
நித்திஷ், ஓவியம்: பிரேம் டாவின்ஸி
‘தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு’ எனச் சும்மாவா சொன்னார்கள் முன்னோர்கள்? ஆளே இல்லாத சகாரா பாலைவனமானாலும் சரி, பியர்ஸ் க்ரில்ஸ் திரியும் அடர்ந்த காட்டுப்பகுதியானாலும் சரி, சில பல சிக்னல்களை வைத்தே, ‘அட! இது கண்டிப்பா நம்மாளுய்யா’ எனச் சுலபமாகக் கண்டுபிடித்துவிடலாம். அப்படி நமக்கே நமக்கான சில கபீர் குபீர் குணங்களைப் பற்றித்தான் இப்போது பார்க்கப்போகிறோம்.
வருஷநாட்டு ஜமீன் வரிசைல வருவதா? நெவர்ர்ர்!
இந்தப் பிரத்யேக குணம் லெமூரியா காலத்திற்கும் முன்னது என வரலாற்று ஆய்வாளர் செல்லூர் ராஜு தன்னுடைய ஆய்வுக்குறிப்பில் கூறியிருக்கிறார். ஜீன் மரபின் தொடர்ச்சியால்தான் ‘ஆயாவுக்கு உடம்பு சரியில்லைங்க, நான் ஃபர்ஸ்ட் ஷோ பார்த்துட்டுப் போனா அவங்களுக்குச் சரியாயிடும்’ என தியேட்டரிலும் ‘இந்த ட்ரெயினை மிஸ் பண்ணா அடுத்த ட்ரெயின்ல போக விசா கிடைக்காதுங்க’ என ரயில்வே ஸ்டேஷன் கவுன்ட்டரிலும் முண்டியடிக்கிறோமாம். இதையும் அதே வரலாற்று ஆய்வாளர்தான் ஆராய்ந்து சொல்லியிருக்கிறார்.
முன்னோருக்கு ஜே போடு!
பாயாக மடங்கி, பனிக்கூழாக உருகி, அ.தி.மு.க அமைச்சர் முதுகாக வளைந்து முன்னோர்களுக்கு மரியாதை செலுத்துவதில் தமிழனுக்கு நிகர் யாருமில்லை என்பதே நிதர்சனம். ‘தொப்புளில் இருக்கும் மணிப்பூரகச் சக்கரம் கரும்பு மெஷின் சக்கரம்போல ஸ்மூத்தாகச் சுற்ற அருகே இரும்பு இருக்க வேண்டியது அவசியம். எனவேதான் இடுப்பில் பெல்ட் போடும் பழக்கம் வந்தது,’ ‘காதில் வைக்கப்படும் பூ ஓர் ஆன்டெனாபோலச் செயல்பட்டு கிரகங்களின் கெட்ட செயல்பாடுகள் நம்மைப் பாதிக்காமல் தடுக்கிறது’ என முப்பாட்டன்கள் பெயர் போட்டு என்ன வந்தாலும் அதை அப்படியே நம்பிச் சிலாகித்து ஃபார்வர்ட் செய்யும் ‘கண்ணுல ஜலம் வெச்சுண்டேன்’ டைப் தமிழர்கள் இருக்கும்வரையில் இந்தப் பழக்கமும் போகாது.

வடிவேலு ஃபார் வாழ்க்கை:
டிமானிடிசேஷன் வந்து தெருவில் நிற்கவிட்டாலும் சரி, ‘ஒளிரும் இந்தியா’ என போட்டோஷாப் கண்ணைப் புகையவிட்டாலும் சரி தமிழர்கள் போய்ச் சரணடைவது வைகைப் புயலிடம்தான். புண்பட்ட நெஞ்சை வடிவேலு மீம்ஸ் போட்டு ஆற்றிக்கொள்ளும் ஸ்பெஷல் குணம் தமிழனுக்கு மட்டுமே உண்டு. என்னதான் மொத்தக் கட்சியும் சேர்ந்து தினுசு தினுசாக நம்மை டார்ச்சர் செய்ய முடிவெடுத்து யோசித்தாலும் அதை அசால்ட்டாக, ஒற்றை மீம் கவுன்ட்டரில் காலிபண்ணிவிடுவார் என்பதால் தமிழர்களின் ஆல்டைம் ஃபேவரைட் வடிவேலுதான்!
எங்க ஏரியா உள்ள வராதே!
மற்ற நேரங்களிலெல்லாம் ஈ.பி.எஸ்ஸும் ஓ.பி.எஸ்ஸுமாக நட்புப் பாராட்டும் தமிழர்கள் ஊர்ப்பாசம் என வந்துவிட்டால் மட்டும் அடித்து மேய்கிறார்கள். கோவைன்னா கெத்து, திருநெல்வேலின்னா தில்லு, மதுரைன்னா மாஸு, வெயிலடிச்சாம் பட்டின்னா வெயிட்டு, கானாடுகாத்தான்னா ஹைட்டு எனப் பாடாவதி பன்ச்லைன்கள் வேறு! சென்னைக்கு அனிருத், கோவைக்கு ‘மீசைய முறுக்கு’ குட்டி பாரதி என இசையமைப்பா ளர்களும் ஏரியா பிரித்து விளையாடுகிறார்கள். அடுத்ததாகத் தமிழர்கள் ஆவலாகக் காத்திருப்பது ‘சிவகாசி சாங் பை ஸ்ரீகாந்த் தேவா’ என்ற ஆல்பத்துக்குத்தான்.
நடுவுல மெல்லிசா ஒரு கோடு!
இது இந்தியர்கள் அனைவருக்குமே இருந்தாலும் தமிழர்களுக்கு ஒரு பிடி அதிகமாவே இருக்கிறது என்பது அறிஞர்களின் அவதானிப்பு. ட்ராஃபிக் ரூல்ஸ் மதியாமை! காலையில் பளபளவென வெளியே எடுக்கும் வெள்ளைநிற கார் மாலை வீட்டில் திரும்ப நிறுத்தும்போது வரிக்குதிரையாகி இருக்கும். போதாக்குறைக்கு ஹாரனை விடாமல் அமுக்கினால் க்ரீன் சிக்னல் விழுந்துவிடும் எனச் சிலர் நம்புவதால் உங்கள் காதும் மந்தநிலைக்குப் போயிருக்கும்.
கொஸ்டீன் கோயிந்துகள்:
கேள்வி கேட்டால் ஞானம் பிறக்கும்தான். ஆனால் நியாயதர்மமே இல்லாமல் கேட்டால்...? எந்த ஸ்கூல் என்பதில் தொடங்கி எத்தனை மார்க், எந்த காலேஜ், என்ன க்ரேட், எந்த கம்பெனி, எவ்வளவு சம்பளம், எப்பக் கல்யாணம், வீடு வாங்கியாச்சா, வீட்ல என்ன விசேஷம், குழந்தை எந்த ஸ்கூல், பையன் எத்தனை மார்க், பொண்ணு எந்த ஊர்ல இருக்கு, எப்பச் சாவீங்க, புதைப்பாய்ங்களா, எரிப்பாய்ங்களா என வாழ்க்கை முழுக்கக் கேள்விகளால் குடைந்தெடுக்கும் குணம் அக்மார்க் தமிழர்களின் குணம்.