Published:Updated:

பாகுபலி - 2 - சினிமா விமர்சனம்

பாகுபலி - 2 - சினிமா விமர்சனம்
News
பாகுபலி - 2 - சினிமா விமர்சனம்

பாகுபலி

மீண்டும் ஒரு முறை மகிழ்மதியின் பிரமாண்டத்துக்குள் நம்மை மூழ்கடித்திருக்கிறது பாகுபலி -2.

மகிழ்மதியின் அரசனாகும் வாய்ப்பை பல்வாள்தேவனுக்குப் பதிலாக இளையவனான அமரேந்திர பாகுபலிக்குத் தர முடிவெடுக்கிறார் ராஜமாதா சிவகாமி. அரசப் பதவியைக் கைப்பற்ற பல்வாள்தேவனும், அவன் அப்பாவும் நடத்தும் சதுரங்க காய் நகர்த்தலில் பல உயிர்களும், மகிழ்மதியின் நிம்மதியும் காவு கொடுக்கப்படுகிறது. பல்வாள்தேவனின் சூழ்ச்சியால் பாகுபலி கொல்லப்பட, இரண்டு ஆண்டுகளாக நம்மை விடாமல் துரத்திய `கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்' என்ற கேள்விக்குப் பதிலும் கிடைக்கிறது. சூழ்ச்சியால் சிறைபிடிக்கப்பட்ட அம்மாவையும் அரசவையையும் மகேந்திர பாகுபலி எப்படி மீட்கிறான் என்பதே பாகுபலியின் இரண்டாம் பாகம்.

பாகுபலி - 2 - சினிமா விமர்சனம்

அரண்மனை முதல் அருவி வரை… எங்கும் எதிலும் பிரமாண்டம். ஒவ்வொரு ஃப்ரேமிலும் நிறைந்து இருக்கிறது  இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் திட்டமிடலும், நுணுக்கமான உழைப்பும், எல்லோரும் ரசிக்கும்படி ஒரு சுவாரஸ்யமான படத்தைத் தர வேண்டும் என்கிற முனைப்பும். அந்த அர்பணிப்புக்கு ஒரு பிக் சல்யூட். பிரமாண்ட சினிமாவுக்கான அளவுகோலை பல மடங்கு உயர்த்தியிருக்கிறார் எஸ்.எஸ் ராஜமெளலி.

மகிழ்மதி அரசை மட்டுமல்ல, படத்தையே கண்ணசைவில் கன்ட்ரோல் செய்கிறார் ராஜமாதா ரம்யா கிருஷ்ணன். `நீர் கொலை  செய்கிறீரா அல்லது நான் செய்யவா' எனக் கட்டளையிடும் அந்த ஒரு தொனி போதும். 

விசுவாசத்துக்கு கட்டப்பாதான். முதல் பாதி நகைச்சுவை, இரண்டாம் பாதி அறுசுவையும் என வானத்துக்கும் பூமிக்குமாக விஸ்வரூப விருந்து வைத்திருக்கிறார் சத்யராஜ். பாகுபலியைக் கொல்லக் கிளம்புகிற அந்த நொடி தொடங்கி குற்றவுணர்வோடு பாகுபலியிடம் பேசுகிற நொடிவரை சத்யராஜ் நடிப்பு... செம க்ளாஸ்.

`அமரேந்திர பாகுபலி ஆகிய நான்' என பிரபாஸ் கர்ஜிக்கும்போது மகிழ்மதியோடு திரையரங்கும் சேர்ந்து ஆர்ப்பரிக்கிறது.

`நீ செய்தது தவறு தேவசேனை. கையையா வெட்டுவது' என பாகுபலியின் வாள் பேசும் இடம் செம மாஸ்... மகனைவிட அப்பா பாகுபலிக்கு எல்லா பலங்களும் கூடி நிற்கிறது. இரட்டை பாகுபலிகளையும் சமாளிக்க ஒருவனால் முடிகிறது என்றால், அதற்கு ராணா டகுபதி போன்ற தோற்ற கம்பீரம் வேண்டும்.

பாகுபலி - 2 - சினிமா விமர்சனம்

பல்வாள்தேவனுக்கு பற்களில்கூட பதவி வெறியின் கறைதான். அதை மென்றே வாழ்கிறான்; வீழ்கிறான். ``தாயின் நாய் வந்து இருக்கிறது'' என தந்திரம் காட்டும் நாசரின் வில்லத்தனம் அபாரம்.

பாகுபலியின் கலை பிரமாண்டம் அனுஷ்காதான். ராஜமாதா சிவகாமிக்கு, பதில் கடிதம் வழியாக சவால் விடுவது, `மகிழ்மதியில் எல்லோருமே இப்படித்தானா' எனப் பயமறியாமல் பன்ச் பேசுவது, `பெண்களைத் தடவிய விரல்களை வெட்டினேன்' என அரண்மனை விசாரணையில் கெத்தாக நிற்பது, யாருமே எதிர்ப்பேச்சு பேசாத சிவகாமியையே `நியாயம் தவறுகிறீர்கள்' என்று எச்சரிப்பது என 360 டிகிரியில் வீரதீரம் காட்டி வியக்க வைக்கிறார் அனுஷ்கா.

சாபு சிரிலின் கலை இயக்கமும், கமலக்கண்ணனின் கணினி வரைகலையும் ஹாலிவுட் தரம். அத்தனை அடி உயர சிலை முதல் பாக `வாவ்' என்றால், அது உடைந்து சிதறுவது இரண்டாம் பாகத்தின் `வாரே வாவ்'.

பாகுபலி - 2 - சினிமா விமர்சனம்பாடல்கள் சராசரி. ஆனால், பின்னணி இசையில் பில்ட் அப் ஏற்றியிருக்கிறார் இசையமைப்பாளர் மரகதமணி. ஒவ்வொரு காட்சியையும் மரகதமணியின் இசை வேற லெவலுக்கு உயர்த்துகிறது. கே.கே.செந்தில் குமாரின் ஒளிப்பதிவு படத்துக்கு மிகப்பெரிய பலம். வீரமும் காதலுமாக உரையாடுகின்றன மதன்கார்க்கியின் அழகான வசனங்கள்.

பாகுபலி 1-ல் எத்தனை எத்தனை போர் உத்திகள்? ஆனால், இரண்டாம் பாகத்தில்  அது மிஸ்ஸிங். நாட்டு மக்களை பாகுபலி காப்பாற்றும் அந்த இறுதிப் போரில் ஏன் அத்தனை குழப்பங்கள்... அத்தனை லாஜிக் மீறல்கள்? மசாலாவை இந்த முறை கூடுதலாக சேர்த்திருப்பதால் முதல் பாகத்தில் இருந்த முழுமையான கதை சொல்லல் இரண்டாம் பாகத்தில் இல்லை. அது பல இடங்களில் தொடையைத் தட்டி ட்ரெயினை நிறுத்தும் அசல் தெலுங்கு ஹீரோ படமாக்கிவிடுகிறது.

இந்தக் குறைகளைத் தாண்டியும் பிரமிக்கவைக்கிறான் பாகுபலி!

- விகடன் விமர்சனக் குழு