பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“அர்விந்த் சுவாமி டைரக்டர் ஆகப்போறார்!”

“அர்விந்த் சுவாமி டைரக்டர் ஆகப்போறார்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“அர்விந்த் சுவாமி டைரக்டர் ஆகப்போறார்!”

ம.கா.செந்தில்குமார்

‘‘நான் தமிழ்ல ‘சலீம்’ படம் பண்ணிட்டு, அதை வெங்கடேஷை வைத்து தெலுங்கில் பண்றதுக்கான வேலைகள்ல இருந்தேன். அப்போ மனோபாலா சார் ‘சதுரங்க வேட்டை-2’ பண்ணணும்னு கூப்பிட்டார். அவர், எங்க இயக்குநர் பாரதிராஜா சாரின் டீம்ல எனக்கு சூப்பர் சீனியர்.

‘முதல் பாகத்தை இயக்கிய வினோத்தான் ரெண்டாவது  பாகத்துக்கான ஸ்க்ரிப்டை எழுதியிருக்கார்’னு சொன்னார். ‘என் ஸ்க்ரிப்ட்டைத் தாண்டி மத்தவங்க  ஸ்க்ரிப்டை டைரக்ட் பண்றதில்லைங்கிற உறுதியோடு இருக்கேன். அதனால வேற யாரையாவது வெச்சுப் பண்ணுங்க சார்’னு சொன்னேன். ‘நான் உங்களைக் கட்டாயப்படுத்தலை. முதல்ல நீங்க ஸ்க்ரிப்டைப் படிங்க. பிடிச்சிருந்தா பண்ணுங்க. க்ரியேட்டிவிட்டியில் உங்களுக்கு முழு சுதந்திரம் இருக்கு. தேவைன்னு நினைக்கிற இடங்கள்ல மாற்றங்கள்கூட பண்ணிக்கலாம்’னு சொன்னார். ஸ்க்ரிப்டைப் படிச்சேன். அப்படியொரு முழுமையான ஸ்க்ரிப்ட்.

வினோத் அவ்வளவு அழகாப் பண்ணியிருந்தார். பிறகு, அவர்கூட உட்கார்ந்து பேசி, ‘இதை வெச்சுக்கலாம்... இதை எடுத்துடலாம்’னு முடிவுபண்ணினோம். ஃபைனல் கரெக்‌ஷன் வரை முடிச்சுக் கொடுத்துட்டுதான் வினோத் போனார். “என் கதையை மட்டும்தான் டைரக்ட் பண்ணுவேன்’னு இதை விட்டிருந்தேன்னா, இப்படியொரு இன்டலிஜென்ட் மூவியை நிச்சயம் மிஸ் பண்ணியிருப்பேன்.’’ - இயக்குநர் எம்.வி.நிர்மல்குமாரின் பேச்சில் அப்படியொரு நிதானம். கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் உதவி இயக்குநராக இருந்து சினிமா கற்றவர்.

“அர்விந்த் சுவாமி டைரக்டர் ஆகப்போறார்!”

