சினிமா
Published:Updated:

“கமலி ஊட்டில இருந்து ஸ்வெட்டர் கொடுத்துருக்குண்ணே!”

“கமலி ஊட்டில இருந்து ஸ்வெட்டர் கொடுத்துருக்குண்ணே!”
பிரீமியம் ஸ்டோரி
News
“கமலி ஊட்டில இருந்து ஸ்வெட்டர் கொடுத்துருக்குண்ணே!”

ஆர்.சரண் - ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி

து ஓர் அழகிய மாலைப்பொழுது. அல்ட்டிமேட் ஸ்டார் அஜித்தின் சில பல நேற்றைய சினிமா கேரக்டர்கள் இன்றைய `விவேகம்’ ஏ.கே என்ற அஜய் குமாரை ஜிம் ஒன்றில் சந்திக்கிறார்கள். எப்படி இருக்கும்..? இன்செப்ஷன் ஸ்டைலில் கனவுக்குள் கனவாகக் காட்சிகள் விரிகின்றன... வாங்க மக்களே அஜித்துகளைப் பார்க்கலாம்...

“கமலி ஊட்டில இருந்து ஸ்வெட்டர் கொடுத்துருக்குண்ணே!”

``இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும், எல்லாச் சூழ்நிலையிலயும் நீ தோத்துட்ட நீ தோத்துட்டன்னு உன் முன்னாடி நின்னு அலறினாலும், நீயா ஒத்துக்கிறவரைக்கும் எவனாலயும் எங்கேயும் உன்னை ஜெயிக்கவே முடியாது. NEVER EVER GIVE UP’’ என்றபடி  ட்ரெட் மில்லில் ஓடிக் கொண்டிருக்கிறார் ஏ.கே. அவரைச் சந்திக்க  `காதல் கோட்டை’ சூர்யா, `வீரம்’ விநாயகம்,  ‘வேதாளம்’ கணேஷ், `பில்லா’ - டேவிட் பில்லா, `கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன்’ மனோகர்,  ‘காதல் மன்னன்’ சிவா, ‘சிட்டிசன்’ சுப்ரமணி, ‘மங்காத்தா’ விநாயக் மகாதேவ், `வாலி’ சிவா, ‘அமர்க்களம்’ வாசு, ‘என்னை அறிந்தால்’ சத்யதேவ், ‘தீனா’ தீனதயாளன், ‘ஆரம்பம்’ அசோக் குமார் என ஒரு பட்டாளமே ஜிம்மிற்குள் நுழைகிறார்கள்.

வந்ததும் வெறியேறியதைப்போலக் கத்துகிறார் ‘மங்காத்தா விநாயக் மகாதேவ்’, ``திஸ் இஸ் மை **** கேம். நான்தான் ட்ரெட்மில்ல நடப்பேன்’’ என்றபடி ஏ.கே-யை இறங்கச் சொல்லிவிட்டு நடக்க ஆரம்பிக்கிறார். சவுண்ட் சிஸ்டத்தில் `மங்காத்தா’ தீம் மியூஸிக் ஒலிக்க ஆரம்பிக்கிறது. அப்போது  பூ எம்ப்ராய்டரி ஸ்வெட்டர் போட்டிருக்கும் `காதல் கோட்டை’ சூர்யாவைப் பார்த்து,  ‘`ஸ்வெட்டர் போட்டிருக்கும் ஸ்வாக் நண்பா... நீ பி.ஜே.பி ஆளா..? இப்படி சென்னை வெயிலில் பட்டப்பகலில்... ஸ்வெட்டரோடு அலையலாமா நண்பா..?’’ என்று கேட்கிறார் ஏ.கே. ‘`அண்ணே... ஊட்டில இருந்து கமலி ஸ்வெட்டர் அனுப்பி வெச்சிருக்குண்ணே. அதான்!’’ என்கிறார்.

