
இப்படை வெல்லும் - சினிமா விமர்சனம்
தீவிரவாதிகள் என்று தவறாக நினைத்துக் கைது செய்யப்படுகிறார்கள் இரண்டு பேர். இருவருமாக ``நாங்க உளவுத்துறை அளவுக்கெல்லாம் ஒர்த் இல்லங்க’’ என்பதை நிரூபித்து, தீவிரவாதியின் சதியை முறியடிக்கிறார்கள் என்பதே `இப்படை வெல்லும்.’
ஒரு தீவிரவாதி, இரண்டு நாள், மூன்று கதைகள், நான்கு இடங்களில் வெடிகுண்டு என அசத்தலான ஒன்லைன் பிடித்திருக்கிறார் இயக்குநர் கௌரவ். ஆனால், காமெடிப்படமா, சீரியஸ் படமா என்கிற குழப்பத்திலேயே அமைக்கப்பட்ட திரைக்கதை நல்ல கதையை நாசம் பண்ணிவிடுகிறது. ஒரு நல்ல திரைக்கதையில் எதிர்பாராமல் நடக்கிற விபத்துகள் ஒன்றிரண்டுதான் இருக்கலாம். ஆனால், இந்தப் படத்தில் எது நடந்தாலும் அது விபத்தாகவே அமைந்துவிடுகிறது.

படம் நகர்வதே டேனியல் பாலாஜியைச் சுற்றித்தான். ஆனால், அவருடைய பின்னணியில் தெளிவில்லை. கடைசிவரை இந்தத் தீவிரவாதிகள் யார், அவர்களின் நோக்கம் என்ன என்பதையே சொல்லாமல் `அஸ்கு புஸ்கு’ காட்டியிருக்கிறார் கௌரவ்.
நாயகன் உதயநிதி. கடைசியாக நடித்த படங்களை ஒப்பிடுகையில் நல்ல முன்னேற்றம். இரண்டு பிளேட் வெண்பொங்கல் சாப்பிட்டதுபோல் படம் முழுக்க தூக்கக் கலக்கத்திலேயே வருகிறார் மஞ்சிமா.
மஞ்சிமாவின் அண்ணனாக வரும் ஆர்.கே.சுரேஷ் காரணமே இல்லாமல் விறைப்பாகத் திரிகிறார். காமெடி மற்றும் குணச்சித்திரவேடம் என இரட்டைக்குதிரைச் சவாரி செய்திருக்கிறார் சூரி. காமெடிக் குதிரையைவிடக் குணச்சித்திரக் குதிரை நன்றாகவே ஓடியிருக்கிறது!
வில்லனாக டேனியல் பாலாஜி, மொட்டைத் தலையும் கட்டைமீசையுமாக பயமுறுத்துகிறார். ஆனாலும், அவருக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் கொலைப்பசிக்கு கலர் அப்பளம் கொடுத்ததுபோல்தான் இருக்கிறது. நிஜமாகவே பஸ் ஓட்டும் ராதிகா, அதிர்ச்சி டாக்டர் எம்.எஸ்.பாஸ்கர், காமெடி போலீஸ் ஸ்ரீமன் என எல்லா நடிகர்களின் தேர்வும் கச்சிதம்.
முதல் ஷாட்டிலிருந்தே அசரடிக்கிறது ரிச்சர்டு.எம்.நாதனின் ஒளிப்பதிவு. வித்தியாசமான கேமரா கோணங்களால் ஆச்சர்யமடைய வைக்கிறார். பிரவின் கே. எல்லின் படத்தொகுப்பு படத்தை பக்காவாகத் தொகுத்திருக்கிறது. இமானின் பின்னணி இசை, `விஸ்வரூபம்’ படத்தையெல்லாம் ஞாபகத்துக்குக் கொண்டுவருகிறது.

குழப்பமில்லாமல் நம்பகத் தன்மையோடு திரைக்கதை அமைத்திருந்தால் இப்படை வென்றிருக்கும்.
- விகடன் விமர்சனக் குழு