Published:Updated:

“ரஜினி சாருடன் நானும் சேர்ந்து நடிக்கலாம்!”

“ரஜினி சாருடன் நானும் சேர்ந்து நடிக்கலாம்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“ரஜினி சாருடன் நானும் சேர்ந்து நடிக்கலாம்!”

ஆர்.வைதேகி

``இந்த வெற்றியை நான் எதிர்பார்த்தேன். ஆனா, இவ்வளவு பாசிட்டிவ் விமர்சனங்களை நிச்சயமா  எதிர்பார்க்கலை. குடும்பம், குடும்பமா படம் பார்க்க வர்றாங்க.  ஷங்கர் சார், கெளதம் மேனன், சமுத்திரக்கனி அண்ணன்னு பலரிடம் இருந்தும் பாராட்டுகள். இந்த சக்சஸ் பற்றி மக்கள் என்ன சொல்றாங்கன்னு இன்னும் கொஞ்ச நாள் கேட்டுக்கிறேனே... அப்புறம் அடுத்தப் படம் என்ன என்பதுபற்றி முடிவு பண்ணலாம்'' - உற்சாகமாகப் பேசுகிறார் தனுஷ்.

“ரஜினி சாருடன் நானும் சேர்ந்து நடிக்கலாம்!”

``இயக்குநராக அறிமுகம் ஆகும் முதல் படத்திலேயே 60 ப்ளஸ்ஸின் காதலைச் சொல்ல வேண்டும் என்று எப்படித் தோன்றியது?''

``சில நேரம் நான் என்னையே ஒரு 60 வயசு ஆளா கற்பனைப் பண்ணி பாப்பேன். 60 வயசானா நான் என்னவெல்லாம் பண்ணுவேன்னு யோசிப்பேன். பெரும்பாலான எழுத்தாளர்கள், தங்களை அந்த இடத்துல வெச்சுப் பார்த்து ஃபீல் பண்ணித்தான் எழுதுவாங்க. அப்படித்தான் நானும்.

எனக்கு இயக்குநரா இது முதல் படம்னாலும் நான் இதை முதல் படமா ஃபீல் பண்ணல. நான் உதவி இயக்குநரா வேலை செய்யலையே தவிர, நான் நடிச்ச பல படங்கள்ல இயக்குநர்களோட அத்தனை வேலைகளையும் கவனிப்பேன். அப்படிப் பார்த்தா, எனக்கு 12 வருஷ உதவி இயக்குநர் அனுபவம் இருக்கு. வீட்டிலே என்  அப்பா, அண்ணன் ரெண்டு பேருமே இயக்குநர்கள். எமோஷன்ஸ், ரிலேஷன்ஷிப் வேல்யூஸ் மாதிரியான விஷயங்களை எல்லாம் அப்பாகிட்டதான் கத்துக்கிட்டேன். அண்ணன்கிட்ட டெக்னிக்கலா  நிறையக் கத்துக்கிட்டேன். இயக்குநர் ஆகிட்டேன்''

``அடுத்து இந்திப் படம் இயக்கப்போறதா தகவல் அடிபடுதே?''

``இந்தி மட்டுமில்லை, தமிழ்லகூடக் கேட்கிறாங்க. ஆனா, இப்போதைக்கு என் மூளை பிளாங்க்கா இருக்கு. அடுத்த படத்தை டைரக்ட் பண்ண வேண்டிய அவசரம் எனக்கு இப்ப இல்லை. சரியான கதை என்னைத் தேடி வரும்போது பண்ணினாப் போதும். ஆனாலும், நான் தினமும் எழுதிட்டுத்தான் இருப்பேன்.

எனக்கு வேலை செய்யலைன்னா போரடிக்கும். என்னால சும்மா ஓர் இடத்துல உட்கார முடியாது. என்னை எப்போதும் பிஸியாவே வெச்சுப்பேன். எனக்கு இதைத் தவிர, வேற எதுவும் தெரியாது. ஆர்வமும் வேட்கையும் இருக்கிறதால முடிஞ்ச அளவுக்குத் தேடித் தேடிப் பண்றேன்.''

