2017 ஸ்பெஷல்
Published:Updated:

“அம்மா சமையல் மாதிரி அன்புதான் அதிகம் இருக்கணும்!”

“அம்மா சமையல் மாதிரி அன்புதான் அதிகம் இருக்கணும்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“அம்மா சமையல் மாதிரி அன்புதான் அதிகம் இருக்கணும்!”

பா.ஜான்ஸன், படங்கள்: ப.சரவணக்குமார்

“நாங்க பேசிக்கும்போது சூப்பரா சிரிப்போம்... போட்டோக்குனு சிரிக்கும் போது வர மாட்டேங்குது” என போட்டோ எடுக்கும் முன்பே வார்னிங் கார்டு போடுகிறது அருவி டீம். எங்கெங்கு காணிணும் `அருவி’யடா  என எல்லாப்பக்கமும் படம் குறித்த உரையாடல்கள் நிகழ்ந்தவண்ணம் இருக்கின்றன.   `அருவி’ டீமை சந்திக்கலாம் என போன் போட்டதும் இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன், அதிதி பாலன், மதன், `மைம்’ பாலா, பாக்யராஜ், எடிட்டர் ரேமண்ட், பாடலாசிரியர் குட்டி ரேவதி என ஒன்றுகூடியது குழு.

“எல்லோரையும் சிரிக்க வைக்கணும்னா வேற வழியே இல்ல, டாக்டர் கேரக்டருக்கான  ஆடிஷன் பற்றிச் சொல்லிட வேண்டியதுதான்” என பாக்யராஜ் சொன்னதும் மொத்த டீமும் ``சொல்லுங்க சொல்லுங்க’’ என ரெடியானது. அந்த ரோலுக்கு மொத்தம் 93 பேர் ஆடிஷன் வந்தாங்க. ஒரே ஒரு கேள்விதான் கேட்டோம், அத்தனை பேரும் தெறிச்சு ஓடினாங்க. “பத்து மணிக்கு மேல டிவியில் டாக்டர் பேசுவாங்களே, அந்த நிகழ்ச்சியெல்லாம் பார்த்திருக்கீங்களா?”னு கேட்டதும், இவனுங்க ஏதோ வேற மாதிரி படம் எடுக்குறாங்கனு நினைச்சுட்டு அத்தனை பேரும் போயிட்டாங்க. கடைசில ஆடிஷன் பண்ணின என்னையவே அதில் நடிக்க வெச்சாங்க” என்றதும் எல்லோரும் வெடித்துச் சிரிக்கிறார்கள்.

“அம்மா சமையல் மாதிரி அன்புதான் அதிகம் இருக்கணும்!”

``ஆடிஷன் வெச்சதுக்கான காரணம், ஒவ்வொருத்தருக்கும் இருக்கும் நடிப்புத் திறமையைக் கண்டுபிடிக்க இல்ல, சாதாரணமா அவங்க எப்படி இருக்காங்கனு கவனிச்சு அந்த குணங்கள் என் படத்தின் கதாபாத்திரத்துக்குப் பொருந்துதான்னு பார்க்கத்தான். ஏழெட்டு மாசம் படத்தின் முக்கியமான இருபது கதாபாத்திரங்களையும் தேர்வு பண்ணினோம். `அருவி’ கதாபாத்திரம் பொறுத்தவரை சில முன்னணி நடிகைகள்கிட்டயும் சொன்னேன். ஆனா, அவங்களுக்கு அது செட்டாகுமாங்கற சந்தேகம் வந்ததால பண்ணலைனு சொல்லிட்டாங்க. படத்தின் முக்கியமான பாத்திரம் அருவி. கூடவே அவளுடைய நாலு காலகட்டங்களைக் காட்டணும். ஆடிஷன்ல இருந்து சிலரை மட்டும் தேர்ந்தெடுத்து, அவங்க நடிச்சதெல்லாம் பார்த்தபோது, அதிதி பாலனோட நடிப்புல அருவிய என்னால பார்க்க முடிஞ்சது. அந்த முடிவு சரிதான்னு படத்துடைய வெற்றி உறுதி பண்ணிடுச்சு” என இயக்குநர் அருண் முடிக்க, ``ண்ணா பாக்கிண்ணா... எனக்கு ஒரு டவுட், நீங்க நடிச்சதப் பார்த்திட்டு வீட்ல என்ன சொன்னாங்க” என்றபடி வந்தார் `மைம்’ பாலா. ``அட, படம் பார்த்திட்டு எங்க மாமா,  ‘அது யாரும்மா நம்ம பாக்கி மாதிரியே ஒருத்தர் நடிச்சிருக்காப்ல’னு கேட்டாரு. படம் முடிஞ்சதும்தான் அது நான்னு அவருக்குத் தெரிஞ்சது” என்றதும் மறுபடி சிரிப்பலை.
 
