Published:Updated:

"கார்த்தி முழுமையான நடிகர்!”

"கார்த்தி முழுமையான நடிகர்!”
பிரீமியம் ஸ்டோரி
News
"கார்த்தி முழுமையான நடிகர்!”

ம.கா.செந்தில்குமார்

‘‘ ‘2005-ல் நாளிதழ்ல வந்த ஒரு செய்தி. படிக்கும்போதே அதிர்ச்சியைத் தந்துச்சு. அந்தச் செய்தியை மட்டுமே வெச்சு ஒரு கதை பண்ணினேன். அது ஒரு பெரிய பட்ஜெட் கதையாகி, அதைப் பண்ண ஒரு ஹீரோ தேவைப்பட்டார்.  அதனால, அதை அப்படியே ஓரமா எடுத்துவெச்சுட்டு பண்ணின படம்தான் ‘சதுரங்க வேட்டை’.

அந்தப் பட வெற்றி ‘பெரிய ஹீரோக்களுக்கு கதை சொல்லும் வாய்ப்பைத் தந்துச்சு. பிறகு, நான் எடுத்துவெச்ச அந்தக் கதையை டெவலப் பண்ண நண்பர் ‘கத்துக்குட்டி’ பட இயக்குநர் இரா.சரவணன் மூலமா ஒரு போலீஸ் அதிகாரியைச் சந்திச்சேன். அவர் சொன்னவை ஒரு போலீஸ் கதைக்கான தகவல்களா இருந்துச்சு. பிறகு, இதுபோன்ற வழக்குகளை கையாண்ட நிறைய போலீஸ் அதிகாரிகள் மூலமா 400 பக்க ஆவணங்கள் என் கையில சேர்ந்துடுச்சு.

"கார்த்தி முழுமையான நடிகர்!”

‘இதன் பின்னணியைப் படிக்கும்போது நமக்கே இவ்வளவு பயமா இருக்கே, படமா பண்ணினா மத்தவங்களுக்கும் அந்தப் பயம் வருமே? இதை நாம பண்ணணுமா?’னு ஒரு யோசனை. அதை கமர்ஷியலா மாற்றும்போது பயமுறுத்தும் தன்மை குறையும்னு நம்பினேன். இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு டிராவல் ஆகும் அந்த வழக்கை தீரன் திருமாறன் என்கிற நேர்மையான ஒரு போலீஸ் டி.எஸ்.பி எப்படி கையாள்கிறார் என்பதே ‘தீரன் அதிகாரம் ஒன்று’.’’

தெளிவான வார்த்தைகளில் திடமாகப் பேசுகிறார் இயக்குநர் வினோத். ‘சதுரங்க வேட்டை’ மூலம் நம்பிக்கை விதைத்தவர், இப்போது கார்த்தியைத் தீரனாக்கி இருக்கிறார்.

"கார்த்தி முழுமையான நடிகர்!”‘‘நிறைய போலீஸ் அதிகாரிகளை சந்திக்கும்போது, போலீஸை சினிமாவில் காமெடியா டீல் பண்றோம் என்ற வருத்தம் அவங்களுக்கு இருந்ததை உணர முடிஞ்சது. போலீஸ் ட்ரெய்னிங் அகாடமியில் ஓர் அதிகாரியை சந்திச்சப்ப ‘உட்காருங்க’னுகூட அவர் சொல்லலை. ‘உங்க சினிமாவுல எங்களைப் பற்றி என்ன நினைச்சிட்டு இருக்கீங்க?

ஒரு படத்துல ஹீரோ இன்ஸ்பெக்டர் கேரக்டர். அவன் உட்கார்ந்துட்டு டி.ஐ.ஜி-யை நிக்கவெச்சு அவரை எதிர்த்து பேசிட்டு இருக்கான்.

