
வரவனை செந்தில், படங்கள்: சு.குமரேசன்
ஹைப்பர் டென்ஷன், ஹை பிபி கொடுத்த பிரச்னைகளின் களைப்பு, முகத்தில் தெரிகிறது. ஆனால், கண்களில் அதே உற்சாகம். அறிமுக இயக்குநர் விஜய் ஸ்ரீயின் பெயரிடப்படாத படத்தில் சாருஹாசன், பாலாசிங் ஆகியோருடன் நடித்துக்கொண்டிருக்கிறார் ஜனகராஜ். ஆமாம்ப்பா... ஜனகராஜ் திரும்ப வந்துட்டாருப்ப்ப்பா!
``உடம்புக்குக் கொஞ்சம் முடியாமப்போயிடுச்சு. அதனால தொடர்ந்து படங்கள்ல நடிக்க முடியலை. ஃபீல்டோட டச்சும் விட்டுப்போச்சு. அப்புறம், பையன் வளர்ந்துட்டார். அவருக்கு அமெரிக்காவில் போய்ப் படிக்கும் வாய்ப்பு வந்தது. ஒரே பையன், அதான் கூடவே போயிட்டேன். படிப்பு முடிஞ்சு பையன் இந்தியா வந்த பிறகும் நடிக்கிற எண்ணம் எல்லாம் இல்லாமத்தான் இருந்தேன். இந்தப் படத்தோட டைரக்டர் தொடர்ந்து பேசியே என்னை சம்மதிக்க வெச்சுட்டாரு.''

``ரொம்ப நாளைக்குப் பிறகு திரும்பி வந்திருக்கீங்க... ஷூட்டிங் எப்படி இருந்தது?''
``நான் பக்கா சென்னைக்காரன். தேனாம் பேட்டையில்தான் வீடு. எங்கே திரும்பினாலும் சினிமாக்காரங்கதான். இன்னிக்கு பெரிய லெஜண்ட்டா இருக்கிற பாரதிராஜா மாதிரி இயக்குநர்களை எல்லாம், அன்னிக்கு ரொம்ப சாதாரணமா டீக்கடைகள்ல பார்க்கலாம்.
`16 வயதினிலே' படத்தை பாரதிராஜா எடுத்துக்கிட்டு இருக்கும்போது நான் ஊர்ல இல்லை. வந்து பார்த்தா, படம் செம ஹிட். நேராப் போய் `நான் உங்ககிட்ட அசிஸ்டன்ட் டைரக்டராகச் சேரணும்'னு நின்னேன். ` உனக்கு நடிப்புதான் செட்டாகும்'னு சொல்லி வாய்ப்பு கொடுத்தார். அதுக்குப் பிறகுதான் எல்லோருக்கும் தெரியுமே..!
இப்ப மறுபடியும் நடிக்க வந்தப்ப, ஷூட்டிங் முந்தின நாள் ராத்திரி தூக்கமே வரலை. ஷூட்டிங் கார் வந்து வாசலில் ஹார்ன் அடிக்கிற மாதிரியே ஒரு ஃபீலிங். மறுபடியும் 80-ஸுக்கே போன உணர்வு''
``10 வருஷம்கிறது ஒரு பெரிய இடைவெளிதானே?''
``ஆமாம். ஆனா, தொடர்ந்து பத்திரிகைகள் வாசிக்கிறது, டி.வி-யில் செய்திகள் பார்ப்பதுன்னு அப்டேட்டாத்தான் இருப்பேன். அமெரிக்காவில் இருக்கும்போதுகூட யூ-டியூப், வெப்சைட்களில் செய்திகளைப் படிப்பேன். முக்கியமான படங்கள் பற்றிக் கேள்விப்பட்டா, பார்க்கணும்னு நோட் பண்ணிக்குவேன். கமல் அவர்களின் `உத்தம வில்லன்' படம் கட்டாயம் பார்க்கவேண்டிய லிஸ்ட்டில் வெச்சிருக்கேன்.''
``கமல்கூட தொடர்பில் இல்லையா நீங்க?''
