
ம.கா.செந்தில்குமார் - படங்கள்: கே.ராஜசேகரன்

‘‘அன்று ‘ரோஜா’வுக்காகப் பார்த்த அதே ஸ்டூடியோதான் இன்றும். ஆனால், ஸ்டைலிஷான வொர்க்கிங் ஸ்டைல், தமிழ், இந்தி, ஆங்கிலம் என மாறிக்கொண்டே இருக்கும் மொழிகள்... லாஸ் ஏஞ்சலஸ், மும்பை, சென்னை எனப் பறந்துகொண்டே இருக்கும் நகரங்கள்... அவரைச் சுற்றி நிறைய மாற்றங்கள். ஆனால், இசையின் மீதான ஆசை, வேலையின் மீதான ஆர்வம், ‘இந்தக் கதைக்கு இதுதான் இசை’ என்ற தீர்மானம், ஒவ்வொரு படத்தையும் முதல் படம்போல் இசைக்கும் அர்ப்பணிப்பு... அன்றும் இன்றும் என்றும் அதே ரஹ்மான்தான்’’ - மணிரத்னம் பேசப் பேச ரஹ்மானிடம் எட்டிப்பார்க்கிறது இதழோரச் சிரிப்பு. தமிழ் சினிமாவையே புரட்டிப்போட்ட இந்த இசை-இயக்க இணைக்கு வயது 25. ஆம், ‘ரோஜா’வில் தொடங்கிய இந்தப் பயணம், ‘காற்று வெளியிடை’ கடந்து கால் நூற்றாண்டில் அடியெடுத்துவைக்கிறது. இந்தப் பயணத்தை விகடனுக்காகத் திரும்பிப் பார்க்கிறது இந்தக் குரு-சிஷ்யன் இணை.
‘‘ ‘இவர் ஏற்கெனவே 10 படங்கள் பண்ணிய பிரபல இயக்குநர். தவிர, படத்தின் தயாரிப்பாளர் கே.பாலசந்தர். இருவரும் சேர்ந்து ‘ரோஜா’வுக்காக உங்களைத் தேர்வுசெய்தபோது உங்களுக்கு ஏதேனும் தயக்கங்கள் இருந்தனவா?’’ - இது ரஹ்மானுக்கான கேள்வி.
‘‘விளம்பரங்கள், ஜிங்கிள்ஸுக்கு இசையமைத்துக் கொண்டிருந்த நேரம். வி.சி.ஆர் வந்த சமயம். அதில் ஃபாரின் படங்களைத் தொடர்ந்து பார்ப்பேன். அப்போது நான் பார்க்கும் தமிழ்ப் படங்கள் என்றால், அது இவரின் படங்கள் மட்டும்தான். ஆமாம், அப்பவே நான் இவரின் மிகப்பெரிய ரசிகன். அந்தச் சமயம் விளம்பரப் படத் தயாரிப்பாளர் சாரதா திரிலோக் பழக்கம். ஒருநாள், ‘மணியோட படம் இருக்கு. ‘தளபதி’. வர்றியா?’ எனக் கேட்டார். ‘மணியா?’ என்று ஆச்சர்யமானேன். ‘ஆமாம், மணிரத்னம். என் அண்ணன்தான் அவர்’ என்றார். இன்னும் ஆச்சர்யம். அன்று ‘தளபதி’ பார்த்துவிட்டு வரும் வழியில் லியோ காபி விளம்பரத்தின் சக்சஸ் சந்திப்பில்தான் இவரை முதன்முதலில் பார்த்தேன். ‘நான் ஒரு சின்ன ஸ்டூடியோ வெச்சிருக்கேன். நீங்க வரணும்’ என்றேன். ‘வர்றேன்’ என்றவர் ஆறு மாதங்கள் கழித்துதான் வந்தார். ‘சின்ன ஸ்டூடியோ என்று சொன்னேன். ஆனால், அவ்வளவு சின்ன ஸ்டூடியோவாக இருக்கும் என இவர் எதிர்பார்த்திருக்க மாட்டார்’’ - சிரிக்கிறார் ரஹ்மான்.
