Published:Updated:

“என்னை வாழ்த்துங்கள் ஃப்ரெண்ட்ஸ்!”

“என்னை வாழ்த்துங்கள் ஃப்ரெண்ட்ஸ்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“என்னை வாழ்த்துங்கள் ஃப்ரெண்ட்ஸ்!”

நா.சிபிச்சக்கரவர்த்தி, படம்: பா.காளிமுத்து

``நான் உலகமகா மக்கு பிரதர். ஸ்கூல் படிக்கும்போது எல்லா பரீட்சையிலயும் ஃபெயில். எங்க அப்பாவோட ஆசைக்காக இன்ஜினீயரிங் சேர்ந்தேன். ஃபைனல் இயர் வரும்போது 36 அரியர்ஸ். அடுத்து என்ன பண்றதுன்னே தெரியாமத் தடுமாறிட்டு இருந்தேன். அந்தச் சமயத்துலதான் இப்ப என் மனைவி ஹேமா, லவ்வரா இருந்தப்போ எழுதிப்போட்ட 12 லெட்டர்ஸ்தான் என் வாழ்க்கையையே மாத்துச்சு'' என சஸ்பென்ஸ் வைத்து நிறுத்துகிறார், காமெடி நடிகர் பாலசரவணன். குட்டி குட்டி கமென்ட்ஸ்கள் மூலம் கலகலக்கவைப்பவர் பாலசரவணன்.

``சொந்த ஊர் மதுரை அருகில் உள்ள பரவை என்கிற கிராமம். எங்க ஊர்ல எனக்கு முழுநேர வேலையே கிரிக்கெட்தான். அங்கே எங்க கிரிக்கெட் டீம் கேப்டன் முகமது ரஃபி அண்ணா ஒருநாள், `விஜய் டிவி-யில `கனா காணும் காலங்கள்'னு ஒரு சீரியலுக்கு நடிக்க ஆடிஷன் நடத்துறாங்க. நீ முயற்சி பண்ணுடா'னு சொன்னார். `மொத ரவுண்ட்லேயே ஃபெயில் ஆக்கிடுவாங்க'னு சொன்னேன். `எங்களை எல்லாம் பயங்கரமா கலாய்க்கிறே. இதையே அங்கே போய்ப் பண்ணுடா, செலெக்ட் ஆகிடுவ'னு சொன்னார். ஹேமா தான் அந்த ஆடிஷன் போட்டிக்காக 12 வாரம் தொடர்ந்து எனக்காக லெட்டர் போட்டாங்க... அவங்க முயற்சியாலதான் செலக்ட் ஆனேன்.

“என்னை வாழ்த்துங்கள் ஃப்ரெண்ட்ஸ்!”

புதுசா எதுவும் முயற்சி பண்ண வேணாம். இயல்பா என் நண்பர்கள்கிட்டயும் என் லவ்வர் கிட்டயும் எப்படிப் பேசுவனோ அப்படியே பேசிடுவோம்னு முடிவுபண்ணேன். செலெக்ட் ஆகிட்டேன். அப்பதான் இனி சினிமாதான் நம்ம வாழ்க்கைனு தோணுச்சு. சீரியல் தாண்டி, சினிமாவுல நடிக்க வாய்ப்பு கிடைச்சது `குட்டிப்புலி' படத்துலதான். இயக்குநர் அருண்குமார் இயக்கிய ஏழு குறும்படங்களில் ஐந்து குறும்படங்கள்ல நடிச்சேன். அதுல ஒரு குறும்படம்தான் `பண்ணையாரும் பத்மினியும்.' டக்குனு என்னை நிறைய பேர் கவனிக்க ஆரம்பிச்சாங்க. அப்படியே நடிகர் ஆகிட்டேன். இப்பவும் நான் நல்ல நடிகர் எல்லாம் கிடையாது. நடிக்கத்தான்  கத்துக்கிட்டிருக்கேன்'' என அடக்கமாகப் பேச, அவரது மனைவி ஹேமா தொடர்கிறார்.

