
ம.கா.செந்தில்குமார்
``50 நாள், 100 நாள்னு படங்கள் ஓடின காலமெல்லாம் போய்விட்டது. இப்போது முதல் மூணு நாள்தான். அந்த மூணு நாள்களில் தியேட்டருக்கு வராதவர்கள் நம் படத்தை வேறு எங்கோ பார்க்கிறார்கள் என அர்த்தம். அப்படி டவுன்லோடிங், செல்போன், சிடி என திரையரங்குகளைத் தாண்டி வேறு யார் யாருக்கோ போகும் அந்த வருமானமும் நமக்கு வரக்கூடிய வழிகளைப் பற்றி யோசிக்கணும்’’ - இன்றைய சினிமா எதிர்கொண்டுள்ள சவால்களுக்கு எளிமையான வார்த்தைகளில் தீர்வு சொல்கிறார் இயக்குநர் ராதாமோகன். ‘மொழி’, ‘அபியும் நானும்’ என மயிலிறகு வருடலைப்போல் மென்மையான கதை சொன்னவர், இந்த முறை ‘பிருந்தாவன’த்துடன் வருகிறார்.

‘‘ ‘பிருந்தாவனம்’, மொழி’யின் இன்னொரு சாயல். ஆம், ‘மொழி’யில் ஹீரோயின் காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இதில் ஹீரோ அதே மாதிரியான ஒரு மாற்றுத்திறனாளி. ஆனால், கேரக்டர் மட்டும்தான் அப்படி, கதை வேறு. ‘மொழி’யில் அவள் படித்த பெண். ‘ஆமாம், எனக்கு காது கேட்காது. அதில் உனக்கு என்ன பிரச்னை?’ என்று கம்பீரமாகக் கேட்கக்கூடியவள். ஆனால், இவன் முடிதிருத்தும் கலைஞன். சின்ன வயதிலிருந்து தனியாகக் கஷ்டப்பட்டு வளர்ந்தவன். எதையும் ஒரு தயக்கத்துடனே அணுகும் காம்ப்ளெக்ஸ் உள்ளவன். அப்படிப்பட்டவன் சின்ன வயதிலிருந்தே நகைச்சுவை நடிகர் ஒருவரின் தீவிர ரசிகன். அந்த நடிகரை திடீரெனச் சந்திக்கிறான். ‘எனக்கு உலகம் முழுக்க ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்காங்க. ஆனா, உன்னை மாதிரி ஒருத்தனைப் பார்த்ததே இல்லைடா!’ என்று சொல்லும் அளவுக்கு அவருக்கும் இவனைப் பிடித்துவிடும். அப்படிப்பட்ட நடிகர், தன் சாமானிய ரசிகனுக்காக என்ன செய்தார், அவன் வாழ்க்கையை எப்படி மாற்றிவிட்டுப் போகிறார் என்பதே ‘பிருந்தாவனம்’.''
‘‘காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி கேரக்டருக்கு அருள்நிதி எப்படித் தயாரானார்?’’
‘‘இது, ஒரு நடிகனாக அருளை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் சவால் கேரக்டர். சிலர் உழைக்கிறார்கள் என்று தெரியாத அளவுக்கு எல்லா வேலைகளையும் செய்துவிட்டு, அமைதியாக அமர்ந்திருப்பார்கள். அருள் அந்த மாதிரியான சின்சியர் மனிதன். வித்தியாசமான இந்த வாய்ப்பை முழுமையா பயன்படுத்திகொண்டார். ‘ஒரு மாசத்துக்கு முன்பே பயிற்சி ஆரம்பிக்கணும். அடிப்படையான விஷயங்களைக் கத்துக்கணும்’ என்று முன்னதாகவே சீன் பேப்பர் கொடுத்து விட்டேன். ‘மொழி’யில் ஜோதிகாவுக்கு செய்கைமொழியைக் கற்றுத்தந்த விஜயா பாஸ்கர்தான் இதில் அருளுக்கும் டீச்சர். தினமும் ஒரு மணி நேரம் அருள் வீட்லேயே பயிற்சி. வெறுமனே வசனங்களை எப்படிச் செய்கையில் பேசுவது என்பது மட்டும் அல்லாமல், ஏ பி சி டி-யை எப்படிச் சொல்வது என்ற அடிப்படையிலிருந்து பயிற்சி பெற்றார். அருள்நிதியின் அர்ப்பணிப்பும் உழைப்பும் மிகப்பெரியது.’’
‘‘பழைய நடிகர் ரவிச்சந்திரன் பேத்தி தான்யா ஹீரோயின். அவர் இந்தப் படத்துக்குள் வந்தது எப்படி?’’
