பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

"சிவகார்த்திகேயனும் நானும் ஒரே கூட்டணி!”

"சிவகார்த்திகேயனும் நானும் ஒரே கூட்டணி!”
பிரீமியம் ஸ்டோரி
News
"சிவகார்த்திகேயனும் நானும் ஒரே கூட்டணி!”

ம.கா.செந்தில்குமார்

‘‘என்னால் இனி வழக்கமான படங்கள் பண்ணவே முடியாது. அந்த மாதிரியான படங்களைப் பண்ணும் எண்ணமும் எனக்கு இல்லை. தெரிந்தோ தெரியாமலோ அடுத்தடுத்து அழுத்தமான கதைகளாகவே அமைகின்றன. ‘ஒரு பல்பொடி விற்கிறவர்கூட முதல்ல பாம்பையும் கீரியையும் திறந்துவிட்டுக் கூட்டத்தை வர வெச்ச பிறகுதான், ‘பல்பொடி வாங்குறீங்களா’ன்னு கேட்பார். பல்பொடி விற்கவே ஒரு வித்தை வேணும்னா, சினிமா பண்ற நாம எவ்வளவு வித்தைகள் பண்ணணும்’ இது அப்பா அடிக்கடி சொல்லும் வார்த்தைகள். ‘அதென்ன ஏ சென்டர், பி சென்டர். ஒரு படம்னு எடுத்தா, அது எல்லா சென்டர்கள்லேயும் ஓடணும்’ என்பார். ஆமாம், ‘வேலைக்காரன்’ எல்லா சென்டர்களுக்குமான சமூகப் பொறுப்புள்ள படம்.’’ - `தனி ஒருவன்’ வெற்றி மூலம் தமிழ் சினிமாவின் ராஜாவான மோகன்ராஜா இப்போது ‘வேலைக்காரன்’ உடன் வருகிறார். சிவகார்த்திகேயன்-நயன்தாரா இணை, மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில் தமிழில் அறிமுகம், சினேகாவின் ரீ என்ட்ரி என இந்த வேலைக்காரனுக்கு ஏகப்பட்ட சிறப்புகள்!

"சிவகார்த்திகேயனும் நானும் ஒரே கூட்டணி!”

‘‘என்ன மாதிரியான சமூகத்தை இந்த ‘வேலைக்காரன்’ பிரதிபலிப்பான்?’’

`` ‘சூழ்நிலைக்கேற்றமாதிரி நீ மாறாதே, உனக்கேற்ற மாதிரி சூழ்நிலையை மாற்று’ இதுதான் படத்தின் டேக்லைன். அப்படி அறிவு, ஆதி என்று இரு இளைஞர்கள் சூழலைத் தனக்கு சாதகமா மாற்ற நினைக்கிறார்கள். அதில் ஒருவன் நல்லதாகவும் இன்னொருவன் கெட்டதாகவும் மாற்ற நினைக்கிறான். இப்படி மாற்றும் முயற்சியில் யார் வெல்கிறார் என்பதே கதை. இதில் கூவத்தை ஒட்டி வாழும் அறிவுக்கு வசதியில்லை, படிப்பில்லை, உற்றார் உறவினர் கிடையாது. அப்படி என்றால், `இந்தச் சமூகத்துக்கு நான் யார், இப்படிப்பட்ட எனக்கு சமூகப் பார்வை தேவையா இல்லையா, எதுவுமே இல்லாத நான் என் தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்டால் மட்டும் போதுமா, சமூகத்தையும் பார்க்க வேண்டிய அவசியம் எனக்கு இருக்கிறதா?’ என்ற கேள்விகள் எழுகின்றன. இப்படி வீடு, சுற்றம், சமூகம் ஆகிய மூன்று தளங்களையும் ‘அறிவு’ எப்படிக் கடக்கிறான்? ஆதி எப்படிக் கடக்கிறான் என்பதே இந்த ‘வேலைக்காரன்’.

இதுநாள்வரை சினிமாக்களில் வந்த சமூகக் கருத்துகள் கிளர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்தவையே தவிர, நம்மைத் தீர்வை நோக்கித் தள்ளவில்லை என்பது என் தாழ்மையான கருத்து. அப்படித் தீர்வை நோக்கிப் போகணும் என்பதற்கான என் முயற்சிதான் ‘வேலைக்காரன்’. `என்னைச் சுற்றி கெட்டவர்களாக இருக்கும்போது நானும் நல்லவனா வாழ முடியாது என்ற சூழல் வந்தால், அதற்காக நான் கெட்டவனாக மாறமாட்டேன். நான் நல்லவனாக இருக்க உங்களை எல்லாம் நல்லவனாக மாற்றினால்தான் முடியும் என்றால், அதையும் செய்வேன்’ என்பான் அறிவு. இது அவனின் சுயத்துக்கான போராட்டம்தானே தவிர சமூகத்துக்கான போராட்டம் கிடையாது.

