சினிமா
Published:Updated:

விஜய்சேதுபதி 25

விஜய்சேதுபதி 25
பிரீமியம் ஸ்டோரி
News
விஜய்சேதுபதி 25

பரிசல் கிருஷ்ணா - படம்: மக்கா ஸ்டூடியோஸ்

``இந்த வருஷம் இவரோட என்ன படம் ரிலீஸாகுது?” என்று கேட்பதைத் தாண்டி, ``இந்த வாரம் இவரோட எந்தப் படம் ரிலீஸாகுது?” என்று கேட்க வைத்த ஹீரோ. கூட்டத்தில் ஒருவனாய் நடிக்க ஆரம்பித்து, இன்று பெரும் மக்கள் கூட்டத்தையே தன் பக்கம் திருப்பியிருக்கும் விஜய் சேதுபதியின் ‘வாவ் 25’ இங்கே!

விஜய்சேதுபதி 25

ராஜபாளையத்துக்காரர். விஜய் சேதுபதியுடன் சேர்த்து உடன்பிறந்தவர்கள் நான்கு பேர். எல்லோருக்குமே பெரிய பெயர்கள்.  அண்ணன் உமா சண்முகப் பிரியன். தம்பி, யுகபாரதி ராமநாதன். தங்கை ஜெயஸ்ரீ சிம்மவாகினி. விஜய் சேதுபதியின் பெயரும் பெரிய பெயர்தான்: விஜய குருநாத சேதுபதி!

 2   மனைவி ஜெஸ்ஸி. யாஹு சாட் லவ். `அவங்க வேலைக்குப் போய் குடும்பத்தைப் பார்த்துக்கிட்டதால, நான் வாய்ப்புகள் தேடி ஓட ஆரம்பிச்சேன். இன்றைய என் வளர்ச்சிக்கு அச்சாரம் அவங்க” என்பார். மகன் சூர்யா. மகள் ஸ்ரீஜா. மகன் சூர்யா `நானும் ரவுடிதான்’ படத்தில் சிறுவயது விஜய் சேதுபதியாக நடித்திருப்பார்.

 3  அம்மா சரஸ்வதி இவரை “அப்பா” என்றுதான் அழைப்பார். இவர் அம்மாவை அழைப்பது: “டேய் சரசு.”

  4      துணிக்கடை சேல்ஸ்மேன், டெலிபோன் பூத் ஆபரேட்டர் என்று சின்னச் சின்னதாய் நிறைய வேலைகள் செய்திருக்கிறார் விஜய் சேதுபதி. கல்லூரிப்படிப்புக்குப் பின் துபாயில் அக்கவுன்டன்ட் வேலை. விடுமுறையில் மனைவி ஜெஸ்ஸியைப் பார்க்க இந்தியா வந்த சேதுபதி, `இனி துபாய் வேண்டாம்’ என உதறிவிட்டு, குறும் படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

விஜய்சேதுபதி 25

`இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ - பட ரிலீஸுக்கு முன்பு வரை சென்னையின் தெருவோர டீக்கடைகளில் நண்பர்களோடு அரட்டையடித்தபடி விஜய் சேதுபதியைப் பலர் பார்த்திருக்கக் கூடும். அந்தப் படத்தின் `சுமார் மூஞ்சி குமாரு’ செம ஹிட்டடிக்க, ரசிகர்கள் சுற்றி வளைக்க டீக்கடை மீட்டிங்குகளைத் தவிர்க்க ஆரம்பித்தார்.

 6  பைக் பிரியர். அதுவும் புல்லட் என்றால் கூடுதல் அன்பு. சில வருடங் களுக்கு முன் பழைய ராஜ்தூத் பைக்கைத் தேடிப்பிடித்து வாங்கினார். சேதுபதி படத்தில், குடும்பத்தோடு பைக்கில் போவது போல, சென்னை வீதிகளில் ஹெல்மெட் போட்டுக்கொண்டு குடும்ப சகிதம் இன்றும் வலம்வருகிறார். `சேதுபதி’ படத்தின் குடும்பக் காட்சிகள் விஜய் சேதுபதியின் ரியல் லைஃப் ரெஃபரன்ஸ்கள்தான்.   

