சினிமா
Published:Updated:

“கமல், ரஜினிக்கு ரசிகனாய் ஓட்டுப் போடமாட்டேன்!”

“கமல், ரஜினிக்கு ரசிகனாய் ஓட்டுப் போடமாட்டேன்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“கமல், ரஜினிக்கு ரசிகனாய் ஓட்டுப் போடமாட்டேன்!”

ம.கா.செந்தில்குமார் - படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

“நான் மோடியை ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் தலைவராகப் பார்க்கவில்லை. அவரை ஓட்டுப்போட்டு வெற்றிபெறவைத்தவர்களுக்கும் அவர்தான் பிரதமர். அவருக்கு ஓட்டுப்போடாதவர்களுக்கும் அவர்தான் பிரதமர். அப்படி நடுநிலையோடு இருக்கவேண்டியவர், ஒரு கொலையை கொண்டாடுபவர்களைக் கண்டிக்காமல் அமைதியாக இருப்பதைப் பார்க்கையில் எனக்கு பயம் வருகிறது. நாட்டின் குடிமகனாக அச்சம்கொள்கிறேன். ‘என் பிரதமரே அமைதியாக இருக்கிறாரே’ என்ற பயம். என் பயத்தைப் போக்கவேண்டியதுதானே அவருடைய வேலை? இப்பேர்பட்ட படுகொலையை நிகழ்த்தியவர்களைக் கண்டுபிடிப்பதற்கு முன், கொண்டாடுபவர்களை கண்டிக்கவேண்டியதுதானே முதல் குடிமகனின் கடமை? இந்தக் கேள்வியை கேட்டதற்குத்தான், ‘நீங்கள் கம்யூனிஸ்ட்டா? காங்கிரஸா?’ என்று அரசியலாக்குகின்றனர். நீங்கள் கடவுளல்ல, எங்களின் பிரதிநிதிகள் மட்டுமே என்பதை மனதில் கொள்ளுங்கள்.” -  கண்களை நேருக்கு நேர் பார்த்து மனதில் இருந்து பேசுகிறார் பிரகாஷ்ராஜ். அவரின் பேச்சில் தன் தோழியைப் பறிகொடுத்த இழப்பின் வலி தெரிகிறது.

“கௌரி லங்கேஷ், கல்புர்கி, தபோல்கர், பன்சரே... இந்தக் கொலைகளில் ஒளிந்திருக்கும் பேட்டர்னை கவனிக்க வேண்டும். இந்துத்துவா, இந்துயிஸம் என்கிற மதவெறியை எதிர்ப்பவர்கள், ஃபார்வேர்ட் திங்கிங் இருப்பவர்கள் ஒரேமாதிரியாக கொல்லப்படுகிறார்கள். கொலையாளிகள் யார் என்று இதுவரை கண்டுபிடிக்கப் படவில்லை. முதல் கொலை நடக்கும்போது தெரியவில்லை. ஆனால் அடுத்தடுத்து தொடரும்போது அந்த பேட்டர்னில் ஒளிந்திருக்கும் புதிர் பிடிபடத்தொடங்கி இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட சிஸ்டத்தை, சிந்தனைகளை எதிர்த்துப் பேசினால், அதைக் கேள்விக்குள்ளாக்கினால் அந்த எதிர்க்குரலை மௌனிக்கவைக்கும் வேலை நடக்கிறது. இதை மையமாகவைத்து, ‘கொலையாளி யார்’ என்பதை கண்டறிய வேண்டியது போலீஸ். அவர்கள் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இந்தக்கொலையை கொண்டாடுவது யார் என்று தெரிகிறது. அப்படிக் கொண்டாடும் பலர் ட்விட்டரில், என் பிரதமர் அவர்களை ஃபாலோ செய்பவர்களாக இருக்கிறார்கள்.   ‘இதைப் பிரதமராக நீங்கள் கண்டிக்க வேண்டும்; தவறு என்று சொல்லவேண்டும் என விரும்புகிறேன்’ என்றேன். உடனே, ட்விட்டர், ஃபேஸ்புக்கில் ஆயிரக்கணக்கானோர் அசிங்கம் அசிங்கமாக என்னைத் திட்டிக்கொண்டு இருக்கிறார்கள். அந்த அசிங்க முகங்கள் அனைத்தும் ஏதோ ஒரு நிறுவனத்தின், ஓர் அமைப்பின் முகங்களாக இருக்கின்றன.”