"சிவகார்த்திகேயனும் நானும் ஒரே கூட்டணி!”

ஒரு காடு. அதைத்தாண்டி ஒரு கோடிப் பேர். நடுவில் குகை. அதில் பூதம் இருப்பதாக நம்பப்படுகிறது. அதில் இருப்பதாக நம்பப்படும் பூதத்துக்குப் பயந்து அதைக் கடக்க முடியாமல், ஒரு கோடிப் பேரும் நிற்கிறார்கள். இது அந்த ஒரு கோடிப் பேருக்குமான பிரச்னைதான். ஆனால், ஒரு கோடிப் பேரும் சேர்ந்து தீர்க்க வேண்டிய பிரச்னை கிடையாது. அந்த ஒரு கோடியில் யாரோ ஒருவன் குகைக்குள் போய் பூதம் இல்லை என்று சொன்னால் போதும்; அவனால் ஒரு கோடிப் பேருக்குமான பிரச்னையும் தீரும். ஆனால், நாம் ‘இது ஒரு கோடிப் பேருக்குமான பிரச்னை. ஒண்ணா உட்கார்ந்து ஒருநாள் பேசணும்’ என்று பேசிப்பேசியே அடுத்த வேலையைப் பார்க்கக் கிளம்பிவிடுகிறோம். ஆனால் ‘ஏண்டா இப்படி’ என்று தனக்கான பிரச்னைக்குக் கேள்வி கேட்கும் ஒரு வேலைக்காரன், அதன் மூலம் இந்தச் சமூகத்துக்கான பதிலைச் சொல்ல வருகிறான்.’’

"சிவகார்த்திகேயனும் நானும் ஒரே கூட்டணி!”

‘‘சிவாவுக்கு இந்த ஏரியா புதிது. இந்தக் கதையை அவர் உள்வாங்கி எப்படி நடித்தார்?’’

‘‘கடினமான சப்ஜெக்ட்டைத் திரைமொழியில் எளிமைப்படுத்திச் சொல்வதை ஒரு தவம்போல் சிரமப்பட்டுச் செய்வேன். ‘ஸ்கிரீன்ல ஹீரோ ஒரு நிமிஷத்துல ஒரு சாகசம் பண்ணிக் கைத்தட்டல் வாங்குற விஷயத்தை நீ ஒரு மாசம்கூட யோசிச்சு செய். யாரும் எதுவும் கேட்க மாட்டாங்க. ஆனால், அந்த ஒரு நிமிஷ விஷயம் சாதுர்யமா, ஹீரோவைத் திறமையாளன்னு காட்டுறதா இருக்கணும். கூடவே அது நடைமுறைச் சாத்தியங்களோட இயல்பா வெளிப்படணும்’ இதுவும் என் அப்பா சொன்னதுதான். அப்படி இந்தச் சமூக விஷயத்தை ஜனரஞ்சமாகச் சொல்ல மிகச் சரியான ஆளாக எனக்கு சிவா அமைந்தார். இந்த கேரக்டரை சிவா இவ்வளவு அழகாக எளிதாகப் புரிந்துகொள்வார்; கதையில் அவர் இவ்வளவு ஆளுமையோடு இருப்பார் என்பதை நான் எதிர்பார்க்கவே இல்லை. அவருக்காக நானும் எனக்காக அவரும் வளைந்து கொடுப்போம். ஒருநாள் நள்ளிரவைக் கடந்து ஷூட்டிங் போய்க்கொண்டு இருந்தது. சிங்கிள் ஷாட்டில் எடுக்கவேண்டிய சீன்.  நாங்கள் நினைத்ததுபோல் வரவில்லை. உட்கார்ந்து பேசினோம். அந்தக் காட்சியை ஃபைனல் பண்ணும்போது விடிந்துவிட்டது. அது  படத்தில் இன்டர்வெல்லுக்கு முன் வரும் காட்சி. நிச்சயம் கைதட்டல் வாங்கக்கூடிய காட்சியாக இருக்கும். ‘இந்த அறிவு கேரக்டரை சிவகார்த்திகேயன் மட்டுமே பண்ண முடியும்’ என்பதை இன்று என்னால் தெளிவாகச் சொல்ல முடியும். நானும் சிவகார்த்திகேயனும் நல்ல கூட்டணி. அவரும் நானும் மீண்டும் ஒரு படம் பண்ணுவோம்.’’

‘‘இதில் ஃபஹத் ஃபாசில். வில்லனா, இன்னொரு ஹீரோவா?’’

