
சுஜிதா சென், படங்கள்: மீ.நிவேதன்
“டீ-சர்ட் எல்லாம் போடறதுக்கு முன்னால தயக்கமா இருக்கும். ஆனா, இப்போ எடை குறைச்ச பின்னால, என்னைப் பார்க்கவே ரொம்ப ஃப்ரெஷ்ஷா உணர்றேன். ஆறு மாதங்கள்ல 117-கிலோல இருந்து 79 கிலோவா குறைஞ்சிருக்கேன். இப்போ 75-க்கு முயற்சி பண்ணிட்டிருக்கேன்”
உற்சாகமாகப் பேசும் இமான், `டிக் டிக் டிக்’ படத்தின் பின்னணி இசை வேலைகளில் பிஸி. ஸ்டுடியோவிலிருந்து ப்ரேக்கில் வந்தவரை சந்தித்தோம். `ஹீரோவா நடிக்கப்போறீங்களா ப்ரோ?’ எனக் கேட்டால், வீட்டில் எல்லோர் முகத்திலும் ஒரே புன்னகை.
“இதே மாதிரிதான் எல்லோரும் கேக்கறாங்க. சுசீந்திரன் சார், `ஓகேன்னா சொல்லுங்க...கதை ரெடியா இருக்கு’னே சொல்லிட்டார். ஆனா, என்னோட வேலை இசை, அது நல்லபடியா போயிட்டிருக்கு. உடல் எடை குறைச்சதுக்குக் காரணம் ஆரோக்கியம்தான். உடல் சம்பந்தமா சில பிரச்னைகள் ஆரம்பிக்கும் நிலையில் இருந்தது. கண்டிப்பா குறைச்சே ஆகணும்னு சொல்லிட்டாங்க. சினிமாக்காரங்கனாலே ‘லிப்போசக்ஷன்’ மூலமா உடல் எடையைக் குறைப்பாங்கனு பொதுவான கருத்து இருக்கு. ஆனா, எனக்கு அதுல விருப்பம் இல்லை. எவ்வளவு மாசம் ஆனாலும் பரவாயில்ல, உடற்பயிற்சி மற்றும் உணவுப் பழக்கம் மூலமா ஆரோக்கியமான முறையில மெலியணும்னு உறுதியா இருந்தேன். அப்படிப் படிப்படியா ஆறுமாசம் தொடர்ந்து முயற்சி பண்ணிதான் எடையைக் குறைச்சேன். இப்போ உடல்ரீதியாவும், மனரீதியாவும் நல்ல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கு.”

“ `டிக் டிக் டிக்’ தமிழில் முதல் ஸ்பேஸ் த்ரில்லர் படம், அதுக்கான வேலைகள் எப்படிப் போயிட்டிருக்கு?”
“டிக் டிக் டிக் என்னோட அடுத்த லெவல் மியூசிக்னு சொல்லலாம். இந்தியாவிலேயே முதன்முறையா எடுக்கப்படுற ஸ்பேஸ் திரில்லர் படம். இந்தப் படத்துல வர்ற ஸ்பேஸ்ஷிப் இந்திய நாட்டுடையது. எப்பவுமே வெளிநாட்டுல மட்டுமே விழுந்துட்டிருக்குற விண்கற்கள், சென்னையில வந்து விழுப்போகுதுனு த்ரில்லிங்கான லைன். நம்ம ஆடியன்ஸ் நிறைய ஸ்பேஸ் திரில்லர் படங்களைப் பார்த்திருப்பாங்க. அந்தப்படங்களைவிடச் சிறப்பான இசையைக் கொடுக்கணும்ங்கறது எனக்கு ஒரு மிகப்பெரிய சவாலாக இருந்தது.
“மண்சார்ந்த இசையை நோக்கிப் பயணிக்கணும்னு தொடர்ந்து சொல்றீங்க. பயணம் எப்படி இருக்கு?”