‘‘ஆமாம், ஸ்டூடியோ கதவு மிகச் சிறியது. நாங்கள் அட்ஜஸ்ட் பண்ணிக்கொண்டு போய்விடுவோம். ஆனால், எஸ்.பி.பி-தான் பாவம். கொஞ்சம் சிரமப்பட்டார். பக்கவாட்டில் திரும்பிய நிலையில்தான் அந்தக் கதவு வழியாக வருவார். அப்படி வந்துதான் ‘காதல் ரோஜாவே...’ பாடினார். ஆமாம், சின்ன ஸ்டூடியோ. மிகப் பெரிய சவுண்ட்.’’
சத்தமில்லாமல் சிரித்த மணிரத்னத்துக்கு அடுத்த கேள்வி. ‘‘அந்த ரிக்கார்டிங் ஸ்டூடியோவில் இவரைச் சந்தித்த அந்தத் தருணம் எப்படி இருந்தது?’’
‘‘சர்ப்ரைஸிங்கா இருந்தது. என்ன எதிர்பார்த்து வந்தேன் என எனக்குத் தெரியாது. ஆனால், வந்து கேட்டதும் ஒட்டுமொத்தமாக ஆச்சர்யப் படுத்திவிட்டார். நான் அதுவரை இந்தியாவில் கேட்காத இசை. அப்படி ஒரு ஃபினிஷிங். ஸ்டன்னிங்.’’ - ‘ரோஜா’ இசையை முதல் நபராகக் கேட்ட அந்தத் தருணத்தை நம் கண்முன் நிறுத்துகிறார் மணி.
‘‘இவரின் கைடன்ஸ் இல்லாத அந்த ஆரம்ப நாள்களில் டாக்குமென்ட்ரி, அட்வர்டைஸிங் ஸ்டைலில் சில விஷயங்கள் பண்ணியிருந்தேன். இன்று 25 வருடங்கள் ஆகிவிட்டன. பாலிவுட், ஹாலிவுட், லண்டன் என வெவ்வேறு இண்டஸ்ட்ரிகளில் வேலைகள் பண்ணி யிருக்கிறேன். அவர்களின் தேவை என்ன எனப் புரிகிறது. அவர்களோடு நம்மை ஒப்பிடும்போது நிறைய விஷயங்களில் நம் இசை நன்றாக இருந்திருக்கிறது. சில விஷயங்களில் அவர்களின் இசை நன்றாக இருந்திருக்கிறது. கடந்த எட்டு வருஷங்களாக வேறு மாதிரியான விஷயங்கள் கற்றுவருகிறேன். அந்த விஷயங்களை எல்லாம் இன்று இவரின் படங்களில் பயன்படுத்துவது, படத்தின் சவுண்டையே மாற்றுகிறது. இப்போது, ‘இந்த மாதிரி பின்னணி இசையை எல்லாம் முதல்லயே பண்ணியிருக்கலாமே’ என்று நினைக்கத் தோன்றுகிறது’’ என்கிற ரஹ்மான் தொடர்கிறார்.

‘‘பின்னணி இசையில் தமிழ் சினிமாவுக்கு என குறிப்பிட்ட வடிவம் இருந்துவந்திருக்கிறது. இவர் வந்த பிறகு இவரின் உதவி, ஊக்கத்தால் கொஞ்சம் மாற்றினோம். இன்று உள்ளதுபோல முழுமையான சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா அன்று இல்லை. இன்று அந்த அக்செஸிபிலிட்டி கிடைத்திருக்கிறது. ‘காற்று வெளியிடை’யில்கூட சில பகுதிகளை லண்டனில் ஃபுல் சிம்பொனி ஆர்கெஸ்ட்ராவை வைத்துப் பதிவுபண்ணினோம். சில பகுதிகளை நம் ஆர்கெஸ்ட்ராவை வைத்து இங்கேயே பண்ணியுள்ளோம். இரண்டையும் மிக்ஸ் பண்ணிப் பார்க்கும்போது படத்தில் அப்படி ஒரு கிராண்ட்னஸ், டைனமிக்ஸ் வந்திருக்கிறது. யெஸ்... கோயிங் பேக் டு த ஆர்கெஸ்ட்ரா’’ ரஹ்மானைப் பேசவிட்டு அழகு பார்க்கிறார் மணி.