 7  பாலுமகேந்திராவின் இயக்கத்தில் `அனல்காற்று’ என்று பெயரிடப்பட்ட படத்தில் நடிக்கவிருந்தார் விஜய்சேதுபதி. சிலகட்டப் பேச்சுவார்த்தைக்குப்பின் படம் டிராப் ஆகிவிட்டது.  ஆனால் அப்போது, `உனக்கு நல்ல ஃபோட்டோஜெனிக் முகம்’ என்று சொல்லி, பாலு மகேந்திரா தன்னை எடுத்த புகைப்படத்தைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார் விஜய் சேதுபதி.

 8  தான் நடித்த படத்தில் அவருக்கு மிகப்பிடித்த படங்கள் `பண்ணையாரும் பத்மினியும்’ மற்றும் `ஆரஞ்சு மிட்டாய்’.

 9  நண்பர்களுக்காக கால்ஷீட் கொடுப்பதில் வள்ளல். ஆரம்பத்தில் நண்பர்களுக்காக கெஸ்ட் ரோலில் பல படங்களில் தலைகாட்டியவர் பிற்பாடு, நேரமின்மை காரணமாகக் குறைத்துக் கொண்டார்.

விஜய்சேதுபதி 25

10   பாடல்கள் கேட்பது பொழுதுபோக்கு.  அதுவும் பிளாக் அண்டு வொய்ட் காலப்பாடல்கள் மிகப்பிடிக்கும். கேரவனுக்குள் இருக்கும்போது பழைய பாடல் வீடியோக்கள் பார்ப்பதும், கேட்பதும்தான் சேதுபதியின் ரிலாக்ஸ் ரகசியம்.

 11  புத்தகம் படிக்க,  சினிமா பார்க்க நேரமில்லாததை பெரிய குறையாகச் சொல்வார். ``நெறைய இலக்கியம் படிக்கணும்” என்பார். ஏகப்பட்ட படங்களின் கலெக்‌ஷன் வைத்திருக்கிறார். அதற்காகவே லேப்டாப் ஒன்றை வாங்கி கூடவே கொண்டு செல்கிறார். ``ஆனால் 10 நிமிஷம்கூட பார்க்க டைம் கிடைக்குறதில்ல’’ என்பார்.

 12   உலக சினிமா என்றெல்லாம் சொன்னால் ஜெர்க் ஆவார். ``நம்ம தமிழ்ப் படம் பார்த்தே நிறைய கத்துக்கலாம்’’ என்பது விஜய் சேதுபதி வெர்ஷன். நிறைய படங்கள் பார்த்து நண்பர்களோடு மணிக்கணக்கில் விவாதிப்பார்.

13  2006-ல் சீரியல் ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கும்போதுதான் ஹீரோ வாய்ப்பு தலைகாட்டத் தொடங்கியிருக்கிறது. ` என்ன ஹீரோவா?’ என்று ஆச்சர்யப்பட்டு அதற்குப்பிறகு தான் ஜிம், டயட் என்று சீரியஸாகத் தன்னை மாற்றிக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார் விஜய் சேதுபதி.

14   ஆரம்ப காலத்தில் கன்னடத்தில் ஒரு படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். அந்தப் படம் ரிலீஸாகவில்லை.

15  சின்னச்சின்ன அவமானங்களை மறக்கவே மாட்டார். ``அவற்றிலிருந்து நிறைய கத்துக் கிட்டேன்’’ என்பார்.

விஜய்சேதுபதி 25

16  சினிமா உலகில் விஜய் சேதுபதியின் பெஸ்ட் ஃப்ரெண்ட் ரமேஷ் திலக். பாபி சிம்ஹாவும் செம க்ளோஸ்.