ஒரு அதிகாரிக்கு முன்னால எப்படி நிக்கிறது, அவர்கிட்ட எப்படி பேசுறது மாதிரியான அடிப்படை விஷயங்கள் கூடவா தெரிஞ்சுக்கமாட்டீங்க? போலீஸ் டிபார்ட்மென்ட்டை விளையாட்டுத்தனமா டீல் பண்ணிட்டு இருக்கீங்க’னு கோபப்பட்டார். அப்படி எதுவும் இந்தப்படத்துல நடக்கக்கூடாதுனுதான் உங்களை சந்திக்க வந்தேனு சொன்னேன்.  பிறகுதான் உட்காரசொல்லி காவல்துறை தொடர்பான நிறைய விஷயங்களை விளக்கினார். அதை அடிப்படையா வெச்சுதான் போலீஸ் அதிகாரிக்கான அடிப்படை உடல்மொழி எப்படி இருக்கணும் என்பதைப் பற்றி ஒரு ரிட்டயர்ட் போலீஸ் ஆபீஸர் மூலமா கார்த்திக்குப் பயிற்சி கொடுக்க வெச்சோம்.’’

‘‘கார்த்தி எப்படி தீரன் ஆனார்?’’

‘‘ட்ரீம் வாரியர்ஸ் பிரகாஷ்பாபு சாரிடம் சொன்ன இந்தக் கதை கார்த்தி சாரின் காதுக்குப் போயிருக்கு. பிறகு, அவரை சந்திச்சு இந்த லைன் மட்டும் சொன்னேன். கேட்டுட்டு, ‘இந்தக் கதை எனக்கு ஏற்கெனவே தெரியும்’னார். எனக்கு அதிர்ச்சி. ‘‘சிறுத்தை பண்ணும்போதே என்கிட்ட வந்துச்சு. இப்ப மறுபடியும் எனக்கே திரும்ப வருது. எனக்காக விதிக்கப்பட்ட கதைனு இதை எடுத்துக்கிறேன். இதை நான் பண்றேன்’னார்.

‘‘தீரன் திருமாறன்’ கேரக்டருக்கு அவர் எப்படி தயார் ஆனார்?’’

‘‘ஸ்கிரிப்ட் முடிச்சிட்டு லொகேஷன் பார்த்த பிறகு அவர்ட்ட, ‘சார் பயங்கரமா கஷ்டப் படவேண்டி இருக்கும். நார்த் இண்டியாவில் வெயில், குப்பைனு க்ளைமேட் மோசமா இருக்கு’னு சொன்னேன். அதுக்கு, ‘ஆயிரத்தில் ஒருவன்’ல செருப்பு இல்லாம முழுப்படமும் நடிச்சேன். காலையில நாலு மணிக்கு பயங்கரமா குளிரும். சில்லுனு பனியில கால்கள் விறைச்சிடும். நடிச்சிட்டே இருக்கும்போது 10 மணிக்கு வெயில் ஏற ஆரம்பிச்சு காலுக்குக் கீழ பிசுபிசுனு ஒட்டும். குனிஞ்சுப்பார்த்தா கால்கள் வெடிச்சு ரத்தம் வடிஞ்சிட்டு இருக்கும். அதுக்கு முன்ன ‘பருத்தி வீரன்’ல என்னை கொண்டுபோய் வெச்சு செஞ்சிருக்காங்க. அதையே சமாளிச்சு நடிச்சிட்டேன். நீங்க கவலைப்படாதிங்க, நான் பாத்துக்கிறேன்’னார். தொடர்ந்து வட இந்தியாவில் 45 நாள்கள் பிரேக் இல்லாமல் ஷூட்டிங். அந்த வெயில் தாங்காம ஒவ்வொருத்தரா மயக்கம் போட ஆரம்பிச்சாங்க. நான் அப்பப்ப மயக்கத்தை தொட்டுட்டு வந்தேன். ஆனால் கார்த்தி சார், கூலா வொர்க் பண்ணிட்டு இருந்தார். அந்த உடல், மன வலிமை இல்லைன்னா ஒரு நடிகரால் இந்த மாதிரி படம் பண்றது கஷ்டம். ஆமாம், கார்த்தி சார் முழுமையான நடிகர்.’’

‘‘ஹீரோயின் ரகுல் ப்ரீத் சிங் எப்படி நடிச்சிருக்காங்க?’’