‘‘என் படங்களில் ஹீரோயினுக்கு வந்து போகும் கேரக்டராக இல்லாமல், ஹீரோவுக்குச் சமமான அறிவார்த்தமான கதாபாத்திரமாக இருக்கும். இந்தப் படத்திலும் அது தொடர்கிறது. அருள்நிதி போல் உயரமா, எக்ஸ்பிரஸிவாக இருக்கணும் என்பதை மனதில்வைத்தே தேடல்கள் தொடங்கின. ‘மிஷ்கின் தேர்வு பண்ணிவெச்சிருக்கார். அவர் இன்னும் ஷூட்டிங் போகலை. நீங்க கேட்டீங்கன்னா அவர் மறுக்க மாட்டார்’ என்று இவரது போட்டோவை என்னிடம் காட்டினார்கள். தேர்வுசெய்தது, ‘அபிராமி’ என்ற அவங்க பெயரை ‘தான்யா’ என்று மாற்றியது எல்லாமே மிஷ்கின்தான். விசாரிக்கையில், `நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி' என்றார்கள். ‘இந்தக் குடும்பத்தில் பிறந்துட்டேன். அதனால் நடிக்கணும்’ என்றில்லாமல், உண்மையிலேயே நடிப்பின் மீது அவருக்கு ஆர்வம் இருக்கிறது.’’

‘‘உங்களுடைய நண்பர், ஆஸ்தான நடிகர் எம்.எஸ்.பாஸ்கரும் இதில் இருக்கிறாரா?’’
‘‘அவர் இல்லாமலா... நிச்சயம் இருக்கிறார். ஒரு கதைக்கு ஹீரோ, ஹீரோயின் மட்டுமில்லாமல் துணை நடிகர்களும் மிக முக்கியம். அப்படியான சிறந்த துணை நடிகர்களில் ஒருவர் எம்.எஸ்.பாஸ்கர். மிகச்சிறப்பாகப் பாடக்கூடியவர், சிறந்த டப்பிங் கலைஞர். எஸ்.வி.ரங்காராவ் மாதிரி எல்லா கேரக்டர்களிலும் நடிக்கும் திறமைபெற்றவர். அவரைப் பலரும் வெறும் காமெடிக்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்பது எனக்கு மிகப்பெரிய வருத்தம். ‘அழகிய தீயே’ முதல் ‘பயணம்’ வரை என் பெரும்பாலான படங்களில் பாஸ்கருக்கு முக்கியப் பங்கு உண்டு. ஒவ்வொரு முறையும் என்னை ஆச்சர்யப்படுத்துவார். இதில் அவருக்கு, சின்ன வயதிலேயே குடும்பத்தை இழந்து அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், மற்றவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து வாழும் `லூயிஸ்' என்கிற அழகான கேரக்டர். வழக்கம்போல் பாஸ்கர் இதிலும் உங்களை உருகவைப்பார்.’’
‘‘உங்களுக்கும் பிரகாஷ்ராஜுக்குமான நட்பு ரொம்பவே ஸ்பெஷல். என்ன சொல்கிறார் பிரகாஷ்?’’
‘‘ ‘அழகிய தீயே’க்கு முன்பே இருவரும் ‘ஸ்மைல் ப்ளீஸ்’ என்ற படம் பண்ணினோம். அதில் அவர் ஹீரோ, நான் இயக்குநர். அப்படித்தான் அவர் எனக்கு அறிமுகம். ஆனால், அந்தப் படம் வெளிவரவே இல்லை. அதில் தொடங்கி நீண்ட பயணம். இன்று நான் அவருடன் பயணத்தில் இருக்கிறேன் என்றால், அதற்கு அவரிடமிருந்து அன்று வந்த அந்த அழைப்புதான் காரணம். அவர் தொடங்கிய தயாரிப்பு கம்பெனிக்கு ‘அழகிய தீயே’ இயக்கினேன். அவர் மிகச்சிறப்பான தயாரிப்பாளர். இதுதான் கதை எனச் சொல்லி ஓகே வாங்கிவிட்டால், உச்சபட்ச சுதந்திரம் கொடுப்பார். அவர் என் மீது வைத்த அந்த நம்பிக்கை, நான் அவர் மீது வைத்த அன்பு எங்களை அப்படியே அழைத்துச் செல்கின்றன. ‘நீ என்ன வேணும்னாலும் பண்ணலாம்’ என சினிமா ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒருவருக்கு விசேஷ லைசன்ஸைக் கொடுத்திருக்கும். அந்த லைசன்ஸைப் பெற்றவர் பிரகாஷ். ‘த்ரிஷாவைச் செல்லம் என முந்தின படத்தில் துரத்தித் துரத்திக் காதலிப்பவர், அடுத்த படத்திலேயே அவருக்கு அப்பாவாக நடிப்பார். ப்ருத்விராஜுக்கு முந்தின படத்தில் அப்பாவாக வருபவர், அடுத்த படத்தில் அவருக்கு நண்பன். கொடூர வில்லனாக வருபவர், அடுத்து அன்பான அப்பா, தாத்தா என வெரைட்டியாக வியக்கவைப்பார். இந்த லைசன்ஸ் ஒரு ஸ்டேஜில் ரகுவரனுக்கு இருந்தது. ஆனால், அந்த லைசன்ஸை முழுமையாக வாங்கினது எனக்குத் தெரிந்து என் நண்பன் பிரகாஷ்ராஜ்தான்.’’