“நம்ம ஊர்ல பீட்ஸா, பர்கர் கடைகளைவிடப் பணியாரம் விக்கிற கடைகள் குறைவா இருக்குனு நினைக்கிறேன். மக்களுக்குத் தேவைன்னா அவங்க வெஸ்டர்ன் பாடல்களை ஆன்லைன்ல கேட்டுக்கப்போறாங்க. நாம ஏங்க தமிழ்ப் பாடல்கள்ல வெஸ்டர்ன் இசையைத் திணிக்கணும்? வெள்ளைக்காரன் பாட்டு வேணும்னா வெள்ளைக்காரன் பாட்டையே கேட்கலாமே. எதுக்கு தமிழன் வெள்ளைக்காரன் மாதிரி பாடணும்? ஒருகாலத்துல குத்துப் பாடல்கள் மட்டும்தான் போடுவார்னு சொன்னாங்க, அப்பறம் ரீமிக்ஸ் மட்டும்தான் பண்ணுவார்னு சொன்னாங்க, இப்போ இன்னும் வெவ்வேறு ஜானர்களிலும் ஹிட் கொடுக்கறேன். ஆனா, எல்லாமே மண்ணின் இசைதான். கிராமமும் இல்லாம நகரமும் இல்லாம, மிட்-டவுன் கதைகளுக்கு இசையமைக்கும் போதுகூட அது நம் மண்ணின் பாடலா இருக்கணும்னு நினைப்பேன். அப்படித்தான் ‘றெக்க’ படத்துல `கண்ணம்மா கண்ணம்மா’ பாடல்கூட உருவாச்சு.’’
“பிரபுசாலமன், பொன்ராம், இப்போ சுசீந்திரன்னு ஒரு கூட்டணியில் தொடர்ந்து பணியாற்றுவது எந்த வகையில் வசதியா இருக்கு?”
“வசதிங்கறதைவிடப் புரிதல்னு சொல்லலாம். பிரபுசாலமன் ஒரு நல்ல கதைசொல்லி. அவரோட படங்கள் அத்தனையிலுமே காட்சிகளோட நீட்சிதான் பாடல்களா உருமாறி இருக்கும். குறிப்பா டயலாக்கை அப்படியே பாடலா கம்போஸ் பண்ணச் சொல்லுவார். யுகபாரதி சாரும் அதுக்கேத்த மாதிரி பாடல் வரிகளை மிகைப்படுத்தல்கள் இல்லாமல் தருவார். இதுவே பொன்ராம் சாரோட படங்கள்னா, தெருவுல இருக்குற டீக்கடை, பஸ் ஸ்டாண்ட், ஊர்த்திருவிழா முதற்கொண்டு அவர் படப்பாடல்கள் ஒலிக்கணும்னு நினைப்பார். சுசீந்திரன் புதுப்புதுப் பரிசோதனை முயற்சிகளை ஊக்கப்படுத்துவார்.”

“புதுப் புதுக் குரல்களை அறிமுகப்படுத்தறீங்க. அதுக்கான தேடல் எப்படி நடக்குது?”
“தொடர்ந்து கவனிக்கறதுதான். மெயில்ல வரும் குரல்கள், இசை நிகழ்ச்சிகள்ல கேட்கும் குரல்கள், இப்போ டெக்னாலஜி மூலமா மியூசிக்கலி மாதிரி அப்ளிகேஷன்களில்கூட நல்ல குரல்களைக் கவனிக்கறேன். எந்த ஒரு ட்யூன் போட்டாலும் அதை ஒரு அறிமுகப் பாடகரைப் பாட வச்சு ரெகார்ட் பண்ணணும்னுதான் நெனப்பேன். ஆனா, சில சமயங்கள்ல பாடல்களோட உணர்ச்சிகளை சரியா வெளிக்கொண்டு வர்றதுக்கு அனுபவம் மிக்க ஆட்களும் தேவைப்படுறாங்க.”
“சினிமா போல, மியூசிக் கான்செர்ட்களிலும் அதிக கவனம் செலுத்த ஆரம்பிச்சிருக்கீங்களே...”
“நான் கொஞ்சம் கூச்ச சுபாவம் .யார்கிட்டயும் அதிகம் பேசவே மாட்டேன். மேடை நிகழ்ச்சிகள்னு வந்துருச்சுன்னா, ‘எல்லோரும் நம்மளையே பார்ப்பாங்களே. நம்ம எப்படி இசையமைச்சுப் பாடப்போறோம்? ரெண்டு மூணு மணிநேர நிகழ்ச்சியை நடத்தணும்னா அதுக்கேத்த மாதிரி நிறைய பாடல்கள் நம்ம கையில இருக்கா?’ இந்தமாதிரி நிறைய கேள்விகள் எம்மனசுல வந்துட்டே இருந்துச்சு. இதையெல்லாம் மூட்ட கட்டி வச்சுட்டு, கடந்த ரெண்டு வருஷமா கான்செர்ட்ஸ் பண்ணிட்டிருக்கேன். நிறைய கான்செர்ட்ஸ் பண்ணச் சொல்லி அடிக்கடி அழைப்புகள் வருது. ஆனா, அதுக்கு ரெடி பண்றதுக்கு, கிட்டத்தட்ட 25 நாள்கள் ஆயிடுது. தொடர்ந்து பண்ணணும்.”
தூள் கிளப்புங்க!