
ம.கா.செந்தில்குமார்
“ஆமாம்... விஜய் என் நண்பர். அவரோடு என்னை ஒப்பிடுறதுல ரொம்ப மகிழ்ச்சி. ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படம் பண்ணலாம்னு பேசிட்டிருந்த டைம்ல கிட்டத்தட்ட ரெண்டு பேரும் சந்திச்சுப் பேச வேண்டியது மட்டும்தான் பாக்கி. ‘ரெண்டு வாரத்தில் லுக் டெஸ்ட் இருக்கு. சென்னைக்கு வரவேண்டியது இருக்கும்’னு மணிரத்னம் சார் சொல்லியிருந்தார். பயங்கர ஆர்வத்தோடு இருந்தேன். ஆனா, எதிர்பாராத விதமா அந்தப் படம் ஆரம்பிக்கப்படலை. நானும் விஜய்யும் சேர்ந்து நடிக்கணும்னா, கதை ரொம்ப முக்கியம். அதைவிட முக்கியம் எங்களை ஹேண்டில் பண்ணக்கூடிய இயக்குநர். எனக்குத் தெரிஞ்சு அப்படி ஓர் இயக்குநர் இப்போ ஏ.ஆர்.முருகதாஸ் சார்தான்” - பேட்டி முழுக்க சின்ன புன்னகையுடனே பேசுகிறார் தெலுங்கு சினிமாவின் பிரின்ஸ் மகேஷ்பாபு!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் `ஸ்பைடர்' படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார் மகேஷ்பாபு. ஷூட்டிங் ஸ்பாட்டில் எஸ்.ஜே.சூர்யாவுடன் ஆக்ஷனில் இருந்த மகேஷ்பாபுவைச் சந்தித்தேன்.
‘‘உங்களை `சென்னைப் பையன்'னு சொல்றாங்களே?’’
‘‘கிட்டத்தட்ட நான் சென்னைப் பையன்தான். அண்ணா, அக்காக்கள், நான், தங்கைனு நாங்க பிறந்து வளர்ந்தது முழுக்கவே சென்னையில்தான். அப்ப எங்க வீடு தி.நகர்ல சிவாஜி சார் வீட்டுக்கு எதிரில் இருந்தது. நானும் அண்ணனும் சாந்தோம் செயின்ட் பீட்ஸ் ஸ்கூல்ல படிச்சோம். அப்புறம் லயோலா காலேஜ். இப்படி சென்னையில் 25 வருஷங்கள் இருந்தேன். ஹைதராபாத்துக்கு ஷிஃப்ட் ஆகி 15 வருஷங்கள்தான் ஆகுது.
செயின்ட் பீட்ஸ்ல நான் படிக்கும்போது சூர்யா, கார்த்தி, கார்த்திக்ராஜா, யுவன் இவங்க எல்லாருமே என் ஸ்கூல்மேட்ஸ். அங்கே நான் தெலுங்கு சினிமா ஸ்டார் கிருஷ்ணாவின் மகன்னு பலருக்கும் தெரியாது. நான் சொல்லவும் இல்லை. அப்படிச் சொல்றது எனக்குப் பிடிக்காது. அப்பாவும் அப்படித்தான் என்னை வளர்த்தார்.
எங்க பள்ளி மாணவர்களுக்கு ‘தளபதி’ படத்தை ரிலீஸ் அன்றைக்கே தனியா ஸ்க்ரீன் பண்ணாங்க. ‘யப்பா... என்னா சினிமாட்டோகிராஃபி!’னு பிரமிச்சுப் போயிட்டேன். அதுக்கு சந்தோஷ் சிவன் சார்தான் ஒளிப்பதிவுனு பிறகுதான் தெரிஞ்சது. அன்னிக்கு அப்படி நான் வியந்து பார்த்த சந்தோஷ் சிவன் சார்தான், இன்னிக்கு நான் நடிக்கும் முருகதாஸ் சாரோட படத்துக்கும் ஒளிப்பதிவு. அன்னிக்குப் பார்த்த அதே வியப்பு இன்னிக்கும் இருக்கு. நான் அவரின் ரசிகன்னு அவருக்குத் தெரியும். அந்தத் ‘தளபதி’ ஆச்சர்யத்தை அவர்கிட்ட இன்னும் பகிர்ந்துக்கலை. உங்க மூலமாத்தான் சொல்றேன். கனவு நனவானதுபோல் இருக்கு.”