``இப்போ அருவி... சாரி சாரி அதிதி தன்னுடைய அனுபவத்தைச் சொல்வாங்க” என அருண் சொல்ல, “காலேஜ்ல ஸ்டேஜ் ப்ளே பண்ணிட்டிருந்தப்போ என்னோட ஃப்ரெண்ட் இந்த ஆடிஷன் பத்தி சொன்னாங்க. சரி, ஆடிஷன் அனுபவம் எப்படி இருக்கும்னு பார்க்கறதுக்காகப் போனேன். ஆடிஷன்ல ஓகே பண்ணிட்டாங்க. ஆனா, பட அனுபவம் பயங்கரமா இருந்துச்சு. மூணு மாசம் எல்லோரோடையும் சேர்ந்து ரிகர்சல் பண்ணதில் இந்த டீமே ஒரு குடும்பம் மாதிரி ஆகிடுச்சு. என்னை நம்பி ஒரு ரோல் கொடுத்திருக்காங்க, அந்த நம்பிக்கையக் காப்பாத்தும்படியா வேலை செய்யணும்னு நடிச்சேன்” என அதிதி முடிக்கும் போது, “அட, எவ்வளவு அடக்கம்!” என்றபடி அருண் தொடர்ந்தார்.

``படம் பார்த்திட்டு என்கிட்ட பேசறவங்க எல்லாம் நல்லா பண்ணியிருக்கீங்கனு சொல்லிட்டு, அடுத்து ஒரு இருபது நிமிஷம் என்னைப் பத்தி ஒண்ணும் சொல்லமாட்டாங்க. அருவியா நடிச்ச பொண்ணு இருக்கே அசத்திட்டாங்க, எப்படி அவங்களைக் கண்டுபிடிச்சீங்கனு இவங்களுக்குதான் பாராட்டு குவியும்” என்ற அருணிடம், ``அப்பிடியா, எனக்கு அந்த மாதிரி ஒரு போனும் வரமாட்டுதே!” என சோக ஸ்மைலி தட்டுகிறார் அதிதி.

“அம்மா சமையல் மாதிரி அன்புதான் அதிகம் இருக்கணும்!”

``படத்தில், டிவி ஸ்டுடியோவுக்கு உள்ள எடுத்த காட்சிகளை ரொம்ப சீக்கிரமா எடுத்து முடிச்சோம். அதைத் திட்டமிட்டபடி முடிக்க நைட் பகல்னு பார்க்காம எல்லோரும் வந்து நடிச்சுக் கொடுத்ததுதான் காரணம். ஒருத்தர் டயலாக் பேசற சீனா இருந்தாலும் எல்லோருமே இருக்க வேண்டியிருக்கும். மத்த யாராவது இருந்தா ஓடியே போயிருப்பாங்க. போலீஸ் ரோல்ல நடிச்ச மொஹமத் அலி, எமிலியா நடிச்ச அஞ்சலி வரதன், டிவி ஷோ பண்ற கவிதா பாரதி சார், லட்சுமி கோபால்சுவாமி, பிரதீப் ஆண்டனினு எல்லோருமே பயங்கரமான ஒத்துழைப்பு கொடுத்தாங்க” என தன் டீமை நினைத்து சிலிர்க்கிறார் அருண்.

“அம்மா சமையல் மாதிரி அன்புதான் அதிகம் இருக்கணும்!”