“ரஜினி சாருடன் நானும் சேர்ந்து நடிக்கலாம்!”

``நீங்கள் நடிப்பதாக இருந்த ஹாலிவுட் படம் என்னாச்சு?''

``மே 14-ம் தேதி மும்பையில் ஷூட்டிங் ஆரம்பிக்குது. அதைத் தொடர்ந்து ரோம், பாரீஸ்னு பல இடங்கள்லயும் ஷூட்டிங் நடக்கப்போகுது. இந்தக் கதை பிரபலமான ஒரு ஆங்கில நாவலை அடிப்படையா வெச்சு எடுக்கப்படுது. இதுக்கு மேல அதைப் பற்றிப் பேசக் கூடாதுன்னு எனக்கு உத்தரவு.

கடந்த அஞ்சாறு வருஷங்களாகவே எனக்கு ஆங்கிலப் பட வாய்ப்புகள் வந்துட்டுதான் இருக்கு. எதுவுமே இந்தப் படத்தைப் பண்ணணும்னோ, மூணு மாசம் அங்கே போய்ச் செலவழிச்சுப் பண்ணணும்கிற  எண்ணத்தையோ கொடுக்கலை. ஆனா, இந்தக் கதை எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிச்சது. பண்றேன். சினிமாவைப் பற்றி இன்னும் நிறைய தெரிஞ்சுக்கணும். அங்கே எப்படி வொர்க் பண்றாங்கனு புரிஞ்சுக்கணும். இதுக்காகத்தான் இந்தப் படம் பண்றேன். ரொம்பவே சந்தோஷமா இருக்கேன்.''

``விஷால், ஆர்யா, ஜெயம் ரவி போன்ற முன்னணி நடிகர்கள் சினிமா தாண்டி பெர்சனலாகவும் நட்பா இருக்காங்க. ஆனால், நீங்க தனி ஆளாகவே இருக்கீங்களே?''

``ஆமாம்... நான் இன்ட்ரோவெர்ட்தான். நான் இருந்த உலகம் வேற... இப்போ இருக்கும் உலகம் வேற. சிம்பிளான மனிதர்கள் சூழ, சிம்பிளான உலகத்துல இருந்து வந்தவன் நான். யாருக்கும் மனசுல ஒண்ணும் வெளில ஒண்ணும் இருக்காது. யாருமே இன்னொருத்தர் நல்லா இருக்கக் கூடாதுன்னு நினைக்க மாட்டாங்க. அந்த மாதிரி  சிம்பிளான ஒரு உலகத்துலேருந்துதான் நான் வந்தேன். திடீர்னு நடிகராகி, ஆரம்பத்திலேயே நாலைஞ்சு படங்கள் ஹிட்டானதும் என் உலகமே சட்டுன்னு மாறிடுச்சு. வேற ஓர் உலகத்துக்குள்ள என்னை உட்காரவெச்சுடுச்சு. இந்த உலகத்துல எல்லாமே வித்தியாசமா இருக்கு. அந்த உலகத்துல இருந்துட்டு இந்த உலகத்துல என்னால் செட்டாக முடியலை. எனக்கு சரியா இங்கிலீஷ் பேச வராது.  எனக்கு எதுவுமே தெரியாது. அதனால நான் ரொம்பக் கூச்சசுபாவத்தோடவும், ஈஸியா யார்கூடவும் ஒட்டாமலும் இருந்தேன். அதுவே,  பழகிப்போச்சு. ஒருத்தர்கிட்டபோய் சட்டுனு `ஹலோ' சொல்லக் கூச்சமா இருக்கும். சில நேரம் சிலர் அதை கர்வம்னுகூட நினைச்சுப்பாங்க.''

`` `துள்ளுவதோ இளமை' தனுஷ், `வட சென்னை' தனுஷ்?''

``பெரிய டிரான்ஸ்ஃபர்மேஷன் இருக்கிறதா எனக்குத் தெரியலை. `துள்ளுவதோ இளமை' பண்ணினபோது சினிமாவில்  பெரிய ஆர்வமோ நம்பிக்கையோ இல்லை. `வட சென்னை'யில் என் வேலை பிடிச்சு நம்பிக்கையோடு பண்றேன். ஓரளவு விஷயம் தெரிஞ்சு, என் வேலையை ரசிச்சுப் பண்றேன்.''