‘‘ `முதல் படத்திலேயே மணிரத்னம் உங்களுக்கு அவ்வளவு சுதந்திரம் தந்தார்’ எனப் படித்துள்ளேன். அந்தச் சுதந்திரம் இன்று எப்படி மாறி வந்துள்ளது?’’ - கேள்வியை ஆவலுடன் எதிர்கொள்கிறார் ரஹ்மான்.
‘‘முதலில், எனக்கு ஆர்ட் என்றாலே என்ன எனத் தெரியாது. ஓர் ஓவியரின் ஓவியத்தைப் பார்த்தால், ‘இதில் அவர் என்ன சொல்ல வருகிறார்’ என்பது புரியாது. அந்தச் சமயத்தில் சில விஷயங்களை இவர் சொல்லிப் பண்ணியிருக்கிறேன். ஆனால், `எதற்காக இப்படிச் சொல்கிறார்' என அப்போது புரியாது. பிறகு பல்வேறு நாடுகள், வெவ்வேறு இசைகள், மொழிகள்... எனப் பயணங்கள் மூலம் நிறைய கற்ற பிறகு, ‘ஓ அதனால்தான் அன்று அப்படிச் சொன்னாரா?’ என்று என் அனுபவம் மூலம் புரிந்துகொள்கிறேன்.
‘ஓர் இசைக்கலைஞனாக யோசிப்பது வேறு. அவன், ‘இந்த மெலடிக்கு இந்த கார்டு வாசிச்சா நல்லா இருக்கும். எந்த ராகத்துல போடலாம்?’ என நினைப்பான். ஒரு கம்போஸராக யோசிப்பது வேறு. ‘இந்த வார்த்தையை எப்படி, எவ்வளவு ட்யூன் பண்ணலாம்?’ என அவன் யோசிப்பான். அதேபோல ஓர் இயக்குநராக யோசிப்பது என்பதும் வேறு. இவற்றுக்கு மீறிப்போய் அப்ஜெக்டிவ் எனச் சொல்வார்களே, அந்தப் பார்வையில் பார்க்கும் போதுதான் அனைத்து வேலைகளும் மாறுகின்றன. ஆமாம், இந்த மூவரும் சேரும்போதுதான் எக்ஸலென்ஸ் வருகிறது.’’
‘‘ஆனால், உங்களின் ஆரம்பகாலத்தில் ‘யப்பா இவரின் இசையில் கம்ப்யூட்டர்தாம்ப்பா மியூஸிக் போடுது’ எனச் சிலர் சொல்லக் கேட்டிருக்கேன். அந்தச் சமயங்களில் உங்களின் மனநிலை என்ன?’’ என்றதும், ‘‘இன்றும் அப்படித்தானே சிலர் சொல்கிறார்கள்?’’ என்று சிரித்த ரஹ்மானை இடைமறித்த மணி, ‘‘நாம் புரிந்துகொள்ளத்தான் கொஞ்சம் நாள் ஆனதே தவிர, முதல் நாளிலிருந்தே இவர் வளர்ந்துகொண்டேதான் இருக்கிறார். என்னைக் கேட்டீர்கள் என்றால், அவர் முதல் படத்திலேயே முழுமையாக இருந்தார். யெஸ், டோட்டல் கம்போஸர்.