“மனசுக்கு இவ்வளவு நெருக்கமான சென்னையை மிஸ் பண்றீங்களா?”
“நிறையவே. பழைய நண்பர்களை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா மிஸ்பண்ணிட்டே வந்து, ஒருகட்டத்தில் என் நண்பர்களை சுத்தமாவே மிஸ்பண்ணிட்டேன். அப்படித்தான் சென்னையையும். இப்ப வந்து பார்க்கும்போது நிறைய மாற்றங்கள். ஊரே புதுசா இருக்கு. நாங்க கிரிக்கெட் ஆடின கிரவுண்ட் எல்லாம் காணாமப்போயிடுச்சு. இப்ப வந்துட்டேன்ல... நண்பர்கள் எல்லாரையும் தேடிக் கண்டுபிடிக்கணும்.”

“எதிர்காலத்துல சினிமாவுக்குத்தான் வருவோம்னு அப்பவே முடிவுபண்ணிட்டீங்களா?”
“ஆமாம். எல்லாத்தையும் திட்டமிட்ட அப்பாவுக்குத்தான் நன்றி சொல்லணும்.
குழந்தை நட்சத்திரமா பன்னிரண்டு படங்கள் வரை பண்ணியிருந்தேன். அதில் நிறைய படங்கள் பெரிய ஹிட். எல்லாமே என்னோட கோடை விடுமுறைகள்ல நடிச்சவை. ஒரு படத்தின் ஷூட்டிங் ஜூன் ஜூலையில் மாட்டிக்கிச்சு. அதனால் ஸ்கூல் ஒரு வருஷம் பிரேக். அப்ப, ‘நீ படிப்பை முடிச்சுட்டுத் திரும்ப வந்து நடி. இப்ப வேணாம்’னு அப்பா சொன்னார்.
1996 முதல் 1998 வரை லயோலா காலேஜ்ல டிகிரி. அப்பதான், ‘இன்னும் ரெண்டு வருஷத்துல நீ ஹீரோவா அறிமுகம் ஆகப்போற!’னு அப்பா சொன்னார். அப்ப நான் வெயிட் அதிகமா இருப்பேன். அந்த வெயிட்டைக் குறைக்கிறதுதான் என் முக்கிய இலக்கா இருந்தது.
1999-ல் ஹீரோவா அறிமுகம் ஆனேன். ராகவேந்திரா சார்தான் என் முதல் பட இயக்குநர். அப்ப எனக்கு தமிழ், தெலுங்கு ரெண்டுமே பேசுற அளவுக்கு எழுத, படிக்கத் தெரியாது. ஏன்னா, அப்ப எனக்கு ஸ்கூல்ல இரண்டாவது மொழி இந்தி. அதனால, தெலுங்குல சொல்ற வசனத்தை அப்படியே மனப்பாடம் பண்ணி ரிப்பீட் பண்ணுவேன். அப்படித்தான் எல்லாமே ஆரம்பம்.”
``சென்னையில் 25 வருஷங்கள் இருந்திருக்கீங்க. `முதல்ல ஒரு தமிழ்ப் படம் பண்ணுவோம்'னு ஏன் தோணலை?”
