சினிமா
Published:Updated:

“ட்ரிக்கர் சக்தி இப்போ திருந்தியாச்சு!"

“ட்ரிக்கர் சக்தி இப்போ திருந்தியாச்சு!"
பிரீமியம் ஸ்டோரி
News
“ட்ரிக்கர் சக்தி இப்போ திருந்தியாச்சு!"

சுஜிதா சென் - படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

``வாசு மகன் சக்தினு சொல்ற காலம் போய், சக்தி அப்பா வாசுன்னு சொல்ற காலம் வந்திருச்சு. அத்தனைக்கும் காரணம் பிக் பாஸ்தான். கண்டிப்பா சக்தி ஒரு மாஸ் படம் பண்ணுவார்னு என் மனசுக்குத் தோணுது.” - மகனை அன்போடு அணைத்துக்கொள்கிறார் பி. வாசு. சென்னை கோபாலபுரத்தில் இருக்கிறது பி.வாசுவின் இல்லம். `சென்னைக்குள் இவ்வளவு மரங்களா?’ என ஆச்சர்யப்படும் அளவுக்கு மரங்கள் சூழ் இல்லத்தில், பி.வாசு குடும்பத்தினரைச் சந்தித்தேன்.

“அப்பான்றதைத் தாண்டி இவர் என்னோட குரு. அம்மா என்னோட சிறந்த விமர்சகர். படம் பார்த்துட்டு பிடிக்கலைன்னா டக்குன்னு முகத்துக்கு நேரா சொல்லிடுவாங்க. என்னோட பலம் என் மனைவி ஸ்மிருதிதான். நாங்க ரெண்டு பேரும் சின்ன வயசுல இருந்தே நல்ல நண்பர்களா இருந்தோம். கல்யாணத்துக்கு ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடிதான் காதலைச் சொன்னோம். இவங்க என் மனைவியா வருவாங்கன்னு கனவுலகூட நெனச்சுப் பார்க்கல. எங்களோட மகன் ஹர்ஷத் செம வாலு. அவன் எப்படா ஸ்கூல்ல இருந்து வீட்டுக்கு வருவான்னு நாங்கெல்லாம் காத்துட்டிருப்போம்.’’  குடும்பத்தைப் பற்றிப் பேசும்போது சக்தி முகத்தில் அவ்வளவு உற்சாகம்.

“ட்ரிக்கர் சக்தி இப்போ திருந்தியாச்சு!"

``பிக் பாஸ் ஆரம்பிக்குறதுக்கு ரெண்டு நாள் முன்னாடிதான் எனக்கு வாய்ப்பு வந்துச்சு. இந்தக் குறுகிய காலத்துல யார்கிட்டயும் எதையும் டிஸ்கஸ் பண்ண முடியல. பிக் பாஸ் வீட்ல இருந்து வெளிய வந்த உடனேயே அப்பாவுக்குத்தான் போன் பண்ணுனேன். அவர், ‘நீ எதுக்கும் கவலைப்படாத. நல்ல விதமாத்தான் வெளிய வந்திருக்க’னு சொன்னார்.

அம்மா எனக்குக் கெட்ட பேர் கெடைச்சதை நெனச்சு கொஞ்சம் அழுதாங்க. அப்போ, ``நான் சினிமால பத்து வருஷமா நல்ல பேர் எடுத்துட்டேன். கெட்ட பேர் வர்றது மீடியால சாதாரணம்’’னு சொல்லி சமாதானப்படுத்தினேன். என் மனைவி ரொம்ப தைரியமா இருந்தாங்க.

நான் எதுவும் தப்பு பண்ணலைனு எனக்குத் தெரியும். நீங்க பார்த்தது ஒன்றரை மணி நேர நிகழ்ச்சிதான். அதுல ஸ்க்ரிப்ட் எதுவும் கிடையாது. ஆனால், எந்தெந்தக் காட்சிகளை யெல்லாம் கோவைப்படுத்தணும்னு ஒரு ஸ்க்ரிப்ட் இருக்கு. ஒருத்தனை நல்லவனாக்குறதும், கெட்டவனாக்குறதும் பிக் பாஸ்ல சகஜம். நான் செஞ்ச சின்னச் சின்னத் தவறுகளை எடுத்துக் காட்டுனாங்களே தவிர, நல்ல விஷயங்களைக் காட்டவே இல்ல. அதை நான் சீரியஸாவும் எடுத்துக்கல” என சக்தி சொல்ல, மகனைத் தட்டிக்கொடுக்கிறார் அம்மா சாந்தி.

