Published:Updated:

“தேர்வுக் குழு மீது விமர்சனம் இல்லை!”

“தேர்வுக் குழு மீது விமர்சனம் இல்லை!”
பிரீமியம் ஸ்டோரி
News
“தேர்வுக் குழு மீது விமர்சனம் இல்லை!”

ம.கா.செந்தில்குமார், படம்: அ.சரண் குமார்

‘`கவிஞன் என ஒப்புக்கொள்ளப்பட்ட நான், திரைப்படப் பாடல்கள் வழியாகத்தான் கவிதையை நோக்கி ஆற்றுப்படுத்தப்பட்டேன் என்பதை, வெட்கமில்லாமல் பெருமையோடு, கர்வத்தோடு சொல்லிக்கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறேன்’’ - இது கவிப்பேரரசு வைரமுத்து.

‘‘இந்த அங்கீகாரத்துக்கு சந்தோஷம். ஆனால், எத்தனையோ நல்ல படைப்புகளுக்கு விருது கிடைக்காமல் போயிருக்கிறது. அதனால் விருது மட்டுமே ஒரு படைப்புக்கு அளவீடு கிடையாது’’- இது இயக்குநர் ராஜுமுருகன்.

‘‘சினிமாவில் தவறுகள் செஞ்சுக் கத்துக்கணும்னு நினைக்கிறாங்க. ‘நான் செஞ்ச தவறுகள்ல இருந்து கத்துக்கிட்ட பாடங்களைச் சொல்றேன். இதைப் படிச்சிங்கன்னா தப்பு பண்ணாமலேயே கத்துக்கலாம்’னு என் கட்டுரைகள் மூலம் சொல்கிறேன்’’ - இது சினிமா ஆய்வு எழுத்தாளர் தனஞ்செயன்.

‘‘ `ஜோக்கர்’ மாதிரி மூணு படங்கள் ஸ்க்ரிப்ட் லெவல்ல இருக்கு. அடுத்தடுத்து வேலைகளை ஆரம்பிக்கணும்’’ - இது தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு.

‘‘என்னைப் பெத்த தாய்க்கும், வளர்க்கிற மனைவிக்கும் இந்த விருதைச் சமர்ப்பிக்கிறேன்’’ - இது பாடகர் சுந்தரையர்.

“தேர்வுக் குழு மீது விமர்சனம் இல்லை!”

இவர்கள், 64-வது தேசியத் திரைப்பட விருதுப் பட்டியலில் இடம்பிடித்த நமது தமிழ்த் திரைப்பட ஆளுமைகள். ஆனந்த விகடனுக்காக அடையாறு தியோசோபி்கல் சொசைட்டியில் சந்தித்தோம்.

வைரமுத்துவுக்கு இது ஏழாவது தேசிய விருது. இவர் பாடல் எழுத வந்தது 1980-ம் ஆண்டு. முதல் விருது, 1986-ல் வந்த ‘முதல் மரியாதை’க்காக. தற்போது ‘தர்மதுரை’ படத்தில் தற்கொலைக்கு எதிராக இவர் எழுதிய ‘எந்தப் பக்கம் காணும்போதும் வானம் ஒன்று / நீ எந்தப் பக்கம் ஏகும்போதும் ஊர்கள் உண்டு’ என்ற பாடலுக்காக ஏழாவது தேசிய விருது.

‘‘முப்பத்தேழு வருடங்கள், 7,500 பாடல்கள், சில தலைமுறைகள், ஏழு தேசிய விருதுகள், தமிழ் இன்னமும் வைரமுத்துவின் வரிகளில் இளமையாக இருக்கிறதே எப்படி?’’ - சிரித்தபடியே கேள்வியை எதிர்கொள்கிறார் வைரமுத்து.

‘‘மொழி இளமையாக இருக்கிறது, வாழ்க்கை இளமையாக இருக்கிறது, மனசு இளமையாக இருக்கிறது. இவற்றோடு தொடர்புடைய கலையும் இளமையாக இருக்கிறது. தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் பெருமைசேர்த்த கலைஞர்கள் என்னருகே நிற்பதும், அவர்கள் அருகே நான் நிற்கிறேன் என்பதும் எனக்குப் பெருமையாக இருக்கிறது.’’

