
பா.ஜான்ஸன்
இரண்டே வாரங்களில் காதலிக்குத் திருமணம். காதலி இருப்பதோ அமெரிக்காவில். அமெரிக்கா செல்ல பாஸ்போர்ட் மட்டும்தான் இருக்கிறது. அவ்வளவு விரைவாக அமெரிக்க விசா சாத்தியமே இல்லை. வேறு வழியில் அமெரிக்காவுக்கு கிளம்புகிறான் நாயகன். காதலுக்காகத் தொடங்கும் ஒரு காம்ரேடின் பயணம் அவனுடைய வாழ்வின் புதிய அத்தியாயங்களை தொடங்கிவைக்கிறது. இதுதான் `காம்ரேட் இன் அமெரிக்கா' படத்தின் கதை.
மலையாளக் கரையோரம் இது கம்யூனிஸ சீஸன்போல. `ஒரு மெக்சிகன் அப்ரதா', `சகாவு' என்று வரிசையாக கம்யூனிஸ்ட்கள் பற்றி படங்கள் வருகின்றனவே என நினைக்கும் போதுதான் `காம்ரேட் இன் அமெரிக்கா' படமும் வந்திருக்கிறது. ஆனால், இந்தப் படத்தில் கம்யூனிஸப் பின்னணி என்பது கொஞ்சம்தான். அதைத்தாண்டி நிறைய விஷயங்களைப் பேசுகிறார் இந்த அமெரிக்கா பறக்கும் காம்ரேட்.

சமீர் தாஹிர் இயக்கத்தில் துல்கர் நடித்து 2014-ம் ஆண்டு வெளியான படம் `நீலாகாசம் பச்சக்கடல் சுவன்ன பூமி'. அதிலும் பயணம்தான் கதை. கேரளாவிலிருந்து தன் தோழனுடன் மோட்டர் பைக்கில் கிளம்புவார் துல்கர். இதேபோல `காம்ரேட் இன் அமெரிக்கா' படத்தின் பின் பாதிக் கதையும் பயணம்தான். ஆனால், முன்பு சொன்னதுபோல சொகுசான பயணம் கிடையாது. ஆபத்துகள் நிறைந்த ஆச்சர்யப் பயணம்.
கம்யூனிஸப் போராட்டங்களும் கால்பந்தாட்டமுமாக இருக்கும் அஜி (துல்கர் சல்மான்), சாராவைப் (கார்த்திகா முரளிதரன்) பார்த்ததும் காதல்கொள்கிறார். இந்தக் காதலுக்குப் பிறகு நடப்பதுதான், முதல் பாராவில் நீங்கள் படித்தது. அந்தப்பயணமும் அதில் நாயகன் எதிர்கொள்ளும் சாவல்களுமாக சுவாரஸ்யமாக பயணிக்கிறது காம்ரேட் இன் அமெரிக்கா.
துல்கருக்கு இது ஹீரோவிலிருந்து மாஸ் ஹீரோ ஆவதற்கான வாய்ப்புள்ள படம். முதல் பாதியில் ஆக்ஷனிலும், பிற்பாதியில் ஆக்டிங்கிலும் கலக்குகிறார்.
மெக்ஸிகோவிலிருந்து அமெரிக்க எல்லைகளுக்குள் புகுவது அத்தனை சுலபமா? துல்கர் துப்பாக்கியை இவ்வளவு அசால்ட்டாக எடுத்துச் சுடுகிறாரே? ஏதோ சொற்பமாகத்தானே கம்யூனிஸப் பின்னணி வருகிறது...
என்று கேள்விகள் எழத்தான் செய்கின்றன. ஆனால், வெவ்வேறு காரணங்களுக்கு நாடுவிட்டுநாடு போகும் விதவிதமான மனிதர்களுடன் நகரும் அந்த நெகிழ்ச்சியான பயணம் நம்மைப் புதிய அனுபவங்களுக்குள் தள்ளுகிறது. அதுதான் காம்ரேட் இன் அமெரிக்காவை முக்கியமான படமாகவும் மாற்றுகிறது.