சினிமா
Published:Updated:

பாகுபலியை மிஞ்சுமா பத்மாவதி?

பாகுபலியை மிஞ்சுமா பத்மாவதி?
பிரீமியம் ஸ்டோரி
News
பாகுபலியை மிஞ்சுமா பத்மாவதி?

பரிசல் கிருஷ்ணா

பாலிவுட்டே காத்துக்கொண்டிருக்கிறது `பத்மாவதி’யைப் பார்க்க. காரணம், கதை அப்படி!

ராஜஸ்தான் மாநிலம், சித்தூர்கரில் அமைந்துள்ளது சித்தூர்க் கோட்டை. மேவார் மன்னன் ராணா ரத்தன் சிங்தான் சித்தூரை ஆண்டுகொண்டிருந்தான். ரத்தன் சிங்கின் மனைவி ‘ராணி பத்மினி’ என்கிற பத்மாவதியின் அழகைக் கேள்விப்பட்ட டெல்லி மன்னன் அலாவுதீன் கில்ஜி, அவளை அடைவதற்காக சித்தூருக்குப் படையெடுக்கிறான். கிட்டத்தட்ட ஆறுமாதப் போருக்குப்பின், ரணா ரத்தன் சிங் சிறைப்பிடிக்கப்படுகிறான். பத்மினி, தன்னைக் காணத்தானே இந்தப் போர் என்று அலாவுதீன் கில்ஜியை அரண்மனை வாசலுக்கு அழைக்கிறாள்.  பத்மினியும், அவளுடன் வரும் 700க்கும் மேற்பட்ட பணிப்பெண்களும் “இதுதான் உனக்கான என் பரிசு” என்று சொல்லி தீயில் தங்களை மாய்த்துக்கொள்கிறார்கள். இதுதான்  பல வெர்ஷன்களில் ஒரு வெர்ஷன்.

பாகுபலியை மிஞ்சுமா பத்மாவதி?

`பாஜிராவ் மஸ்தானி’ மூலம் ஏற்கெனவே பாலிவுட்டில் பிரமாண்டம் காட்டிய சஞ்சய் லீலா பன்சாலிதான் `பத்மாவதி’ படத்தின் இயக்குநர். பல்வேறு வடிவங்களில் உலவும் இந்தக் கதைக்குத் திரைக்கதையாக்கம் கொடுத்துப் பல நூறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள்.

பாகுபலியை மிஞ்சுமா பத்மாவதி?


பத்மினியாக ஐஸ்வர்யா ராய், அலாவுதீன் கில்ஜியாக சல்மான்கான் என்பதுதான் ஆரம்பத்தில் பேசப்பட்ட காஸ்ட்டிங். படத்தின் கதைப்படி, இருவரும் பார்த்துக்கொள்ளும் காட்சிகள்கூட இருக்காது. ராணி பத்மினி கதையின் ஒரு வெர்ஷனில், அரண்மனை வாசலுக்குள்  நுழையும் கில்ஜி, கோட்டைச் சுவர்களில் பதிக்கப்பட்டிருக்கும் கண்ணாடியில், பத்மினியின் அழகைப் பார்ப்பதாக இருக்கும். அப்படி இருந்தாலும், நேருக்கு நேர் பார்த்துக் கொள்ளும் காட்சிகள் இல்லை. சல்மான் - ஐஸ்வர்யா ஜோடி, ஏற்கெனவே சஞ்சய் லீலா பன்சாலியின் ‘ஹம் தில் தே சுக்கே சனம்’ படத்தின் ஹிட் ஜோடி. அதனால் இந்தப் படத்தில் ஐஸ்-சல்மானை நடிக்கவைக்க முயற்சிகள் எடுத்தார் சஞ்சய். ஆனால் சல்மானோ, ராணா ரத்தன் சிங் கேரக்டர் ஓகே எனச் சொல்ல, ரியல் லைஃப் உரசல்கள் காரணமாக ஐஸ்வர்யா ராய் ஆரம்பத்திலேயே நோ சொல்லிவிட்டார். அதனால் `பாஜிராவ் மஸ்தானி’யின் ரீல்-ரியல் ஜோடியான தீபிகா படுகோன் - ரன்வீர் சிங்கை வைத்துப் படம் எடுக்க ஆரம்பித்துவிட்டார் சஞ்சய் லீலா பன்சாலி. ராணா ரத்தன் சிங்காக ஷாஹித் கபூர் நடித்திருக்கிறார்.