`` `3' படத்தில் உங்கள் மனைவி ஐஸ்வர்யா இயக்குநர். `விஐபி-2' படத்தில் சௌந்தர்யா இயக்கம். இருவரையுமே ஓர் இயக்குநராக எப்படி மதிப்பிடுவீர்கள்?''

``ரெண்டு பேரோட வொர்க்கிங் ஸ்டைலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான். ரெண்டு பேருமே பயங்கரப் புத்திசாலிகள்; திறமைசாலிகள். ரொம்ப நேர்த்தியா வொர்க் பண்றாங்க. ரெண்டுமே வேற வேற மாதிரியான படங்கள். ரெண்டையும் ஹேண்டில் பண்றபோது, வேற வேற மாதிரி இருந்தது.''

“ரஜினி சாருடன் நானும் சேர்ந்து நடிக்கலாம்!”

``பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினியை வைத்துத் தயாரிக்கும் பட வேலைகள் எந்த நிலையில் இருக்கிறது?''

``மே மாசம் ஷூட்டிங் ஆரம்பம். ரஜினி சாரை வெச்சுப் படம் பண்றது மிகப்பெரிய கெளரவம். இப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு. அதை எவ்வளவு தூரம் சிறப்பா செய்து முடிக்கணுமோ, அப்படிச் செய்வேன்.''

``ரஜினியுடன் நீங்கள் இணைந்து நடிக்கும் சாத்தியம் இருக்கிறதா?''

``நடிக்கலாம். கடவுள் என்ன நினைக்கிறாரோ... அது நிச்சயம் நடக்கும்.''

``பொது இடங்களில் அநியாயத்துக்குப் பணிவாக இருக்கிறீர்களே... உண்மையிலேயே இதுதான் உங்கள் இயல்பா?''

``நான் ஏதோ கொஞ்சம் நல்லா நடிக்கிறேன்னு எல்லாரும் சொல்றாங்கனு நினைச்சுட்டிருந்தப்ப `காக்கா முட்டை'னு ஒரு படத்துல சின்ன பையன் செருப்பால அடிச்ச மாதிரி நடிச்சிருந்தான். அந்த மாதிரி என்னால நிச்சயமா நடிக்க முடியாது. இப்படி எந்த நிமிஷத்துலேயும் உங்களைவிட ஒருவர் பெட்டரா இருக்க முடியும். எந்த விநாடியிலேயும் உங்களுக்குத் தெரிஞ்சது பத்தவே பத்தாதுனு இருக்கிறபோது நம்மளை நினைச்சு நாம பெருமைப்பட ஒண்ணுமே இல்லை. அதனால,  பணிவா இருக்கிறது அவசியம்னு நினைக்கிறேன்.''

``சமூக வலைதளங்களில் எப்போதும் ஏதேனும் ஒரு சர்ச்சையில் தனுஷ் பெயர் அடிபட்டுக்கொண்டே இருக்கிறது. ஆனாலும், அமைதியாகவே இருக்கிறீர்கள். இந்த அமைதியை எப்படி எடுத்துக்கொள்வது?''

``எனக்கு நிறைய வேலைகள் இருக்கு. இதையேதான் நான் `ப.பாண்டி' படத்துலேயும் சொல்லியிருப்பேன். நம்ம எல்லார் வாழ்க்கையிலேயும் சந்தோஷங்களும் துக்கங்களும், பாசிட்டிவ் - நெகட்டிவான விஷயங்களும், ஏற்ற - இறக்கங்களும், நல்லது கெட்டதும் சூழ்ந்தே இருக்கு. அதெல்லாம் நமக்குள்ளேயும் இருக்கு. எது வேணும்னு நாமதான் செலெக்ட் பண்ணணும். நான் நல்லதை மட்டுமே பார்க்கிறேன். இந்தப் பக்குவம்தான் என்னை அமைதியா வெச்சிருக்கு.''