
தமிழ்ப்பிரபா, படம்: பா.காளிமுத்து
``இத்தனை வருஷப் போராட்டம், புறக்கணிப்பு, துரோகங்களுக்குப் பிறகு, என் பேரைத் திரையரங்குல காட்டும்போது ஜனங்க நின்னு கை தட்டுனாங்கில்ல..! அப்ப எனக்குள்ளே ஏற்பட்ட உணர்வுகளை வார்த்தைகளால சொல்ல முடியல தோழர்” என்று ஆரம்பிக்கும்போதே கோபி நயினாரின் குரல் உடைகிறது. சில நொடி மௌனத்திற்குப் பிறகு தன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டு பேச ஆரம்பித்தார். நெடுநாள்களுக்குப் பிறகு சினிமா ரசிகர்கள் நெகிழ்ந்து கொண்டாடும் படம் `அறம்.’
``ஆழ்துளைக்கிணற்றை மையப்படுத்தி சினிமா எடுக்க வேண்டும் என்கிற எண்ணம் எங்கிருந்து உருவானது?’’
``ஒரு வேலையா வெளியே போயிட்டு நள்ளிரவு வீட்டுக்கு வரேன். என் மனைவி டி.வி முன்னாடி அழுதமாதிரி முகத்த வெச்சுட்டு உட்கார்ந்திட்டிருந்தாங்க. என்னன்னு டிவியப் பார்த்தேன். ஆரணில ஒரு குழந்தை ஆழ்துளைக் கிணற்றுல விழுந்துடுச்சு. அதை மீட்கிறதுக்காக என்னென்ன பண்றாங்கன்னு காட்டிட்டிருந்தாங்க. நானும் பார்த்திட்டிருந்தேன். தூங்கிட்டு, காலையில எழுந்து ஒன்பது மணிக்குப் பார்த்தா, அந்தக் குழந்தையை இன்னும் அவங்க எடுக்கல. அந்த விஷயம் என்னை ரொம்பத் தொந்தரவு பண்ணுச்சு தோழர். அதற்கு அப்புறம் புலவன்பாடில ஒரு குழந்தை விழுந்துச்சு. உடனே ஸ்பாட்டுக்குப் போயி அங்க இருந்தேன். அப்புறம் ஓசூர்ல ஒரு குழந்தை. எங்கயுமே குழந்தைகளை மீட்க ஒரு கருவிகூடக் கிடையாது. ஏன்னா அதிகாரிகளுக்கும், உள்ளூர் அரசியல் வாதிகளுக்கும் விளிம்புநிலை மக்களைப் பற்றிய அக்கறை கிடையாது. என்கிட்டே இருக்கிற இந்தக் கலையை வெச்சு அதிகார பீடத்தைக் கேள்வி கேட்கணும்னு நினைச்சேன். அப்டிதான் இந்தக் கதை எங்கிட்ட உருவாச்சு.’’

``நயன்தாரா எப்படிப் படத்துக்குள் வந்தார்... அவரே எப்படிப் படத்தின் தயாரிப்பாளராகவும் மாறினார்?’’
``திரைக்கதை எழுதிட்டுப் போயி நிறைய பேர்கிட்ட கொடுத்தேன். கதையைச் சொன்னேன். உட்கார்ந்து கேட்டுட்டு `நல்லா இருக்கு, விறுவிறுப்பா இருக்கு. ஆனா, குழந்தை விழுறது, எழுறது மட்டுமே ரெண்டுமணிநேரம் படமா எடுக்க முடியாது. கமர்ஷியல் எலிமென்ட் இதுல இல்ல’ன்னு இன்னும் என்னென்னமோ காரணங்கள் சொல்லி சிரிச்ச மாதிரியே வெளிய அனுப்பிட்டிருந்தாங்க. ஒருமுறை இயக்குநர் சற்குணம் சார், சௌந்தர் சார் ரெண்டுபேர் கிட்டயும் இந்தக்கதையைச் சொன்னேன். அவங்க என்னை ராஜேஷ் சார்கிட்ட அறிமுகப்படுத்தி வெச்சாங்க. அவர்கிட்ட இந்தக் கதையைச் சொன்னேன். உடனே அவர் என்னை எழுப்பி, `கார்ல உட்காருங்க. நாம ஒருத்தரை மீட் பண்ணப்போறோம்’னு கூட்டிட்டுப்போனாரு. யாரைன்னு கேட்டேன். `நீங்க வாங்க சார்’னு சொல்லி ஒரு ஆபீஸுக்குக் கூட்டிட்டு வந்து உட்கார வெச்சுட்டு அவர் வெளியே போயிட்டார். கொஞ்ச நேரம் கழிச்சு என்னைத்தாண்டி நயன்தாரா போனாங்க. `ஓ இவங்களும் ஏதோ வேலை விஷயமா இங்க வந்திருக்காங்கபோல’ன்னு நெனச்சிட்டிருந்தேன். போனவங்க எதையோ மறந்த மாதிரி திரும்பவும் நான் இருக்கிற அறைக்கு வந்து தன்னை அறிமுகப்படுத்திகிட்டாங்க. உடனே ராஜேஷ் சாரும் வந்துட்டார். நயன்தாராகிட்ட கதையைச் சொன்னேன். கேட்டதும் கதையை விட, இதோட சீரியஸ்னெஸ்ஸை அவங்க புரிஞ்சிக்கிட்டாங்க. `அந்த கலெக்டர் ரோலை நானே பண்றேன். அப்போதான் அது நிறைய பேரைப் போய்ச் சேரும்... தயாரிப்பும் நானே பார்த்துக்குறேன். நீங்க படத்துல கவனம் செலுத்துங்க’ன்னு மட்டும் சொன்னாங்க. அவங்க சொன்னது உண்மைதான். பட்ஜெட் இல்லைன்னு நான் வேற யாரையாவது நடிக்க வெச்சிருந்தா, இந்த அளவுக்குப் படம் ரீச் ஆகியிருக்காது. சமூக அக்கறையுள்ள, ஆனால், ஓடாத படங்கள் வரிசையில் இதுவும் ஏதோ மூலையில் வீசப்பட்டிருக்கும்.’’
``ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலைத் தாங்கி வரும் திரைப்படங்கள் சமீபமாகத் தமிழில் அதிகரித்திருக்கிறது. இந்த மாற்றத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’
``கலை என்பதே எல்லா நாடுகளிலுமே ஒடுக்கப்பட்ட மக்களிடமும், பழங்குடிகளிடமும் மட்டும்தான் இருந்தது. ஏன்னா அவங்களுக்குத்தான் அது தேவைப்பட்டது. இந்தியாவிலும் அப்படித்தான். ஆனால், மேல்தட்டுச் சமூகம் தங்களுடைய அதிகாரத்தை விளிம்புநிலை மக்களிடம் கட்டமைப்பதற்காகப் புராணங்களையும், இதிகாசங்களையும் ஒரு கலையாக, இலக்கியமாக, கதைவழிப்பாடலாகத் தொடர்ந்து நிறுவினாங்க. கலையின் பன்முகத்தன்மை சுருக்கப்பட்டு நாயகன், நாயகி, வில்லன்ங்கிற ஃபார்முலாவுக்குள்ள நாம தள்ளப்பட்டோம். குறிப்பா, எல்லாமே ஆண்தன்மையை மையப்படுத்திய படங்களாகவே வந்தது, வருது. ஒடுக்கப்பட்ட மக்கள் சார்ந்த திரைப்படங்களாக இருந்தாலும் அது ஆண்தன்மையை மையப்படுத்திதான் வருது. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை சினிமாவாக எடுக்கும்போது வெறும் அந்த நிலவியலை மட்டும், அவங்க மொழியை மட்டும் பயன்படுத்திக்காம, அங்கே அவர்களுக்கு இருக்கிற பிரச்னையைப்பத்தி அதிகமா பேசற படைப்பா இருக்கணும். மாறாகக் கதாநாயகத்தன்மையுடன் ஒரு கதையை எழுதிட்டு அதைக் கொண்டுவந்து அந்த நிலவியல்ல புகுத்தக் கூடாது. இனிவரும் படைப்பாளிகள் இதை மாத்துவாங்க, மாத்துவோம்னு நம்புறேன்.’’

``இனிவரும் உங்களுடைய எல்லாப் படங்களும் அரசியல் பேசுகிற படங்களாகத்தான் இருக்குமா?’’
``என் படம் மட்டுமல்ல. தமிழ்சினிமாவில் இதுவரை வந்த எல்லாப் படங்களும் அரசியல் பேசிய படங்கள்தான். அது யாருக்கான அரசியலைப் பேசியது என்பதைக் கூர்ந்து கவனித்தால் தெரியும். ஆனால், நான் அடித்தட்டு மக்களின் பார்வையிலிருந்து அதிகார வர்க்கத்தைக் கேள்வி கேட்கும் ஒரு கருவியாக இருப்பேன். என்னுடைய படங்கள் அந்த மக்களுக்கான அரசியலைத்தான் எப்போதும் பேசும்.’’
`` `கத்தி’, `மெட்ராஸ்’ ஆகிய படங்களுடன் உங்களுக்கு இருந்த முரணைப் பற்றி இப்போது சொல்ல விரும்புகிறீர்களா?’’
``சில விஷயங்கள் என்னை மீறி நடந்துடுச்சு தோழர். கடந்தகாலக் கசப்புகளையே நெஞ்சுல சுமந்துட்டிருந்தா ஒழுங்கா வேலை செய்ய முடியாது. கொஞ்சம் தாமதமானாலும் அறம் வெல்லும் என்பதுதான் நியதி. அதுதான் நடந்திருக்கு. யாரும் குறுக்கிடாதவரை என் பாதையை நோக்கி வெற்றிகரமா பயணிப்பேன்ங்கிற நம்பிக்கை இருக்கு தோழர்.’’