``பாலா பேசிப் பேசியே எல்லாரையும் சிரிக்க வெச்சுருவான். அப்பவே `நீ காமெடிக்கு முயற்சி பண்ணு. ஹீரோவுக்கு எல்லாம் ட்ரை பண்ணாதப்பா'னு  சொன்னேன். அதே மாதிரி இப்ப பேரு சொல்ற மாதிரி வளர்ந்துட்டான். சினிமாவுல யாரையுமே தெரியாம இவ்வளவு தூரம் வளர்ந்திருக்கான்னா, அதுக்கு முழுக்க முழுக்க அவனோட முயற்சிதான் காரணம்'' என்று சொல்ல, பாலசரவணன், ``பார்த்தீங்களா... என்னை காமெடியனாகத்தான் பார்த்திருக் காய்ங்க. ஹீரோ ஆகுப்பான்னு சொல்ல மாட்டேங்கிறாங்களே... ஹேமா உனக்காகவே நான் ஹாலிவுட்ல `அவதார் பார்ட்-5' ஹீரோவா பண்ணல...'' என்று முஷ்டி மடக்குகிறார்.

``ஹேமாவை நான் ப்ரபோஸ் பண்ண ஸ்டைலே வேற. `ஹேமா, நீ எனக்கு பெஸ்ட் ஃப்ரெண்ட். நானும் உனக்கு ஃப்ரெண்ட். இந்த ஃப்ரெண்ட்ஷிப் லைஃப்லாங் வரணும்னு நினைக்கிறேன். அதுக்கு உன்னைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படுறேன். ஆனா, உன்னை லவ் எல்லாம் பண்ணலைப்பா'னு சொன்னேன். ரெண்டு நாள் யோசிச்சிட்டு `கல்யாணம் பண்ணிக்கலாம்'னு சொல்லிட்டாங்க.


எங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனேன். வந்தோமா... போனாமான்னு இல்லாம, மாமனார், மாமியார்கிட்ட நல்ல பேர் வாங்குறோம்னு வந்த அன்னிக்கே அவங்க கால்ல விழுந்து ஆசீர்வாதம் கேட்டாங்க. எங்க அம்மா, அப்பா நாங்க லவ் பண்றோம்னு கண்டு பிடிச்சுட்டாங்க. ஆனா, அப்பவே எங்க அப்பா எங்கக் காதலுக்குப் பச்சைக்கொடி காட்டிட்டார்'' என்ற பாலசரவணின் முகத்தில் அத்தனை பிரகாசம். இவர்களுக்கு யாழினி என்கிற பெண் குழந்தை உள்ளது.

``அவன் நடிச்சதில் `பண்ணையாரும் பத்மினியும்' படம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். இந்தப் படத்துல நடிக்கிறதுக்காக, 50 நாள்கள் தலைக்குக் குளிக்காம அழுக்கு டிரஸோடவே சுத்திட்டிருந்தான்.'' என்னும் அப்பா ரெங்கநாதனைத் தொடர்கிறார் பாலாவின் அம்மா சாந்தி.

``எங்க வீட்டுக்காரர், பசங்களை கஷ்டம்னா என்னென்னே தெரியாம வளர்த்துட்டார்.

இவன் 36 அரியர்ஸ் வெச்சிருக்கான்கிற விஷயத்தைக் கடைசி வரைக்கும் சொல்லவே இல்லை. இவன் நடிக்க வந்த பிறகுதான், எனக்கு அது தெரியும். அவனே அவன் திறமையைக் கண்டுபிடிச்சதில் மகிழ்ச்சி'' எனச் சொல்லும்போதே வார்த்தைகளில் பெருமிதம் தெரிகிறது.

``டைரக்டர் ஆவது என் நீண்டநாள் கனவு. என் முதல் படம் காமெடி கலந்த ஃபேன்டஸி படமா இருக்கும். படத்துக்கான அறிவிப்பு, விரைவில் வெளிவரும். என்னை வாழ்த்துங்க  ஃப்ரெண்ட்ஸ்.'' என்று பாலசரவணன் சொல்ல ஒட்டுமொத்த குடும்பமும் கைதட்டி ஆர்ப்பரிக்கிறது!