Published:Updated:

நயன்தாரா 25

நயன்தாரா 25
பிரீமியம் ஸ்டோரி
News
நயன்தாரா 25

பரிசல் கிருஷ்ணா

மாடலாக இருந்து சினிமாவுக்குள் வந்து இன்று பலருக்கு ரோல் மாடலாக உயர்ந்திருப்பவர் நயன்தாரா. `நம்பர் ஒன்’ என்பதில் எல்லாம் நம்பிக்கையில்லாத நயன்தாராவின் வாவ் 25.

1.  டயானா மரியம் குரியன் என்பதுதான் இவரின் இயற்பெயர். ஆனால், சினிமாவுக்காக வேறு பெயர் வேண்டும் என 30 பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு, அவற்றி லிருந்து தேர்ந் தெடுக்கப்பட்ட  பெயர்தான் நயன்தாரா. நட்சத்திரக் கண்கள் என்று இதற்கு அர்த்தம்.

நயன்தாரா 25

2.  அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி என்று இவர் குடும்பம் இவருக்கு எப்போதுமே முழுமையான ஆதரவு தருகிற குடும்பம். எந்தக் கிசுகிசு வந்தாலும், அதுபற்றி ஒரு கேள்விகூட இவரிடம் கேட்காமல் இவரது மகிழ்ச்சிக்கே முக்கியத்துவம் கொடுப்பதால், நயனுக்குத் தன் குடும்பம்மீது மிகப்பெரிய அன்பும் மரியாதையும் உண்டு. 

3. கேரளாவில், சி.ஏ படித்துக்கொண்டிருந்த சமயத்தில்  மாடலிங் வாய்ப்பு வந்து, சில பல விளம்பரங்களில் தலை காட்டியிருக்கிறார்.

4. மல்லுவுட்டின் பிரபல இயக்குநர் சத்யன் அந்திக்காடுதான் நயன் தாராவை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர். அவரது ‘மனசினக்கரெ’தான் நயனின் முதல் படம். சூப்பர் டூப்பர் ஹிட். `சும்மா நடிச்சுப் பார்ப்போம்’ என்று போனவர் இன்றைக்குத் தென்னிந்தி யாவின் டாப் ஹீரோயின். ‘நடிக்கறதா நெனச்செல்லாம் நடிக்கல. படம் ரிலீஸாகி ஸ்கிரீன்ல பார்த்தப்ப  ‘நானா இது?’ அப்டினு நெனச்சுட்டேன்’ என்கிறார் தன் முதல் பட அனுபவம் பற்றி.

5.
தமிழில் `ஐயா’ படத்தில் அறிமுகம். அடுத்த படமே ரஜினிகாந்துக்கு ஜோடி. `அது எவ்ளோ பெரிய விஷயம்னுகூட அப்பெல்லாம் தோணினதில்ல’ என்பார் நயன்.

நயன்தாரா 25

6. கழுத்தின்பின்புறம் ஒரு டாட்டு போட்டிருக்கிறார். அவருக்குப் பிடித்த டாட்டு அது. சைனாவின் மாண்டரின் மொழியில் எழுதப்பட்டிருக்கும் அந்த டாட்டுவின் அர்த்தம் ‘Love, Strength & Peace.’

7. நயன்தாராவுக்கு நம்பிக்கையில்லாத விஷயம், யாருக்கும் அட்வைஸ் சொல்வது. “அட்வைஸ் சொல்வது, அட்வைஸ் கேட்பது ரெண்டுமே போர். எனக்கு அதுல நம்பிக்கை இல்ல” என்பார்.

8. பர்சனல்  கேள்விக்கு  ‘டிப்ளமாட்டிக்காக’ பதில் சொல்லும் வழக்கம் நயனுக்கு இல்லை. ‘கமல், ஷங்கர் படங்கள்ல நடிச்சதில்லையே’ என்று கேட்டதற்கு ‘அதைப் பற்றிய எந்த வருத்தமும் இல்லை’ என்பார்.
 
9. ஒப்புக்கொண்டுவிட்டால், எந்தக் கதாபாத்திரத்துக்கும் நியாயம் சேர்க்க வேண்டும் என்பது நயனின் கொள்கை. ``ஒவ்வொரு படத்தையும்  நானாக ஒப்புகொண்டுதானே நடிக்கிறேன்? அதனால், ‘கிளாமர் ரோல்தான் கிடைக்குது’ என்ற புகாரெல்லாம் எனக்கில்லை” என்பார்.

10. ஏழு மணிக்குப் படப்பிடிப்பு என்றால் 6.50க்கு மேக்கப்புடன் ரெடியாக இருப்பது நயனின் வழக்கம். எல்லா ஹோம்வொர்க்கும் கேரவனுக்குள் முடித்து இறங்கினால், இயக்குநர்  கட் சொல்லும் வரை, அந்தக் கதாபாத்திரமாகத்தான் தெரிவார்.

11.  நயன்தாரா தான் மதிக்கும் நடிகர்களாக அடிக்கடி சொல்லும் இருவர் ரஜினி, அஜித். ‘ஹீரோயின்னு இல்ல. பொதுவாகவே பெண்களுக்கு இவர்கள் கொடுக்கும் மரியாதைதான் காரணம்’ என்பார். சினிமாவில் விஜய்யுடன் நடிக்கப் பிடிக்கும்.

12. சினிமாதான் எல்லாம் என்பதால், ஹாபி என்ற ஒன்று இல்லை. சமைக்கத் தெரியும். நன்றாகச் சமைப்பார்.