 ``ஓ... பார்க்காமலே லவ் பண்ணிட்டு க்ளைமாக்ஸ்ல சேர்ந்தீங்களே..? எப்படி இருக்கா உன் காதல் கமலி?’’ - கேள்வியைக் கேட்டதும் ‘சூர்யா’ அஜித்துக்குத் தலை தொங்குகிறது. ``பார்க்காமலே லவ் பண்ணி, கல்யாணம் பண்ணிக்கிட்டவன் நான். கொஞ்சம் பார்த்துப் பண்ணியிருக்கலாமோனு நினைக்க வெச்சுட்டா ப்ரோ. இப்போ கோச்சுக்கிட்டு ஊட்டியில இருக்குற அவ அக்காவீட்டுக்குப் போயி குத்த வெச்சிருக்கா. வேணும்னே தினமும் ஒரு பூ எம்ப்ராய்டரி போட்டு ஸ்வெட்டர் அனுப்பி வைக்கிறா... கனகாம்பரம் வாழைப்பூவை யெல்லாம் அனுப்புறா ப்ரோ. லவ் தான் சக்சஸ் ஆகிடுச்சேனு கேட்டுட்டேனாம். நீங்களே சொல்லுங்க, தாமரைப்பூ ஸ்வெட்டர் போட்டுக்கிட்டு  நான் விதவிதமா செல்ஃபி எடுத்து அப்லோட் பண்ணணுமாம். நாடு இருக்குற நிலைமையில அதை நான் போட்டுக்கிட்டு வெளில நடந்தா மோடி ஆளுனு எல்லோரும் ஒருமாதிரி பார்க்குறாங்க ப்ரோ. நெதமும்  இன்னிக்கு என்ன சேலன்ஜ் ட்ரெண்டு பண்ணப்  போறாளோனு பயந்துவருது ப்ரோ.’’

``ஓஹோ... உன்னையும் முதுகுல குத்திட்டாங்களா நண்பா? பிட்டி ஆன் யூ’’ என்கிறார் ஏ.கே. “பொண்டாட்டிக்கு பயந்தவனுக்குத்தான் தினம் தினம் சாவு. பொண்டாட்டிக்கு பயப்படாதவனுக்கு அன்னிக்கே சாவு. வலி தாங்க முடியலைப்பா!” கையில் மாவுக்கட்டோடு என்ட்ரி ஆகிறார் டேவிட் பில்லா. அந்த நேரம் க்ரீஸ் கறுப்பு முகத்தில் அப்பியிருக்கும் `காதல் மன்னன்’ சிவாவும் என்ட்ரி கொடுக்கிறார்.

 ‘`அண்ணே! எனக்கு ஒரு டவுட். இதுவரைக்கும் எத்தனை பேரு உங்க முதுகுல குத்தியிருக்காங்க? ஏன்னா எல்லாப் படத்திலயும் கீறல் விழுந்த ரெக்கார்டாட்டம் இதையே திரும்பத் திரும்பச் சொல்றீங்க! நீங்க சொல்றதை வெச்சுப் பார்த்தா, இந்நேரம் உங்க முதுகு பூந்திக் கரண்டி மாதிரி ஆகி இருக்கணும். சட்டையக் கழட்டுங்க நான் பார்க்கணும். ஒரு ரூபா பந்தய ரேஸுக்குப் போகணும்  ஏய்,  திலோத்தமா!”-  என ஹை பிட்ச்சில் அலறுகிறார். இதைக்  கேட்டதும் ரிசார்ட்டுக்குச் செல்லும் எம்.எல்.ஏ போலக் குதூகலமாகி, பெப்பர் தூக்கலான ஹேர்ஸ்டைலில் தலைகோதிச் சிரிக்கிறார் ஏ.கே.

“கமலி ஊட்டில இருந்து ஸ்வெட்டர் கொடுத்துருக்குண்ணே!”

``இந்தச் சிரிப்புதான் செம. தங்கமே தங்கமே என்ன ஆச்சு... உன்னைப் பார்த்ததும் நெஞ்சிலே பொங்கலாச்சு!’’ - என்று குதித்து டான்ஸ் ஆடுகிறார் `வீரம்’ ஒட்டன்சத்திரம் விநாயகம். பொறுப்பாரா ‘வாலி’ப அஜித்? ``பார்த்தீங்களா ப்ரோஸ்... லுக் அலைக்காம் ரெண்டுபேரும் எப்படிக் கூட்டணி சேர்றாங்கன்னு பார்த்தீங்கல...நான்லாம்  `சோனா’னு சோலோவா பாடுன ஆளு. வாயில பப்பிள் கம் வெச்சு மென்னா நான் எங்க அண்ணனா மாறி இன்செஸ்ட் கதையா மாத்திடுவேன். ஒருநாள் மவுத் ஆர்கன் வாசிச்சுட்டிருந்தேன்...” - சொல்லிக் கொண்டிருக்கும்போதே நாலெழுத்து ஆங்கிலக் கெட்ட வார்த்தையில் திட்டுகிறார் மங்காத்தா அஜித்.   சிவாவின் வாலிபப் பொங்கல் அதோடு ஆஃப்.

பபிள் கம் மெல்ல ஆரம்பித்து `வாலி’ தேவா மோடுக்குப் போகிறார் `வாலி’ சிவா அஜித். “ஆமா... உங்க எல்லோர்கிட்டயும் கேட்கணும்னு நினைச்சேன். அதுக்குதான் ஜிம்முக்கு வரச் சொன்னேன். `விவேகம்’ நல்லாதானே இருந்துச்சு. ஏன் மிக்ஸ்டு ரிவ்யூஸ் வருது. உங்களுக்குப் பிடிச்சதா?” ,   “மெல்லிசான கோடு... கோட்டுக்கு இந்தப் பக்கம் தமிழ்ப்படம். கோட்டுக்கு அந்தப்பக்கம் ஹாலிவுட் படம். ஐ லைக் இட் வெரி மச் யா!” - இது சத்யதேவ் ஐ.பி.எஸ்.