“கமல், ரஜினிக்கு ரசிகனாய் ஓட்டுப் போடமாட்டேன்!”

“பிரகாஷ்ராஜ் என்கிற மனிதரால், சினிமா, வாசிப்பு, மக்கள் என்று எப்படி இவ்வளவு நேரம் செலவிட முடிகிறது? ”

``நேரம் செலவழிக்க முடியவில்லை என்று யாராவது சொன்னால் அவன் மிகப் பெரிய சோம்பேறி என்று அர்த்தம். நடிக் கிறேன், இயக்குகிறேன், சினிமா தயாரிக் கிறேன். கட்டு ரைகள் எழுது கிறேன். விவசாயம் செய்கிறேன். விவசாயிகளை கவனித்துக்கொள்கிறேன். என் குழந்தைகளுடன் விளையாடுகிறேன். மனைவியை, அம்மாவை கவனிக்கிறேன். இவை தவிர நான் தனியாக பயணம் செய்கிறேன். இவை எல்லாம்போக இன்னும் எனக்கு நேரம் இருக்கிறது. ஓர் உயரத்துக்குமேல் போனால் அங்கு தனிமை. உடனே கீழே இறங்கி வந்துவிடவேண்டும். நான் இப்படி ஆவேன் என்று தெரியாது. எங்கோ ஒரு புள்ளிக்குப்பிறகு ஒரு மனிதன் பெர்சனாலிட்டியாக மாற வேண்டும். `எத்தனை மழைகளைப் பார்த்திருக்கும், எத்தனை குருவிகளுக்கு இடம் தந்திருக்கும்’ என்று அரைநூற்றாண்டு மரத்தைப் பார்க்கையில் வரும் உணர்வு, 50 வயதைக் கடந்த மனிதரைப்பார்க்கும்போது ஏன் வருவதில்லை? ஒரே இடத்தில் நிற்கும் அந்த மரம் அப்படிப் பக்குவமாகும்போது எல்லா இடங்களுக்கும் நகர்ந்துகொண்டே இருக்கும் மனிதன், ‘இவன்ட்ட பிரச்னைனு போனா தீர்வு கொடுப்பான். பேசினாலே சந்தோஷம் கிடைக்கும்’ என்ற நம்பிக்கையை ஏன் தருவதில்லை?

நான் திறமைசாலி. ஆனால், அதனால் நான் அசிங்கமாகிவிடக்கூடாது. நான் என்னால் வளரவில்லை. ஆயிரக்கணக்கானோர் ஏற்றுக்கொண்டதாலும், அவர்களின் அன்பினாலும் - அவற்றின்மூலம் எனக்கு இன்னும் நம்பிக்கை வந்து - வளர்ந்திருக்கிறேன்.  ஒரு புள்ளியில் திருப்பிக்கொடுக்கும் நிலைக்கு வரவேண்டும். கடனோடு போய்விடக்கூடாதே. என்னை வளர்த்த பாலசந்தருக்கு நான் திருப்பிக்கொடுக்க முடியாது. அவர்கள் என்னைவிடப் பெரியவர்கள். அவர்கள் எனக்கு செய்ததை நான் அடுத்தவர்களுக்கு செய்தாக வேண்டும்.

கவிதை ஒன்று...


தீபத்தை வணங்கினார்கள் மக்கள்
தீக்குச்சியை வணங்கினான் பித்தன்.
ஏனென்று கேட்டேன், `எரிவதைவிட ஏற்றியது உயர்ந்ததல்லவா’ என்றான்.


