2017 ஸ்பெஷல்
Published:Updated:

வேலைக்காரன் - சினிமா விமர்சனம்

வேலைக்காரன் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
வேலைக்காரன் - சினிமா விமர்சனம்

வேலைக்காரன் - சினிமா விமர்சனம்

லாபத்துக்காக மக்களின் உயிரோடு விளையாடும் முதலாளிகளைத் தட்டிக் கேட்கும் தனியொருவன்தான் இந்த `வேலைக்காரன்.’ 

கூலிப்படையும், கார்ப்பரேட்டில் டார்கெட்டுக்காக வேலை செய்யும் வேலைக்காரர்களும் ஒன்றுதான் என மெசேஜ் சொல்லியிருக்கிறார் இயக்குநர் மோகன் ராஜா.

வழக்கமான ரைமிங் டைமிங் குறும்புத் தனங்கள் இல்லாத சின்ஸியர் ‘மக்கள் நலன்’ ஹீரோவாக சிவகார்த்திகேயன். டான்ஸ், எமோஷன் காட்சிகளில் மட்டும் வழக்கத்தைவிட ஒரு ஸ்பூன் எக்ஸ்ட்ரா வாகவே நடித்திருக்கிறார். படத்தில்‘குப்பம் எஃப்.எம்’ என்ற பெயரில் கம்யூனிட்டி ரேடியோ நடத்தி அமைதிப் புரட்சி செய்கிறார். சிவகார்த்திகேயன் பேசும்போது தலையாட்டி, அவர் தன் தோளில் சாயும்போது தலைகோதி விடுகிறார் நயன்தாரா. இதுக்கு எதுக்கு லயன் நயன்?

ஆச்சர்ய என்ட்ரியாக மலையாள சேட்டன் ஃபஹத் ஃபாசில். ஆர்ப்பாட்டமே இல்லாமல் வியாபார காந்தமாக நம்மைக் கவர்கிறார். சிவகார்த்திகேயன் நெற்றியில் கை வைத்து அழுத்தி லேசாகச் சிரித்தபடி அவர் செய்யும் வில்லத்தனம் மிரட்டல். வார்ம் வெல்கம் டு தமிழ் சினிமா.

வேலைக்காரன் - சினிமா விமர்சனம்

பிரகாஷ்ராஜ், சார்லி, சினேகா, ரோகிணி, தம்பி ராமையா, சதீஷ், ரோபோ சங்கர், ஆர்.ஜே.பாலாஜி, விஜய் வசந்த், ஒய்.ஜி.மகேந்திரன், காளி வெங்கட், மன்சூர் அலிகான், ராமதாஸ், வினோதினி... என நடிகர் சங்கத்தில் உறுப்பினர் கார்டு வாங்கியவர்கள் எல்லோரையுமே நடிக்கவைத்திருக்கிறார்கள். ‘கஸ்தூரி’ சினேகாவும் ‘பாக்யா’ விஜய் வசந்த்தும் மட்டுமே ஸ்கோர் செய்கிறார்கள்.

 ‘நாம பொருளை விக்கல. பொய்யை விக்கிறோம்’, ‘தேவைப்பட்டது கிடைக்க மக்கள் போராடுறாங்க... அவங்க  ஆசைப்படுறத  விக்க கார்ப்பரேட் போராடுது’ எனப் படம் நெடுகிலும் மோகன் ராஜாவின் வசனங்கள்  செம ஷார்ப். 

படத்தின் மிக முக்கியமான ‘வேலை’க்காரர்கள் ஒளிப்பதிவாளர் ராம்ஜியும், கலை இயக்குநர் முத்துராஜும்தான்.  குப்பம், தொழிற்சாலை என்று சுழன்றிருக்கும் ராம்ஜியின் கேமரா... ‘இறைவா’ பாடலின் ரொமான்ஸை ஃப்ரேமுக்கு ஃப்ரேம் கடத்தியிருக்கிறது. குப்பத்து வீடுகளின் உள்ளே, வெளியே, கூரை மேலே  என்று  டீட்டெய்லிங்கில் முத்துராஜின் பேய் உழைப்பு தெரிகிறது.  பின்னணி இசையிலும், ‘கருத்தவன்லாம் கலீஜாம்’ பாடலிலும் சிவகாவுக்காக இறங்கி வேலை பார்த்திருக்கிறார் அனிருத்.

வேலைக்காரன் - சினிமா விமர்சனம்

படத்தில் கம்யூனிசம், கன்ஸ்யூமரிசம் எனப் பல சித்தாந்தக் கோட்பாடுகளைப் பேசுவதெல்லாம் ஓ.கே. அதற்காகப் படம் முழுவதும் பேசிக் கொண்டேதான் இருக்க வேண்டுமா? செயல்தான் உலகின் சிறந்த வழி எனப் பல இடங்களில் சொன்னவர்கள், பேச்சாலேயே காட்சி களைக் கடத்தியி ருப்பதுதான் பெரிய மைனஸ்.

கொஞ்சம் பேச்சைக் குறைத்து, செயலைக் கூட்டியிருந்தால் வேலைக் காரன் மக்கள் மனங்களை வென்றிருப்பான்!

- விகடன் விமர்சனக் குழு