ராஜுமுருகனுக்கான லீடை வைரமுத்துவே எடுத்துத் தருகிறார்.

‘‘எழுத்தாளர்கள் சினிமாவில் வெற்றிபெருவது வெகுக்குறைவு. ஆனால், எங்கள் எழுத்தாளர் ஜாதியைச் சேர்ந்த ராஜுமுருகன் இப்போது சினிமாவில் வெற்றிபெற்றிருக்கிறார்’’ என்றவர், ‘ராஜுமுருகன், இந்தப் பாடகரை எங்கிருந்துய்யா பிடித்தீர்?’’ என்று சுந்தரையரை அருகே அழைக்கிறார்.
 
‘‘தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த வீதி நாடகக் கலைஞர். பெயர்... சுந்தரையர். நாடகக் கலைஞர் முருகபூபதியின் நாடகக் குழுவில் பாடகர்’ என ராஜுமுருகன் அவரை அறிமுகப்படுத்துகிறார். ‘மாடு தீண்டலாம் உங்களை ஆடு தீண்டலாம் நாங்க மனுஷன் மட்டும் தீண்டக்கூடாதா? / நாடு என்பதா... இதை நரகம் என்பதா... இங்கே சேரிகள் எல்லாம் சிறைகளானது...’ - பெருங்குரலெடுத்து சாதி மறுப்புப் பாடல் ஒன்றைப் பாடுகிறார் சுந்தரையர்.


‘‘சுந்தரையரிடம் இப்படி ஒரு பாடலா?’’ என ஆச்சர்யமான வைரமுத்துவிடம், ‘‘பேர்தான் அப்படி. ஆனா, நான் அய்யர் இல்லைங்கய்யா’’ என்ற சுந்தரையர் தன் பெயர்க் காரணம் சொல்கிறார். ‘‘எங்க குலதெய்வம் அய்யனாரப்பன். அதனால எனக்கு ‘அய்யர்’னு பேர் வைக்கணும்னு எங்க ஆயா சொன்னுச்சாம். ஆனா, எங்க அம்மாவுக்கு அந்தப் பேர் பிடிக்கலை. ‘சுந்தர்’னு வைக்கச்சொல்லி விடாப்பிடியா நின்னுச்சாம். பிரச்னை வேணாம்னு ரெண்டையும் சேர்த்து ‘சுந்தரையர்’னு எங்கய்யா வெச்சுட்டார்’’ என வெள்ளந்தியாகச் சிரிக்கும் சுந்தரையரைத் தட்டிக்கொடுக்கிறார் தனஞ்செயன். இவர் தமிழ் சினிமா பற்றி ஆய்வுசெய்து எழுதியதற்காக சிறந்த தமிழ்த் திரைப்பட எழுத்தாளர் விருதைப் பெறுகிறார்.

‘‘சினிமாவில் கத்துக்கிட்டதை மற்றவங்களோட பகிர்ந்துக்கணும்னு எனக்கு ஆசை. 1991-ல் இருந்து எழுதிட்டு வர்றேன். சினிமாவில் உள்ள பிரச்னை, புதிய தயாரிப்பாளர்கள் முன்புள்ள சவால்கள் தொடங்கி, வரும் ஜூலை மாதத்தில் நடைமுறைக்கு வரும் ஜி.எஸ்.டி., சினிமாவில் என்னமாதிரியான தாக்கத்தை உண்டு பண்ணும் என்பதுவரை... இப்படித் தொடர்ந்து தமிழிலும் ஆங்கிலத்திலும் கட்டுரைகள் எழுதிட்டுவர்றேன். `வியாபார ரகசியங்களை ஏன் வெளியில் சொல்றீங்க?’னு ஆரம்பத்தில் சிலருக்குக் கோபம். சினிமாவில் எந்த ரகசியமும் இல்லை. நான் பல்வேறு இடங்கள்ல படிச்சு, அனுபவிச்சுத் தெரிஞ்சுக்கிட்டதை மத்தவங்களும் தெரிஞ்சுக்கணும்னு நினைக்கிறேன்’’ என்கிற தனஞ்செயன் தொடர்கிறார்...
 
