Published:Updated:

அறம் - சினிமா விமர்சனம்

அறம் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
அறம் - சினிமா விமர்சனம்

அறம் - சினிமா விமர்சனம்

ளர்ச்சி என்ற கூக்குரலும், வல்லரசு என்ற பெருமிதமும் அடிப்படையில் என்ன, அவை யாருக்கானவை என்ற மனசாட்சிக்கான கேள்விகள்தான் `அறம்.’

வளர்ச்சி, அறிவியல், சாதனை என்ற வார்த்தைகளுக்கான அர்த்தம்தான் என்ன? மக்களுக்கும் இவற்றுக்குமான தூரம்தான் எவ்வளவு? மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் கொடுமைகளை நாம் முற்றிலுமாக ஒழிக்கவும் இல்லை; அதற்கான இயந்திரங்களை உருவாக்கவுமில்லை. ஆழ்துளைக் கிணறுகளில் விழும் குழந்தைகளைக் காப்பாற்றவும் நம்மிடம் நவீனக் கருவிகள் இல்லை. சாதாரண மனிதரின் உயிருக்கு என்ன மதிப்பு? ‘அறம்’ திரைப்படம் வெளிச்சமிட்டுக்காட்ட முயற்சி செய்திருப்பது இத்தகைய இருண்ட பக்கங்களைத்தான். அதனாலேயே `அறம்’ தமிழ்சினிமாவின் தவிர்க்கவே முடியாத படங்களில் ஒன்றாக மாறுகிறது. 

அறம் - சினிமா விமர்சனம்

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துவிடுகிற ஏழைச் சிறுமியைக் காப்பாற்றப்போராடும் நேர்மையான  பெண் கலெக்டரின் இரண்டு நாள் போராட்டம்தான் ஒட்டுமொத்தப் படமும். ஆனால், இந்த இரண்டு நாள் போராட்டங்களைக் காட்சிப்படுத்துவதன் வாயிலாக, ஆண்டாண்டுக்காலம் தொடரும் அதிகார வர்க்கத்தின் இறுகிப்போன அலட்சிய மனோபாவத்தையும் அரசியல்வாதிகளின் நயவஞ்சகப் பாரபட்சத்தையும் தோலுரித்துக் காட்டியிருக்கும் இயக்குநர் கோபி நயினாருக்கு மனம்திறந்த பாராட்டுகள்!

ராமச்சந்திரனின் குடும்பப் பின்னணி, தண்ணீரின்றித் தவிக்கும் தமிழகக் கிராமங்களின் வறட்சி முகம் ஆகியவற்றை அழுத்தமாகப் பதித்துவிட்டு ஆழ்துளைக்கிணற்றுக் காட்சிகள் தொடங்கும்போது படத்தின் விறுவிறுப்பு  பன்மடங்கு பெருகுகிறது. சிறுமியின் முகமும் தாயின் அழுகையும் தந்தையின் குமுறலும் பார்க்கும்போதும் கேட்கும் போதும் நம் கண்கள் நம்மையே அறியாமல் கலங்கத்தொடங்கி விடுகின்றன. அந்தச் சிறுமி மூச்சுத்திணறும்போதெல்லாம் நம் சுவாசப்பைகள் திணறுகின்றன. பெற்றோர்களுடைய நிர்கதியான கதறலும், கையாலாகாத  அரசு எந்திரத்தின் மீதான கோபமும் படம் பார்க்கிற நமக்கும் தொற்றிக் கொள்கின்றன. இதுதான் ‘அறம்’ படத்தின் ஆதார வெற்றி.

