நேரம் எடுத்துப் பண்ணினதுதான் இந்த ‘கடம்பன்’. சூப்பர்குட் சின்னச்சாமி அண்ணன்கிட்ட கதை சொன்ன அடுத்த நாளே ஆர்.பி.சௌத்ரி சார்கிட்ட சொன்னாங்க. அவருக்கும் கதை பிடித்துப்போக அடுத்த நாளே ஆர்யா எதிர்ல உட்காரவெச்சாங்க. இப்படி கதை சொன்ன மூணாவது நாள்லயே ‘கடம்பன்’ டேக் ஆஃப் ஆகிட்டான்’’ - இயக்குநர் ராகவா பேச்சில் அவ்வளவு நம்பிக்கை. மலைக்கிராமக் காடுகளைப் பற்றியக் கதை சொல்ல வருகிறான் `கடம்பன்'.

“ஆர்யாதான் ரியல் கடம்பன்!”

‘‘கடம்பன் யாரு?’’

‘‘ ‘கடம்பனக் காடு’. இது மதுரையின் பழைய பெயர். `கடம்பன்’னா, காக்கக்கூடியவன்; அசுரனை அழிக்கக்கூடியவன்னு பொருள். அப்படி தேனியில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள ஒரு மலைக்கிராமம் ‘கடம்பவனம்’. அங்கு இருக்கும் பழங்குடி மக்கள், மலையில் கிடைக்கும் இயற்கைவளங்களை வெச்சு சந்தோஷமா வாழ்றாங்க. அப்ப அவங்களுக்கு ஒரு பிரச்னை. அது, நம்ம மாநிலத்தில் நடக்கும் பிரச்னை மட்டும் இல்லை... ஒட்டுமொத்த இந்தியாவிலும் நடந்துக்கிட்டிருக்கிற பிரச்னை. அதை அவங்களே எப்படித் தீர்த்துக்கிறாங்க? இதுதான் கதை. அந்த மக்களின் பிரதிநிதியா இருப்பவன்தான் ‘கடம்பன்’. ‘மஞ்சப்பை’ கிழக்குன்னா, ‘கடம்பன்’ மேற்கில் இருக்கும். ஆமா, இது ஆக்‌ஷனும் எமோஷனும் சரிவிகிதத்தில் கலந்த படம்.’’

‘‘இந்த மாதிரியான கதையை மையமா வெச்சுதானே ‘பேராண்மை’ படத்தை ஜனநாதன் எடுத்தார்?''

‘‘இந்த விஷயத்தின் அரசியல் பார்வையாக வந்த படம் ‘பேராண்மை’. அந்த அரசியல் ‘கடம்பன்’ல இருக்காது. இது ஆதிவாசிகளின் வாழ்வியலைப் பதிவுபண்ணும் வகையில் இருக்கும். காட்டுக்குள் உல்லாச விடுதிகள், காட்டு மிருகங்களை வேட்டையாடுறது எல்லாம் அரசியலைத் தாண்டி தனிப்பட்ட மனிதர்களின் பேராசை. இதை முழுமையாக அலசினால் அதில் கடைக்கோடி காரணமாக அரசியல்தான் இருக்கும். ஆனா, இந்தக் கதை அந்த அரசியலை டிமாண்ட் பண்ணலை. ‘பேராண்மை’யில் நெற்றிப்பொட்டில் சுடுவதுபோல நேரடியாக இருக்கும் அரசியல், இதில் மறைமுகமாக இருக்கும்.’’

“ஆர்யாதான் ரியல் கடம்பன்!”

``ஆர்யா, உடம்பை எல்லாம் ஏத்தி பயங்கரமா இருக்காரே?’’

‘`இந்த கேரக்டர் இப்படித்தான் இருக்கணும்னு சொல்லி, கைகளைக் கூப்பியபடி இருக்கும் அனுமார் படத்தை அவருக்கு ரெஃபரன்ஸா வாட்ஸ்அப் பண்ணியிருந்தேன். ஒன்றரை மாசத்துக்குப் பிறகு அவர் தன் போட்டோவை செல்ஃபி எடுத்து அனுப்பி, ‘இந்த உடம்பு போதுமா பிரதர்?’னு கேட்டிருந்தார். ஏன்னா, அந்த இரும்பு உடம்பு இந்தக் கதைக்கு தேவை.

ஷூட்டிங்ல ஒருமுறை 100 மீட்டர் உயரத்துல இருந்து குதிச்சப்ப, கல்லு குத்தி கண் றெப்பைக் கிழிஞ்சிடுச்சு. ஒரு மணி நேரத்துக்குள்ள நாலு தையல் போட்டுக்கிட்டு, திரும்பவும் வந்து நடிச்சார்.