‘‘2016-ம் ஆண்டில் 26 கட்டுரைகள் எழுதியிருந்தேன். அதில் 10 கட்டுரைகளை மட்டும் தேர்ந்தெடுத்து, தேசிய விருது தேர்வுக் குழுவுக்கு அனுப்பியிருந்தேன். இதன் பயனை உணர்ந்து விருதுக்கு என்னைத் தேர்ந்தெடுத்துள்ளனர்’’ என்கிறார் தனஞ்செயன்.

‘‘ஒளிப்பதிவாளர் மீது ஒளி பாய்ச்சுங்கப்பா’’ எனச் சற்றே தள்ளிநின்ற திரு என்கிற திருநாவுக்கரசுவை அருகே அழைக்கிறார் வைரமுத்து. திரு, ‘24’ படத்துக்காகச் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது பெறுகிறார். பி.சி.ஸ்ரீராமிடம் இணை ஒளிப்பதிவாளராக இருந்தவர். கமல்ஹாசனின் `ஹேராம்', இந்தியில் ‘கிரிஷ்-3’ உள்பட பல முக்கியமான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளவர்.

‘‘ஒரு கதாபாத்திரத்தை வைத்துதான் ஒரு கதைக்களம் உருவாகுது. அந்த கேரக்டர் எங்கே இருக்கு, எப்படி வாழுது, எங்கெல்லாம் போகுதுனு மனதில்வைத்து அந்தச் சூழலை கிரியேட் பண்ணிக் கொடுக்கிறவங்கதான் புரொடக் ஷன் டிசைனர்ஸ். நாம வழக்கமா பார்க்கிற விஷயங்களைவிட ஒருபடி மேலே போய் ஃபேன்டசி உலகத்துல ஒரு சயின்டிஸ்ட் எப்படி கிரியேட் பண்ணுவான் என்பது சவால். நம் வழக்கமான வாழ்க்கையில் பார்க்காத விஷயங்கள் அங்கே இருக்கணும். நிறைய ரிசர்ச் பண்ணினோம். அவங்களோட ஒத்துழைப்பினால்தான் இதைச் சாதிக்க முடிஞ்சது’’ என்கிற திரு, ராஜுமுருகனிடம்,
 ‘‘ ‘ஜோக்கர்’ அனுபவம் சொல்லுங்கள்’’ என்கிறார்.

“தேர்வுக் குழு மீது விமர்சனம் இல்லை!”

‘‘ ‘ஜோக்கர்’ என் ஏரியா. நான் பார்த்த விஷயங்கள், சமகால சமூகத்தில் நடக்கும் விஷயம், என்னைப் பாதித்த மனிதர்களின் கலவைதான் இந்தப் படம். தவிர, இந்த ஸ்க்ரிப்ட் வழக்கமான ஃபார்மேட்டில் இல்லாமல், ஒரு கொலாஜா இருக்கும். இதுக்குச் சரியான தயாரிப்பாளர்கள் கிடைச்சு, படமா எடுத்து, மக்கள் பார்வைக்கு தியேட்டருக்கு வந்துட்டாலே வெற்றிதான்னு நினைச்சேன். ஸ்க்ரிப்ட் அளவுலேயும் படம் தியேட்டருக்கு வர்ற வரையுமே தயாரிப்பாளர் ட்ரீம் வாரியர்ஸ் பிரகாஷ் சார், பிரபு சார் இருவருக்கும் இந்தப் படத்தின் மீது இருந்த அக்கறை, பெர்சனலா அவங்க தந்த சுதந்திரம் முக்கியமானவை.

