சினிமா
Published:Updated:

மெர்சல் - சினிமா விமர்சனம்

மெர்சல் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
மெர்சல் - சினிமா விமர்சனம்

மெர்சல் - சினிமா விமர்சனம்

ப்பாவின் மரணத்துக்குக் காரணமான வில்லன்களைப் பழிவாங்கும் ‘அபூர்வமான மெர்சல் சகோதரர்கள்’.

‘இலவச மருத்துவம்’ என்பது மதுரை தளபதியான அப்பா விஜய்யின் அற்புதக் கனவு. அவரது கனவை நிறைவேற்றுவதைப்போல நடித்து, வியாபார வலை விரித்து நயவஞ்சகமாய் அப்பா விஜய்யின் வாழ்க்கையில் விளையாடுகிறார் டாக்டர் எஸ்.ஜே.சூர்யா. இந்த மரண விளையாட்டில் விஜய்யின் இரண்டு குழந்தைகளும் இருவேறு திசைகளில் பிரிந்துவிடுகின்றன. அதில் டாக்டர் மாறனாக ஒரு விஜய், மேஜிக்மேன் வெற்றியாக இன்னொரு விஜய். இருவரும் எப்படி இணைகிறார்கள், அப்பாவின் மரணத்துக்கு எப்படிப் பழிதீர்க்கிறார்கள் என்பதை லாஜிக்குகள் எதுவும் இல்லாமல் மேஜிக்காக `மெர்சல்’ காட்டியிருக்கிறார்கள்.

வேட்டி கட்டும் பிரச்னையில் ஆரம்பித்து விவகாரமான ஜி.எஸ்.டி வரை ஆங்காங்கே அரசியல் காரம் தூவி, படத்தை ட்ரெண்டிங் ஆக்கியிருக்கிறார் இயக்குநர் அட்லி.

மெர்சல் - சினிமா விமர்சனம்

விஜய்க்கு மூன்று முகங்கள். அவர் ஸ்டைலிலேயே சொல்ல வேண்டுமென்றால் ‘தளபதி’ கதாபாத்திரத்தை மாஸாகப் பண்ணியிருக்கார். மாறன் கதாபாத்திரத்தை க்ளாஸாகப் பண்ணியிருக்கார், வெற்றி  கதாபாத்திரத்தை ஸ்டைலாகப் பண்ணியிருக்கார். வயது நாற்பது ப்ளஸ்னு நம்பவே முடியலீங்ணா!

நான்காவது முறையாக ரீ-என்ட்ரி ஆகியிருக்கிறார் வடிவேலு. வைகைப்புயலாக அட்டகாசம் செய்யாவிட்டாலும், வரும் காட்சிகளில் மெல்லிய நகைச்சுவைத் தூறலை அள்ளித்தெளித்திருக்கிறார். 

மெர்சல் - சினிமா விமர்சனம்


வில்லன் எஸ்.ஜே. சூர்யா கிடைத்த கேப்பில் எல்லாம் சிங்கிள் தட்டி, விஜய்யிடமே `நீ சிக்ஸர் அடிப்பா’ என ஸ்ட்ரைக்கைக் கொடுக்கிறார். நாயகிகளில் நித்யா மேனனுக்கு மட்டும் கொஞ்சம் நிறைவான கதாபாத்திரம். அதைப் பக்கா எமோஷனலோடு செய்திருக்கிறார். ஆனால், அவர் ஏன் பஞ்சாபியாக இருக்கவேண்டும் என்பது மட்டும் கடைசிவரை நமக்குத் தெரியவே இல்லை.

 ‘டேய் தம்பி’ என்று விஜய்யைக் கூப்பிட்டு `ரோஸ்மில்க் வாங்கித் தர்ரேன்டா’ என்னும் காட்சியில் மட்டும் ரசிக்கவைக்கிறார் சமந்தா. காஜல் ஒரு டூயட் பாடிவிட்டுக் காணாமல் போய்விடுகிறார்.  சத்யராஜ், யோகி பாபு, சத்யன், கோவை சரளா மற்றும் ‘உங்கள் அபிமான நட்சத்திரங்கள்’ பலருக்கும் சொல்லிக்கொள்ளும் அளவிலான வாய்ப்புகள் இல்லை.

‘ஆளப்போறான் தமிழன்’ பாடல் மாஸ். `தமிழன்டா எந்நாளும்’ என இசையில் எனர்ஜி கூட்டியிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.  பிரமாண்டத்தைக் காட்ட, பறந்து பறந்து படம் பிடித்திருக்கிறது ஜி.கே.விஷ்ணுவின் கேமரா. திருவல்லிக்கேணி குடியிருப்பைத் தத்ரூபமாக வடிவமைத்திருக்கிறார் கலை இயக்குநர் முத்துராஜ். அலைபாயும் திரைக்கதையைக் கச்சிதமாக வெட்டி ஒட்டியிருக்கிறார் படத்தொகுப்பாளர் ரூபன். ஆனால், ஃப்ளாஷ்பேக்கை இன்னும் வெட்டியிருக்கலாம்.

மெர்சல் - சினிமா விமர்சனம்

உயிர் காக்க வேண்டிய மருத்துவம் கல்லா நிரப்பும் வியாபாரமாகிப்போன அவலம், அரசு மருத்துவமனைகளின் தர மேம்பாடு, ஜி.எஸ்.டி, டிஜிட்டல் இந்தியா என கமர்ஷியல் படத்திலும் சமூகப் பிரச்னைகளைப் பற்றிப் பேசியதற்குப் பாராட்டுகள். அட்லி, ரமணகிரிவாசன் கூட்டணியில் வசனங்கள்  டாப். அப்படியே கொஞ்சம் படத்திலுள்ள லாஜிக் பிரச்னைகளையும் கவனித்திருந்தால் இன்னும் மிரட்டலாக இருந்திருக்கும் ‘மெர்சல்’.

வெற்றியை எப்படி வடிவேலு கண்டுபிடித்தார், மாறானோடு எப்படி இணைந்தார் போன்ற கேள்விகளுக்கு விளக்கம் எங்கேயும் இல்லை. அதேபோல், கோவை சரளாவுக்கு எப்படிக் குழந்தை கிடைத்தது, சரளாவின் பின்னணி என்ன என்பதற்கும் படத்தில் எந்த விளக்கமும் இல்லை.

பல இடங்களில் லாஜிக் குறைகள், ஏற்கெனவே பார்த்துப் பழகிய கதை என்றாலும், அதைச் சொன்ன விதத்தில் `மெர்சல்’ அசரடித்திருக்கிறது. மெர்சல் டீமுக்கு ஒரு ரோஸ்மில்க் பார்சேல்!

- விகடன் விமர்சனக் குழு