Published:Updated:

ஜெய் சீயான்... ஜெய் கிஷான்!

ஜெய் சீயான்... ஜெய் கிஷான்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெய் சீயான்... ஜெய் கிஷான்!

ஆர்.சரண், ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி

பெசன்ட் நகர் பீச்சுக்கு மிக அருகில் ‘பத்து எண்றதுக்குள்ள சலூன்’... ஆமாம் ப்ரோ. சலூன் பேரே அதான். பத்து எண்றதுக்குள்ள கட்டிங் முடித்துக் கஸ்டமர்களை அள்ளுவிட வைக்கும் அனானிதான் (இவருக்குப் பேரே இல்லை மக்களே) இந்த நவீன சலூனின் ஓனர்.  ஞாயிற்றுக்கிழமை 11 மணி... தூக்கக் கலக்கத்தில் கடைக்கு வருகிறார்கள் `சேது’ சேது, ‘ராவணன்’ வீரய்யா, ‘சாமி’ ஆறுச்சாமி, `தூள்’ ஆறுமுகம், ‘அந்நியன்’ அம்பி, ‘ராஜபாட்டை’ அனல் முருகன், ‘இருமுகன்’ லவ், `பிதாமகன்’ சித்தன், ‘தெய்வத்திருமகள்’ கிருஷ்ணா. இனி ஓவர் டூ பத்து எண்றதுக்குள்ள சலூன்...

``எனக்கு முதல்ல வெட்டுங்க அங்கிள். அவலாஞ்சி... சாக்லேட் ஃபேக்டரி... நிலா காயுது... அடுப்புல இட்லி வேகுது... நான் போகணும்’’- கழுத்தைச் சாய்த்து காலரைக் கடித்தபடி கிருஷ்ணா கெஞ்சுகிறார்.
 
``நோ... நோ... இதெல்லாம் தப்பு. யாரா இருந்தாலும் ரூல்ஸ்னு ஒண்ணு இருக்கா இல்லையா... நான்லாம் காலங்காத்தால 4 மணிக்கு முகத்தை அலம்பிட்டு வந்து நிக்கிறேன். வரிசைப்படி வந்து உட்கார்.’’ என்று கிருஷ்ணா தலையில் தட்டி உட்கார வைக்கிறார் ‘அந்நியன்’ அம்பி.

ஜெய் சீயான்... ஜெய் கிஷான்!

``எனக்கும் அர்ஜென்ட்டா முடி வெட்டணும்ணே. மினிஸ்டரைப் பார்க்க மனு கொண்டுவந்திருந்தேன். ஆனா, இங்கே வந்தபிறகுதான் தெரிஞ்சது அவரு ஊர்ல இருக்கார்னு. சென்னைலயே பார்க்க முடியலையே... எப்போ வருவீங்கனு போன் போட்டுக் கேட்டா எம்பேருலயே திண்டுக்கல் வெச்சிருக்கேன்யானு சிரிக்கிறாரு’’ என `தூள்’ ஆறுமுகம் சொன்னதும்,  ``ஓ..! அவரா... நம்ம செல்லூர் ராஜுக்கு டஃப் ஃபைட் கொடுக்குறவராச்சே. பேருகூட திண்டுக்கல் பவர் ஸ்டார்னு நினைக்கிறேன்!’’ என்றார் அனானி. இதைக்கேட்டதும் அகப்பைபோலக் கையை அகல விரித்துக் கைதட்டி ஊத்தைப்பல் தெரியச் சிரிக்கிறார்  சித்தம் கலங்கிய நம் சித்தன். ``நான் ஆத்தாளைப் பார்க்காத சுடுகாட்டுப் புள்ள’’ என்று ஹைபிட்ச் பேக்கிரவுண்டு சாங் வேறு அவரே பாடிக் ‘கொல்கிறார்’.  சித்தனை நோக்கி அனானி, “டேய் சித்தா..! அம்பி காதுல இந்தப் பாட்டைப் பாடு... பரோட்டா வாங்கிக் கொடுப்பாருடா!” என்கிறார்.

``திஸ் இஸ் இர்ரலவன்ட் ஸ்டேட்மென்ட் ஃபார் கரென்ட் சிச்சுவேஷன்... இவன்தான் ஷேவிங் பண்றவாளையே அடிப்பானே. இவனை ஏன் உள்ளே விட்டேள்? பித்தகோரஸ் தியரமைவிட `பிதாமகன்’ல இவனால நாம பட்ட துயரம் பத்தாதா?. அவன் அவலாஞ்சின்னா... இவன் சுடுகாடுனு திரும்பத் திரும்பப் பேசிக் கொல்வானே... நோக்குத் தெரியாதா?... பகவானே நேக்கு இப்பவே தலை சுத்தறதே!’’ என்று புலம்ப ஆரம்பித்தார் அம்பி.