“உண்மையைச் சொல்லணும்னா, அப்ப என் ஃபோகஸ் முழுக்க தெலுங்கு சினிமாவில்தான் இருந்தது. காரணம், அப்பா அங்கேதான் இருந்தார். நான் குழந்தை நட்சத்திரமா நடிச்சதும் அங்கேதான். தெலுங்குப் படங்கள் பண்ணணும்கிறதுல தெளிவா இருந்தேன். ஆனா, ‘ஒக்கடு’க்குப் பிறகு, தமிழ்ல இருந்து நிறைய இயக்குநர்கள் அப்ரோச் பண்ணினாங்க. மணிரத்னம் சாரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்காக அப்பதான் பேசினார். எனக்குத் தனியா ஒரு தமிழ்ப் படத்துல நடிக்கணும்கிற ஐடியாவே இல்லை. ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்குல பண்ற மாதிரி கதை அமையும்போது பண்ணுவோம்னு காத்திருந்தேன். ஏன்னா, நான் அங்கே எல்லோருக்கும் தெரிந்த ஒரு நடிகர். அப்படி இருக்கும்போது தமிழ்ல மட்டும் படம் பண்ணினால், ஃபோகஸ் ஷிஃப்ட் ஆகிடும். அந்தச் சமயத்துலதான் இந்தக் கதையை முருகதாஸ் சார் சொன்னார்.
ரொம்ப சந்தோஷமா இருந்தது. என் முதல் தமிழ்ப் படத்துக்கே முருகதாஸ் சார் கிடைச்சது என் அதிர்ஷ்டம்.”

``உங்களோட இத்தனை வருஷக் காத்திருப்பையே மாற்றிய முருகதாஸ் கதையில் அப்படி என்ன ஸ்பெஷல்?”
“நான் ‘ஸ்ரீமந்துடு’ நடிச்சுட்டிருந்தபோது அங்கே வந்து ஒன்றரை மணி நேரம் இந்தக் கதையை முருகதாஸ் சார் சொன்னார். கேட்ட உடனேயே கமிட் ஆகிட்டேன். அவ்வளவு பிடிச்சிருந்தது. அவர் அன்னிக்கு என்ன சொன்னாரோ, அது அப்படியே ஸ்க்ரீன்ல இருக்கு. மிகக் குறைவான இயக்குநர்களுக்கு மட்டுமே இப்படி ஒரு திறமை இருக்கும். என்னை மாதிரி ஒரு ஸ்டார் தெலுங்குலயும் பண்ணும்போது ரெண்டையும் பேலன்ஸ் பண்ணணும். ஏன்னா, இது பெரிய பட்ஜெட் படம். சில இயக்குநர்களால்தான் இந்த மாதிரி சூழ்நிலையை ஹேண்டில் பண்ண முடியும். முருகதாஸ் சார்தான் அதற்குத் தகுதியானவர். அவர் பண்ணதில் ‘ரமணா’, ‘கத்தி’ மாதிரியான படங்கள் ஒரு வகை. ‘கஜினி’, ‘துப்பாக்கி’ படங்கள் வேறொரு வகை. இதுல எங்க படம் ரெண்டாவது வகை. நீங்க படம் பாருங்க, உங்களுக்குப் பிடிக்கும்.”
“ ‘ஒக்கடு’, ‘போக்கிரி’னு உங்க சில படங்கள் தமிழ்ல ரீமேக் ஆகியிருக்கு. அதேபோல தமிழ்ப் படங்களை தெலுங்குல ரீமேக் பண்ணி நடிக்கலாம்னு நினைச்சது உண்டா?”
“ஆரம்பத்துல இருந்தே எனக்கு ரீமேக் மேல நம்பிக்கை இல்லை. ரீமேக் பண்ணவே கூடாதுங்கிறதுல உறுதியா இருக்கேன். ஒரு படம் பார்த்துட்டு அதையே பண்ணணும்னா, அந்த ஆர்வம் எனக்கு வராது. தவிர, ஷூட்டிங் போகும்போது புதுசு புதுசாப் பண்ணணும், கத்துக்கணும்கிறது என் எண்ணம். அதுக்காக ரீமேக்கை நான் குறைச்சு மதிப்பிடலை. பெர்சனலா அது எனக்குப் பிடிக்காது. அவ்வளவுதான். ஆனா, ரெண்டு மூணு முறை ரீமேக்குக்கு அப்ரோச் பண்ணியிருக்காங்க.