படம் முழுவதும் ஆர்யாவுக்கு செருப்பு கிடையாது. ஒரு துரத்தல் காட்சி. அப்ப முழுப் பாதமும் கிழிஞ்சிடுச்சு. அந்தக் காலோடு காலை 9 மணியில் இருந்து மாலை 6 மணி வரை அப்படியே ஓடினார். ஷூட்டிங் ஸ்பாட்ல இருந்து கிளம்பும்போது அவர் தினமும் ரத்தக்காயத்தோடுதான் போவார். ஆர்யாதான், ரியல் கடம்பன்.’’

“ஆர்யாதான் ரியல் கடம்பன்!”

‘‘காடுகள்லதான் முழுப் படப்பிடிப்பு. என்னென்ன சவால்கள்?’’

‘`கடம்பவனத்தில் எங்கேயுமே பிளாஸ்டிக் இருக்கக் கூடாது. இதுக்காக கொடைக்கானல் தாண்டிக்குடியில் இருந்து உள்ளே 25 கி.மீட்டரில் 100 ஏக்கர் அளவுக்கு தனியார் நிலப்பகுதியை வாடகைக்கு எடுத்து, அதில் 200 வீடுகள் செட் போட்டு ஒரு கிராமத்தையே உருவாக்கினோம்.  க்ளைமாக்ஸுக்கு 50 யானைகள் தேவைப்பட்டது. ஒரு இடத்தில் 50 யானைகளைச் சேர்த்துவைத்து ஷூட் பண்ணுவது இந்தியாவில் சாத்தியம் இல்லை. `பேங்காக்ல சியாங்மாய் என்ற இடத்தில் யானைப் பண்ணை இருக்கு'னு சொன்னாங்க. ஒரு யானைக்கு ஒரு நாள் வாடகை ஒரு லட்சம் ரூபாய். 50 யானைகளுக்கும் 15 நாளைக்கு வாடகையாக மட்டுமே 5 கோடி ரூபாய் கொடுத்தோம். அப்படின்னா பட படஜெட் எவ்வளவுனு யோசிச்சுக்கங்க. ஆனால், ஆர்.பி.செளத்ரி சார் கதை கேட்டதோடு சரி, ‘என்ன கதை சொன்னியோ, அதை அப்படியே எடுத்துக்கொடுத்துடுப்பா’னு மட்டும் சொன்னார். ஒருமுறைகூட ஷூட்டிங் ஸ்பாட் வந்தது இல்லை. `ஜித்தன்' ரமேஷ் சார்தான் ஸ்பாட்ல வந்து எல்லா உதவிகளையும் செய்தார்.’’

“ஆர்யாதான் ரியல் கடம்பன்!”

‘‘மலைக் கிராமப் பெண்ணா கேத்ரீன் தெரசா. எப்படி நடிச்சிருக்காங்க?’’

‘‘‘மெட்ராஸ்’ படத்துல நடிச்சதைப் பார்த்துட்டுதான் அவங்களை ஃபிக்ஸ் பண்ணினோம். அவங்களும் ஆர்யாவுடன் போட்டிபோட்டு நடிச்சிருக்காங்க. கதையை சொன்னதும், ‘எல்லா சீன்ஸையும் மெயில்ல அனுப்பிடுங்க. நான் பிரிப்பேர் பண்ணிட்டு வந்துடுறேன்’னு சொல்லி, ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே டயலாக் பேப்பர் வாங்கி மனப்பாடம் பண்ணிட்டாங்க.

வழக்கமா ஹீரோயின் கிடைக்கத்தான் தேடுவாங்க. நாங்க வில்லனுக்காக அஞ்சாறு மாதங்கள் தேடினோம். அந்தச் சமயத்தில் ‘குண்டே’னு இந்திப் பட ட்ரெயின் சீக்வென்ஸ் ஃபைட்டை எதேச்சையாப் பார்த்துட்டு, தீப்ராஜ் ராணாவை அழைச்சுட்டு வந்தோம். தமிழ்ல இதுதான் அவருக்கு முதல் படம். செம மாஸ்! கண்லயே மிரட்டுறார். ஆர்யாவின் அப்பாவா சூப்பர் சுப்பராயன் மாஸ்டர், அந்த கேரக்டராவே இருப்பார்.’’

“ஆர்யாதான் ரியல் கடம்பன்!”

‘‘மலை பின்னணின்னா இசையும், ஒளிப்பதிவும் அரசடிக்கணும். எப்படி வந்திருக்கு?’’

‘‘இசை யுவன். மொத்தம் அஞ்சு பாடல்கள். அஞ்சும் அஞ்சு வெரைட்டி. `பேராண்மை', `மீகாமன்', `வாகா' படங்களுக்கு ஒளிப்பதிவு பண்ணின எஸ்.ஆர்.சதிஷ்குமாரும் எடிட்டர் தேவாவும் என் வலது கை மாதிரி. நான் என்ன நினைக்கிறேனோ, அதை ஸ்கிரீன்ல கொண்டுவருவாங்க. இந்த இருவரின் பங்களிப்பும் வேற லெவல்.’’