‘‘அவரின் கேரக்டரில் நெகட்டிவ், பாசிட்டிவ் இரண்டு ஷேட்களும் உண்டு. ஆதி என்கிற அவரின் கேரக்டருக்கும் அறிவு என்கிற சிவகார்த்திக்கும் வேறு பெயர்களும் உண்டு. அது கதைக்கான சுவாரஸ்யம். ஃபஹத் என்னிடம் கதையே கேட்காமல்தான், இந்த கமிட்மென்ட் டுக்குள் வந்தார். அவர் மட்டும் அல்ல; சிவா உள்பட யாருமே கமிட் ஆன பிறகுதான் கதை கேட்டனர். அதுவே எனக்குப் பெரிய பொறுப்பைத் தந்தது. ஃபஹத் நடிகர்களில் தனித்து நிற்கிறார். தன்னை எங்கு நிலைநிறுத்த வேண்டும், எப்படித் தனித்துக் காட்ட வேண்டும், தனக்கு என்ன மாதிரியான பேர் வரணும் என்பதில் அவர் தெளிவாக உள்ளார். ஃபஹத் நம் சினிமாக்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் முக்கியமான நபராக இருப்பார், அவ்வளவு அழகாகத் தமிழ் பேசுகிறார். அவரே டப்பிங் பேச உள்ளார். `நீங்க எதை வேணும்னாலும் திங்க் பண்ணுங்கடா. இங்க ஃபஹத் பாசில்னு ஒருத்தன் இருக்கான்டா’ என்று சொல்வதுபோல... ஓர் இயக்குநருக்கு அவர் ஒரு வரப்பிரசாதம்.’’

"சிவகார்த்திகேயனும் நானும் ஒரே கூட்டணி!”

'`தனி ஒருவனை’த் தொடர்ந்து இதிலும் நயன்தாரா. என்ன சொல்றாங்க லேடி சூப்பர் ஸ்டார்?’’

‘‘எனக்கும் நயன்தாராவுக்கும் `தனி ஒருவனி’ல் கொஞ்சம் மனவருத்தம். அப்போது  ஓர் இயக்குநராக எனக்குள் மித்ரனும் சித்தார்த் அபிமன்யுவும் மட்டும்தான் இருந்தனர். அப்படி இருக்கும்போது, ஒரு பெரிய ஹீரோயினுக்கு ‘அப்ப நாம யாரு’ என்று தோன்றும் இல்லையா? அது என் தவறுதான். அந்தப் பட ப்ரிவ்யூ பார்த்துட்டு, ‘ராஜா நான் உங்களுக்கு இன்னும் நல்லா கோ-ஆபரேட் பண்ணியிருக்கலாம். இவ்வளவு நல்ல படத்துல நடிக்கிறோம்னு அப்ப புரியலை’ என்றார். அது அவரின் பெருந்தன்மை. இதில் அவருக்கு மிருணாளினி என்கிற ஹீரோவுக்குப் பக்கபலமாக இருக்கும் கதாபாத்திரம். கதையின் தன்மையை அழகாகப் புரிந்து வேலை செய்யக்கூடியவர். அவரை மெயின் கேரக்டராக வைத்துப் படம் பண்ணும் எண்ணம்கூட எனக்கு உண்டு. அதற்கான கதையும் உண்டு.’’

‘‘உங்களின் முதல் பட ஹீரோயின் சிநேகாவை மீண்டும் சினிமாவுக்கு அழைத்து வந்திருக்கிறீர்கள்...’’

‘‘எங்கள் அப்பாவின் சொந்த ஊர் மதுரை திருமங்கலம். பிசினஸுக்காக தெலுங்கில் 10 வருடங்கள் படங்கள் பண்ணினார். அங்கு அப்பாவுக்கு மிகப்பெரிய பேர். அவர் பேனரில் ‘அனுமான் ஜங்ஷன்’ என்ற தெலுங்குப் படத்தில் இயக்குநராக அறிமுகமானேன். அந்தப் படத்தின் கதாநாயகிதான் சிநேகா. அந்தப் படம் பண்ணின 16 வருஷத்துக்குப்பிறகு, இப்போது மீண்டும் சேர்ந்து படம் பண்ணுகிறோம். அவரின் என்ட்ரி டைமில் படம் பண்ணிய நான், இப்போது அவரின் ரீ என்ட்ரி டைமிலும் படம் பண்ணுவது மகிழ்ச்சி. இந்த கேரக்டருக்காக ஒரு மாத இடைவெளியில் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்றேன். கடுமையான டயட், உடற்பயிற்சியின் மூலம் ஏழு கிலோ எடை குறைத்தார். தவிர ரொம்பவும் கஷ்டப்பட வேண்டிய கேரக்டர். முகம் சுளிக்காமல் நடித்தார். கஸ்தூரி என்ற அவரின் கேரக்டருக்கு அவ்வளவு நியாயம் செய்துள்ளார். இப்படி இந்த வேலைக்காரனுக்காக பல நல்ல உள்ளங்கள் சேர்ந்து உழைத்து இருக்கிறோம்.’’