``வீட்ல எல்லோரும் ஒண்ணா இருப்போம். ஒண்ணாதான் மதிய  சாப்பாடு சாப்பிடுவோம். ஒருநாள் சக்தியைப் பிரிஞ்சு இருந்தாலே எங்களால தாங்க முடியாது. எங்களோடது பெரிய கூட்டுக்குடும்பம். அப்படிப்பட்ட குடும்பம் இருக்கும்போது பாசத்துக்குப் பஞ்சமே இருக்காது. பிக்பாஸ்னால சக்தியை ரொம்பவே மிஸ் பண்ணுனோம்’’ என அம்மா சாந்தி சொல்ல, சக்தியின் மனைவி ஸ்மிருதி தொடர்கிறார்.

``சக்தி எங்களை விட்டு இவ்ளோ நாள் பிரிஞ்சு இருந்தது இதுதான் முதல் முறை. ஹர்ஷத்தான் அப்பாவை ரொம்பவே மிஸ் பண்ணுனான். பிக்பாஸ்ல இருந்து திரும்பி வந்த பிறகு ஒரு நிமிஷம்கூட அவரைவிட்டு விலகல. தூங்கும்போதுகூட பக்கத்துலயே இருக்கணும்னு அடம்பிடிச்சான். இவன் இந்த மாதிரியெல்லாம் முன்னாடி நடந்துக்கிட்டதே இல்ல. அப்பாவைப் பிரிஞ்சிருந்த ஏக்கம் அவன்கிட்ட நல்லா தெரிஞ்சுச்சு.’’

``என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு என்னைப்பத்தி இன்னும் ஒருபடி அதிகமான புரிதலை பிக் பாஸ் கொடுத்திருக்கு. இளகின மனசு இருக்குற எனக்கு அதீத மன அழுத்தம் ஏற்பட்டுச்சு. அதுல இருந்து நிறைய கத்துக்கிட்டு இப்போ நல்லா இருக்கேன். ட்ரிக்கர் சக்தி இப்போ திருந்தியாச்சு”  என மேலே பார்த்துக் கையெடுத்துக் கும்பிடுகிறார் சக்தி.

“ட்ரிக்கர் சக்தி இப்போ திருந்தியாச்சு!"

“கமல் `உங்கள மாதிரியான ஆட்கள் அரசியலுக்கு வரணும்’னு சொன்னதும் எப்படி இருந்துச்சு?”

“எனக்கு அரசியலைப் பத்தி எதுவும் தெரியாது. ஆனா, எனக்குக் கமல் சார் வரணும்னு ரொம்ப ஆசை. நிகழ்ச்சி தொகுத்து வழங்குறதுல ஆரம்பிச்சு, எல்லோர்கிட்டயும் கேள்வி கேக்குறது வரைக்கும் அவர் ரொம்ப பர்ஃபெக்ட். எங்க யாரையும் அவர் காயப்படுத்தாம, அறிவுரை சொல்ல வேண்டிய விதத்துல சொல்லி சமாதானப்படுத்தினார். குட்டு வாங்கினாலும் மோதிரக் கையால குட்டு வாங்கலாம். அது கமல் சார்கிட்ட இருந்து நான் வாங்கியிருக்கேன்னு சந்தோஷப்படுறேன். சினேகன்கிட்டகூடக் கேட்டேன், `கமல் சார் நிஜமாதான் சொல்றாரா?’னு. அதுக்கு அவரும் `ஆமாம்’னு சொன்னார். ஆனா, வெளிய வந்து சினேகன் அதை எப்படி மாத்திச் சொன்னார்னு எல்லோருக்கும் தெரியும். இந்த மாதிரி சில மனக் கசப்புகள் இருந்தாலும், இப்போ நாங்க ரெண்டு பேரும் நல்ல விதமாத்தான் பேசிட்டிருக்கோம்.”