‘‘தோத்தாத்திரி. இதுதான் என் ஒரிஜினல் பெயர். சொந்த ஊர் போடி சங்கராபுரம். முதல்ல எஸ்.ஏ.சந்திரசேகர் சாரின் அசிஸ்டென்ட். நாலு வருஷங்கள் அவர்கூட இருந்தேன். ஃப்ரெண்ட் ஒருத்தர் தனியா படம் பண்ணும்போது அவர்கிட்ட கோ-டைரக்டரா சேர்ந்தேன். அந்த டைரக்டருக்கு பாரதிராஜா சாரின் மகன் மனோஜை ஹீரோவா அறிமுகப்படுத்த ஒரு வாய்ப்பு வந்துச்சு. அப்படித்தான் பாரதிராஜா சாரை முதன்முதல்ல சந்திச்சேன். அப்ப, ‘யோவ்... நீ என்கூட இருய்யா’ன்னார். அப்படிச் சேர்ந்த நான், கிட்டத்தட்ட 13 வருஷங்கள் அவர்கிட்ட உதவி இயக்குநரா இருந்தேன். அப்படியே கிட்டத்தட்ட 20 வருஷங்கள் அசிஸ்டென்ட் டைரக்டராவே இருந்தாலும், ஒருநாள்கூட வேஸ்ட் பண்ணது இல்லை. எங்க டைரக்டர் இப்பவரைக்கும் என்னைத் தன் புள்ளை மாதிரிதான் பார்த்துக்கிறார். அவர் தன் அசிஸ்டென்ட்டுகள் எத்தனை பேருக்கு லட்ச ரூபாய் சம்பளம் கொடுத்திருப்பார்னு எனக்குத் தெரியாது. எனக்குக் கொடுத்துட்டிருந்தார். அவ்வளவு ஏன்... முதல் படம் ‘சலீம்’ பண்ணும்போதுகூட, `நம்மகிட்ட அசோசியேட்டா இருந்து சம்பளம் வாங்கிக்கிட்டிருந்தவன். இப்ப படம் பண்றான். இதுல எல்லாத்தையும் சேர்த்து அவனுக்கு மொத்தம் ஏழெட்டு லட்சம் கொடுப்பாங்களா? நிறைய கமிட்மென்ட் வெச்சிருப்பானே’னு நினைச்சு அந்தப் படம் முடியுற வரைக்கும்கூட எனக்கு சம்பளம் கொடுத்துட்டிருந்தார். சினிமாவோடு சேர்த்து எனக்கு வாழ்க்கையையும் கத்துக்கொடுத்தவர்னா, அது எங்க டைரக்டர் பாரதிராஜா சார்தான்.’’

“அர்விந்த் சுவாமி டைரக்டர் ஆகப்போறார்!”

‘‘தோத்தாத்திரி நல்ல பெயர்தானே, ஏன் நிர்மல்குமார்னு மாத்தினீங்க?’’

‘‘ ‘சலீம்’ பண்ணும்போது விஜய் ஆண்டனி சார், ‘தோத்தாத்திரிங்கிறது நெகட்டிவா இருக்கு. நீங்க பாசிட்டிவான ஆளு. முதல்ல பேரை மாத்துங்க’னு சொன்னார். ‘எஸ்.ஏ.சி சார்தான் என் ஒரிஜினல் பேரை மாத்தி விஜய் ஆண்டனிங்கிற இந்தப் பேரோடு, ‘சுக்ரன்’ல என்னை அறிமுகப்படுத்தினார். நீங்களும் மாத்துங்க சார், நல்லா வருவீங்க’னு சொன்னார். ஒரு நியூமராலஜிஸ்ட் சொன்னபடி என் பேரை `எம்.வி.நிர்மல்குமார்’னு மாத்திக்கிட்டேன்.”

‘‘இது ‘சதுரங்கவேட்டை’யின் தொடர்ச்சியா அல்லது வேறு கதையா?’’

‘‘முதல் பாகத்துல வரும் காந்திபாபு கேரக்டர் மட்டும் இதில் தொடர்ச்சியா டிராவலாகும். மற்றபடி இது வேற படமாகத்தான் இருக்கும். ஒருவேளை ‘சதுரங்கவேட்டை’ பார்க்காதவங்ககூட இந்தப் படத்தைப் பார்த்தாங்கன்னா, அவங்களுக்கு இது ஃப்ரெஷ்ஷான படமாத்தான் தெரியும். ‘சதுரங்கவேட்டை’ லோக்கல்னா, இது கொஞ்சம் ஹைடெக்கா இருக்கும். இன்னிக்கு உள்ள ஒரு பிரச்னையை இதில் அழகா பிரசென்ட் பண்ணியிருக்கோம்.’’

“அர்விந்த் சுவாமி டைரக்டர் ஆகப்போறார்!”

‘‘இதன் கதை எப்படியிருக்கும்?’’