முதல் வெர்ஷன் ஸ்க்ரிப்ட் எழுதித்தரும்போது அதில் இவ்வளவு விஷயங்கள் இல்லை. கன்டென்ட் போய் சேர்ந்துடணும்கிற தயக்கத்தில் கொஞ்சம் கம்மியாத்தான் எழுதிருந்தேன். ‘இல்ல... உங்களோட முழு வீச்சில் இருந்தா கதை நல்லா இருக்கும்’னு அவங்கதான் உற்சாகப்படுத்தி எழுதச் சொன்னாங்க. கருத்தைச் சிதைக்காம, அதை அக்கறையோடு கொண்டுபோய் சேர்த்ததுக்கு, அதுக்கான ரசனையும் அக்கறையும் இருக்கிற இந்தத் தயாரிப்பாளர்கள் முக்கியமான காரணம்’’ என்கிற ராஜுமுருகனை ‘ஜோக்கர்’ படத் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தொடர்கிறார்.

‘‘இந்த மல்ட்டி ஃப்ளெக்ஸ் தியேட்டர் சூழல் ‘ஜோக்கர்’ மாதிரியான படங்களைக் கொண்டுபோக வழி அமைச்சுத் தந்திருக்கு. இந்தப் பட பப்ளிசிட்டிக்குப் பண்ணினது வீண் செலவுனு இப்ப நினைக்கிறேன். காரணம், நாங்க பண்ணினதைவிட இந்தப் படமே சோஷியல் மீடியாவில் பண்ணிக் கிட்ட பப்ளிசிட்டிதான் அதிகம்.  `ஜோக்கர்' படத்துக்கு அப்புறம் இன்னும் நிறைய படங்கள் பண்ணணும்னு ஐடியா இருக்கு. கருத்தைத் திணிக்கணும்கிற எண்ணத்தில் இந்த மாதிரி படங்கள் எடுப்பதில்லை. இருக்கிற பிரச்னைகளை எந்தக் கோணத்தில் எடுத்தால் ரீச் ஆகும்னு யோசிச்சு எடுக்குறோம். ரிசல்ட்டும் சந்தோஷம் தருது’’ என்கிறார் பிரபு.
‘‘ஏழு விருதுகள் பெற்றிருக்கிறீர்கள். இருந்தாலும், தேர்வுக் குழு மீது உங்களுக்கு ஏதாவது விமர்சனங்கள் உண்டா?’’ என்றோம் வைரமுத்துவிடம்.

‘‘இல்லை... எப்போதுமே இல்லை. தேர்வுக் குழுக்காரர்களுக்கு உள்ள சிக்கல்களை அறிவேன். தேர்வுக் குழு... பரிந்துரைக்கோ, அரசியல் தலையீடுகளுக்கோ ஆட்படும் என நான் நம்பவில்லை. அந்தக் குழுவினர்களுக்கு எனச் சில சொந்த முடிவுகள், சொந்த ரசனைகள் இருக்கலாம். அதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கலாம். நான் பாடல்கள் எழுதிய படங்கள் ஒவ்வொர் ஆண்டும் தேசிய விருதுக்குச் செல்கின்றன. ஆனால், ‘பம்பாய்’ தேசிய விருது பெறவில்லை.

‘கிழக்குச் சீமையிலே’, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, ‘மின்சாரக் கனவு' ஆகியவை தேசிய விருது பெறவில்லை. அதற்காக எங்கேயாவது நான் புலம்பியிருக்கிறேனா, தேர்வுக் குழுவின் தவறு என்றேனா? தேசிய விருதுக் குழு இன்னும் நேர்மையாக இருக்கிறது என நம்புவோம். நம்பினால் கலையின்மீது நமக்கு இன்னும் மதிப்பு கூடும்.’’

‘‘முதல் பாடலில் தேசிய விருது என்றால் எவ்வளவு பெரிய வாய்ப்பு. மகிழ்ச்சி. வாழ்த்துகள். முன்னேறி வந்து பேசுங்கள்’’ என சுந்தரையரை அழைக்கிறார் வைரமுத்து.