“அடுத்த திட்டம் என்ன?”

“படத்துல நடிக்கிறதுக்கான பேச்சுவார்த்தை நடந்துட்டிருக்கு. குமரவேலன்தான் இயக்குநர்’’ என சக்தி சொன்னதும், அப்பா பி.வாசு பேச ஆரம்பிக்கிறார்.

``என் மகன்றதைத் தாண்டி நாங்க ரெண்டு பேரும் ஸ்க்ரிப்ட் பத்தி டிஸ்கஸ் பண்ணும்போது அதிகப்படியான விமர்சனங்களை சக்திதான் முன்வைப்பான். சினிமா பத்தி ஏகப்பட்ட விஷயங்கள் சக்திக்குத் தெரியும். ஒரு தடவை, சக்தி கன்னடப் படத்துல நடிச்சுட்டிருந்தான். அப்போ அவனுக்குக் கன்னடம் சுத்தமா தெரியாது. அதனால, ப்ராம்ப்ட்டிங் பண்ணச் சொன்னேன். அப்போ சக்தி, `எனக்கு ப்ராம்ப்ட்டிங் கொடுத்தா வசனம் சரியா பேச வரமாட்டேங்குது’னு வசனத்தை முழுசா மனப்பாடம் பண்ணிட்டான். அந்த அளவுக்குத் திறமைசாலி. அந்தத் திறமையை எந்த இயக்குநரும் சரியா பயன்படுத்தலைன்னு கொஞ்சம் வருத்தமா இருக்கு. நான் ஏதாவது செய்யலாம்னு பார்த்தா, அப்பா- மகன்ற உறவை வெச்சு ஏதாவது பேச ஆரம்பிச்சுடுவாங்க.

சக்தி நடிச்சதுல மனசுக்கு ரொம்ப நெருக்கமான திரைப்படம் ‘நினைத்தாலே இனிக்கும்.’  கல்லூரி-காதல்-நட்பு  எல்லாத்தையும் ஒரே வட்டத்துக்குள்ள கொண்டுவர்ற திறமை இயக்குநர் குமரவேலனுக்கு இருக்கு.”

“ட்ரிக்கர் சக்தி இப்போ திருந்தியாச்சு!"

“ரஜினியை வைத்து நிறைய படங்கள் இயக்கியிருக்கிறீர்கள். ரஜினி இப்போது அரசியலுக்கு வரப்போவதாகப் பேச்சு இருக்கிறது. உங்கள் கருத்து என்ன?’’

``அவர் ஒரு விஷயத்தை முடிவு பண்ணிட்டார்ன்னா அதைப் பத்தி யார்கிட்டயும் பேச மாட்டார். ஒரு கதை கேட்டு அவருக்குப் பிடிச்சுப்போச்சுன்னா அதைப் பத்தின சந்தேகங்களை மட்டும்தான் அவர் கேட்டுத் தெரிஞ்சுக்குவாரே தவிர, அவருடைய திட்டங்களைப் பத்தி ஒருபோதும் ஆலோசிக்க மாட்டார். தன்னை வெச்சுப் படம் பண்ணப் போற இயக்குநர் வயசுலயும் அனுபவத்துலயும் சின்னவங்களா இருந்தாலும் அவங்களோடு நட்பு பாராட்டுவார். சினிமாவுலயே அவர் இப்படி மற்றவர்களை நடத்தும்போது அரசியலுக்கு வந்தால் நிச்சயம் நிறைய நல்லது செய்வார். ஆனால், அவரோட முடிவுகளை யாராலும் கணிக்க முடியாது. அவருக்குள்ளே இருக்குற இன்னொருத்தர்தான் எல்லா முடிவுகளையும் எடுக்கிறார். அந்த நபரை யாரும் இதுவரை பார்த்தது கிடையாது. அதனால், அவர் அறிவிப்பு வெளியிடும் வரைக்கும் காத்திருப்போம்.”