``அதான் சொல்றேனே... உடம்பு ரொம்ப முடியலை. என்னோட மனோபலத்தாலதான் தேறி வந்திருக்கேன். வீட்டைவிட்டு வெளியவே போகலை. ரொம்ப ரொம்ப நெருக்கமானவங்க, சொந்தக்காரங்கதான் இப்போ என் தொடர்பே. என் ஃபேமிலி ரொம்பச் சின்னதுதான். அவங்க இல்லைன்னா இன்னைக்கு நான் இல்லை. அப்படிப் பார்த்துக்கிட்டாங்க. அவர் என்னைப் பற்றி விசாரிப்பாருன்னு சொல்வாங்க. அந்த காம்போவில் இப்பவும் என்கூட டச்சில் இருப்பவர் மணிரத்னம் மட்டும்தான்.''
``மணிரத்னம் என்ன சொல்றார்?''
`` `உடம்பைப் பார்த்துக்கங்க. மத்தது எல்லாம் அப்புறம் சரி பண்ணிக்கலாம்'னு சொல்லிக்கிட்டே இருப்பார்.''
`` `கபாலி' பார்த்தீங்களா?''
``வந்துட்டேன்னு சொல்லு... நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு... கபாலிகிட்ட போய் 'கே.பாலி' வந்துட்டேன்னு சொல்லு'' என தன்னுடைய யுனிக் குரலில் பேசிக்காட்டுகிறார்.
நான் `படிக்காதவன்' படத்துல சூப்பர்ஸ்டார் கூடவே கபாலியா நடிச்சிருக்கேன். ஆனா, சூப்பர்ஸ்டார் நடிச்ச `கபாலி'யை இன்னும் பார்க்கலை. வீட்டுல படம் பார்க்கிறது எனக்குத் திருப்தியா இல்லை. தியேட்டருக்குப் போய்தான் பார்க்கணும். `கபாலி' 100-வது நாள் போஸ்டர் பார்த்தேன். ரொம்ப மகிழ்ச்சி. சீக்கிரமே பார்த்துடுவேன். `கபாலி' படம் மட்டும் இல்லை, ரஜினியவே பார்க்கணும்போலத்தான் இருக்கு. இப்ப அவருகூட சேர்ந்து நடிச்சா, ரொம்ப இன்ட்ரஸ்ட்டிங்கா இருக்கும்.''

``சினிமா தொடர்பு எல்லாம் எப்படி இருக்கு?''
``உடம்பு முடியாமப்போன பிறகு, சரியா நடிக்க முடியலை. அதனால ஒப்புக்கிட்ட படங்களைக்கூட நடிக்கலை. `மதராசப்பட்டினம்' படத்தில் ஃஹனிபா நடித்த `துபாஷ்' கேரக்டர் நான் பண்ணவேண்டியது. அந்த கேரக்டரை உருவாக்கும்போதே என்னை மனசுல வெச்சுத்தான் உருவாக்கியதாகச் சொல்லி, நடிக்கக் கேட்டாங்க. அப்ப உடம்பு ரொம்ப முடியலை. அதனால பண்ண முடியாமப்போச்சு. இப்பவும் ஏதாவது புது இயக்குநர்கள் `இந்த கேரக்டர் உங்களை நினைச்சுதான் க்ரியேட் பண்ணியிருக்கேன். புரொடியூசர் கிடைச்சவுடன் வரேன் சார்'னு வந்து சொல்லிட்டுதான் இருக்காங்க.''
``இதுக்கு முன்னாடி நடித்த வரைக்கும் உங்களுக்கு திருப்தியா?''
``இது நான் ஆசைப்பட்டு எடுத்துக்கிட்ட துறை. அதனால திருப்தி எல்லாம் நடிப்பு துறையில் யாருக்கும் வராது. ஆனா, ஒவ்வொரு நாளும் தமிழ் மக்களின் அன்றாட வாழ்க்கையில நாம இருக்கோம்னு தெரிய வரும்போது ஒரு நிம்மதி கிடைக்குது.
ஃபேஸ்புக்கில் என் ஃப்ரெண்ட் பையனுக்கு ஒருத்தர் போட்ட கமென்டில் `என்னமோ போடா மாதவா!'னு ஒரு கமென்ட். அந்தப் படம் வந்து 28 வருஷம் ஆகுது. ஜனகராஜ் தமிழ் மக்களின் மனசுல இருக்கேன். நிறையப் பேருக்கு கிடைக்காத கிஃப்ட் இல்லையா இது!''