2017 ஸ்பெஷல்
Published:Updated:

“படத்துல எந்த பில்டப்பும் இல்லை!”

“படத்துல எந்த பில்டப்பும் இல்லை!”
பிரீமியம் ஸ்டோரி
News
“படத்துல எந்த பில்டப்பும் இல்லை!”

கே.ஜி.மணிகண்டன்

“ஆக்சுவலா, எடிட்டர் ஆகணும்னுதான் ஆசைப்பட்டேன். ஆனா, ஒளிப்பதிவாளர் ராஜரத்னம் சார்கிட்ட உதவியாளரா சேர வாய்ப்பு கிடைச்சது. பிறகு, ரவிவர்மன், எஸ்.ஆர்.கதிர், ‘விஸ்வரூபம்-2’ ஒளிப்பதிவாளர் சம்தத்  சய்னுதீன்னு   பல      ஒளிப்பதிவாளர்கள்கிட்ட வேலை பார்த்தேன். ‘பூ’ படத்துல தொடங்கி, ரிலீஸுக்கு ரெடியா இருக்கிற ‘மன்னர் வகையறா’ வரை பல படங்களுக்கு ஒளிப்பதிவு பண்ணியிருக்கேன். ஆனா, ஒளிப்பதிவுல எனக்கான அடையாளத்தை இன்னும் ஸ்ட்ராங்கா எடுத்து வைக்கணும்னுதான், இயக்குநர் அவதாரம் எடுத்துட்டேன்.” -  விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் நடிக்கும் ‘மதுரவீரன்’ படத்தின் மூலம் இயக்குநராகவும் புரமோஷன் ஆகியிருக்கிறார், ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா.

``ஜல்லிக்கட்டுப் போராட்டம் தொடங்குறதுக்கு முன்னாடியே எழுதுன கதைதான், ‘மதுரவீரன்’” என அறிமுகம் கொடுத்துவிட்டு, கேள்விகளை எதிர்கொள்கிறார் முத்தையா.

“படத்துல எந்த பில்டப்பும் இல்லை!”

‘’ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர், இயக்குநர்னு சினிமாவில் உங்க கிராஃப் ஏறிட்டே இருக்கே?”

“ படிக்கிற சமயத்துல ரியாலிட்டி தெரியாம நிறைய கனவு காண்போம்ல... அதுமாதிரி, எனக்கும் என் நண்பனுக்கும் ‘வார்னர் பிரதர்ஸ்’ மாதிரி ஒரு தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்கிறதுதான் கனவா இருந்துச்சு. ஒளிப்பதிவாளரா வொர்க் பண்ண ஆரம்பிச்ச பிறகும் அந்தக் கனவு இருந்துச்சு. அதனாலதான், இந்தியாவுலேயே ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவுக்குப் பிறகு ‘ரெட் எபிக்’ கேமரா வாங்கினோம். ‘ராஜா மந்திரி’, ‘பீச்சாங்கை’,  ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ படங்களைத் தயாரிச்சேன். இதில் மூணாவது படம் 2018-ல ரிலீஸ் ஆகும்.”

“கிராமத்துப் படம்னு இந்தப் படத்தோட தலைப்பைப் பார்த்தாலே தெரியுது. படத்துல வேறென்ன ஸ்பெஷல்?”

“அறிமுக நடிகரோ, இயக்குநரோ... தங்களோட முதல் படைப்பை வேர்ல இருந்து தொடங்கணும்னு நான் சொல்வேன். அப்போதான், மக்கள்கிட்ட ஈஸியா ரீச் ஆக முடியும். இந்தக் கதையைத் தேர்ந்தெடுத்ததுக்கு முதல் காரணம் இதுதான். ஒன்லைனா படிச்சா, பலமுறை கேட்ட கதைமாதிரிதான் இருக்கும். ஆனா, ட்ரீட்மென்ட் புதுசு. பல வருடங்களுக்குப் பிறகு தன் சொந்த ஊருக்கு வர்ற ஹீரோ, தன் வாழ்க்கையில நடந்த சில சம்பவங்களை ரீவைண்ட் பண்ணிப் பார்க்கிறார்; சில முடிவுகளை எடுக்கிறார். ஹீரோவோட அப்பா விட்டுட்டுப் போன சில விஷயங்களை, மகன் எப்படி முடிக்கிறார்? இதுதான், படத்தோட கதை. அப்பாவா சமுத்திரக்கனி, மகனா சண்முகப்பாண்டியன் நடிச்சிருக்காங்க. படத்தின் ‘ஹீரோ’னு ரெண்டுபேரையும் சொல்லலாம்.”

“படத்துல எந்த பில்டப்பும் இல்லை!”

“சண்முகப்பாண்டியனுக்கு முதல் படம் சரியா போகலை. இந்தப் படத்தில் அவரோட ஒத்துழைப்பு எப்படி இருந்துச்சு?”

