
பா.ஜான்ஸன்
சினிமா ரசிகர்களின் தீவிர சினிமாப் பசிக்குத் தீனி போடும் படங்கள் அடுத்தடுத்து அனைத்து மொழிகளிலும் வரவிருக்கின்றன. படங்களை முழு வேகத்தில் இயக்க இயங்கிக்கொண்டிருக்கிறார்கள் டாப் இயக்குநர்கள். யார் யார்... என்ன படம்... மெர்சல் லிஸ்ட் இதோ!

பாகுபலியின் இரண்டு பாகங்கள் மூலமாக உலகையே திரும்பிப்பார்க்க வைத்தார் ராஜமௌலி. அடுத்து தன்

கனவான மகாபாரதக் கதையைத்தான் படமாக்குவார் என நம்பிக் கொண்டிருந்தார்கள் அவர் ரசிகர்கள். ஆனால், இங்கேதான் ட்விஸ்ட். ராஜமௌலி தன் அடுத்த படமாக சமூகச் பிரச்னை ஒன்றைக் கையில் எடுத்திருக்கிறார். இதில் நடிக்கவிருப்பது யார் என்பது இன்னும் உறுதியாகவில்லை. தற்போது கொரட்டல சிவா இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் `பரத் அனே நேனு’ படத்தைத் தயாரிக்கும் டிவிவி தனய்யாதான் ராஜமௌலியின் படத்தைத் தயாரிக்கவிருக்கிறார். இதற்குப் பிறகு பலத்த எதிர்பார்ப்பிலிருந்த மகேஷ் பாபு - ராஜமௌலி காம்போ இணையவிருக்கிறது . 2018, 2019 என இரண்டு வருடங்களுக்குமான வேலைகளை இப்போதே ஸ்கெட்ச் போட்டுவிட்டார் ராஜமௌலிகாரு.

அடுத்த படம் சிம்புவுடனா, ஃபகத் ஃபாசிலுடனா, விஜய் சேதுபதியுடனா எனப் பரபரத்துக்கொண்டிருக்க, `எல்லாருமே இருக்காங்க’ எனக் கூலாக அறிவித்திருக்கிறார் மணிரத்னம். கூடவே ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அர்விந்த் சுவாமி; ரஹ்மான் இசை, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு என மிரட்டலான டீமை இணைத்திருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜனவரி முதல் துவங்கவிருக்கிறது. காதல், ஆக்ஷன், சென்டிமென்ட் என எல்லாம் கலந்த படமாக இருக்கும் என, படத்திலிருக்கும் நடிகர்களை வைத்துக் கணித்துவிடலாம்.

சினிமாத்துறைக்கு வருவதற்கு முன்பிருந்தே தன் நண்பனாக இருந்த சஞ்சய் தத் வாழ்க்கையை மையமாக வைத்துப் படம் எடுக்க வேண்டும் என்பது ராஜ்குமார் ஹிரானியின் நெடுநாள் ஆசை. அவரின் அந்த ஆசை இப்போது முழு வடிவம் பெரும் கட்டத்திலிருக்கிறது. படத்தில் சஞ்சய் தத்தின் சினிமா வாழ்க்கை, வெற்றி தோல்வி, தீவிரவாத தொடர்பு, கைது என சகலமும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. கல்வி, கடவுள் என எல்லாவற்றையும் பகடி செய்து படமெடுக்கும் கில்லாடியான ஹிரானி முதல் முறை பயோபிக் இயக்குவதால் அதற்கான ஆவல் ரசிகர்களிடம் எகிறியிருக்கிறது. தொடர்ச்சியாகத் தோல்விகளைத் தரும் ரன்பீர் இந்தப் படம் மூலம் மீண்டும் ஹிட் ஹீரோ ஆவர் என எதிர்பார்க்கிறது பாலிவுட். படத்திற்கு சஞ்சய் தத்தின் செல்லப் பெயரான `சஞ்சு’ எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. படம் அடுத்த ஆண்டு மார்ச் ரிலீஸ்.

`ஜல்சா’, `அத்தாரின்டிக்கு தாரேதி’ என த்ரிவிக்ரம் - பவன் கூட்டணியில் உருவான இரண்டு படங்களும் தாறுமாறு ஹிட். இப்போது மறுபடி இந்தக் கூட்டணி இணைந்திருப்பதும் அது பவனின் 25வது படமாக அமைந்ததும் ரசிகர்களுக்கான கொண்டாட்டம். படத்தில் பவன் சாஃப்ட்வேர் இன்ஜினீயராக வருகிறார். இந்தப் படம்மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார் இசையமைப்பாளர் அனிருத். கீர்த்தி சுரேஷ், அனு இமானுவேல், குஷ்பு, ஆதி, பொம்மன் இரானி எனப் பல நட்சத்திரங்களும் இணைந்திருக்கும் இப்படம் பொங்கல் வெளியீடாக வரவிருக்கிறது. வழக்கமாக, த்ரிவிக்ரம் படங்கள் சென்டிமெட் ஆக்ஷன் இரண்டிலும் களைகட்டி, கல்லாகட்டும் என்பதால் படத்துக்காக வெறித்தன வெயிட்டிங்கில் இருக்கிறார்கள் ஆந்திரவாலாஸ்.