“ஆக்சுவலி நான் இந்தப் படத்தை டைரக்ட் பண்ணியிருக்கலாம்’’ என ஆரம்பிக்கிறார் `கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’   மனோகர். ``படத்துக்கு `முதுகு’னு செம டைட்டில் பிடிச்சிருப்பேன். படத்தோட ஓப்பனிங் ஷாட்ல ட்ரெயின் மேல நடக்க ஆரம்பிக்கிறீங்க. இன்டெர்வெல்லுக்குத்தான் அரக்கோணம் ஜங்ஷன்ல ட்ரெய்ன் நிக்குது. கீழ இறங்கி வர்றீங்க. வந்தா காஜல் அகர்வால் காத்து வாங்குறதுக்காக கம்பார்ட்மென்ட்டை விட்டு இறங்கி நிக்கிறாங்க. அவங்க காதுல கிடக்கிற கம்மலை ஒரு கம்மனாட்டி அத்துக்கிட்டு ஓடுறான். கபால்னு அவனைப் பிடிச்சு, ‘கம்மலைத் திருப்பிக் கொடு. இல்லை, சென்ட்ரல் போறப்போ செத்திருப்பே!”னு சொல்றீங்க.  ‘கமல்லாம் கிடையாது. வேணும்னா விமலை வாங்கித் தர்றேன்!’னு வெறுப்பேத்திட்டு ட்ரெய்னுக்குள்ள ஏறிக் காணாமப் போயிடுறான் அந்தக் கம்னாட்டி. ஏ.கே அவனைக் கண்டுபிடிச்சு கமலை... சே... கம்மலை மீட்டுக்கொடுத்து காஜலை கரெக்ட் பண்ணி ஸ்டைலா டாப்ல நடந்து போறாரு. அவங்க முதுகுல எண்டு கார்டு போடுறோம். எப்டி?!”  - மனோகர் ஷார்ப்பாகக் கதை சொல்லி முடித்ததும், இடுப்பில் கை வைத்தபடி நிற்கும் அமர்க்களம் வாசு, “ஏய்... நீ இந்தப் படத்தை தியேட்டர்ல ஓட்டுனா நானே ரீல் பெட்டியைத் தூக்கிட்டு ஓடிருவேன்... ஏய்... நான் பார்த்துப் பார்த்துத் தண்ணி ஊத்தி வளர்த்த வீட்டு மரம் இல்லை. தானா வளர்ந்த காட்டுமரம்!” என்கிறார்.

  ட்ரெட் மில்லை விட்டு இறங்கி வரும் விநாயக் மகாதேவ், “லைட்டைப் போட்டு வண்டி ஓட்டலாம். லைட்டா போட்டு வண்டி ஓட்டக் கூடாது. இன்னும் தலை கிர்ருங்குது ஏ.கே சார். கொஞ்சம் லெமன் ஜூஸ் கிடைக்குமா?” எனக் கேட்கிறார். “வீட்டுல இருக்குற லெமனை எல்லாம்  விளக்கு  பூஜைக்குக் கொண்டு போயிட்டா என் ஒயிஃப். ஸாரி ப்ரோ!” என்று ஏ.கே சொல்ல, “ஓ...  இதுக்குப் பேருதான் லெமனை வெச்சு எமனோட பாசக்கயித்துல இருந்து காப்பாத்துறதா? குட் லெமன்... ஸாரி குட்  உமன்!” என கவுன்டர் கொடுக்கிறார்  டேவிட் பில்லா.  “நாம இப்படிப் பேசிட்டே இருந்ததால பக்கத்து ஸ்டேட் ஆளுக ஸ்பை வெச்சு உள்ள வர ஆரம்பிச்சிட்டாங்க.” அலர்ட் ஸ்டேட்மென்ட் கொடுக்கிறார் ஏ.கே.

“ஆம்.  மெர்சல்  உரசல்னு எதிரிகூட சண்டை போடுறதை விட்டுட்டு, சிவா 234 தொகுதியில் டிஸ்கஷன் போறதுக்குள்ள அவரைத் தூக்குறோம். நம்ம அடுத்த ஆப்பரேஷன் `வி’ ” என்று  தீனா சொல்ல... `மேக் இட் சிம்ப்பிள்’ என எல்லோரும் கோரஸாகக் கத்துகிறார்கள்.