“ ‘விஜயகாந்த் மகன்’ங்கிற அடையாளத்தோட அறிமுகம் ஆகும்போது, ‘எப்படியாவது ஜெயிக்கவெச்சிடணும்’னு கொஞ்சம் எக்ஸ்ட்ரா கேர் எடுத்துக்கிட்டாங்கனு நினைக்கிறேன். அதனால, இந்தப் படத்தோட கதையை விஜயகாந்த் சார், பிரேமலதா மேடம்கிட்ட சொல்லும்போதே, ‘எந்தத் தலையீடும் இருக்கக்கூடாது’னு தெளிவா சொல்லிட்டேன். அவங்களும் அதை உணர்ந்திருந்ததுனால, ‘எந்தத் தலையீடும் பண்ணமாட்டோம்’னு பிராமிஸ் பண்ணாங்க. விஜயகாந்த் சார் கதையைக் கேட்டுட்டு, ‘கதை ரொம்ப நல்லா இருக்குடா, கண்டிப்பா பண்ணு’னு சண்முகப்பாண்டியன்கிட்ட சொன்னார். எனக்கு ரொம்ப சந்தோஷம்... ஏன்னா, எனக்கு முன்னாடி அவர் 200க்கும் அதிகமான கதைகளைக் கேட்டிருந்தாராம். படத்தை முடிச்சுட்டு கேப்டன்கிட்ட டிரெய்லர் போட்டுக் காட்டினேன். ‘தம்பி, இன்னும் கொஞ்ச நேரம் வந்திருக்கலாம்’னு சிரிச்சுக்கிட்டே சொன்னார்.

படத்துல நிறைய இடங்கள்ல அப்பா-மகனைத் தொடர்புபடுத்தி வசனங்கள் வரும். அதையெல்லாம் ‘விஜயகாந்த் - சண்முகப்பாண்டியன்’ காம்போவுக்கு ரிலேட் பண்ணிக்கலாம். படத்துல காளைகளைப் பத்தி நீளமான வசனம் பேசியிருக்கார். ஹீரோவுக்கான எந்த பில்டப்பும் இல்லாம, அவர் பேசுற பல வசனங்கள் ஆடியன்ஸூக்கு ரொம்பப் பிடிக்கும்.”

“படத்துல எந்த பில்டப்பும் இல்லை!”

``மதுரைப் பக்கக் கதைனாலே சாதி வாசம் அதிகம் இருக்குமே. ‘மதுரவீரன்’ எந்த விஷயத்தை விவாதிக்கப் போகுது?”

“ஆமாம், சாதியைக் கையில எடுத்திருக்கேன். ஆனா, எந்த சாதியையும் உயர்த்திப் பிடிக்காம, தாழ்த்திச் சொல்லாம நேர்மையா கையாண்டிருக்கேன். சாதிகளோட பிரச்னைகளைச் சொல்லி, ஒருத்தரை ஒருத்தர் அடிச்சுக்காதீங்கனு சொல்றேன். ரெண்டுபேருக்கு இடையில சண்டை வந்தா, அதுக்குக் காரணம் அவங்க ரெண்டுபேரா இருக்கமாட்டாங்க. இதுதான், கார்ப்பரேட் பாலிடிக்ஸ். அதைத் தெரிஞ்சுக்கோங்கனு சொல்றேன். பா.ரஞ்சித் சொன்னதுமாதிரி, ‘இங்கே தெருவுக்குத் தெரு சாதி இருக்கு.’ அதுல மேல்சாதி, கீழ்சாதினு பேசுறதை நிறுத்திக்கிறதுதான், சாதியை ஒழிக்கிறதுக்கான முதல் முயற்சினு நான் நினைக்கிறேன்.”

“படத்துல எந்த பில்டப்பும் இல்லை!”

‘`படத்தை விஜயகாந்த், பிரேமலதா பார்த்துட்டாங்களா?”

“இன்னும் இல்லை. படத்துல விஜயகாந்த் பாட்டு பின்னணியில ஒலிக்கும்போதுதான், சண்முகப்பாண்டியன் என்ட்ரி கொடுப்பார். இதைத்தவிர, படத்துல அவருக்கு எந்த பில்டப்பும் கொடுக்கலை. கேப்டனும், பிரேமலதா மேடமும் டிரெய்லர், பாடல்களைப் பார்த்துட்டு ரொம்ப இம்ப்ரஸ் ஆயிட்டாங்க. ‘யாரு படம் வந்தாலும் பரவாயில்லை... நீங்க பொங்கலுக்கு ரிலீஸ் பிளான் பண்ணுங்க’னு பிரேமலதா மேடம் சொன்னாங்க. முக்கியமா, இந்தப் படம் மூலமா சண்முகப்பாண்டியனுக்கு செம கான்ஃபிடென்ஸ் வந்திருக்கு.”