`பெருமழகாலம்’, `கருத்த பக்ஷிகள்’, `செல்லுலாய்ட்’ போன்ற படங்கள் மூலம் இன்னும் நின்று ஆடிக்கொண்டிருக்கும் சீனியர் இயக்குநர் கமல் அடுத்து இயக்குவது எழுத்தாளர் கமலா தாஸின் பயோபிக். முதலில் வித்யாபாலன் நடிப்பதாக இருந்த கமலா தாஸ் கதாபாத்திரத்தில், தற்போது நடித்துக்கொண்டிருப்பது மஞ்சு வாரியார். 15 வயதிலேயே திருமணம், எழுத்தார்வத்தை ஊக்குவித்த கணவர், ஆங்கிலம் மற்றும் மலையாளத்தில் புத்தகங்கள் எழுதியது, அரசியல் என ‘மாதவிக் குட்டி’ என்கிற கமலாதாஸின் வாழ்க்கைப் பக்கங்கள் மிக சுவாரஸ்யமானவை. முரளி கோபி கமலாதாஸின் கணவராகவும், சிறப்புத் தோற்றத்தில் ப்ரித்விராஜும் நடிக்கவிருக்கிறார்கள்.

`ராமன் ராகவ்’ படத்துக்குப் பிறகு நடிப்பில் பிஸியாக இருந்தார் அனுராக் காஷ்யப். ஆடியன்ஸ் அசந்த நேரம் பார்த்து இப்படி ஒரு படம் இயக்கி, படத்தைப் பல திரைவிழாக்களும் அனுப்பிவிட்டார் என்பது திரைத்துறையினருக்கே ஆச்சர்யம். `முக்காபாஸ்’ ஒரு ஸ்போர்ட்ஸ் ட்ராமா. அனுராக் இயக்கத்தில் ஒரு ஸ்போர்ஸ் படமா என்பதும் ஆச்சர்யம் தரலாம். ஷ்ரவன் சிங் என்கிற வளரும் குத்துச்சண்டை வீரர், அவருக்கு வரும் பிரச்னைகள், எதிர்ப்புகள், காதல் போன்றவைதான் படத்தின் களம். கடந்த வாரம் மும்பைத் திரைப்பட விழாவில் படம் வெளியாக, எக்கச்சக்க பாசிட்டிவ் விமர்சனங்கள். நவம்பர் மாதம் படம் ரிலீஸ்.

விமர்சனங்களிலும், விருதுகளாலும் பெரிய அங்கீகாரம் பெற்ற `கம்மாட்டிபாடம்’ படத்திற்குப் பிறகு தனது அடுத்த படத்தை முடிவு செய்துவிட்டார் இயக்குநர் ராஜீவ் ரவி. சுதந்திரப் போராட்ட வீரரும் நாடக நடிகரும் எழுத்தாளருமான என்.என்.பிள்ளையின் வாழ்க்கையை மையமாக வைத்துத் தனது அடுத்த படத்தை இயக்குகிறார் ராஜீவ். இதில் என்.என்.பிள்ளையாக நடிக்கவிருப்பது நிவின் பாலி. அதற்கான ஆராய்ச்சிகளும் கதையாக்கமும் நடந்துகொண்டிருக்கின்றன. தற்போது அவரின் மனைவி கீது மோகன்தாஸ் இயக்கும் `மூத்தோன்’ படத்தில் ஒளிப்பதிவு செய்துகொண்டிருப்பதால் அது முடிந்த பின் தன் படத்தைத் தொடங்கவிருக்கிறார். மூத்தோனிலும் ஹீரோ நிவின் பாலிதான்.

‘திருஷ்யம்’ படத்தின் மூலம் சினிமா உலகின் கவனத்தை ஈர்த்த ஜீத்து ஜோசப், மோகன்லால் மகன் ப்ரணவை நடிகராக அறிமுகப்படுத்துகிறார். `லைஃப் ஆஃப் ஜோஸ்குட்டி’, `பாபநாசம்’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராக இருந்தவர் ப்ரணவ். `ஆதி’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் ப்ரணவுக்கு இசையமைப்பாளராக முயற்சி செய்யும் இளைஞன் ரோல். ``ஆக்ஷன் காட்சிகளுக்கு மிகவும் மெனக்கெட்டுவருகிறோம்’’ என்கிறார் இயக்குநர் ஜீத்து.