
காற்று வெளியிடை.. - சினிமா விமர்சனம்
தனது முந்தைய காதல் படங்களையே மீண்டும் அரைத்திருக்கிறார் மணிரத்னம்.
காஷ்மீர் பார்டரில் பறக்கும் போர் விமானி கார்த்தி. ஸ்ரீநகர் அரசு மருத்துவமனைக்கு டாக்டர் வேலைக்கு வருகிறார் அதிதி ராவ். முதல் நாளே விபத்தில் அடிபடும் கார்த்திக்கு வைத்தியம் பார்க்கிறார் அதிதி. அன்று முதல் இருவரின் பாதைகளும் அடிக்கடி குறுக்கிட்டு, பின்னர் ஒரே பாதையாகிறது. முரட்டுப் போர்வீரனும் கருணை மருத்துவரும் ஒரே பாதையில் சென்றால்? அடிக்கடி ஈகோ யுத்தம் வெடிக்கிறது. `சரிவராது' என அதிதி ஒதுங்கும் வேளையில், கார்கில் போருக்காகப் பறக்கிறார் கார்த்தி. அங்கே பாகிஸ்தான் ராணுவத்திடம் சிறைபடுகிறார். கார்த்தி தப்பித்தாரா, மீண்டும் அதிதியைச் சந்தித்தாரா... என்பதே க்ளைமாக்ஸ்.

கோபம் வந்தால் கத்துவதும், அதன் எதிரொலி கேட்பதற்குள் `சாரி... சாரி...' சொல்லி பம்முவதும் என ஆக்ஷன் ரொமாண்டிக் பாய் கார்த்தி. ஒரு துறுதுறு போர்விமானியாக மனதில் பதிகிறார். நிதானமான, சுயமரியாதை கோரும் பெண்ணாக அதிதி. அவர் வரும் காட்சிகள் அழகு. மணிரத்னம் படம் என்பதால் ஆர்ஜே பாலாஜியும் குறைவாகப் பேசியிருக்கிறார். படத்தில் வில்லன்களே கிடையாது. கார்த்தியின் முரட்டுக் குணம் மட்டுமே வில்லன்.
கொரட்டூரையே அழகாகக் காட்டுவார் மணிரத்னம். காஷ்மீர் என்றால்? ஒவ்வொரு ஃப்ரேமையும் தனித்தனியே டவுண்லோடுசெய்து மொபைலில் வைத்துக்கொள்ளும் அளவுக்கு அவ்வளவு அழகு.
கொண்டாடித் தீர்த்த மணிரத்னத்தின் திரைமொழிதான் என்றாலும், 30 ஆண்டுகளாக அப்படியேவா? கிளம்ப யத்தனிக்கும் பேருந்துடன் ஓடியபடியே பேசும் ஹீரோ, எதிர்புறமாகப் படுத்திருக்கும் நாயகன், நாயகி… கண்ணாடி வழியே கண்களைப் பார்த்துப் பேசும் கெமிஸ்ட்ரி என அவரின் முந்தைய படங்களின் ரெஃப்ரன்ஸ்களில்தான் படம் நீள்கிறது.

கடந்த 25 ஆண்டுகளில் மணிரத்னம் படங்களில் மிஸ் ஆகாத மேஜிக் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைதான். பாடல்களில் இமயம் தொடுபவர், பின்னணியில் விண்ணைத் தாண்டுகிறார். ஃபைட்டர் ஃப்ளைட்டில் கார்த்தியும் அதிதியும் பறக்கும் காட்சியில் வரும் அதகளப் பின்னணி இசை, நம்மையும் பறக்கத் தூண்டுகிறது.
படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமையும், ஃப்ரேம் போட்டு மாட்டிவைக்கலாம், அப்படி இருக்கிறது ரவிவர்மனின் ஒளிப்பதிவு. காஷ்மீரை கேமராவுக்குள் களவாண்டு வந்திருக்கிறார்.
மணிரத்னம் தன் திரைமொழியை அப்டேட் செய்துகொள்ள வேண்டிய தருணம் இது!
- விகடன் விமர்சனக் குழு