இப்படி யாரோ என்னை ஏற்றியதால்தானே நான் இங்கு இருக்கிறேன். கொடுக்கும் இடத்தில் இருந்து... லட்சம் மரங்களையாவது நான் விட்டுப்போகவேண்டும் அல்லவா? நான் இனி கொடுத்து ஏழையாவேனா? என் தாய் ஒரு அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவள். யார்யாரோ போட்ட சோறினால்தானே அவள் வளர்ந்தாள். அப்படியெனில் அதைத் திருப்பிக் கொடுக்கவேண்டிய கட்டாயம் இருக்கிறதல்லவா? ஒரு மனிதன் உயரத்துக்குப் போகும்போது எத்தனைபேரை உடன் அழைத்துச்செல்கிறான் என்பதுதான் முக்கியம். இல்லையெனில் எங்களின் பெயரும் எங்களின் உயரமும் அசிங்கமாகிவிடும்.”

“ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் செய்துவிட்டீர்கள். ஆனால் இன்னும் அதேபோல் வந்துகொண்டேதான் இருக்கும். அப்படி வருவது, நீங்கள் தவிர்ப்பது... எப்படி இருக்கிறது?”

“ஒரு நடிகனுக்கு இருக்கும் முட்டாள்தனத்தை நான் இன்னும் காப்பாற்றி வைத்திருக்கிறேன். அந்த விநாடிக்கு, அன்றைய தேவைக்கு எது சரியெனப்படுகிறதோ... அதை ஒப்புக்கொள்வேன். நிறைய யோசிக்கமாட்டேன். ‘இந்தப்படம்தான் பண்ணணும்’ என்று ஒரு நடிகன் தேர்ந்தெடுக்க முடியாது. நீ என்னவாக இருக்கிறாயோ அது  உன்னைத் தேடி வரும். ஒரு படைப்பாளிக்கு, ‘நான் பிரகாஷ்ராஜ்கிட்டப் போனா, அவன் என் கதையை, நடிப்பால் இன்னும் அழகா சொல்லுவான்’ என்கிற நம்பிக்கையை நீங்கள் உருவாக்கி வைக்கும்வரை உங்களைத்தேடி கதாபாத்திரங்கள் வந்துகொண்டே இருக்கும்.  நாடகத்தில் இருந்து வந்த, இலக்கியம் படிக்கும் என்னைமாதிரியான நடிகர்கள் ஒரு ஃபார்முலாவுக்குள் இறங்கிவிட்டால், ஒரு இமேஜுக்குள் சிக்கிக்கொண்டால் சீக்கிரம் செத்துப்போய்விடுவோம். அதுவும் நாம் சாவதற்குள் அந்தத் தகவல்  உலகம் முழுவதும் போய்விடும். இன்னமும் பசி இருக்கிறது. இப்போதும் சேலஞ்சிங்காக இருக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி... என ஐந்தாறு மொழிகளில் என் பயணத்தை, திசையை மூவ் பண்ணும் அளவுக்கு ஒரு டிரைவிங் கிடைத்திருக்கிறது. 

“கமல், ரஜினிக்கு ரசிகனாய் ஓட்டுப் போடமாட்டேன்!”

மணி சாரின் அடுத்த படத்தில் நானும் இருக்கிறேன். நல்ல கேரக்டர் தந்திருக்கிறார்.ராதாமோகனுடன் மீண்டும் இணைகிறேன். நான், சமுத்திரக்கனி, அதர்வா உள்பட பலர் நடிக்கிறோம். நானே தயாரிக்கிறேன். ‘மொழி’, ‘அபியும் நானும்’ மாதிரியான ஈர்க்கக்கூடிய அற்புதமான, பொறுப்பான, ஆபாசமில்லாத படம். என் பசிக்குப் படங்கள், படைப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. பறவையைப் போல பறந்துகொண்டே இருக்கிறேன்.”

``ஐந்தாறு மொழிகள். பயணங்கள், கதைகள், கதாபாத்திரங்கள், நிகழ்ச்சிகள்... ஆர்வமும் ஆசையோடும் பண்ணுவதால் சிரமம் இல்லைதான். இருந்தாலும் நாள்களை, நடிப்பை எப்படி பிய்த்துத் தருகிறீர்கள்?”