‘‘எங்கேயும் போய் இசை படிக்கலை. சின்ன வயசுல படிக்கும்போது பாட்டுப் போட்டிகளில் பரிசு வாங்கிட்டு வருவேன். சுற்றி இருந்தவங்க உற்சாகமூட்ட அந்தக் கைத்தட்டலுக்காகவே பாட்டுல இறங்கிட்டேன். ப்ளஸ் டூ முடிச்சதும் ‘இசை படிக்கப்போறேன்’னு சொன்னேன். ‘இசைன்னா என்னடா?’னு எங்க அப்பா கேட்டார். ‘பாட்டுப்பா’னு சொன்னேன். ‘நீ என்ன... பாட்டு பாடி, பிச்சை எடுத்து எங்களைக் காப்பாத்தப்போறீயா... வேலையப் பாருடா’னு சொன்னார்.

ஆனால், நான் நேரா சென்னை வந்து தமிழ் இசைக் கல்லூரியில் சேர்ந்தேன். இசைக் கலைமணி மூணு வருஷம், இசை ஆசிரியர் ஒரு வருஷம்னு மொத்தம் நாலு வருஷப் படிப்பு. எங்க அம்மா ஒரு வெள்ளி அரைஞான் கயிற்றை இடுப்புல கட்டிவிடும். அதாவது, காசு இல்லைன்னா, அதை அடகுவெச்சு செலவு பண்ணிக்கணும்னு அதுக்கு அர்த்தம்.

படிப்பு முடிஞ்சு ஊருக்குப் போய் பெரியார் இயக்கத் தோழர்கள், நாடகக் கலைஞர் முருக பூபதி குழுவுல சேர்ந்து, ஊர் ஊராப்போய் பகுத்தறிவு நாடகங்களில் பாடுறது, நடிக்கிறதுனு போய்க்கிட்டிருந்தேன். அப்படி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பக்கம் போகும்போது நாடகக் கலைஞரா இருந்த, கவிதாவைச் சந்திச்சேன். ஆமாம் சார் அவங்கதான் என் மனைவி. ‘கல்யாணம் பண்ணிக்கணும்’னு பிடிவாதமா இருந்தாங்க.

 ‘சோத்துக்கே வழி இல்லாம இருக்கேம்மா’னு சொன்னேன். ‘சமாளிப்பேன்’னு சொல்லி என்னை அழைச்சிட்டுப்போய் அவங்கதான் கல்யாணம் பண்ணிட்டாங்கனு சொல்லணும்.

கடந்த வாரம் கோவில்பட்டி முருகபூபதி அண்ணனின் `மணல் மகுடி' நாடகக் குழுவோட கர்நாடகாவில் நாடகம் போட ட்ரெயின்ல போயிட்டிருந்தோம். அப்ப ஊர்ல இருந்து ‘ஜோக்கருக்கு விருதுப்பா’னு போன் வந்துச்சு. பயங்கர மகிழ்ச்சியாகிப்போச்சு. அடுத்த போன், ‘உனக்கும் விருதுப்பா. பாட்டுக்குக் கிடைச்சிருக்கு’னு சொன்னாங்க. ‘நமக்கு தேசிய விருதா?’னு பயங்கர ஆச்சர்யமாப்போச்சு.

மனைவிக்கு போன் பண்ணினேன்.

‘டிவி-ல பாரும்மா. என்னை என்னனு நினைக்கிற?

டிவி-யைப் பாரு. தேசிய விருது வாங்கியிருக்கேன்’னு சொன்னேன். டிவி-யில என் பேரைப் பார்த்துட்டு அழுதவ, நைட் முழுக்கத் தூங்கவே இல்லையாம். ட்ரெயின்ல எனக்கும் தூக்கம் வரலை சார். இந்த விருதை என்னைப் பெத்த சின்னபொண்ணுக்கும் என் மனைவி கவிதாவுக்கும் சமர்ப்பிக்கிறேன்.’’

`ஐ லவ்யூ லவ்யூ லவ்யூ லவ்யூ ஜாஸ்மினு...' என்றபடி பாட ஆரம்பிக்கிறார் சுந்தரையர். அடையாறைக் கடந்து தருமபுரி நோக்கித் தடதடக்கிறது அவரின் காதல். ரசித்துக் கேட்கிறார்கள் தேசிய விருதுபெற்ற அத்தனை பேரும்!