‘கத்தி’ எனக்குத்தான் வந்தது. ‘இது ஒரு டைரக்டர் படம். முருகதாஸ் சார் பண்றதா இருந்தால் நான் பண்றேன்’னு சொல்லியிருந்தேன். ஆனா, அப்ப முருகதாஸ் சார் இந்தியில் ‘ஹாலிடே’ படத்துல இருந்ததால், அதை என்னால் பண்ண முடியலை.”
“ ‘பாகுபலி’க்குப் பிறகு, தெலுங்கில் என்ன மாதிரியான மாற்றங்கள் வந்திருக்கு?”
“பெரிய படங்கள் சர்வசாதாரணமா 100 கோடி ரூபாய் கலெக்ஷன் ஆகுதுன்னா, அதுக்குக் காரணம் `பாகுபலி'தான். அந்தப் படத்துக்குப் பிறகு வந்த ‘ஸ்ரீமந்துடு’க்கு எக்ஸ்ட்ரா மார்க்கெட் கிடைச்சது. புது ஆடியன்ஸ் தியேட்டருக்கு வந்தாங்க. தெலுங்கு சினிமா இண்டஸ்ட்ரிக்கு `பாகுபலி' ஒரு ஆச்சர்ய அனுபவம். அதேபோல இப்ப புதுசா, ஃப்ரெஷ் ஐடியாஸ் எதிர்பார்க்கிறாங்க. வழக்கமான படங்களை ரசிகர்கள் ரிஜெக்ட் பண்ணிடுறாங்க. இதை ஒரு நல்ல தொடக்கமா நினைக்கிறேன்.”
“இங்கே விஜய், அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக மோதிக்கொள்கிறார்கள். அங்கே எப்படி?”
“அங்கே இதைவிட அதிகம். ஆனா, ஹீரோக்கள் நாங்க நண்பர்கள்தான். நானும் ராம்சரணும் நெருக்கமான நண்பர்கள். அதேபோல சிரஞ்சீவி சாருடன் நான் ரொம்ப க்ளோஸ். ரிலீஸ் டைம்ல ரசிகர்களுக்கு இதெல்லாம் கண்ணுக்குத் தெரியாது. ‘யார் படம் ரெக்கார்டு பண்ணுது. யாருக்கு எவ்வளவு கலெக்ஷன் ஆகுது, முதல் நாள், முதல் வார ரெக்கார்டு யாருக்கு அதிகம்?’னு போட்டுப் பின்னிடுவாங்க.
படம் ஓடுச்சுன்னா ஓகே. ஓடலைன்னா இன்னும் அதிகமா நெகட்டிவ் கமென்ட்ஸ், ட்ரோலிங் வரும். அதை நாம ஒண்ணும் பண்ண முடியாது. முன்னாடியெல்லாம் ஒரு படம் நல்லா இல்லைன்னா, அந்தச் செய்தி போய்ச் சேர்றதுக்கே ஒரு வாரமாகும். ஆனா, அந்த ஒரு வாரத்துக்குள்ள கலெக்ஷன் வந்துடும். இப்போ முதல் காட்சியிலேயே படம் நல்லாயிருக்கா... இல்லையானு தெரிஞ்சுடுது. அதை எதிர்கொண்டுதான் ஆகணும்.”
“தமிழ்நாட்டை, கடந்த 50 ஆண்டுகளாக சினிமாவிலிருந்து வந்தவர்கள்தான் ஆட்சி செய்துகொண்டிருந்தார்கள். ஆந்திராவும் இதற்கு விதிவிலக்கு அல்ல. உங்களுக்கும் அரசியல் அழைப்புகள் வந்திருக்குமே?”
“அரசியல், நான் புரிஞ்சுக்க முடியாத, எனக்குத் தெரியாத விஷயம். தெரியாத விஷயத்துக்குப் போகக் கூடாது இல்லையா? ஆரம்பத்துல இருந்தே எனக்கு சினிமா... சினிமா... சினிமா மட்டும்தான். ஆனா, தேர்தல் சமயத்துல அரசியல் அழைப்புகள் வரும். அப்ப ரெண்டு மாசம் எங்கேயாவது காணாமப்போயிடணும். அப்புறம் விட்டுடுவாங்க.”