``அதேபோல பிந்துமாலினி - வேதாந்துடைய இசை, படத்துக்கு மிகப் பெரிய பலம்” எனப் பேசத் தொடங்கினார் கவிஞர் குட்டி ரேவதி. “முதல்லயே படத்துடைய ஸ்கிரிப்ட்ட அருண் கொடுத்துட்டார். அப்புறம் அந்த உணர்வுகளுக்கு ஏத்த மாதிரி இசையைத் தேர்ந்தெடுத்தோம். அவரே நிறைய எழுதுவார், வாசிப்பார். எந்தமாதிரி வரிகள் தேவைனு டைரியில் எழுதி வெச்சிருக்கும் கவிதைகளை போட்டோ எடுத்து அனுப்புவார். அதைப் படிக்கும் போதே என்ன வேணும்னு புரிஞ்சிடும். கூடவே அவரே ஒரு கவிஞர்தான், ‘மேற்குக் கரையில்’னு அழகான பாடலை எழுதியிருக்கார்” எனச் சொல்ல, “என்ன குருஜி அமைதியாவே இருக்கீங்க” என்று படத்தொகுப்பாளர் ரேமண்டை அருண் பார்க்க, “என்ன சொல்றது...” எனக் கூச்சத்துடன் பேச ஆரம்பித்தார் ரேமண்ட்.

“அம்மா சமையல் மாதிரி அன்புதான் அதிகம் இருக்கணும்!”

“இந்தக் கதை, முன்னாலயே எனக்குத் தெரியும். கூடவே, ரிகர்சல் பார்த்த வீடியோ எல்லாம் பாப்பேன். அப்பவே இது என்ன மாதிரி படமா வரும்னு எனக்குத் தெரிஞ்சிடுச்சு” என சிம்பிளாக ரேமண்ட் முடிக்க. “இவரை நாங்க ஏன் குருஜினு கூப்பிடுவோம் தெரியுமா, படத்தைப் பற்றி எல்லாமே இவருக்குதான் தெரியும். படத்துல டெக்னிக்கலாவும் எல்லோரும் புது ஆட்கள். க்ளாப் போர்டு  அடிச்சு முறையா எதுவும் பண்ணல. ரிகர்சல் பார்த்த வீடியோக்களும் கலந்திருக்கும். எது சரியான வீடியோ, எது சும்மா எடுத்ததுன்னு ஒண்ணுமே தெரியாது. அதை எல்லாத்தையும் எடுத்து வெச்சுக்கிட்டு, பொறுமையா எடிட் பண்ணிட்டே இருந்தார். இவர் தேர்ந்தெடுக்கிற காட்சிகளெல்லாம் அழகா இருக்கும். அதையெல்லாம் வரிசையா எடுத்து வெச்சிட்டு, ‘மச்சான் ஓகேவா?’னு கேட்பார். சூப்பரான சீன் வந்து நிக்கும். அவருடைய மேஜிக்கை கவனிக்கறதுதான் என்னோட வேலையே” என அருண் புகழ, கூச்சத்தில் நெளிகிறார் ரேமண்ட்.

“எனக்கு எங்க அம்மா அப்பாவுடைய ஷாக் ரியாக்‌ஷன்தான் இன்னும் கண்ணுக்குள்ளயே இருக்கு. நீ இவ்வளோ நல்லா நடிப்பியானு ஆச்சர்யப்பட்டாங்க” என்றார் அதிதி்.

``படம் பார்த்துட்டு நிறைய பேர் கால் பண்ணி வாழ்த்தினாங்க. நடுராத்திரிலகூட போன் பண்ணி `நான் இப்போதான் நைட் ஷோ பார்த்தேன். இதுவரைக்கும் எந்தப் படத்துக்கும் இவ்ளோ சிரிச்சதும் இல்ல, இவ்ளோ அழுததும் இல்ல’னு சொன்னாங்க. இதைத் தொடந்து பண்ணணும். பாலுமகேந்திரா சார் `நல்ல படம்ங்கிறது அம்மாவுடைய சமையல் மாதிரி இருக்கணும். ஏன்னா, அவங்களுக்கு சமையல் மேல இருக்கும் ஆர்வத்தைவிட அதைச் சாப்பிடப் போற குடும்பத்து மேல அன்புதான் அதிகமா இருக்கும்’னு சொல்வார். அதுமாதிரி, மக்களுக்குத் தேவையான படத்தைக் கொடுக்கணும்னு விரும்பறேன்” என்று அருண் சொல்ல அட்டகாச எண்டு கார்டு போடுகிறது `அருவி’ டீம்.