‘ரோஜா’ கதை சொல்லும்போதே, அவர் பாடல்களுக்கான சிச்சுவேஷன்களுக்கு மட்டும் ட்யூன் போடவில்லை. முழுக்கதை, படத்தின் `ஓவர் ஆல் தீம்'ஐ மனதில் வைத்து ட்யூன் பண்ணியிருந்தார். அதை நான் எடுத்துச்சென்று எனக்கு எது சரியா இருக்கும், அதை எங்கெங்கு ஃபிக்ஸ் பண்ணலாம் என முடிவு செய்து கொண்டேன். அதுதான் நான் பார்த்த மிகப்பெரிய முதல் மாற்றம். பாடல்கள் மட்டுமல்ல, பின்னணி இசையிலும் அப்படித்தான். எமோஷன்களுக்கு நேர்மையாக இருக்கும் தீம்களை டெவலப் செய்து, அவை எங்கெங்கு ஃபிட்டாகும் என அவர் ஒட்டுமொத்தமாக ஒரு புதுப்பாதை அமைப்பார். அந்தப் பாதையில் நாம் போய்க் கற்றுக்கொண்டே இருக்கலாம். அப்படி அந்தப் பாதையில் அவருடன் பயணிப்பது போகப்போக அவ்வளவு சந்தோஷமாக இருக்கும்’’ என்கிறார்.
‘‘ `ரஹ்மான் பாடல்களைக் கேட்கக் கேட்கத்தான் பிடிக்கும்’ என்று சிலர் சொல்வார்கள். உங்களுக்கு எப்படி? ட்யூனை முதலில் கேட்டதுமே பிடித்துவிடுமா?’’ என்றால் சிரிக்கிறார் மணி.
‘‘எனக்கு சங்கீதம் அவ்வளவாகத் தெரியாது. அப்படிப்பட்ட எனக்கே பிடிக்கிறது என்றால், நிச்சயமாக எல்லோருக்கும் பிடிக்கும் என்கிற நம்பிக்கைதான். அதில்தான் இந்தப் பயணம் தொடர்கிறது. அவர் தருவதை நான் கேட்பேன். ‘இது கேட்சியா இருக்கு. இது பிடிச்சிருக்கு’ எனச் சொல்ல முடியுமே தவிர, ‘நல்லா இருக்குமா? வொர்க் ஆகுமா... வொர்க் ஆகாதா?’ என்பது தெரியாது’’ என்கிறார்.
‘‘இந்தப் பயணத்தில் அதிக நேரம் எடுத்துக் கொண்ட பாடல், படம் என்றால் எதைச் சொல்வீர்கள்?’’ இந்தக் கேள்விக்கு முதலில் ரஹ்மான் பதில் அளிக்கிறார்.
‘‘ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொன்று இருக்கும். ‘கடல்’ படத்தில் நிறைய முயற்சிகள். பீத்தோவனின் வரிகளைத் தமிழில் பண்ணலாம் என்று யோசனை. அப்போது முடியாமல்போய் இப்போது ‘காற்று வெளியிடை’யில் பயன்படுத்தியிருக்கிறோம்.
‘இரண்டு ஹீரோ, ஒரு ஹீரோயின், மியூஸிக்கல் ஐடியா’ என வந்த ‘திருடா திருடா’ பட ‘வீரபாண்டி கோட்டையிலே...’ பாடல்கூட அதிக டைம் எடுத்துக்கொண்டது. அந்த மாதிரி பண்ணும்போது ஒரு பாடல் உருவாக, சமயங்களில் நான்கைந்து மாதங்கள்கூட ஆகிவிடும். ஆனால் எனக்கு, பல சமயங்களில் பாடல்கள் வேகமாக வருவதுகூட ஓர் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.’’
ரஹ்மான்விட்ட இடத்தில் தொடர்ந்த மணிரத்னம், ‘‘சமயங்களில் காட்சிகள்கூட அப்படித்தான். ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு சீன் அப்படி மாட்டிக்கொள்ளும். தள்ளிப்போய் தள்ளிப்போய்க் கடைசியில் சிக்கும்’’ என்கிறார்.
‘‘ஆனால், ‘நாள் ஆகிவிட்டது. இது போதும்’ என நினைத்தால் நாம் காலி. ‘சரியா இருக்கு’ என நம் மனசாட்சி சொல்லும்போதுதான் அந்த வேலையை முடிக்க வேண்டும். அவ்வளவுதான்’’ என்கிற ரஹ்மானிடம், ‘‘இந்தப் பயணத்தில் எப்போதாவது மணிரத்னத்துடன் முரண்பட்டிருக்கிறீர்களா?’’ என்றால் சிரிக்கிறார்.