பாகுபலியை மிஞ்சுமா பத்மாவதி?

பாலிவுட் படங்கள் என்றால் சர்ச்சைகளுக்கா பஞ்சம்? சஞ்சயின் முந்தைய ப்ளாக்பஸ்டர் ஹிட்டான  ‘பாஜிராவ்  மஸ்தானி’ படத்தின்போதே செட்டில் தகராறில் ஆரம்பித்து படம் ரிலீஸன்று வரை பிரச்னை இருந்தது. இதற்கும் அப்படித்தான். ஜனவரி மாதம், ஜெய்ப்பூரில் படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது ‘ ஸ்ரீராஜ்புத் கர்ணி  சேனா’ என்ற அமைப்பு, படப்பிடிப்புத் தளத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அலாவுதீன் கில்ஜிக்கும், ராணி பத்மினிக்கும் காதல் காட்சிகள் கற்பனையாக உருவாக்கப் பட்டிருக்கின்றன என்பதே அவர்களின் கோபம். இந்த ஆர்ப்பாட்டத்தில் கேமரா சேதப்படுத்தப்பட்டது; சஞ்சய் லீலா பன்சாலியும் தாக்கப்பட்டார். 

மீண்டும், மஹாராஷ்ட்ரா மாநிலம், கோல்ஹாப்பூரில் படப்பிடிப்பு துவங்கியது. ஆனால், ஷூட்டிங் செட்டே போராட்டக் காரர்களால் தீப்பிடித்தது. “ராணி பத்மினியைக் கீழ்த்தரமாகச் சித்திரிக்கும் காட்சிகளோ, ராணிக்கும் கில்ஜிக்குமான ரொமான்ஸ் காட்சிகளோ படத்தில் இல்லை” என்று சஞ்சய் லீலா பன்சாலி சொன்னபிறகே அடங்கியது எதிர்ப்புக் குழு. ஒருவழியாக எல்லாப் பிரச்னைகளையும் ஓரங்கட்டிவிட்டு, மளமளவெனப் படப்பிடிப்பைத் தொடர்ந்தார் சஞ்சய். கடந்த வாரம் ட்ரெய்லர் வெளியானது. “வெளிவந்த ஒரே நாளில் அதிக பார்வையாளர்கள் என்ற ரெக்கார்டு என்பதெல்லாம் மகிழ்ச்சிதான். ஆனால், அந்த எண்களையெல்லாம் தாண்டி, இந்தப் படம் என் கரியரில் மிக முக்கியமான படம்” என்கிறார் ரன்வீர் சிங். ட்ரெய்லரில் கில்ஜியாக ரன்வீர் காட்டியிருக்கும் கம்பீரம் செம.

பாகுபலியை மிஞ்சுமா பத்மாவதி?

சஞ்சய் லீலா பன்சாலி எப்போதுமே மேக்கிங்கில் கிங். ராஜ்புத்திர அரண்மனை, கோட்டை கொத்தளங்கள், மன்னர் காலத்து உடைகள் என்று எல்லாமே  பார்த்துப் பார்த்துத் தேர்வு செய்பவர். ஏப்ரலில் ஆர்ப்பாட்டக்காரர் களால், செட் எரிக்கப்பட்டபோது விலையுயர்ந்த காஸ்ட்யூம்களும் எரிந்து நாசமாகின. ஆனாலும் தளர்ந்து உட்கார்ந்துவிடவில்லை சஞ்சய். மீண்டும் அனைவரையும் முடுக்கி விட்டு, இத்தனை வேகமாக டிரெய்லரையும் வெளியிட்டுவிட்டார். இந்த வேகம்தான் சஞ்சயின் பலம்.  `பத்மாவதி’யின் க்ளைமாக்ஸ் போர்க் காட்சிகள் மட்டும் 12 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்டுள்ளனவாம்.

டிசம்பர் 1-ம் தேதி திரைக்கு வருகிறார் ராணி `பத்மாவதி.’ போருக்குத் தயாராவோம்!