‘‘ ‘இந்த சிஸ்டத்தைப் புரிஞ்சுக்க. அதை மாற்ற முயற்சி பண்ணாதே. அதைப் பயன்படுத்திட்டுப் போயிட்டே இரு’ இதுதான் என் ஹீரோ காந்திபாபுவின் பாலிசி. இப்படி இந்த சிஸ்டத்தையும் தன் மூளையையும் பயன்படுத்தி எல்லாத்தையும் பணமாக்கும் காந்திபாபு, கடைசியில் சிக்கினானா இல்லையா என்பதே கதை. சென்னைதான் களம். அர்விந்த் சுவாமி இதில் வேற லெவல்ல, வேறொரு டைமன்ஷன்ல இருப்பார்.
கூடவே த்ரிஷா. இந்த ஜானர் படங்களை இதுவரை இவங்க ரெண்டு பேருமே பண்ணலைனு சொல்லலாம்.’’

“அர்விந்த் சுவாமி டைரக்டர் ஆகப்போறார்!”

‘‘அர்விந்த் சுவாமிகூட வொர்க் பண்ற அனுபவம் எப்படியிருக்கு?”

“‘மணிரத்னத்தால் அறிமுகப்படுத்தப் பட்டவர்; பெரிய டைரக்டர்களோடு வொர்க் பண்ணினவர்;  இது நமக்கு ரெண்டாவது படம். இவரை எப்படி ஹேண்டில் பண்ணப்போறோம்’கிற சின்னத் தயக்கம் இருந்துச்சு. ஆனா, முதல் நாள் போட்டோ ஷூட்லயே அதை அவர் பிரேக் பண்ணிட்டார். அவ்வளவு எளிமையா பழகுறார். ‘இப்படிப் பண்ணுங்க’னு சொல்லும் போது அப்படியே நம்ம கூடவே கதைக்குள்ள வந்து நம் மனசுல இருக்கிறதைப் புரிஞ்சுக்கிட்டு அவ்வளவு ஈஸியா நடிச்சுட்டுப் போறார். ‘இது ஏன், அது எதுக்கு?’ங்கிற கேள்வியே கிடையாது. சமயங்கள்ல சந்தேகம் கேட்பார். அதுக்கு சரியான பதில் சொல்லிட் டோம்னா, போயிட்டே இருப்பார். அவரோட அமைதியான அந்த அழகு, அந்த வேரியேஷன், டைமன்ஷன்  எல்லாம் படம் பார்க்கும்போது உங்களுக்கே நல்லா தெரியும்.இன்னொரு சர்ப்ரைஸ் செய்தி சொல்லவா? அவர் கூடிய சீக்கிரமே டைரக்டர் ஆகப்போறார்.’’

“அர்விந்த் சுவாமி டைரக்டர் ஆகப்போறார்!”

‘‘த்ரிஷா, சினிமாவுல தன் 15-வது வருஷத்துல இருக்காங்க. அவங்க அனுபவத்துக்கு என்ன பண்ணியிருக்காங்க?’’

‘‘ ‘இதுதான் காட்சி. இதை இப்படிப் பண்ணலாம். நீங்க எப்படிப் பண்ணுவீங்க?’னு கேட்டதும், ‘இப்படிப் பண்ணலாம். இப்படியும் பண்ணலாம். உங்களுக்கு எது சரியா இருக்கு?’னு அவங்க கேட்ட முதல் நாள் ஷூட்ல தொடங்கி, கடைசி நாள் பூசணிக்காய் உடைக்கிறவரை அதே ஆர்வத்தோடு இருந்தாங்க. ஹீரோ-ஹீரோயின் களுக்குள்ள இருக்கிற அந்த டிட் ஃபார் டாட் அழகா வொர்க்அவுட் ஆகியிருக்கு. எப்படா வெடிக்கும்கிற மாதிரியான ஆக்‌ஷன் அட்வெஞ்சர் அண்டர் கரன்ட்ல இருந்துட்டே இருக்கும். அதுக்கு இந்த ஜோடி செமையா செட் ஆகியிருக்கு. அதுதான் இந்தப் படத்தின் பலம்.”