‘‘இங்கு முக்கியமான இன்னொருவர் மிஸ்ஸிங். இந்த நடு ஸீட்டில் போட்டோஷாப் பண்ணிக்கூட அவரை நீங்கள் சேர்த்துக்கொள்ளலாம். ஆமாம், முரண்படுதல் என்றால், அது அண்ணன் வைரமுத்து அவர்கள்தான். சிங்கத்தின் பாலை தங்கப் பாத்திரத்தில் பிடிப்பதுபோல. ஆமாம், அவர் சிங்கப்பால் மாதிரி. அதுக்கு அவர் அடர்த்தியான கவிஞர் என்பதுதான் முக்கியமான காரணம். சமயங்களில், ‘சார் கவிதை பிரமாதம். ஆனா, பாடணும்ல. அது ஹிட் ஆகணும்ல’ என்றால், செல்லமாகச் சண்டைபோடுவார். முக்கியமாக, இந்தச் சர்ச்சை, சண்டைகள் எல்லாம் கேட்சியான சாங்கில்தான் மாட்டும்’’ என்கிற ரஹ்மானிடம் பழைய ‘ரோஜா’ சம்பவத்தைச் சொல்லத் தொடங்கினார் மணி.

‘‘முதல் படத்திலேயே அந்த அனுபவம். ‘ருக்குமணி... ருக்குமணி...’ பாடலுக்கு ‘ருக்குமணி’க்குப் பதில் வைரமுத்து எழுதியிருந்த பெயர் ‘செல்லத்தாயி’. பிறகு, வெவ்வேறு பெயர்களை மாற்றி எழுதினோம். ‘செல்லத்தாயி’ சவுண்ட் கேட்சியாக இல்லை’ என ருக்மணியைப் பிடித்தோம். முக்கியமாகக் கவிஞர்கள், வார்த்தைகளிலும் வரிகளிலும் விடாப்பிடியாக இருப்பார்கள், மியூஸிக் டீச்சர் மாதிரி. அதுதான் அவர்களின் அழகு. இப்படி முரண்பட்டாலும் வைரமுத்து கடைசியில் எங்களுக்குக் கொடுத்தது எல்லாம் ஃபென்ட்டாஸ்டிக். அவரின் தரம், உழைப்பு எங்களை வியக்கவைக்கும்.’’
ரஹ்மானும் வைரமுத்துவை வியக்கிறார். ‘‘ஆமாம், வைரமுத்து சார் எங்களின் மிகப்பெரிய சொத்து. ‘காற்று வெளியிடை’யிலும் ‘நல்லை, அல்லை’ என எளிமையான வார்த்தைகளில் அவ்வளவு அழகையும் அர்த்தத்தையும் கொண்டுவந்து சேர்த்திருக்கிறார்.’’
‘‘25 ஆண்டுகளில் 13 படங்கள். ஆனால், அனைத்தும் பரவலாகப் பேசப்பட்டவை. மணிரத்னத்தின் இந்தப் பயணம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’’
கேள்வியை முடிப்பதற்குள் ஆவலுடன் பதில் சொல்கிறார் ரஹ்மான். ‘‘தொடர்ந்து பண்ணும் பரீட்சார்த்த முயற்சிகள், கடின உழைப்பு. அதுதான் ஆச்சர்யம். இவரின் ஒவ்வொரு படத்தையும் எதிர்பார்க்கிறார்கள். அதனால் மக்கள் இவரை மதிக்கிறார்கள். இவர் ஒரு கோ க்ரியேட்டர். ‘நல்லா இருக்கு. இன்னும் கொஞ்சம் பெட்டரா இருந்தா இன்னும் நல்லா இருக்கும்ல’ என நடிகர், கம்போஸர், பாடலாசிரியர், செட் டிசைனர், கேமராமேன் என ஒவ்வொருவரையும் எவ்வளவு புஷ் பண்ண முடியுமோ அவ்வளவு புஷ் பண்ணுவார். அதை இவரிடம்தான் கற்றுக்கொண்டேன். ஆனால், அவரிடம் கேட்டால், ‘நான் என்ன பண்ணினேன்... நீங்க எல்லாரும் பண்ணினதுதானே?' என்பார்.’’