‘‘சின்சியர் ஹீரோயின். காதல் காட்சிகள் ஃப்ரெஷ்ஷா இருக்கணும், நல்லாவும் நடிக்கணும் என்பதால் அவங்களை தேர்ந்தெடுத்தோம். படத்துல இந்தி, மராட்டி, போஜ்புரினு பல மொழி நடிகர்களும் இருக்காங்க. ஸ்டன்ட், திலீப் சுப்பராயன். இந்தியாவின் பல்வேறு பகுதிகள்ல அந்தந்த புவியியல் தன்மையோட ஸ்டன்ட் பண்ணியிருக்கார். மாறிட்டே இருக்கிற லைட், கடினமான படப்பிடிப்பு சூழல்களை மேனேஜ் பண்ணி திறமையா ஒளிப்பதிவு பண்ணியிருக்கார் சத்யன் சூரியன். பாடல்கள் அனைத்தும் கதையோடு ஒட்டி இருக்கிறமாதிரி பண்ணியிருக்கார் ஜிப்ரான். இது மிகப்பெரிய படமானதுல இவங்களோட பங்களிப்பு ரொம்ப முக்கியம்.’’

"கார்த்தி முழுமையான நடிகர்!”

‘‘நீங்க நிறைய வாசிக்கிற பழக்கம் உள்ளவர். ஒரு இயக்குநருக்கு வாசிப்பு எந்தளவுக்கு கைகொடுக்குது?’’

‘‘ஒரு உண்மைச் சம்பவத்தை மையமா வெச்சு மட்டும் கதை பண்ணணும்னு நினைச்சீங்கன்னா உங்களால ஒரு நல்ல கதை பண்ணவே முடியாது. அதை வொர்த் கன்டென்ட் உள்ள சினிமாவா மாற்ற அந்த செய்தி சம்பந்தப்பட்ட நிறைய விஷயங்களை நீங்க படிக்கணும், தெரிஞ்சுக்கணும். இல்லைனா இன்னைக்கு இருக்கிற பரபர சூழல்ல உங்கப் படத்தை பார்த்தே ஆகணும்ங்கிற எந்தக் கட்டாயமும் ரசிகனுக்கு கிடையாது. அவனை தியேட்டருக்கு வரவைக்கிற கன்டென்ட் வேணும். அவனால படிக்க முடியாத அளவுக்கு நீங்க படிச்சு அவனுக்கான கன்டென்ட கொடுக்கணும். இதுக்கிடையில் தயாரிப்பாளருக்கு போட்ட காசு வரணும், ஹீரோவை அடுத்த கட்டத்துக்கு அழைச்சிட்டுபோகணும், அதேசமயம் சொல்ல வர்ற விஷயத்தையும் தெளிவா சொல்லணும். இந்தச் சவால்களை சமாளிச்சு வெற்றிபெறணும்னா நீங்க நிறைய உழைக்கணும்; படிக்கணும். அப்படி இந்தக் கதையில்கூட மூணு புத்தகங்களின் ரெஃபரன்ஸ் இருக்கு.’’

‘‘பெரும்பாலான படங்கள் நஷ்டம்னு சொல்றாங்க. இல்லைனா, ‘பிரேக் ஈவன் ஆகியிருக்குப்பா’ங்கிறாங்க. இதுக்கு காரணம் என்னனு நினைக்கிறீங்க?’’

‘‘சினிமாவுக்கு மட்டும் இல்லை. விவசாயம் தொடங்கி இன்னைக்கு எல்லா தொழில் களுக்குமான போட்டி உள்ளூரில் கிடையாது. உலகலாவிய போட்டி. ஆமாம், பாலிவுட், ஹாலிவுட்னு எல்லா படங்களும் இப்ப இங்க ரிலீஸ் ஆக ஆரம்பிச்சிடுச்சு. இந்தச் சூழல்ல நீங்க உலகத்தோட போராடணும்னா, பொதுவான கதைகள் வேலைக்கு ஆகாது. உங்க வேர்கள்ல, உங்களை சுற்றி நடக்குற விஷயங்களல இருந்து கதைகள் எடுக்கணும். உடனே, ‘ஈரான் படம் மாதிரி எடுக்கணும்’னு நினைக்காதீங்க. ஈரான் படத்தை ஈரான்க்காரன் எடுப்பான். நாம நம்ம ஊர் கதைகளை எடுப்போம். என் படங்களைப் பொருத்தவரை கருத்து சொல்றதோ, தீர்வு சொல்றதோ இல்லாம ஜனங்க மனசுல சில கேள்விகளை எழுப்பினாலே போதும். அதுதான் என் படங்களின் நோக்கம். ‘தீரன் அதிகாரம் ஒன்று’ அந்தமாதிரி கேள்விகளை எழுப்பும் ஒரு முயற்சிதான்.’’