
ம.கா.செந்தில்குமார்
‘‘சின்ன வயசுல இருந்தே நடிக்கணும்னு ஓர் ஆசை இருந்துச்சு. ஆனால் அப்பா, ‘இப்ப நீ பாட்டுல கவனம் செலுத்து. இதுல ட்ரெயின் ஆகிட்டே இரு’னு சொன்னாங்க. ‘மாரி’ படத்துக்கு முன் நாங்க குடும்பத்தோட விடுமுறைக்கு ஸ்பெயின் போயிருந்தோம். ஒட்டுமொத்த குடும்பமும் சேர்ந்துபோன முதல் வெளிநாடு ட்ரிப் அது. அங்க ஒரு காபி ஷாப்ல பேசிட்டு உட்கார்ந்திருந்தோம். சென்னையில இருந்து அழைப்பு. தனுஷ் பேசினார். ‘ஏன்னு தெரியலை. நீங்கதான் நடிக்கணும்னு எங்க டைரக்டர் சொல்றார்’ன்னார். ஏதோ ஷார்ட் ஃபிலிமா இருக்கும்னு நினைச்சேன். பிறகு அவரே, ‘மாரி. இதில் நீங்கதான் வில்லன்’ன்னார். ‘கதை கேட்கலை. அந்தக் கேரக்டருக்கு நான் சரியா இருப்பேனா இல்லையானு தெரியாம எப்படி'னு யோசிச்சேன். ஆனால், இறுதி பதில் ஓகேனு சொல்லிட்டேன். சென்னை வந்து ஆடிஷன், வொர்க் ஷாப் பண்ணினோம். எனக்கும் ஒரு நம்பிக்கை வந்துச்சு. அப்படித்தான் ‘மாரி’யில் நான் வந்தேன். இதோ இப்ப ‘படைவீரன்'.’’ - விஜய் யேசுதாஸின் பேச்சில் அப்படி ஒரு நிதானம்.

‘‘ ‘மாரி’ ஓ.கே. படைவீரன் படத்தில் நடிக்க எது உங்களை சம்மதிக்க வைத்தது?''
‘‘ ‘கடல்’, ‘ஓகே கண்மணி’ படங்களின் பாடல் ரிக்கார்டிங் நாள்கள்ல தனா அறிமுகம். அவர் மணிரத்னம் சாரின் அசிஸ்டென்ட். ‘சித்திரை நிலா’, ‘அவளும் நானும்’ பாடல்களை பாட உச்சரிப்பு சொல்லிக்கொடுத்தது அவர்தான். அந்த நட்பு இருந்தது. இதற்கிடையில் ‘மாரி’க்குப் பிறகு, நிறைய கதைகள் கேட்டு சில கதைகளைத் தேர்ந்தெடுத்து வெச்சிருந்தேன். அந்த சமயத்தில்தான் தனாவின் அழைப்பு. ‘ஏதோ கதை சொல்லப்போறார். கேரக்டர் ரோலாதான் இருக்கும்னு நினைச்சுட்டே சந்திச்சேன். ‘நீங்கதான் ஹீரோ’னு சொல்லி இந்தக் கதையைச் சொன்னார்.
கிராமப் பின்னணிக் கதை. வாழ்க்கையைப் புரிஞ்சுகிட்ட திறமையான பையன் முனிஸ்வரன். ‘இந்த வேகமான வாழ்க்கையில் இளமையில் கொஞ்சம் சந்தோஷமா இருக்க முடியுமா’னு பார்க்கக்கூடிய கேரக்டர். இரண்டு மூணு வருஷம் அப்படியே ஜாலியா இருந்துட்டு பிறகு, வேலைக்குப் போகலாம்னு நினைக்கக்கூடிய ஒருத்தன். ‘இப்படியே சுத்திட்டு இருக்கியே, நீ என்னதான்டா பண்ணப்போற’னு ஊர்ல பேசும்போது, ‘ஏதாவது பண்ணுவோம்’னு ஒண்ணு பண்ண ஆரம்பிக்கிறான். அதுல இருந்து அவன் வாழ்க்கை மாற ஆரம்பிக்குது. ஒரு திருவிழாவில் ஆரம்பிக்கிற கதை அடுத்த வருஷ திருவிழாவில் முடியும். அந்த ஒரு வருஷத்துல முனியோட லைஃப் என்ன? இதுதான் கதை?’’
‘‘படத்தில் இயக்குநர் பாரதிராஜா நடித்திருக்கிறார். படப்பிடிப்பின்போது என்ன சொன்னார்?’’
‘‘பாரதிராஜா சாருக்கு படத்தில் என் மாமா கேரக்டர். அவர்கூட நடிச்சதுதான் மிகப்பெரிய அனுபவம். மிகப்பெரிய பரிசுன்னே சொல்லலாம். நான் தனியா பண்ற ஷாட் சமயம் அவர் இருந்தார்னா தெளிவா நடிச்சுக் காட்டுவார். அதேபோல அவர் இருக்கிற ஷாட்ல நான் போய் பக்கத்துல உட்கார்ந்துடுவேன். அவரோட பெர்ஃபார்மன்ஸ் இதுல ஹைலைட்டா இருக்கும்.’’

‘‘பாடல் ராயல்ட்டி தொடர்பான விஷயத்தில் இளையராஜா-எஸ்.பி.பி இருவருக்கும் இடையிலான அந்தக் கருத்து வேறுபாடுகளை ஒரு பாடகரா எப்படி பாக்குறீங்க?’’
‘‘அது சட்டப்பூர்வமான விஷயம்தான். நாம அதைப்பற்றி பேசி பயன் இல்லை. நடந்த விதத்துல அதை மீடியா பெரிது படுத்தியதே தவிர, நீங்க நினைக்கிற அளவுக்கு மிகைப்படுத்த வேண்டிய விஷயம் இல்லை. அவங்க இரண்டு பேருமே லெஜண்ட்ஸ். அதை எப்படி ஹேண்டில் பண்ணணும்னு அவங்களுக்குத் தெரியும். இங்க ராயல்டி மிகச்சரியா போய்ச்சேருவதற்கான சரியான சிஸ்டம் இன்னும் வரலை. அது சரியா போய்ச்சேரணும்னு நினைக்கிறேன்.’’

‘‘உங்கள் அப்பா இப்ப எப்படி இருக்கார்?’’
‘‘ `எப்பவுமே எளிமையா இரு’ இதுதான் அப்பா எனக்கு சொல்லித்தந்திருக்கும் பாடம்.
நான் புதிதாக பாட ஆரம்பிக்கும்போதுகூட, ‘என் பேர் விஜய். இசையமைப்பாளரை மீட் பண்ணணும்னு வந்தேன்’ என்றுதான் சொன்னேனே தவிர ‘விஜய் யேசுதாஸ்’னு அப்பா பேரை பயன்படுத்தவே இல்லை. அப்பாவும் அதைத்தான் விரும்புவார். அப்பா திருவனந்தபுரத்துல `தரங்கனி சர்வீஸ் ஸ்கூல்'னு ஆரம்பிச்சு இலவச சேர்க்கையில் இசை கற்றுத்தந்துட்டு இருக்காங்க. இது முழுக்க முழுக்க அவரோட வருமானத்துல இருந்து மட்டும் பண்ணிட்டு இருக்கார். அப்படிப்பட்டவரின் மகனா பிறந்தது ஜென்ம புண்ணியம்.’’