17 `தென்மேற்குப்  பருவக் காற்று’ வெளியான சமயம், பாலுமகேந்திராவுடன் இவர் எடுத்துக்கொண்ட புகைப் படம் ஒன்றை நண்பர்கள் பெரிய சைஸில் ஃப்ரேம் செய்து பிறந்தநாள் பரிசாகக் கொடுத்திருக்கிறார்கள். விஜய் சேதுபதிக்குப் பிடித்தவை லிஸ்ட்டில் அந்தப் புகைப் படமும் ஒன்று.

18  போனை அடிக்கடி மாற்றிக் கொண்டிருப்பார். புதிய வெர்ஷன் வாங்குவ தற்காக என்பது மட்டுமல்ல. போன் அடிக்கடி உடைவதும் காரணம்.

19  சமூக, அரசியல் பார்வை நிறைய உண்டு. நண்பர் களுடனான விவாதத்தின்போது இவருடைய கருத்துகளும், பார்வைகளும் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தும். 

20   ஆரம்பத்தில் மொபைலில் `ஃப்ருட் நின்ஜா’ கேம் பிரியராக இருந்தார். சில வருடங்கள் முன்புவரை, தினமும் மாலையில் தி.நகர் நடேசன் பார்க்கில் பேட்மிண்டன் விளையாடச் செல்லும் பழக்கம் இருந்தது.

21   `தென்மேற்குப் பருவக்காற்று’ ஸ்கிரிப்டைக் கொடுத்துப் படித்துவரச்சொல்லி, 2 மணி நேரம் அதைப் பற்றிக் கருத்து கேட்டிருக்கிறார் சீனு ராமசாமி. `முதல் பட ஹீரோகிட்ட அதெல்லாம் அவர் கேட்கணும்னு அவசியமே இல்லை. நான் ரொம்ப லக்கினு நெனைச்சுக்கிட்டேன்’ என்பார் விஜய் சேதுபதி.

விஜய்சேதுபதி 25

22    தயாரிப்பாளர்களைவிட, இயக்குநர்களுடன் மிகவும் நெருக்கமாகப் பழகுபவர் விஜய் சேதுபதி. அதனால்தான் பட வாய்ப்புகள் தயாரிப்பாளர்கள் மூலமாக என்பதைவிட, இயக்குநர்கள் மூலமாகவே அதிகம் வரும். அவர்களோடு காட்சிகள் குறித்து விவாதிப்பது, இன்னும் ஆழமாக அலசுவது என்று இயக்குநர்களோடு இவருக்கான நெருக்கம் கோலிவுட்டில் பிரபலம். 

23  ‘கொடுத்ததை நடிச்சுட்டுப் போறது மட்டும் நடிகன் வேலை இல்லை’ என்பது விஜய் சேதுபதி யின் பார்வை. ‘கேமராமேனுக்கு ஒரு ஐடியா தோணும். டைரக் டருக்கு ஸ்பாட்ல ஒரு ஐடியா தோணும். அப்படித்தான், நடிகனுக்கும் தோணும். அதை நான் சொல்லுவேன். அதை எடுத்துட்டு விவாதிச்சு பெஸ்டா இருந்தா பண்ணுவோம். அது இடைஞ்சல்னோ,  தலையீடுன்னோ பார்க்காம இருக்கணும்’ என்பார்.

24   தயாரிப்பாளர், பாடகர், கவிஞர், எழுத்தாளர் என்று பல முகங்கள் உண்டு. இவர்களைத் தாண்டி ஒரு திரைக்கதை ஆசிரியர் விஜய் சேதுபதிக்குள் இருக்கிறார். ``நான்கைந்து ஸ்கிரிப்டுடன் இருக்கிறார். நிச்சயம் விஜய் சேதுபதியை டைரக்டராகப் பார்ப்பீர்கள்’’ என்கிறார்கள் அவர் நண்பர்கள்.

25 `மற்றவர்களைப் பார்த்துப் பொறாமைப் படுவதற்கெல்லாம் நேரமில்லை. தேவையும் இல்லை. நமக்கு என்ன தேவை என்பதைப் பார்த்து அதை நோக்கிப் போவதுதான் முக்கியம்’ என்பார் விஜய் சேதுபதி.