அதையே தொடர்கிறார் மணி. ‘‘யெஸ். இது கம்பைன் ஆர்ட். ஆக்ச்சுவலா ஒரு டைரக்டர் என்பவர் எதுவும் பண்ணுவதில்லை. மற்றவர்கள் பண்ணுவதை ஒருங்கிணைக்கிறார். உதாரணத்துக்கு, இவர் மியூஸிக் போடுகிறார். வைரமுத்து எழுதுகிறார். நான் நடுவில் உட்கார்ந்து இரண்டு பேருக்கும் போன் செய்து ‘இதுதான் ட்யூன், இதுதான் லிரிக்ஸ்’ என ஒருங்கிணைக்கிறேன். மற்றபடி என்னுடன் பயணிப்பவர்களை அந்தக் குறிப்பிட்ட ஒரு கதைக்கான மனநிலைக்குக் கொண்டுவந்து அவர்களின் பெஸ்டை வாங்கி அதைக் கோவையாகச் சேர்த்து சினிமாவாக்குகிறேன். அவ்வளவுதான்.’’
‘‘நீங்கள் பல இயக்குநர்களிடம் வேலை செய்திருக்கிறீர்கள். மணிரத்னத்தின் சிறப்பு என்றால் என்ன சொல்வீர்கள்?’’
‘‘எல்லாரும் ஸ்பெஷல்தான். நத்திங் டிஃபரென்ட்’’ ரஹ்மானை தன் பதிலால் காப்பாற்றுகிறார் மணி. ஆனாலும் ரஹ்மான் பதில் சொல்கிறார். ‘‘ ‘இவ்வளவுதான் இங்கு இருக்கிறது. இவ்வளவுதான் வரும்’ என எல்லோரும் சொன்னபோது, இதே ஆள்களை வைத்துக்கொண்டு வேறு மாதிரியான படங்கள் பண்ணியிருக்கிறார். செட் டிசைன், கேமரா ஆங்கிள்... ஒவ்வொரு முறையும் வேறு மாதிரியான சினிமா தந்திருக்கிறார். ஆமாம், நெக்ஸ்ட் லெவல் சினிமா. அது மைண்டிலிருந்து வரணும். அது இவரின் எக்ஸலென்ஸ்.’’
இடைமறித்த மணிரத்னம், ‘‘அது நான் மட்டும் பண்ணுவதில்லை. சுற்றியுள்ள நல்ல மனிதர்கள், திறமையான டெக்னீஷியன்கள்’’ என்கிறார். ‘‘ஆனாலும் அவர்களை ஒரே ஃப்ரீக்வென்ஸியில் ட்யூன் பண்ணணும் இல்லையா?’’ என்றபடி அவரை ஒப்புக்கொள்ள வைக்கிறார் ரஹ்மான்.

‘‘உங்கள் பையன் அமீனையும் இவர்தான் அறிமுகப்படுத்தினார். என்ன சொல்கிறார் அமீன்?’’ என்றதும், ‘‘அது அமீனின் அதிர்ஷ்டம்’’ என்றபடி தொடர்கிறார் ரஹ்மான். ‘‘என் குடும்பத்தில் உள்ளவர்கள் கேட்பதற்காக அமீனுக்காக ஒரு பாட்டு ரெடி பண்ணியிருந்தேன். அதை அவன் முக்கி முக்கிப் பாடிட்டான். அதை இவர் கேட்டிருக்கிறார். கேட்டதும், ‘என் படத்துல பயன்படுத்தணும்’ என்றார். என்னைப்போலவே அவனையும் இவர்தான் அறிமுகப்படுத்தணும் என்று என் மனைவிக்கு விருப்பம். அப்படித்தான் அமீன் ‘ஓகே கண்மணி’யில் அறிமுகமானான். ‘அந்தப் பாட்டைக் கேட்டாலே அவ்வளவு அமைதியா இருக்கு’ என்று இன்றும் பலரும் போன் பண்ணிப் பாராட்டுகிறார்கள். சந்தோஷம்.''