13. 
நண்பர்கள் என்று யாரையும் சட்டென்று சொல்லிவிட மாட்டார்.   ‘ஃப்ரெண்ட்ஷிப்பா இருக்கறது வேற. அவங்க என் ஃப்ரெண்ட்னு சொல்றது வேற’ என்பது நயனின் வெர்ஷன். ‘நட்பு என்பது மிகப்பெரிய வார்த்தை. அதை அடைய அல்லது அந்த இடத்தைக் கொடுக்க நிறைய விஷயங்கள் கடந்து வரணும்’ என்பார்.

14. 
இவருடைய படங்களெல்லாம் ஹிட் அடித்து, ‘ராசியான நடிகை’ என்ற பெயர் வந்தபோது, நிச்சயமாக ராசியெல்லாம் காரணமல்ல என்று திட்டவட்டமாக மறுத்தார். ‘நாம் என்ன உழைப்பைக் கொட்டினாலும், ஒரு மோசமான கதை மக்களைக் கவராது’ என்கிறார் நயன்.

நயன்தாரா 25

15.  திகில் படங்கள் பார்ப்பதென்றால் நயன்தாராவுக்கு எப்போதுமே பயம். ஆனால், பிடித்த ஜானரும் திகில்தான். ‘யாராவது கூட இருக்கணும். ஹாரர் மூவின்னா பிடிக்கும்’ என்கிறார்.

16.  படப்பிடிப்பில்  குழந்தைகள் இருந்தால்  நயன் கேரவனுக்குள் போவது குறைந்துவிடும். குழந்தைகள் என்றால் கொள்ளைப் பிரியம். ஈஸியாக ஒட்டிக்கொள்வார்.

17. நார்த் இண்டியன் உணவுவகைகள் என்றால் மிகப்பிரியம். ஆரம்பத்தில் டயட்டில் பெரிய கவனம் செலுத்தாதவர், பிறகு சிரமப்பட்டுப் பின்பற்ற ஆரம்பித்தார். சருமப் பாதுகாப்புக்கு நிறைய தண்ணீர் குடிப்பார். ஐம்பது கிலோ இவரது ஐடியல் வெயிட்.

18. முதல்படத்தின்போது தமிழ் கொஞ்சமும் தெரியாது. இன்றைக்கு மலையாள சேனல் பேட்டிகளின்போதுகூட, நடுநடுவே தமிழ் வருகிற அளவுக்குத் தமிழ்ப்பெண்ணாகிவிட்டார். பலரும் பலமுறை சொன்னபோதும் சொந்தக்குரலில் பேசத் தயங்கியவர், ‘நானும் ரௌடிதான்’ படத்தில் அந்தத் தடையை உடைத்தார்.

19. கிட்டத்தட்ட பிக்பாஸ் ஓவியா போன்ற கேரக்டர்தான் நயனும். த்ரிஷா, நமீதா ஆகியோருடன் கருத்துவேறுபாடு வந்தபோது ‘`எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அவங்க விலகி இருந்தா நான் என்ன பண்றது?” என்றார்.

நயன்தாரா 25

20. ``மகிழ்ச்சியாக  இருக்கும்போது யார் நம்மோடு இருக்கிறார்கள் என்பது முக்கியமில்லை. உங்களுக்கு ஒரு பிரச்னை என்றால் யார் கூட இருக்கிறார்களோ, அவர்கள்தான் முக்கியம்” என்பது நயன் பஞ்ச். 

21 . இன்றைக்குத் தென்னிந்திய சினிமா உலகில் கொடிகட்டிப் பறக்கும் இவர், அறிமுகமானது மலையாளம் என்றாலும், மனதுக்கு நெருக்கமாக அன்றும் இன்றும் இவர் சொல்வது தமிழ்த்திரையுலகத்தைத்தான்.  ‘`தெலுங்கில் ரொம்பக் கொண்டாடுவாங்க. தமிழ்லதான் கொண்டாடறதும், தப்பைச் சுட்டிக்காட்டறதும் சரி சமமா நம்ம முன்னேற்றத்துக்கு உதவுற மாதிரி இருக்கும். அதுனால தமிழ்த் திரையுலகம் எப்பவுமே எனக்கு ஸ்பெஷல்” என்கிறார். 

22. பாலிவுட்டில் நடிக்க பலமுறை அழைப்பு வந்தபோதும் மறுத்துவிட்டார். ‘ஹிந்திப்படங்களில் நடிக்க பெரிய விருப்பமில்லை’ என்பது நயன் பதில்.

23. ‘கிளாமர் டால்’ என்றெல்லாம் பேசப்பட்டிருக்கும்போதுதான் தெலுங்கில் ‘ஸ்ரீ ராமராஜ்யம்’ படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக ‘சீதை’ கதாபாத்திரதுக்கு ஒப்பந்தமானார். ‘என்னது.. நயன் சீதாவா?’ என்ற ஆரம்பக் கிண்டல்களுக்கு, படம் வெளியாகி வந்து குவிந்த விருதுகளால் பதில் சொன்னவர் நயன்தாரா.

நயன்தாரா 25

24. ரோல்மாடல் என்று யாரையும் சொல்லிக்கொள்ள மாட்டார். ஆனால், பிரிட்டிஷ் நடிகை Audrey Hepburn மீது மிகப்பெரும் மரியாதை உண்டு.

25.
சினிமா உலகில் என்றில்லை; பர்சனலாகவும் யாருடனும் நெருங்கவும் மாட்டார், விலகவும் மாட்டார் நயன். ஆனால், ஒருவரை நம்பித் தனது வட்டத்துக்குள் இழுத்துக்கொண்டால், அவர்களுக்காக விட்டுக்கொடுப்பதிலும் நயன் டாப். அதேபோல, நெருங்கியவர் விலகிவிட்டால், கொஞ்சமும் அதுகுறித்துக் கவலைப்படாமல், அவர்களை எந்த விதத்திலும் காயப்படுத்தாமல் விலகிவந்துவிடுவார்.