“யோவ் அம்பி... உன் ஒண்ணுவிட்ட அத்திம்பேரோட ரெண்டுவிட்ட அண்ணன் மகனை நான் அடிச்சேன். ஞாபகம் இருக்கோன்னோ? சரி...விடு. நாங்களே ஒருத்தரை ரொம்ப நாளா காணோம்னு தேடிட்டு இருக்கோம். நீதான் கோர்ட்டு, போலீஸ் ஸ்டேஷன்னு சுத்துற மாடர்ன் டிராஃபிக் ராமசாமியாச்சே... பார்த்தா சொல்லுய்யா...” என்கிறார் சேது. “முழிக்காதீங்க அம்பி... நம்ம துருவ் அப்பாவைத்தான் சொல்றாரு. இப்ப என்ன கெட்அப் போட்டு எங்கே சுத்துறாரோ? பாவம் அவரை ஸ்க்ரீன்ல பார்த்தே மாமாங்கம் ஆச்சு. கடைசியா கையில காப்பு மாட்டிக்கிட்டு கௌதம்மேனன்கூடச் சுத்துனாப்டி...இங்கிலீஷ் கெட்டவார்த்தைல திட்டுற போலீஸ்படமா இருக்கும்.” என்றார் அனல் முருகன். “அட, பாவம்யா அந்த ஆளு. பரமக்குடியில பொறந்தாலே  ‘ஸ்கெட்ச்’ போட்டுத் தூக்குறாங்கபோல... இனி யாராச்சும் படம் பண்றேன்னு அவர் லைஃபைக் கண்டம் பண்ணாய்ங்கன்னா சும்மா டப்பு டப்புனு சுட்டுட்டுப் போய்ட்டே இருப்பேன்” - எமோஷன் ஆகிறார் ஆறுச்சாமி ஐ.பி.எஸ்.

“அவரை விடுங்க ஆபிஸர். வெள்ளந்தி ஆளு. 70 கிலோ குறைக்கணும்னு சொன்னாலும் நம்பிக் குறைப்பாரு.  என்ன ரோல் கொடுத்தாலும்  பண்றாரு. ஆனா நம்ம டைரக்டர்ஸ்தான் அந்த அப்பாவியை வெச்சு செய்றாங்க. ‘பொம்பளைங்க கெட்ட வார்த்தை பேசுனாக்கூட பரவாயில்லை. அழுதாதான் தாங்கிக்க முடியலை’னு கைக்கு வந்த எதையோ எழுதி என்னைப் பேச வெச்ச டைரக்டரோட வொயிஃப்பை எல்லாம் நான் மறக்கவே மாட்டேன். அந்த டயலாக்கை யோசிச்சுப் பார்த்தே செத்துட்டேன். டண்டண் டண் டண் டண் டண்டணக்கா டண்!” எனப் பயமுறுத்தினார் ‘ராவணன்’ வீரா.

“யோவ், இதுக்கே இப்படின்னா சமந்தாவை பீடாபோட வெச்ச டைரக்டர் என்னைலாம் ஸ்டெப்னியாக்கி காரைப் பறக்கவிட்டாரே... மறந்துட்டியா?  உங்களுக்காச்சும் பேராவது வெச்சாரு. எனக்குப் பேரே இல்லை தெரியுமா.? நல்லவேளை கத்தி எடுத்தவன் கத்தியால வாழ்ந்தான்னு இருக்கட்டும்னு இங்க சலூனைப் போட்டுப் பொழப்பை ஓட்டுறேன்.” - பரிதாபமாய்ச் சொன்னார் சலூன் ஓனர் அனானி. “அப்போ நான் மட்டும் என்ன தக்காளித் தொக்கா..? எதுக்கு ஜிம் பாயா இருக்கேன்... எதுக்கு டெய்லி நாலு கிலோ சிக்கன், நாப்பது முட்டை சாப்பிட்டேன்?னே தெரியல. கடைசியில கே.விஸ்வநாத் அங்கிளோட டூயட் பாட வெச்சிட்டாங்க. ம்ம்ம்... நம்ம ராசி அப்படி..!” என நொந்து கொண்டார் அனல் முருகன்.

கிடைத்த கேப்பில், ‘ஆத்தாள பார்க்காத சுடுகாட்டுப்புள்ளை’யையும், ‘அவலாஞ்சி...சாக்லேட் ஃபேக்டரி’யையும் ஒன்ஸ்மோர் ஒப்பித்தார்கள் சித்தனும் கிருஷ்ணாவும்! “பாருங்க... சொல்லி வாயை மூடல... ரெண்டு கேரக்டருங்க அப்படியே இங்கன சுத்துது. அதான் சார் நம்ம சீயானோட பவர்’’- நெகிழ்கிறார் அனானி. “ கவலையின்றிப் பறக்கும் இந்தக்குருவியைப் பாருங்கள். மகளுக்குக் கல்யாணம், மகனுக்குச் சினிமா. வளைச்சுச் செய்யும் டைரக்டர்ஸ்.... இவய்ங்க ஸ்கெட்ச்சு சீயானுக்குத்தான். ஆனாலும், தன் முயற்சியில் சற்றும் மனம் தளராமல் தமன்னாவோடு டூயட்!”-அனல் முருகன் கொஞ்சம் சுகர் ஜாஸ்தியாய் ஃபீல் பண்ண... எல்லோரும் “ஜெய் சீயான்..  ஜெய் கிஷான்!” எனக் கோஷமிட்டார்கள்.

