
8 தோட்டாக்கள் - சினிமா விமர்சனம்
கொள்ளையர் கைகளில் கிடைக்கும் போலீஸ் துப்பாக்கியின் பயணம் `8 தோட்டாக்கள்'.
ஸ்டேஷனில் ஒரே ஒரு நல்ல போலீஸ் சத்யா. இவரது துப்பாக்கி, பிக்பாக்கெட் சிறுவனால் திருடப்படுகிறது. அதை, வங்கியைக் கொள்ளையடிக்கத் திட்டமிடும் கும்பலிடம் விற்றுவிடுகிறான் திருடன். துப்பாக்கி இல்லையேல் வேலைக்கே பிரச்னை என்பதால், அதைத் தேடி அலைகிறார் சத்யா. கொள்ளைக் கும்பல் அந்தத் துப்பாக்கியில் இருக்கும் எட்டு தோட்டாக்களோடு வேட்டைக்குக் கிளம்ப, அவை யாரைக் கொல்கின்றன என்பதே கதை.

இது, பிழைக்கத் தெரியாத நல்லவர்களின் படம். படம் நெடுக அப்படிப்பட்ட மனிதர்களே எங்கும் விரவிக்கிடக்கிறார்கள். படத்தின் நாயகன் தொடங்கி எம்.எஸ்.பாஸ்கர், அவரின் கூட்டாளிகள், நாயகி நபர்ணா என எல்லோருமே வாழ்க்கையில் தோல்விகளையே சந்திக்கிறார்கள். அதிலிருந்து விடுபட, அவர்கள் யாரோ ஒருவரைப் பலி கொடுக்கிறார்கள். ஆனால், நாயகன் மட்டும் அதைச் செய்யாமல் இருக்கிறான். படத்தின் இறுதி ஷாட் சொல்லும் அந்த நறுக் கருத்தின் மூலம் தனித்துத் தெரிகிறார் அறிமுக இயக்குநர் ஸ்ரீகணேஷ்.
அத்தனை கனமான ஒரு பாத்திரத்தை அறிமுக நாயகன் வெற்றி, கஷ்டப்பட்டுத்தான் சுமக்கிறார். கதையிலும் நடிப்பிலும் வெற்றியையும் சேர்த்து தன் முதுகில் சுமந்திருக்கிறார் நாசர்.
படத்தின் அசல் நாயகன் எம்.எஸ்.பாஸ்கர்தான். ஐம்பது ஆண்டுகால வாழ்க்கையை ஒரே மாதத்தில் வாழ்ந்துவிட வேண்டும் என்ற வெறிதான் `மூர்த்தி' கதாபாத்திரத்தை இயக்குகிறது. அதை ஒவ்வொரு ஃப்ரேமிலும் கொண்டுவந்திருக்கும் அவருடைய திறமைக்கும் உழைப்புக்கும் மனம்திறந்த பாராட்டுகள். அவருடனே இருக்கும் இரண்டு கூட்டாளிகள் மணிகண்டன் மற்றும் லல்லு ஆகியோர் கவனிக்கப்பட வேண்டியவர்கள்.
இத்தனை அடர்த்தியான கதைக்கு ஏன் இவ்வளவு வேகம் குறைந்த திரைக்கதை? தொலைந்த துப்பாக்கி

கிடைக்கவில்லையெனில், நாயகனின் வாழ்க்கையே அவ்வளவுதான் என்பது பாயின்ட். ஆனால், பிற்பகுதியில் வெறும் இடைநீக்கத்தோடு அந்தப் பிரச்னை முடிந்துவிடுகிறதே! கைக்குக் கிடைத்த சிறுவனைப் பிடிக்க முடியாத, அத்தனை துப்புகள் இருந்தும் கேன்டீன் பில்லைவைத்து குற்றவாளியைப் பிடிக்கும் போலீஸான நாயகனின் பாத்திரப் படைப்பு கொஞ்சம்கூட மனசுக்கு நெருக்கமாக இல்லை.
பின்னணி இசையில் தொட்டதெல்லாம் சிக்ஸராக இருந்தாலும், பாடல்களில் போராடியிருக்கிறார் இசையமைப்பாளர் கே.எஸ்.சுந்தரமூர்த்தி. `படத்துக்கு யார் கேமரா?' எனக் கேட்கத் தூண்டுகிறது தினேஷ்
கே.பாபுவின் ஒளிப்பதிவு. அவரது ஒளிப்பதிவில் அவ்வளவு நுணுக்கம்.
க்ளைமாக்ஸ் கச்சிதம் படம் முழுக்க இருந்திருந்தால், எட்டு தோட்டாக்களும் வெடிகுண்டாக வெடித்திருக்கும்.
- விகடன் விமர்சனக் குழு