‘‘ஸ்க்ரிப்ட் ரெடி. கூடியசீக்கிரம் இசைப்புயலை இயக்குநராகப் பார்க்கலாம் எனத் தகவல். உண்மையா?’’ என்றதும், ‘‘ஒரு மாஸ்டரை இங்கே வைத்துக்கொண்டு இந்தக் கேள்வியை என்னிடம் கேட்கிறீர்கள். டைரக்ஷன் என்றால், இரண்டு வருடங்களுக்கு ஒரு படம்தான் பண்ண முடியும். ஆனால், கதைகள் எத்தனை வேண்டுமானாலும் யோசிக்கலாமே!
ஃப்ளைட்டில் லாஸ் ஏஞ்சலஸ் போகும்போது 14 மணி நேரம் ஆகும். அதில் ஆறேழு மணி நேரம் தூக்கம். பிறகு, என்ன செய்வது? மேலே பறக்கும்போது நிறைய ஐடியாஸ் வரும். அவற்றை ட்ராக் பண்ணிக்கொண்டே இருந்தேன். அப்படியான ஐடியாக்களில் எந்த மாதிரியானவை மியூஸிக் ஃப்ரெண்ட்லியாக இருக்கும்? எந்த மாதிரி கதைகள் கிளாசிக்கல் மியூஸிக்கில் உட்காரும். இப்படி யோசித்துக்கொண்டே இருக்கும்போது சில ஐடியாக்கள் வந்துகொண்டே இருந்தன. அப்படி வந்த முதல் ஐடியாவை ‘99 சாங்ஸ்’ என்ற பெயரில் படமாகப் பண்ணிக் கொண்டிருக்கிறோம்’' என்கிற ரஹ்மானுக்கே அடுத்த கேள்வி.
‘‘இசையமைப்பாளருக்கான காப்புரிமை பற்றி இப்போது பரவலாகப் பேசுகிறார்கள். அதைப் பற்றி உங்களின் கருத்து என்ன?’’ என்றதும், ‘‘எங்கே இன்னும் கேட்கவில்லை என நினைத்தேன்’' என்று சிரித்தவர், ‘‘அந்தச் சட்ட விதிகள் என்ன சொல்கின்றன என்று ரிசர்ச் செய்து பார்க்க வேண்டும். அவற்றைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. பாடச் சொன்னால், வாசிக்கச் சொன்னால் நான்பாட்டுக்கு வாசித்துவிட்டு வந்துடுவேன். டாக்ஸ், ராயல்டி மாதிரியான கணக்குவழக்குகளைப் பற்றியெல்லாம் கேட்டால், எனக்குத் தலைசுற்ற ஆரம்பித்துவிடும். எல்லாவற்றையும் என் மனைவிதான் கவனிக்கிறார்’’ என்றபடி சிரிக்கிறார்.
‘‘இந்த காம்பினேஷனின் பயணத்தைப் பற்றி ஒட்டுமொத்தமாகச் சொல்ல வேண்டும் என்றால், என்ன சொல்லலாம்?’’ என்று கேட்டதும், ‘‘ஏ.ஆர்.ரஹ்மான். இந்த ஒரு வார்த்தை சொன்னால் போதும். அதற்கு மேல் ஒன்றும் வேண்டாம்’’ என்ற மணியைப் பார்த்துச் சிரித்த ரஹ்மான், நான் ஒரு வார்த்தை கூடுதலாகச் சேர்த்துச் சொல்கிறேன், ‘‘இவரின் அன்பு, பெருந்தன்மை’’ என்றபடி புன்னகைக்கிறார்.