 அப்போது அம்பி ஹேர்ப்பின்னைக் கழட்டியபடி, “அப்படின்னா ரூல்ஸ் போட்டுர்லாம். இனி விக்ரம் சார்க்குப் படத்தை 3 மாசத்துக்குள்ள எடுத்து ரிலீஸ் பண்ணலைனா 3 மாசம் கடுங்காவல்...” என்றவர் டக்கென தலைமுடியைச் சிலுப்பி உடலை விறைப்பாக்கி,  “மொக்கக் கதையில அவரை நடிக்க வெச்சா அந்த டைரக்டருக்குக்  கும்பிபாகம்” எனச் சொல்லவும், “வாவ்... வாட்டே பெர்ஃபாமென்ஸ்யா... ஜெமினிகணேசனும் ஏ.வி.எம் ராஜனும் கலந்த கலவைய்யா... இந்த லவ் இனிமே உன்னைத்தான் லவ் பண்ணப்போறா...உம்மா..!” என ஃப்ளையிங் கிஸ்ஸைப் பறக்கவிட்டார் ‘இருமுகன்’ லவ். “நோ நோ...இதுலாம் தப்பு. நேக்கும் நந்தினிக்கும் அல்ரெடி கல்யாணம் ஆகிடுச்சு.” எனப் பதறி நிதானத்துக்கு வந்தார் அம்பி. சீப்பை எடுத்துத் தாடியை வாரியபடி, டாபிக்கை மாற்றினார் அனல்.

ஜெய் சீயான்... ஜெய் கிஷான்!

“ஆமா, சாமி சார்... இப்பவும் பீர் இட்லிலாம் சாப்பிடுறீங்களா..?” என அனல் கேட்க... ‘ஏஞ்சோகக் கதையக்கேளு தாய்க்குலமே’ மொமன்ட்க்குப் போகிறார் சாமி. “தயிர் சாதம்- சிக்கன் கிரேவினு டெட்லி காம்போய்யா அது. ஏதோ ஒரு ஃப்ளோவுல ‘ஐயய்யோ ஐயய்யோ பிடிச்சிருக்கு’னு அப்போ பாடிட்டேன். கல்யாணத்துக்குப்பிறகு ஆத்துக்காரி ‘ஞாயிறு மதியம் சமையல் உனது’னு ‘சமைச்சுக்கொடு, துணி துவை’னு கொல்றா. ‘இவள்தானா... இவள்தானா...’னு இப்ப நான் அழுதுட்டே பாட்டுப் பாடுறேன் ப்ரோ.” எனச் சாமி பேத்தாஸ் எஃபெக்ட் கொடுக்கவும்,

“லவ் பண்ற எல்லோரும் பாண்டி மடத்துக்கு ஒருநாள் வந்துடுவீங்கன்னு தெரியும். அங்கே துண்டு போட்டு  வெச்சிருக்கேன்.” என டெரர் தகவல் கொடுத்தார் சேது.

“நீங்க ஓரமா போயி மிருகின ஜம்போ பண்ணுங்க. இப்ப வழிவிடுங்க. நான் கிளம்புறேன். கிடாக்கறியும் மொடாக்கள்ளும் கூப்பிடுது... உசிரே போகுது உசிரே போகுது... கறிக்குழம்பு வாசம் அடிக்கையிலே...’’ என்று ராகமெடுத்துப் பாட்டுப்பாடியடி கிளம்பினார் வீரா.

அப்போது கிருஷ்ணா வாயைக் கோணலாக்கியபடி எச்சில் ஒழுகப் பேசினார். “அந்த அங்கிள் பொய் சொல்றாரு... அவரு சாப்பிடப் போகலை. இந்த அங்கிளோட ஆன்ட்டிகிட்ட அக்கினிப்பழம் கேட்டுப் பாட்டுப்பாடத்தான் போறாரு..! நான் பார்த்தேன்” என்று கிருஷ்ணா ‘நாட்டாமை குட்டி பாய்’ எஃபெக்ட்டில் சாமியைப் பார்த்துச் சொல்ல... பதறினார் சாமி.   “அடப்பாவி...இன்னும் இவன் அதிரப்பள்ளி எஃபெக்ட்ல இருந்து மீளலையா..? அங்க தொட்டு இங்க தொட்டு எம் பொண்டாட்டிக்கிட்டயே சேட்டையக் காட்டுறானா...? இந்தா வர்றேண்டி மாப்ளே... கிடாக்கறியா கேக்குது. பொடால போடுறேன் இரு!”- வீராவின் பொடனிக்குப் பின்னால் பாதி ஷேவிங்கில் டெபுட்டி கமிஷனர் ஆறுச்சாமி ஓட... கைதட்டிச் சிரிக்கிறார்கள் எல்லோரும்.