“என் சம்பளம் பேச, என் கதைகளைக் கேட்க, ஓர் இயக்குநரிடம், தயாரிப்பாளரிடம் பேசி எனக்கான படத்தை எடுத்துகொண்டுவந்து கொடுக்க... எனக்கு மேனேஜர்கள் கிடையாது. இதை எல்லோருமே ஆச்சர்யமாகப் பார்க்கிறார்கள். அனைத்தையுமே நானே கேட்கிறேன். என் மெயில் பாக்ஸைப் பார்த்தீர்கள் என்றால் எல்லா மொழிகளில் இருந்தும் வித்தியாசமான படங்கள். ‘இவ்வளவையும் பண்ண முடியலையே’ என்கிற ஏக்கம் இருக்கிறது. ஆனால் என் பயணம் எனக்குத் தெரிகிறது. அதைப்பொறுத்துதான் தேதிகள் கொடுப்பேன்.  ஆமாம்... என் நாள்களை நான் விற்பது இல்லை, யாரையும் விற்கவிடுவதும் இல்லை. அதேபோல ‘அடுத்த வருஷம்வரை பிரகாஷ்ராஜ் பிஸிப்பா’ என்று பேசவேண்டும் என்றும் நினைக்கமாட்டேன். ஆமாம், மூன்று மாதங்களுக்கு முன், தேதி கொடுப்பதே இல்லை. இதனால் தொலைப்பது அதிகம் என்று தெரிகிறது. இருந்தாலும் இப்படியிருக்கப் பிடித்திருக்கிறது.”

``உங்களின் சீனியர்களான கமல், ரஜினி இருவரும் அரசியலை நோக்கி நகர்வதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?”


``பிரபல நடிகர், நிறைய ரசிகர் மன்றங்கள் இருக்கின்றன என்ற ஒரே காரணத்துக்காக ஒருவன் அரசியல்வாதியாக முடியாது, கூடாது. மக்களும் அவ்வளவு முட்டாள்கள் இல்லை. இன்றைய அரசியல் சூழலில் தமிழ்நாட்டில் ஒரு மாற்றம் தேவை. மக்களின் பிரச்னைகளை புரிந்துகொண்டு அவற்றைத் தீர்க்கும் வழிகளைத் தங்கள் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளாகச் சொல்லும் நல்லவர்களுக்குத்தான்  ஒட்டுப்போடுவார்களே தவிர, ‘நான் ரசிகன்’ என்று இன்றைய இளைய தலைமுறை ஓட்டுப்போடாது.

`நான் ரஜினி சாரின் ரசிகன். கமல் சாரின் ரசிகன். ஆனால், இந்தத் தேர்தலில் நான் ரசிகனாக ஓட்டுப்போட மாட்டேன்.’ அந்த விஷயத்தில் இளைஞர்கள் மீது நான் நம்பிக்கையாக இருக்கிறேன். அது ரஜினி சாராக இருக்கட்டும், கமல் சாராக இருக்கட்டும் அவர்கள் வருவதை வரவேற்கிறோம். ஆனால், என்ன மாற்றத்தை கொடுக்கப்போகிறீர்கள், இங்குள்ள பிரச்னையை எப்படி புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேள்வி கேளுங்கள். ரஜினி சார், கமல் சார்... இருவரும் மக்களுக்கு தெரிந்தவர்கள் தான். அவர்கள் இப்படி அரசியல் அடியெடுத்துவைக்கும்போது அழகாவார்களா, அசிங்கமாவார்களா என்பது இனிமேல் அவர்கள் எடுத்துவைக்கும் அடியைப் பொறுத்தது தான். அவர்கள் இருவரையும் வியந்து பார்த்துக்கொண்டு இருக்கிறேன். மூன்றாவது ஓர் இளைஞன் வந்தால் அவனையும் அப்படியே வியந்து பார்ப்பேன். நானும் மற்ற மக்கள்போல் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

வரும் தேர்தலில் முடிவெடுங்கள். மாற்றம் உங்கள் கையில்தான் இருக்கிறது. மறுபடியும் தமிழ்நாட்டை அழகான நாடாக்க என்ன செய்யவேண்டுமோ அதை மட்டும் மனதில் வைத்து வாக்களிப்போம்.”