
நெஞ்சில் துணிவிருந்தால் - சினிமா விமர்சனம்
நடுத்தர வர்க்கத்து நாயகன். அவனுடைய அமைதியான வாழ்க்கையில் கொலைகாரக் கும்பல் குறுக்கிடுகிறது. நாயகனின் உயிருக்கு உயிரான ஆளைத் தீர்த்துக்கட்ட ரவுடி கும்பல் ஸ்கெட்ச் போட... அதை நாயகன் எப்படி சாதுர்யமாகத் தடுக்கிறான் என்பதே ‘நெஞ்சில் துணிவிருந்தால்.’
தன்னுடைய முந்தைய படங்களுக்கு எழுதிவைத்திருந்த கதைகளின் கார்பன் காப்பியின் மேலேயே இந்தக் கதையையும் எழுதியிருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன். ஆனால், முந்தைய படங்களில் இருந்த ஜீவன் இதில் இல்லை.

கதை மட்டுமல்ல, டாஸ்மாக்கில் குடித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் கணவனுக்கு மனைவி போன் செய்வது, கல்யாண வீட்டுக் கலகல, வில்லன்களைத் துரத்தி சந்துபொந்துகளுக்குள் புழுதி பறக்க சேஸிங், சென்னையிலேயே இருந்தாலும் மதுரை வட்டார வழக்கில் பேசுவதெனத் திரைக்கதையும் அவ்வண்ணமே!
`உடும்புப்பிடி’ நாயகனாக சந்தீப் கிஷன், இயல்பாக நடித்திருக்கிறார். ரொமான்ஸ் காட்சிகளில் கொஞ்சம் நடித்திருந்தால் இன்னும் நன்றாகவே இருந்திருக்கும். விபத்திலும் கழன்றுவிழாத கண்ணாடியோடு விக்ராந்த். அக்கறையோடு நடித்திருக்கிறார். நாயகி மெஹ்ரீன் பிர்ஸாடா. டப்பிங் ஸின்க் ஆகியிருந்தால் இன்னும் ரசிக்க முடிந்திருக்கும்.
`காலா’ கெட்-அப்பில் வில்லன் ஹரீஷ் உத்தமன். முறைத்தாலே பீதியாகும். இதில் அடக்கி வாசித்தே அசத்தியிருக்கிறார். வினோத் கிஷன், அருள்தாஸ், திலீபன், அப்புக்குட்டி ஆகியோரோடு சூரியும் படத்தில் `பெர்ஃபாமன்ஸ்’ பண்ணியிருக்கிறார்.
சுசீந்திரன் படங்களில் வசனங்கள் சாட்டையடியாக இருக்கும். இதில் அதுவும் சறுக்கல். வசனங்கள் இயல்பாக இல்லாமல் திணிக்கப்பட்டதாக இருக்கிறது. ஒரே ஒரு ரேங்க் குறைந்து, மருத்துவக் கல்லூரியில் சேர முடியாமல்போன மாணவியை, போலி டாக்டர்களோடு ஒப்பிட்டு ஏன் பேசுகிறார் நாயகன்?

லக்ஷ்மன் ஒளிப்பதிவு ஓகே. முதற்பாதியை சுவாரஸ்யமாக்க முடிந்தளவு முயன்று டயர்டான படத்தொகுப்பாளர் காசி விஸ்வநாதன், இரண்டாம் பாதியில் கலக்கியிருக்கிறார். ஆனால், ஏன் அத்தனை ஸ்லோ மோஷன் காட்சிகள்? டெம்ப்ளேட் கதைக்கு, இமானும் தனது டெம்ப்ளேட் இசையைக் கொடுத்திருக்கிறார். `ரயில் ஆராரோ’ மட்டும் போனஸ்!
நெஞ்சில் துணிவிருந்தால் `பார்க்கலாம்’.
- விகடன் விமர்சனக் குழு