நாயகி நயன்தாராவுக்கு மனம்திறந்த பாராட்டுகள். இதுமாதிரியான ஒரு திரைப்படத்தைத் தயாரிக்க முன் வந்ததற்காக நன்றிகள் பல. விசாரணை அதிகாரி கிட்டியிடம் “மக்களுக்கு எது தேவையோ அதைத்தான் சட்டமாக்கணும். ஏதோ ஒரு சட்டத்தை உருவாக்கிட்டு அதுல மக்களைத் திணிக்கக் கூடாது!” என்று தொடங்குகிற நயனின் சீற்றம், “ஒரு அடிமை எப்படி இன்னொரு அடிமைக்கு அடிமையாக இருக்க முடியும்?” என்று படம் நெடுகப் பொங்கித்தீர்க்கிறது. இறுக்கமாகக் கட்டிய புடவையும் வழித்துச் சீவிய தலைமுடியுமாக மதிவதனியாகவே மனதில் பதிகிறார் நயன். 

அறம் - சினிமா விமர்சனம்

பாசக்கார அப்பாவாக ராமச்சந்திரன், அம்மாவாக நடித்திருக்கும் சுனு லட்சுமி, `காக்கா முட்டை’ சிறுவர்கள், அரசை அசால்ட்டான வசனங்கள்மூலம் சாடும் பழனி பட்டாளம், அலட்சிய அதிகாரி ராமதாஸ், அத்தனை கோபமாகப் போராடும் அந்த அசலான மக்கள் திரள் எனப் படத்தைத் தூக்கிச் சுமப்பது கதையின் வீரியம் உணர்ந்து நடித்திருக்கும் சின்னச்சின்ன நடிகர்கள்தாம்.

ஆழ்துளைக் கிணறுகளின் அடியாழம் வரை குறுக்கும் நெடுக்குமாகப் பாய்வதும், அந்தக் காய்ந்துபோன மண்ணின் வறட்சியை அவ்வளவு பிரமாண்டமாக வைடு ஆங்கிளில் காட்சிப்படுத்தியதும் என ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ் படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமுக்கும் தன் கேமரா வழி உயிர் கொடுத்திருக்கிறார். படம் கொடுக்க வேண்டிய உணர்வுகளைப் பார்வையாளனுக்குக் கச்சிதமாகக் கடத்துகிறது ஜிப்ரானின் பின்னணி இசை. இரண்டரை மணிநேரப் பதற்றத்தையும் பிசிறு தட்டாமல் கொண்டு செல்கிறது ரூபனின் எடிட்டிங். குழந்தை மீட்புப்போராட்டத்தையும் அந்தப் பதற்றத் தருணங்களையும் அசலாக வடிவமைத்திருக்கும் பீட்டர் ஹெய்னின் உருவாக்கம் அபாரமானது.

``அஞ்சாறு வருஷம் மழ இல்லாம இருந்தப்பக்கூட எங்கூர்ல தண்ணிப்பஞ்சம் வந்ததில்ல. என்னிக்கு இந்த பிளாஸ்டிக் வாட்டர் பாட்டல் வந்துச்சோ அப்போல இருந்துதான் தண்ணிப்பஞ்சமே வந்துச்சு”,  ``800 கோடியில ராக்கெட் விடுறோம். குழிக்குள்ள விழுந்த குழந்தைய மீட்க கயிறத்தான நம்பி இருக்கோம்”, “முதல் குழந்தை குழிக்குள் தவிக்கும் போது இந்தப் பதிலைச் சொன்னால் நியாயம். இது 361 வது குழந்தை. இன்னும் இதே பதிலைச் சொல்லிக்கிட்டிருந்தா?” எனப் படம் நெடுக, பேசப்படுகிற ஒவ்வொரு வசனமும் கேள்வியும் தனித்தனியாக விவாதிக்கப்பட வேண்டியவை.

ஆனால், படம் பேசும் அரசியலைப் படமே பேசிவிட்டபிறகு, தொலைக்காட்சி விவாதத்தில் நான்குபேர் பேசுவது அலுப்பை ஏற்படுத்துகிறது. 

அறம் - சினிமா விமர்சனம்

முதல் படத்திலேயே மக்களுக்கான அரசியலை இத்தனை அழுத்தமாகப் பேசியிருக்கும்  இயக்குநர் கோபிக்கு விகடனின் வாழ்த்துகள். அறம் பேசும் அர்த்தமுள்ள படங்கள் வருவது வரம். கொண்டாடுவோம்!

- விகடன் விமர்சனக் குழு